நைஜீரியாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல்களில் 30 பேர் கொல்லப்பட்டதுடன், 42 பேர் காயமடைந்துள்ளனர் என றொய்டர் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள மக்கள் நிறைந்த சந்தைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு 3 தற்கொலைதாரிகள் தாக்குதலை மேற்கொண்டிருந்தனர். பெண் தற்கொலை தாக்குதலாளி ஒருவரின் குண்டு வெடிக்காததால் அவர் கைதுசெய்யப்பட்டதாக நைஜீரியா படையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த தாக்குதல் தொடர்பில் எந்த குழுவினரும் இதுவரையில் உரிமைகோரவில்லை எனவும், ஆனால் பொகோகாராம் அமைப்பின் பிரிவினரே இதனை மேற்கொண்டதாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
கால்பந்து போட்டிகளை பார்ப்பதற்காக மக்கள் கூட்டமாக இருந்த பகுதியிலேயே தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
2011 ஆம் ஆண்டில் இருந்து வட மேற்கு பகுதியில் இடம்பெற்றுவரும் தாக்குதல்களில் 1,000 இற்கு மேற்பட்ட மக்கள் அங்கு கொல்லப்பட்டுள்ளதுடன், பல பத்தாயிரம் வீடுகள் எரிக்கப்பட்டும், பெருமளவான தொழில் வளங்களும் அழிக்கப்பட்டுள்ளன.