நீ சென்ற இடமெல்லாம் ஒளியானதே! தமிழ் வரலாறு உலகெங்கும் பதிவானதே! – நவீனன்

351 Views

(சென்றவாரத் தொடர்ச்சி)

பரதன் அண்ணா எவ்வளவு கண்டிப்பானவரோ அந்தளவிற்கு கரிசனையும் உடையவர். அது போராளிகளாக இருந்தாலும் சரி, பொது மக்களாக இருந்தாலும் சரி அதற்கு சில உதாரணங்களைக் கூறலாம்.

எனக்கு நான்கைந்து நாட்களாக உடம்பு வலியுடன் கூடிய காய்ச்சல் இருந்தது. சாதாரண காய்ச்சல் என்று பனடோலைப் போட்டுவிட்டு எனது வேலைகளைச் செய்து கொண்டிருந்தேன். நாளாக நாளாக குறையவில்லை. என்னைப் பார்த்த பரதன் அண்ணா என்ன நவீனத்தார் ஒரு மாதிரியாக இருக்கிறாய். உடம்பு சரியில்லையோ என்று கேட்டார். காய்ச்சல் போலிருக்கிறது என்றேன். வா ஆஸ்பத்திரிக்குப் போவோம் என்றார். இல்லை பனடோல் போட்டனான். ஆக ஏலாது விட்டால் போவோம் என்று சொன்னேன். நீ போய் படப்பு என்று சொன்னார். எனக்கு கொஞ்ச வேலை இருக்கிறது. முடித்துவிட்டு படுக்கிறேன் என்று சொன்னேன். அதைப் பிறகு செய்யலாம். படுத்து எழும்பினால் சுகமாயிருக்கும். போய் படு என்று சொல்ல, நானும் அறைக்குள் சென்று படுத்துவிட்டேன். சிறிது நேரம் செல்ல நடுங்கத் தொடங்கி விட்டது. சத்தம் கேட்டு வந்து பார்த்தவர் நல்லா கூடிற்றுது போல என்று சொல்லி, வாகனம் தர்மேந்திராவில் நிற்கிறது. எடுத்துக்கொண்டு வாறன் என்று கூறி போர்வையால் போர்த்ததும், பயங்கரமாக குலப்பன் அடிக்கத் தொடங்கி விட்டது.

அடுத்த கணமே என்னைத் தூக்கிக் கொண்டு அருகிலிருந்த திருநெல்வேலி நேர்ஸிங் ஹோமிற்கு போனார். எனக்கோ கதைக்க முடியாத நடுக்கம். என்னைப் பரிசோதித்த மருத்துவர் சிவபாதசுந்தரம், இது சாதாரண காய்ச்சல் இல்லை. இரத்தப் பரிசோதனையின் மூலம் தான் கண்டுபிடிக்கலாம் என்றும், உடனடியாக இரத்தப் பரிசோதனையை போய் செய்யும்படியும் கூறினார். அதற்குள் மணியண்ணாவும் வாகனத்தைக் கொண்டுவந்து விட்டார். இரத்தப் பரிசோதனையில் கடுமையான நெருப்புக் காய்ச்சல் என்றும் உடனடியாக அதற்கான மருந்து ஏத்த வேண்டும் எனவும், ஆனால் மருந்துக்குத் தட்டுப்பாடு. எங்கிருந்தாவது கொண்டு வந்தால் தான் காப்பாற்ற முடியும் என்றும் சொன்னார். பரதன் அண்ணாவின் முகம் மாறிவிட்டது. அதை வெளிக்காட்டாமல் எனது தலையைத் தடவி நீ ஒன்றுக்கும் யோசிக்காதை நான் மருந்தோடுதான் வருவேன் என்று கூறி, திலகனை என்னோடு நிற்கும்படியும் சொல்லி விட்டு சென்றார். சிலமணித்தியாலங்கள் கழித்து மருந்தோடுதான் வந்தார். உடனடியாக மருந்து ஏற்றத் தொடங்கி விட்டார்கள்.

வேலைப் பழுவிலும் அடிக்கடி வந்து பார்த்து மருத்துவரிடமும் கதைத்துவிட்டு தான் போவார். ஒரு வாரத்தின் பின் காய்ச்சல் குறைந்து விட்டது. அந்த சமயத்தில் என்னைப் போல் பெண் பிள்ளை ஒருவருக்கும் காய்ச்சல். மருந்து ஏற்ற வேண்டும். மருத்துவர் பரதன் அண்ணாவிடம் நிலைமையைக் கூறி மருந்தை அந்தப் பிள்ளைக்கும் கொடுங்கள். பொது மக்களோ, போராளியோ உயிர்தான் அவர்களுக்காகத் தானே நாம் போராடுகின்றோம் என்று கூறி அந்தப் பிள்ளையையும் பார்த்து ஆறுதல் கூறினார். அந்தப் பிள்ளை சுகமாகி தாயாருடன் எமது முகாமிற்கு வந்திருந்தார். தாயார் பரதன் அண்ணாவின் கையைப் பிடித்து அழுத அந்த நெகிழ்வான தருணம் இன்னும் மறக்க முடியாத ஒரு நிகழ்வு.

அவரின் நிர்வாகத் திறமை பார்ப்போரை வியக்க வைக்கும். அவரது ஆளுமையின் கீழ் நிதர்சனம், புலிகளின்குரல், தமிழீழ வானொலி, புகைப்படம், ஒலி, ஒளி நாடா வெளியீடுகள், பயிற்சி வகுப்புகள் என அவரின் ஆளுமை வியாபித்திருந்தது. பொறுப்பாளன் என்றால் பொறுப்பேற்கும் பக்குவமும் வேண்டும். இதற்கு ஒரு சம்பவம் தலைவரின் மாவீரர் நாள் பேச்சு ஒலிபரப்பில் நடந்தது. அப்போது புலிகளின்குரல் ஒலிபரப்பிற்கு சிவா அண்ணா பொறுப்பாகவிருந்தார். தலைவரின் மாவீரர் நாள் உரையின்போது தடங்கல் ஏற்பட்டது. ஒழுங்காக தயாரிக்கப்பட்ட உரையின் ஒலி நாடாவிற்குப் பதிலாக வேறு போடப்பட்டு விட்டது. பின் இடைநிறுத்தி மீண்டும் ஒலிபரப்பப்பட்டது. தலைவரின் உரையில் எப்படி இது நடக்கச் சாத்தியம் என்று இன்றுவரை புரியவில்லை. எல்லாம் சரிபார்க்கப்பட்டுத் தான் இறுதியாக ஒலிபரப்புக்குக் கொடுக்கப்படும். உடனடியாக தலைவரிடம் சென்று தவறுக்குத் தானே பொறுப்பேற்றுக் கொண்டார்.

தவறிழைத்தது அவரல்ல. ஆனாலும் தான் முழுவதற்கும் பொறுப்பு என்பதால், அவர் பொறுப்பேற்றுக் கொண்டார். தலைவரும் பரவாயில்லை. பரதன் அடுத்தமுறை இப்படி நடக்காமல் நீங்களே நேரடியாக நின்று கவனியுங்கள் என்று சொல்லியனுப்பானார். இந்த நிகழ்வு அவரை வெகுவாகப் பாதித்திருந்தது. அதற்குப் பின் தனி ஒலிநாடாவில் பதியப்பட்டு அவரே நேரடியாகச் சென்று கொடுத்து கவனித்துக் கொள்வார்.

அவரது ஒலிபரப்பில் உருவான முதலாவது குறும்படம் ‘இனியொரு விதி’ தரமானதாக இருக்க வேண்டும் என்பதற்காக நிறைய தயாரிப்பு வேலைகள். ஞானரதனின் எழுத்துருவாக்கம். நாவண்ணன் அவர்களின் மகள், ஸ்ரீராம் (படப்பிடிப்பு போராளி, பின்நாளில் கிழக்கு மாகாண கடற்புலிகளின் தளபதி) நடித்திருந்தனர். பரதன் அண்ணாவிற்கு உதவியாளராக நான் இருந்தேன். நாவற்குழிக்கும், கைதடிக்கும் இடைப்பட்ட குளத்துடன் சேர்ந்த வயல் வெளியில் படப்பிடிப்பு நடைபெற்றது. ஒலி ஒளிக் கோவைகளின் பின்னர் 30 நிமிட குறும்படம் தயாரானது. தயாரானவுடன் தலைவர் எமது முகாமிற்கு வந்து படத்தைப் பார்வையிட்ட பின்னர் அவருடைய முகத்தில் ஒரு பெருமிதம். நல்லாச் செய்திருக்கிறியள். முப்பது நிமிடம் என்றீர்கள் கெதியாய் முடிந்து விட்டது என்றார். இந்த வார்த்தைக்காகத்தான் பரதன் அண்ணாவும், நாமும் காத்திருந்தோம். விரைவாக முடிந்து விட்டது என்றால் பெரிய வெற்றி தானே.

பின்னர் வெளியீட்டு விழா ஸ்ரீதர் திரையரங்கில் நடைபெற்றது. அங்கு தான் முதல் ஒளிபரப்பு வெளியானது. பல நாட்கள் நிறைந்த மக்களுடன் இனியொரு விதி ஒளிபரப்பானது.

அதைத் தொடர்ந்து உதயம் ஒலிநாடா உருவானது. இதற்கான ஒலிப்பதிவுகள் யாழ். ரமணன் குழுவினரின் இசையமைப்பில் தர்மேந்திரா கலையகத்தில் நடைபெற்றன. சில பாடல்களுக்கு தவில், நாதஸ்வர இசை சேர்க்கப்பட்டது. இதன் போது ஒரு துயர் நிகழ்வும் ஏற்பட்டது. அருகில் இருந்த வீட்டுக்காரர் மாரடைப்பால் மரணமடைந்து விட்டார். அதற்காக அடுத்த நாள் ஒலிபரப்பு நிறுத்தப்பட்டு இறுதிக் கிரியைகளின் பின்பு தான் மீண்டும் ஒலிபரப்பு நடைபெற்றது. இந்த ஒலிப்பதிவில் வீரமணி ஐயரின் பங்கும் மிகவும் முக்கியமானது.

முழுக்க முழுக்க தமிழீழக் கலைஞர்களைக் கொண்டு தர்மேந்திரா கலையகத்தில் உருவான முதலாவது ஒலிநாடா இதுவாகும். இதன் வெளியீடும் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

சண்டைகள் உக்கிரமடைந்திருந்த நேரம், அப்பொழுது கிட்டண்ணா லண்டனில் இயங்கிக் கொண்டிருந்தார். அவர் பரதன் அண்ணாவிடம் அந்த நேரத்தில் நடந்த நிகழ்வுகளையெல்லாம் ஆவண ஒளிவீச்சாக செய்து அனுப்பும்படி கூறியிருந்தார். அதற்கான வேலைகள் தொடங்கிய நிலையில் பரதன் அண்ணா ஒன்றில் மட்டும் தெளிவாக இருந்தார். தரமானதும், அதேநேரம் மேலைத்தேய ஊடகங்களுக்கு இணையாகவும் இருத்தல் வேண்டும் என்பது தான் அது.

அந்த நேரம் தான் மாங்குளம் முகாம் மீதான தாக்குதல் முடிவிற்கு வந்த நேரம். வேறு இடங்களில் சண்டை மிகவும் உக்கிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. எமது படப்பிடிப்பு போராளிகள் பெரும் குண்டு மழையிலும் தம்மால் எடுக்கக்கூடிய காட்சிகளையெல்லாம் எடுத்து அனுப்பிக் கொண்டிருந்தார்கள். போராளிகளின் வீரம், மக்களின் அவலங்கள் அவர்களின் காட்சிகளில் சாட்சியங்களாக அமைந்தன. அவற்றில் இருந்து ஒரு தரம் வாய்ந்த ஒரு ஒளிவீச்சு ஆவணம் உருவானது. இதில் பல பிரதிகள் எடுக்கப்பட்டு கிட்டண்ணாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. நித்திரையற்றதன் விளைவாக உடல் அசதி காட்டத் தொடங்கியது.

அடுத்த நாள் தலைவரின் மாவீரர் நாள் உரைக்கான ஒலி, ஒளிப்பதிவுகள் நடைபெறவிருந்தது. அதற்கான ஆயத்தங்களையும் செய்ய வேண்டும். மறுநாள் அதற்கான முன்னேற்பாடுகளை செய்து விட்டு மீண்டும் ஒருமுறை எல்லாவற்றையும் சரிபார்த்துக் கொண்டோம். வருபவர்களுக்கான உணவுகளும் தயாராகி விட்டது. பரதன் அண்ணாவும், கிருபாவும் பங்கருக்கு சென்று விட்டனர். மீண்டும் ஒலிப்பதிவுக் கருவிகளைப் பரிசோதிப்பதற்கு ஆயத்தமானேன். நான் முன்வாசலில் உள்ள கதிரையில் இருந்து கொண்டு காவலில் நின்ற ரஞ்சனிடம் வாகனம் வாகனம் வந்தால் சொல்லு என்று சொல்லிவிட்டு அசந்து தூங்கி விட்டேன். ஜெயம் அண்ணா வந்து எழுப்பும் மட்டும் வாகனம் வந்து நின்றது தெரியாது. திடுக்கிட்டு முழித்து பின்பக்கம் செல்ல முயன்ற போது, அண்ணை அருகில் வந்து விட்டார். நவீனன் என்று கூப்பிட்டு கேட்ட முதல் கேள்வியே எத்தனை நாள் நித்திரை கொள்ளவில்லை என்பது தான். அதற்குள் பரதன் அண்ணாவும் வந்துவிட்டார். கிட்டண்ணாவிற்கு அவசரமாக ஒளிநாடா அனுப்ப வேண்டியிருந்ததால், இரண்டு நாளாக நித்திரையில்லை என்று சொல்ல, அதற்கு தலைவர் இரவு நித்திரை முழித்து வேலை செய்தால் கட்டாயம் பகலில் குறைந்தது மூன்று மணிநேரமாவது நித்திரை கொள்ளுங்கள் என்றார். நீங்களும் தான் என்று பரதன் அண்ணாவைப் பார்த்துச் சொன்னார்.

நான் இதைக் குறிப்பிட்டதன் நோக்கம் தலைவர் போராளிகளிடத்தில் எவ்வளவு அக்கறையும், கரிசனையும் கொண்டவர் என்பதற்கான சிறு உதாரணமே. அண்ணை ஒலிப்பதிவு முடித்துப் போகவே நடுச்சாமம் ஆகி விட்டது. அடுத்த நாள் அடுத்த ஓட்டத்திற்குத் தயாராகி விடுவோம். இரண்டு நாட்களில் அடுத்த ஒரு பெரிய நிகழ்வுக்கான தயார்ப்படுத்தல்.

அது புலிகளின் குரல் வானொலியின் முதலாம் ஆண்டு நிறைவு விழா. யாழ். இந்துக் கல்லூரி மண்டபத்தில் விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டு, விழாவும் தொடங்கி விட்டது. அதில் நல்லூர் ஸ்ரீதேவி வில்லிசை் குழுவினரின் வில்லுப்பாட்டு நடைபெற்றுக் கொண்டிருந்தது. பொருளாதாரத்தடை பற்றி பேசியவர் சவர்க்காரத்தை தடை செய்து விட்டு என்று கூறி… அப்போதைய ஜனாதிபதியின் சாதி பற்றி மறைமுகமாக மேடையில் பேசியதை அவதானித்த பரதன் அண்ணா, உடனடியாக அவர்களது நிகழ்ச்சியை நிறுத்தி திரை போடச் சொன்னார். அவர்களை மண்டபத்திலிருந்து வெளியே அனுப்பி விட்டு விழாவிற்கு வந்தவர்களிடம் நடந்த சம்பவத்தை விளக்கி எங்களுடைய நிகழ்வில் நடந்த இந்தச் சம்பவத்திற்காக மன்னிப்பும் கேட்டுக் கொண்டார். இதில் இரண்டு விடயங்கள் புலனாகியது. ஒன்று கொள்கைப் பற்று, மற்றையது முடிவெடுக்கும் திறன்.

அந்த நிகழ்வு எல்லோராலும் பாராட்டப்பட்டு புலிகளின் நிலையை வலியுறுத்திய பேசுபொருளாகவும் அமைந்தது. அதேநேரம் எதிரியைக்கூட மதிக்கும் மாண்பாயும் அமைந்தது. இதை தலைவர் அறிந்தவுடன், பரதன் செய்தது தான் சரி. இது மற்றவர்களுக்கும் ஒரு பாடமாக இருக்கும் என்றார்.

நான் இவற்றையெல்லாம் எழுதுவதன் காரணம் தேசத்தின் மீதும், தேசியத் தலைவர் மீதும் எவ்வளவு பற்றுறுதியோடிருந்தார் என்றும், அவரின் ஆற்றலும் அர்ப்பணிப்புகளும் சாதாரணமல்ல; ஊடகத்துறையில் அவர் ஏற்படுத்திய தாக்கங்களை தெரியப்படுத்தவுமே.

சில வருடங்களின் பின் நான் வேறு வேலைக்கு சென்று விட்டேன். அவரும் வேறு திசை. நாட்டில் அவரைக் கடைசியாகக் கண்டது 1996ஆம் ஆண்டின் முற்பகுதியில் மாங்குளத்திற்கும், கனகராயன் குளத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் ஒரு குடிசையில். அவர், வினோ அக்கா, இரு பிள்ளைகள். இவர்களுடன் பரதன் அண்ணாவின் அப்பா, அம்மாவும். அந்த நேரம் மிகவும் கஷ்டம். மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியிருந்த நேரம். இடப்பெயர்வின் வலி அது. பின் அங்கிருந்து ஒருவாறாக இலண்டனுக்கு குடும்பத்துடன் வந்து விட்டார். நான் மீண்டும் பரதன் அண்ணாவைச் சந்தித்தது 1999ஆம் ஆண்டு. நான் இலண்டன் வந்தவுடன் முதலில் வந்து பார்த்தது பரதன் அண்ணா தான்.

அப்பொழுது அவர் இலண்டனில் ஒளிப்படம் எடுக்கும் பணியை செய்து கொண்டிருந்தார். அவருடன் பல நிகழ்வுகளில் புகைப்படம் எடுக்கும் வாய்ப்பை எனக்குத் தந்தார். அந்தச் சமயத்தில் தான்  மூன்றாவது கண்(THIRD EYE) என்னும் ஒளிப்பட நிறுவனத்தை தொடக்கி நடத்தினார். அவரால் இரண்டு ஒளி நாடாக்களும் (UN TOLD STORY / MY NEIROUR IN SRI LANKAN TAMIL) தயாரித்து வெளியிடப்பட்டது.

அவர் தொடாத துறைகளே இல்லை. அவருக்கு எல்லாமே தெரிந்திருந்தது. அவருடைய கனவே எமது போராட்டத்தின் முழுமையும் ஆவணப்படுத்தி அதை அடுத்த சந்ததியும் அறிந்து கொள்ளும் வாய்ப்பையும் உருவாக்க வேண்டும் என்பது தான். அவர் எந்தவொரு சூழ்நிலையிலும் தேசத்தின் மீதும், தேச மக்களின் மீதும் தேசியத் தலைவர் மேலும் கொண்டிருந்த கொள்கைப் பற்றும், அவர்கள் மீதான பற்றுறுதியிலும் விலகவேயில்லை.

அவரின் கனவை நனவாக்க முன்னோக்கிச் செல்வோம்

உங்கள் நினைவுகளுடன் நவீனன்.

Leave a Reply