கிழக்கு மாகாணத்தின் இன அடையாளம் என்பது தமிழர்களின் வடகிழக்கு தமிழர்களின் தாயக கோட்பாட்டில் மிக முக்கியமாக கருதப் படுகின்றது.அதிலும் தமிழர்களின் தாயகத்தில் காணப்படும் தமிழர்களின் பண்பாட்டு விழுமியங் களை அழிப்பதன் மூலம் தமிழர்களின் இருப்பினை கேள்விக்குட்படுத்தும் முயற்சிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுகின்றன.
கிழக்கில் தமிழர்களின் முக்கிய இருப்பு களை இல்லாமல்செய்து சிங்கள பௌத்த தேசியவாதத்தினை நிறுவுவதற்கு பல்வேறு முயற்சிகள் பல்வேறு காலப்பகுதிகளில் முன் னெடுக்கப்பட்டுவருகின்றது.இதன்கீழ் கிழக்கில் குறிப்பாக திருகோணமலை மாவட்டத்தில் தமிழர் களின் வரலாற்றினை அழித்து சிங்கள பௌத்த தேசியவாதத்தினை நிறுவுவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.
அவற்றில் பல்வேறு செயற்பாடுகள் கடந்த காலத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளன.கன்னியா வெந்நீரூற்றினை முற்றாக சிங்கள மயப்படுத்தியுள்ள சிங்கள பேரினவாதம் இன்று திருகோணேச்சரம் ஆலயத்தி னையும் சிங்கள மயப்படுத்தும் செயற் பாட்டினை முன் னெடுத்துவருகின்றது. தமிழர்களின் இதயத்தி னையே பிடுங்கி எடுக்கும் செயற்பாடுகளை சிங்கள அரசு முன்னெடுத்து வருகின்றது.
குறிப்பாக திருகோணமலை மாவட்டம் என்பது தமிழர்களின் வரலாற்றுப்பொக்கிஸங்கள் நிறைந்த மாவட்டம் என்பதுடன் ஆதி காலம் தொடக்கம் சிவ வழிபாடுகள் நிறைந்த தமிழர் கள் வாழ்ந்த மிக முக்கியமான பகுதியாக காணப் படுகின்றது.அக்காலத்தில் இலங்கை வராமலே சமய குருவர்களினால் பாடல் பாடப்பெற்ற தலமான கோணேஸ்வரத்தினை கொண்ட இடமாக வும் காணப்படுகின்றது.
தமிழர்களின் பண்பாட்டு தொன்மையும் வரலாறுகளும் இந்த நாட்டில் பௌத்தம் வருகைக்கு முன்னரே திருகோணமலையில் தமிழர் கள் மிகப்பலமாக காலுன்றியிருந்தார்கள்.அதன்காரணமாகவே இந்த நாடு சுதந்திரம் அடைந்த காலம் தொடக்கம் திருகோணமலை இலக்கு வைக்கப்பட்டு பௌத்த பேரினவாதிகளினால் தொடர்ச்சியான செயற்பாடுகள் முன்னெடுக்கப் பட்டுவருகின்றன.
இதன் ஒரு கட்டமாகவே அண்மைக்காலமாக திருகோணமலை தொடர்பில் பல்வேறு செயற்பாடுகளை திட்டமிட்டு முன்னெடுத்துவரு கின்றது. குறிப்பாக கோணேஸ்வரர் ஆலயத் தில் கோபுரம் அமைப்பதற்கு பௌத்த இன வாதிகள் தொடர்ச்சியான எதிர்ப்பினை வெளியிட்டுவந்தது டன் ஆலய சூழலில் கடைகளை அத்துமீறிய வகையில் அமைத்து ஆலயத்தினை சூழ அடா வடியில் ஈடுபட்டுவருகின்றனர்.இதற்கு முழுமையான ஒத்துழைப்பினை அங்குள்ள படையின ரும் பொலிஸாரும் வழங்கிவருகின்றனர்.
இந்த நிலையில் அண்மைக்காலமாக கிழக்கு மாகாண ஆளுனருக்கும் கோணேஸ்வரர் ஆலய நிர்வாகத்தினருக்கும் இடையே பெரும் இழுபறி நிலைமையினை உணரமுடிகின்றது.ஆலயத்திலிருந்த சோழர் காலத்து நகையொன்று திருடப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுனரின் ஊடக குழுமத்தின் ஊடாக செய்திகள் பரப்பபட்ட நிலையில் அவ்வாறான நகையெதுவும் ஆலயத்தி லிருந்து களவாடப்படவில்லையென ஆலய நிர்வா கத்தினர் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறான நிலையில் ஆலய நிர்வாகத்தில் தனக்கு போசகர் பதவி வழங்கப்படவேண்டும் என்ற தொடர்ச்சியான அச்சுறுத்தல்களும் அழுத் தங்களும் கிழக்கு மாகாண ஆளுனரினால் விடுக்கப்பட்டுள்ள நிலையிலேயே இந்த நகை விவகாரமும் வெளியிடப்பட்டுள்ளது.சாதாரண மூன்று பவுண் பெறுமதியான ஆலயத்திற்கு ஒருவர் நன்கொடையாக வழங்கிய நகையொன்றே களவுபோயுள்ள நிலையில் சோழர் காலத்து நகையொன்று களவுபோயுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுனரின் ஊடக பிரிவினால் தகவல் பரப்பபட்டுள்ளது.
இதன் பின்னர் ஆலய நிர்வாகத்தினருக்கு எதிராக ஆளுனரினால் திட்டமிட்ட ஆர்ப்பாட்டங் கள்முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் கூட்டங்களும் கூட்டப்பட்ட நிலையில் பொதுமக்களின் எதிர்ப்பினால் கூட்டத்திலிருந்து ஆளுனரும் வெளியேற் றப்பட்ட நிலைமையும் ஏற்பட்டது.
இவ்வாறான நிலையில் கோணேஸ்வரர் ஆலயத்தின் நுழைவதற்கு கிழக்கு மாகாண ஆளுனர் ஏன் இவ்வளவு அடாவடியில் ஈடு படுகின்றார் என்பதே இன்று அனைவருக்கும் உள்ள சந்தேகமாகவுள்ளது.ஏற்கனவே இந்தியா கோணேஸ்வரத்தை புனரமைப்பதற்கு உதவவுள் ளதாக கூறியுள்ள நிலையில் அதற்குள் தமது முத்திரையைப்பறிப்பதற்கு முயற்சிகள் முன் னெடுக்கப்படுகின்றதா என்ற சந்தேகம் உள்ளது.
குறிப்பாக கோணேஸ்வர ஆலய சூழலை பௌத்தமயப்படுத்தியதன் பின்னர் புனரமைப்பு பணிகளை முன்னெடுக்கலாம் என்று சிங்கள தேசியம் சிந்திக்கின்றதா என்பதுபோன்ற நிகழ்வு கள் இன்று நடைபெற்றுவருகின்றன.
இன்று கிழக்கு மாகாண ஆளுனர் தொடர் பில் சமூக வலைத்தளங்களில் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுவருகின்றன. குறிப்பாக “தேர்தலில் தோல்வியுற்று பின்னர் அரசியல் டீலின் மூலம் கிழக்குமாகான ஆளுநராக பதவியேற்ற செந்தில் தொண்டமான் திருகோண மலையின் உள்ளக விடயங்களில் தொடர்ந்து தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி தலையிட்டு வருகின்றார்.இதன் தொடர்ச்சியாக கோணேசர் ஆலயத்தின் நிர்வாகத்தின் பொறுப்பை தனக்கும் தன் சகாக்களுக்கும் எடுக்கும் முயற்சியை மேற்கொள்வதாக பலர் குற்றம் சாட்டுகின்றார்கள். செந்தில் தொண்டமான் மற்றும் அவரோடு தொங்கும் மான்களுக்கு நாம் சொல்லிக்கொள்வது ஒன்றே ஒன்று தான், மக்கள் ஆணையோடு எம் மண்ணின் பிரச்சினை களை பார்ப்பதே முறையானது. அதிகாரத்தின் கால் பிடித்து பின் வாசல் பதவிகள் மூலம் செய்யப்படும் தலையீடுகளை நீங்கள் உடனடி யாக நிறுத்திக்கொள்ளுங்கள்.நிர்வாக சபை பிரச்சினைக்கு ஒரு பொழுதும் அரச முகவரிடம் தீர்வை பெற முடியாது”என கருத்துகள் முன் வைக்கப்படுகின்றன.
இது தொடர்பில் திருகோணமலையினை தளமாக கொண்டு செயற்படும் சிவில் சமூக செயற்பாட்டாளரான க.லவகுகராசா கருத்து தெரிவிக்கையில், தமிழர்களின் அடையாளமாக திருகோணேச்சரம் உள்ளது.இன்று பௌத்தமய மாக்கல் அதிகரித்துவரும் நிலையில் திருக் கோணேச்சரம் தமிழர்களின் வரலாற்றினை வெளிப்படுத்தும் ஆலயமாகவுள்ளது.இதே போன்று தமிழர்களின் அடையாளமாகயிருந்த கன்னியா வெந்நீருற்று பகுதியும் முற்றுமுழுதாக பௌத்தமயமாக்கல் செய்யப்பட்டுள்ளது.திட்ட மிட்ட வகையில் இந்த பௌத்தமயமாக்கல் முன் னெடுக்கப்பட்டுவருகின்றது.
இதேபோன்றுதான் திருக்கோணேஸ்வரம் ஆலய பகுதியில் சிங்கள மக்களை பௌத்த பிக்கு ஒருவரே திட்டமிட்டு கொண்டுசென்றுவிட்டு கடைகளை அமைத்து ஆக்கிரமிப்புகளை மேற் கொண்டனர்.இது தொடர்பில் பல்வேறு வகையான சட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்தபோதிலும் இதுவரையில் அவர்களுக்கு எதிரான எந்த நடவடிக்கையும் முன்னெடுக்கப்படாத நிலையில் அங்கு நிரந்தரமாக்கப்பட்டுவருகின்றனர்.
இன்று கதிர்காமம் ஆலயம் சிங்கள மயப்படுத்தப்பட்டு தமிழர்களின் அடையாளம் முற்றாக அழிக்கப்பட்டுள்ளது.அதேபோன்று கோணேஸ்வரர் ஆலயத்தினையும் சிங்கள பௌத்தமயமாக்கலுக்குள் கொண்டுவர முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றதா என்ற சந்தே கம் இருக்கின்றது.இவ்வாறான நிலையில் அரசாங்கத்தின் இந்த பௌத்தமயமாக்கல் செயற்பாடுகளுக்கு இந்த ஆலய நிர்வாகம் தடையாக யிருக்கின்றது.அதற்காக கிழக்கு மாகாண ஆளுனரை அரசாங்கம் பயன்படுத்துகின்றதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. குறிப்பாக சோளர் காலத்து நகை களவாடப்பட்டுள்ளது என்ற கருத்தினை கொண்டுவந்து தற்போதுள்ள ஆலய நிர்வாகத்திற்கு எதிரான கருத்துருவாக்கங்களை செய்து ஆலயத்தின் செயற்பாடுகளை அரசாங்கம் கையகப்படுத்தும் முயற்சியாக இது இருக்காலாம்.மக்கள் மத்தியில் தவறான தகவல்களை பரப்பி ஆலயத்தின் செயற்பாடுகளை அரசாங்கம் முழுமையாக கையகப்படுத்தும் சந்தர்ப்பத்தில் ஆலயத்தில் முன்னெடுக்கப்படும் விடயங்களை நிர்வாகமும் ஏனையவர்களும் தட்டிக்கேட்கமுடியாத நிலைமை ஏற்படும்.நிர்வாகத்தினை அரசு பொறுப் பேற்கும் நிலைமைகள் உருவாகும்போது இவை நடைபெறுவதற்கான நிலைமைகள் ஏற்படலாம் என்பதையும் நாங்கள் பார்க்கலாம்.எமது இன அழிப்பின் ஒரு பகுதியாகவே இதனை நாங்கள் பார்க்கின்றோம்.
இது தொடர்பில் ஆலய நிர்வாகத்தின் தலைவர் துஜியந்தன் கருத்து தெரிவிக்கையில், கோவிலில். வசந்த மண்டபத்தில் 31-2 பவுண் பெறுமதியான நகை ஒன்று காணாமல் போய் விட்டது. அது தொடர்பில் நிர்வாகம் கடமையில் இருந்த நான்கு பேரிடமும் சட்டநடவெடிக்கையை எடுக்க் வேண்டிவரும் என்பதையும் அதானல் எற்படகூடிய சாதக பாதகங்களியும் எடுத்து கூறியதை அடுத்து அந்த நான்கு பேரும் அந்த பேரும் காணமல் போன அந்த நகையை அதே பெறுமதியில் செய்வித்து நான்கு நாட்களுக்குள் ஒப்படைப்பதாக பொறுப்பேற்று கொண்டதோடு பிரச்சணை முடிவுக்கு கொண்டுவரப்பட்டது .
அதுவே யாப்பிலும் இருக்கும் விதி முறை ஆகும். இது இப்படி இருக்க கிழக்கு மாகாண ஆளுனர் அலுவலகத்தில் இருந்து ராஜ ராஜ சோழகாலத்து நகை என்றும் அது பலகோடி பெறுமதியானது என்ற மாதிரி ஊடகங்களுக்கு செய்தி அனுப்பியதும் மேலும் பொறுப்பற்ற விதத்தில் உண்மைக்கு புறம்பான செயற்பாட்டுக்கான காரணம் கோணேஸ்வரர் கோவிலில் ஒர் பதவி நிலையை அடைவதற்க்கான அவரின் முயற்ச்சிகள் வெற்றி பெறாமல் போனதால் இவ்வாறு பிரச்சனைகளை உருவாக்கி மக்களை உணர்ச்சி வசப்படுத்தி பிழையாக வழிநடத்தியத்து கோணேசர் கோவிலுக்கு இந்திய அரசு கோபுரம் கட்டுவதற்க்கு பல கோடிகள் வழங்க இருப்பதாக கூறப்படுகிறதும் அதணை பெற்றுக் கொடுக்ககூடியவராக ஆளுனர் இருப்பதும் சிலபேருக்கு நப்பாசைகளை உரு வாக்கும். அதணை பயன்படுத்தி வடக்கு, கிழக்கை தமது முழுக்கட்டுபாட்டில் கொண்டு வரும் முயற்ச்சியாகவே நாம் பார்க்கிறோம் என்றார்.