பண்டா – செல்வா ஒப்பந்தம் நிறைவேற்றியிருந்தால் நாடு இந்த அளவிற்கு உயிர் சேதங்களைக் கண்டிருக்காது – ஜனா

பண்டா – செல்வா ஒப்பந்தம் நிறைவேறியிருந்தால் நாடு இந்த அளவிற்கு உயிர் சேதங்களைக் கண்டிருக்காது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம்(ஜனா) தெரிவித்துள்ளார்.

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி வழங்குமாறு கோரி கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அமைதியான முறையில் கடந்த சனிக்கிழமை மட்டக்களப்பு காந்தி சதுக்கத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இந்த போராட்டத்தில் பங்கேற்று கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

“கடந்த காலங்களில் 50 இற்கு மேற்பட்ட ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். இதுவரையில் எந்தவொரு ஊடகவியலாளர்களுக்கும் நீதி கிடைத்ததாகத் தெரியவில்லை.

மாறி மாறி இந்த நாட்டை ஆட்சி செய்த அரசாங்கங்களின் காலத்தில் இவ்வாறு ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். குறிப்பாக ராஜபக்ஷ சகோதரர்களின் ஆட்சிக்காலத்தில் அதிகமான ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டும், காணாமலாக்கப்பட்டும் இருக்கின்றார்கள்.

இந்த நாட்டிலே அடிப்படை மனித உரிமைகளுக்கும், ஜனநாயக அரசியல் உரிமைகளும் இல்லை. இதனைவிட அரசியலமைப்பை மீறிக்கொண்டு செயற்படும் நாடாகவும், அரசாகவும்தான் இந்த நாடு இருந்து வருகின்றது.“ எனத் தெரிவித்துள்ளார்.