படர்கல் மலை – ஓர் பயண அனுபவம் – மட்டு. திவா

261 Views

என்ன வளம் இல்லை எம் ஊரில் என நினைக்க தோன்றியது இந்த நாளில். எதிர்பாராத விதமாக ஒரு பயணம் அதுவும் படர்கல் மலை நோக்கியதாக அமையும் என நினைக்கவில்லை.

மட்டக்களப்பில் இருந்து செங்கலடி வழியாக பதுளை வீதியில் செல்லும் போது இலுப்படிச்சேனை சந்தி வரும். அதிலிருந்து மாவடியோடை பக்கமாக செல்லும் போது மாவடியோடை அணைக்கட்டு வரும். அதைத் தாண்டி குடும்பிமலை பாதையால் செல்லும் போது கல்வான் ஆறு குறுக்கறுக்கும். அவ் இடத்தில் பாதை இரண்டாக பிரிக்கிறது. நேராக சென்றால் குடும்பிமலை, நாம் வலப்பக்கமாக திரும்பிச் கூளாவடி, நவுண்டிலியாமடுக் குளம், புழுட்டுமானோடை மலை போன்றவற்றினை கடந்து, புளுட்டுமானோடை குளத்தினை அடைந்து, குளம் வழியாக நேரே திம்புலாகல மலையை பார்த்தபடி செல்லும் வீதியால் போகும் போது பாதையில் இடைவழியில் எம்மை மறிக்கும் மலைத் தொடர் தான் இந்த படர்கல் மலை.

இது மட்டக்களப்பில் இருந்து அண்ணளவாக 45 km க்கு அப்பால் உள்ள இடம். இந்த படர்கல் மலைக்கு வந்து சேர குறைந்தது 2 மணி நேரம் தேவைப்படும். இரண்டு மணி நேரமும் மோட்டார் சைக்கிள் பயணமே வெறுத்து விடும். இலுப்படிச்சேனை சந்தியில் இருந்து படர்கல் மலை வரைக்கும் அவ்வளவுமே மோசமான பாதை தான்.

முதல் நாள் மழை பெய்யவில்லை போல. நாம் காலையில் பயணிக்கும் போது சில சில இடங்களில் தான் நீர் தேங்கி நின்றது. வெயிலும் அவ்வளவாக இல்லை மோட்டார் சைக்கிள் பயணத்திற்கு சிறந்த காலநிலை தான். நானும் வேறு இரு மோட்டார் சைக்கிள்களில் எமது குழுவினருமாக மொத்தம் ஐந்து பேர் 3 மோட்டார் சைக்கிள்களில் காலை 10 மணியளவில் பயணத்தை ஆரம்பித்தோம்.

கையில் 3 லீட்டர் தண்ணீரும் 5 பயத்தம் உருண்டையும் தான் 5 பேருக்கும் இரவு வரையான சாப்பாடு.  மட்டக்களப்பில் இருந்து இலுப்படிச்சேனை சந்தி வரை சிறப்பான காப்பெட் வீதி. இலுப்படிச்சேனை சந்தியில் இருந்து குமுக்கட்டு பாலம் வரை தார் வீதி. ஆனால் இந்த வீதி முழுமையாக சேதமடைந்துள்ளது. இதனால் வேகம் 30 km/h இனை விட அதிகமாக செல்ல இயலாது. குமுக்கட்டு பாலம் தாண்டியதும் கல்வான் ஆற்று பாலம் வரை எல்லாமே கிறவல் வீதி, அதற்கு பிறகு எல்லாமே களிமண் வீதிதான்.

இங்கு நான் வீதியை பற்றி குறிப்பிட காரணம் இந்த அனைத்து வீதியிலும் செல்ல கூடிய வாகனத்தை தான் நீங்கள் இங்கே கொண்டு செல்ல வேண்டும் என்பதற்கு தான். கார் மற்றும் ஸ்கூட்டி வகை மோட்டார்  சைக்கிள் போன்றவற்றில் பயணிப்பது இந்த இடத்துக்கு உகந்ததல்ல.

இலுப்படிச்சேனை  சந்தியில் இருந்து செல்லும் போது குசலான மலையின் ஒரு பக்க தோற்றத்தை கண்டு களிக்கலாம். இங்கிருந்து குசலான மலையை பார்ப்பது மலையின் முன் தோற்றத்தை விட மிகவும் அழகாகவும் இருக்கும்.

அதனை தாண்டி செல்லும் போது குமுக்கட்டு ஆறு பாதையை குறுக்கறுக்கும். அதனை தாண்டி செல்ல அமைக்கப்பட்டிருக்கும் குமுக்கட்டு பாலம் போகும் வழியில் ஒரு 10 நிமிடமாவது தரித்து நின்று புகைப்படங்கள் எடுத்து செல்ல கூடியதாக ஒரு அணைக்கட்டு வடிவில் வான்கதவுகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.  பார்க்கும் போதே சற்று வித்தியாசமாகத்தான் இருக்கும். நாமும் அந்த பாலமருகே இருந்த காட்டுத் தேங்காய் மரத்தடியில் சற்று இளைப்பாறிவிட்டு தான் பயணத்தை தொடர்ந்தோம்.

தொடர்ந்து செல்லும் போது கூழாவடி பிள்ளையார் கோவில் வரும். இதுவும் நாம் செல்லும் வழியில் வணங்கி விட்டு போகும் களுதாவளை பிள்ளையார், பிள்ளையாரடி பிள்ளையார் போல தான் இந்த வழியாக செல்லும் அனைவரும் இங்கே சற்று நேரம் தரித்து நின்று வணங்கி செல்வது வழமை.

இந்த கூழா மரத்தின் கீழ் பிள்ளையாருடன் முருகன் மற்றும் நாகதம்பிரானுக்கும் வழிபாடுகள் நடைபெறுகின்றன. பழமையான நாக வழிபாட்டு தடையங்கள் சுற்றிப் பார்க்கும் போது கண்ணில் பட்டது. இப்பகுதி மக்களின் காவல் தெய்வமாகவும் இந்த கூழா மரத்தடி காணப்படுகிறது.  எமது குழுவும் கோவிலடியில் வணங்கிவிட்டு குடிப்பதற்கு சற்று நீரை நிரப்பிக் கொண்டு தொடர்ந்து மேற்கு பக்கமாக பயணத்தை தொடர்ந்தோம்.

இருக்கும் முருகன் சிலை படர்கல் மலை - ஓர் பயண அனுபவம் - மட்டு. திவா

இலாவணை ஆறு குறுக்கே இருந்தது. நாம் சென்றது மழை காலம் தான். என்றாலும் அவ்வளவாக மழை பெய்யத் தொடங்கவில்லை. அதனால் அந்த ஆற்றில் நீர் வற்றிய நிலையே காணப்பட்டதனால் அதன் மேல் உள்ள பலத்தினால் நம்மால் இலகுவாக கடந்து செல்லக் கூடியதாக இருந்தது.

தொடர்ந்து செல்கையில் காணும் காட்சிகள் நம்மை வியக்க வைத்தன. முதல் தடவையாக இந்த இடத்துக்கு வருபவர்கள் அனைவரும் வியக்க தான் செய்வார்கள். அப்படி ஒரு அழகு. சுற்றிலும் மலைகள், ஆறுகள் , வயல்வெளிகள், உழவடிக்க தயாராகும் மக்களும், உழவு இயந்திரங்களும் ஒரு தொகை, மாடுகளும் ஆடுகளும் அதனை மேய்பவர்களும் ஒரு பக்கம், விறகு வெட்டி நகர் பகுதிக்கு கொண்டு செல்லும் விறகு வெட்டிகள் ஒரு பக்கம் என இயற்கையும் சுறுசுறுப்பும் கலந்த ஒரு பார்வை நமது பயணத்துக்கு மேலும் உறுதுணையாக இருந்தது.

எம்மைச் சுற்றி கார்மலை, புறாக்குஞ்சு மலை, வெள்ளைக் கல்லு மலை, இரைச்சலாறு மலை, புளுட்டுமானோடை மலை, கொட்டடி மலை, கெவர்மலை (டோரா போரா), படிவெட்டின மலை, கித்துள் மலை, குருட்டு மலை, தலப்பாக்கட்டு மலை, கதிரமலை  (கெமுனு புர) போன்ற மலைகளையும் பார்க்கக் கூடியதாக இருக்கும். (ஒவ்வொரு மலையையும் பற்றிய இன்னும் ஒரு பதிவில் தனி தனியாக பார்ப்போம்)

தொடர்ந்து பயணித்தால் வீதி ஓரமாக பாதி வற்றிய நிலையில் நவுண்டிலியாமடு குளம் காணப்பட்டது. நன்னீர் மீன்பிடி மற்றும் விவசாயத்துக்கு பிரதான நீர் முதலாக இது இந்த பகுதியில் காணப்பட்டது. இந்தக் குளக் கட்டில் மோட்டார் சைக்கிளை ஏற்றி புகைப்படங்களும் எடுத்து 5 நிமிடம் இளைப்பாறிவிட்டு புளுட்டுமானோடை மலையை நோக்கி நீளும் சாலையில் பயணம் தொடர்ந்தது.

குளம் படர்கல் மலை - ஓர் பயண அனுபவம் - மட்டு. திவா

தூரம் செல்லச் செல்ல ஆள் நடமாட்டம் குறையத் தொடங்கியது. சுற்றிவர எமது மோட்டார் சைக்கிள் சத்தத்தைத் தவிர சில்லூறு மற்றும் தேவாங்குகளின் இரைச்சல் மட்டுமே இருந்தது. இதிலிருந்து அடர்ந்த வனம் தொடங்கியது. காவல் தெய்வமாக குமாரர் வேல் மற்றும் அரிவாளுடன் புளுட்டுமானோடை மலை அடிவாரத்தில் இருக்கிறார்.

மலையடிவாரத்தில் வாடி வைத்திருப்பவர்களும் காட்டுக்கு விறகு வெட்டவோ கடுபுளியம் பழம் ஆய செல்பவர்கள் என அனைவரும் பயபக்தியாக வணங்கிச் செல்லும் தெய்வம் இது. நாமும் வணங்கியபடியே இந்த இடத்தை கடந்து சென்றோம். மரங்கள் வழியில் முறிக்கப்பட்டு கிடந்தன. ஆள் நடமாட்டம் ஒன்று கூட இல்லை. மயான அமைதி நிலவ தொடங்கியதும் நாமும் கதைத்துக் கொள்ளவில்லை சுற்றியுள்ள இடங்களில் இருந்து எதுவும் சத்தங்கள் வருகிறதா என அவதானித்துக் கொண்டே புளுட்டுமானோடை குளத்தை வந்தடைந்தோம்.

புளுட்டுமானோடை குளத்துடன் மாவடியோடை தொடக்கம் நாம் வந்த பாதை முடிவடைகிறது. இனி பாதை எனும் பெயரில் ஒன்றும் இல்லை கால் போன போக்கில் போக வேண்டிய திசையை நோக்கி செல்ல வேண்டியது தான். புளுட்டுமானோடை குளம் மிகவும் அழகானது. ஒரு எருமை மாட்டுப்பட்டி குளத்தருகே மேய்ந்து கொண்டிருந்தது.

போகும் பாதை படர்கல் மலை - ஓர் பயண அனுபவம் - மட்டு. திவா

குளத்தருகே இருந்து புளுட்டுமானோடை மலையை காணும் காட்சி பிரமிக்கத் தக்கதாக இருந்தது.. எவ்வளவு பெரிய மலை! குளத்தடியில் இருந்து சில புகைப் படங்கள் எடுத்துக் கொண்டோம். இங்கிருந்தே மண் மலையையும் கெவர் மலையின் உச்சியையும் ( டோரா போரா) காணக் கூடியதாக இருக்கும்.

குளம் வற்றி இருந்தமையினால் குளத்தின் நடுவே ஒற்றையடிப்பாதை மேற்கு நோக்கிச் செல்கிறது. அந்தப் பாதையால் தொடர்ந்து பயணம் செய்து அண்ணளவாக 15 தொடக்கம் 20 நிமிடங்களில் எமது இலக்கான படர் மலை அடிவாரத்தை வந்தடைந்தோம்.

வரும் வழியில் இரு சிற்றாறுகள் குறுக்கறுத்தன. எனினும் அவற்றில் நீரோட்டம் அதிகமாக இல்லாமையால் தொடர்ந்தும் மோட்டார் சைக்கிளிலேயே நம்மால் பயணம் செய்து அடிவாரம் வரை வர முடிந்தது.

தொடரும்….

Leave a Reply