நூலக எரிப்பு ஒரு பண்பாட்டு படுகொலை- நிலாந்தன்

168 Views

‘நூலக எரிப்பு ஒரு பண்பாட்டு படுகொலை’ என சமூக செயற்பாட்டாளரும் அரசியல் ஆய்வாளருமான நிலாந்தன் தெரிவித்துள்ளார்.

நூலக எரிப்பு  குறித்து ‘இலக்கு’ செய்தி நிறுவனத்திற்கு அவர் வழங்கிய செவ்வியில்,

 நூலக எரிப்பு ஒரு பண்பாட்டு படுகொலை. அதேநேரம் நாங்கள் நூலகம் எரிப்பு என்பதனை திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருப்பதை விடவும், எரிக்கப்பட முடியாத நூலகங்களை, எப்படி கட்டி எழுப்பலாம்? என்று சிந்திப்பது தான் சரி. இது நூலகத்துக்கு மட்டும் இல்லை, முள்ளி வாய்க்காலுக்கும் பொருந்தும்.

புதை மேடுகள், சாம்பல் மேடுகளில் குந்தியிருந்து பிலாக்கணம் வாசிப்பதற்கு பதிலாக எரிக்கப்பட முடியாத நூலகங்களையும் எரிக்கப்பட முடியாத  நினைவு சின்னங்களையும்

உருவாக்க வேண்டும் முள்ளிவாய்க்கால் கஞ்சியை போல நாங்கள் எரிக்கப்பட முடியாத ஒரு நூலகத்தை இப்பொழுது உருவாக்கியுள்ளோம்.அதுதான் நூலகம் பவுண்டேசன். அதில் இன்று வரையிலும்  ஒருலட்சத்துக்கு மேலான ஆவணங்கள், நூல்கள் அங்கே தொகுக்கப்பட்டிருக்கின்றன. நூலகத்தை எரித்தார்கள் ஆனால், நாங்கள் எரிக்கப்பட முடியாத ஒரு நூலகத்தை உருவாக்கி இருக்கிறோம். நினைவுச் சின்னங்களை, இடிக்கப்பட முடியாத வகையிலாக, கட்டி இருக்க வேண்டும்.

எந்த தரப்பினராலும் அழிக்க முடியாத நினைவாலயங்களையும், நினைவு சின்னங்களையும் நாங்கள் கட்டி எழுப்ப வேண்டும். நாங்கள் எந்த இழப்புகளும்  இனிமேல்  ஏற்படாத விதத்தில், எங்களை எப்படி தற்காத்து கொள்ளலாம்?  எப்படி பலப்படுத்தி கொள்ளலாம்? என்றும், யோசிக்க வேண்டும்.

எனவே, நூலகத்தை நினைவு கூருவது என்பது ஒரு அறிவியல் படுகொலையை, ஒரு கலாச்சார இனப்படுகொலையை , பண்பாட்டு இனப்படுகொலையை நினைவு கூருவது என்பது அந்த இனப்படுகொலைக்கு எதிரான நீதியை பெறுவதற்கான ஒரு போராட்டத்தில், பிரிக்கப்பட முடியாத பகுதி என்பதன் அடிப்படையில், நாங்கள் எங்களுக்குரிய சுய பாதுகாப்பு கவசங்களை கட்டியெழுப்ப வேண்டும் . நீதிக்கான போராட்டத்திலும்  முன்னோக்கி செல்ல வேண்டும்.

தமிழ் பகுதிகளில் நூல்களை வாசிப்பவர் தொகை குறைவடைகிறது என்று, பெரும்பாலான நூலகர்கள் வருத்தப்படுகிறார்கள். இடிக்கப்பட்ட நூலகம் இப்பொழுது திருத்தப்பட்டிருக்கிறது. ஆனால் நூல்களை வாசிக்கும் வீதம் குறைந்து வருகிறது. அன்றாடம் பத்திரிகை, நூல்கள் வாசிப்பவர்கள் தொகை குறைந்துவிட்டது. குறிப்பாக ஆழமான நூல்களை வாசிப்பவர்கள் தொகை குறைந்துவிட்டது. கிட்டத்தட்ட வாசிப்பே இல்லாத ஒரு தலைமுறையை இந்த சமூக வலைத்தளங்களும்,  இந்த கைபேசி செயலிகளும் உருவாக்கி விட்டன. ஆனால்,  ஆழமாக வாசிப்பவர்கள் வாசித்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

நூல்களை நாங்கள் வாசிக்க வேண்டும். நாங்கள் நடமாடும்  நூலகங்களாக மாற வேண்டும். வீடுகள் தோறும் நூலகங்கள் உருவாக்கப்பட வேண்டும். எல்லா வீடுகளிலும் கைபேசிகள்உண்டு, மடிகணணிகள் உண்டு, தட்டையான தொலைக்காட்சிகள் உண்டு ஆனால் எத்தனை வீடுகளில் நூலகங்கள் உண்டு. வீடுகளை சிறு சிறு நூலகங்களாக மாற்றவேண்டும். வாசிப்பை ஊக்குவிக்க வேண்டும். நூல்களை ஆராதிக்க வேண்டும் நூல்களை போற்ற வேண்டும். வாசிப்போரின் தொகையை அதிகரிப்பது தான் எரிக்கப்பட்ட நூலகத்திற்கான மெய்யான நினைவுகூருதல்” என்றார்.

Leave a Reply