Tamil News
Home ஆய்வுகள் நீதி கிடைக்குமா? – நீதி கிடைப்பதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுமா?-பி.மாணிக்கவாசகம்

நீதி கிடைக்குமா? – நீதி கிடைப்பதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுமா?-பி.மாணிக்கவாசகம்

தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளுக்கும் தாயக மண் உரிமைக்குமான போராட்டம் நீதிக்கான போராட்டமாக விரிவடைந்திருக்கின்றது. மனித உரிமை மீறல்களுக்கும் போர்க்குற்றச் செயற்பாடுகளுக்கும் பொறுப்பு கூற வேண்டும் என்ற ஐ.நா மன்றத்தின் கோரிக்கை நிறைவேற்றப்படாமையினால் ஐநா மனித உரிமைப் பேரவையின் அமர்வுகள் இடம்பெறுகின்ற சந்தர்ப்பங்களில் இலங்கை நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்து வருகின்றது.

அதிலும் குறிப்பாக பேரவையின் 46 ஆவது அமர்வு சிறீலங்கா அரசுக்குப் பெரும் நெருக்கடிகளைக் கொடுக்கின்ற ஒரு சந்தர்ப்பமாக மாறியிருக்கின்றது. பேரவையில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கமைய நிலை மாறுகால நீதியை நிலைநாட்டுவதற்கான இணை அனுசரணையில் இருந்து ஆட்சியில் உள்ள அரசாங்கம் தன்னிச்சையாக விலகிக்கொண்டதையடுத்து, இப்போதைய நிலைமைகள் சுருக்குக் கயிறாக அதன் தலைமீது தொங்கிக் கொண்டிருக்கின்றது.

இந்த நெருக்கடிகளுக்கு முகம் கொடுப்பதில் இராஜதந்திர முறைகளில் செயற்படுவதற்குப் பதிலாக யுத்த வெற்றி உளவியலின் அடிப்படையில் அரசியல் ரீதியாக நிலைமைகளைக் கையாள்வதற்கு அரசு முயற்சித்துக் கொண்டிருக்கின்றது.

யுத்த வெற்றி உளவியலுடனான அரசியல் செயற்பாட்டு முயற்சிகள் சர்வதேச அரங்கில் இலங்கைக்கு கைகொடுக்கப் போவதில்லை என்ற உண்மையை அரச தரப்பினர் ஏற்க மறுத்துச் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவை என்பது மனித உரிமைகளுக்கும் சர்வதேச மனிதாபிமான சட்டங்களுக்கும் மனிதநேய முறையிலான அணுகுமுறைகளுக்குமான கேந்திர நிலையமாகும். அங்கும் அரசியல் கோலோச்சுகின்றது. அந்த அரசியல் உள்ளுர் அரசியல் பாணியிலானதல்ல.

நாட்டு மக்களைப் பின்னால் அணிதிரளச் செய்து அவர்களுடைய வாக்குகளைக் கவர்வதற்கான அரசியல் போக்கில் கருத்துக்களை வெளியிட்டு, விடயங்களைக் கையாள்வதைப் போன்றே அரசாங்கம் ஐ.நா மனித உரிமை ஆணையாளரையும் மனித உரிமைப் பேரவையையும் கையாள்கின்றது. வெளிவிவகார அமைச்சர், ஐ.நாவுக்கான சிறீலங்கா பிரதிநிதிகள் போன்றவர்களுடைய கருத்துக்களும் அவற்றை வெளியிடுகின்ற முறைமையும் இதனை வெளிச்சம் போட்டு காட்டியிருக்கின்றன.

சர்வதேச நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்டுள்ள அந்த உயரிய பேரவையில் இராஜதந்திர வழிமுறையிலான அணுகுமுறையை அரச தலைவரிடமும், வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட முக்கிய பிரதிநிதிகள் மற்றும் பொறுப்புள்ள அமைச்சர்களிடமும் காண முடியவில்லை. இது அரசாங்கத்திற்கு சர்வதேச அரங்கில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை இன்னும் தீவிரமாக்குவதற்கே வழிவகுத்திருக்கின்றது.

மறுபுறத்தில் யுத்தம் முடிவடைந்து 12 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், மேலும் அரசாங்கத்திற்குக் கால அவகாசம் வழங்குகின்ற முறையிலேயே ஐ.நா மனித உரிமைப் பேரவையின் புதிய பிரேரணை அமைந்திருக்கின்றது. ஆனாலும் உள்ளக நீதிப் பொறிமுறைகளின் மூலம் நீதி கிடைக்கப் போவதில்லை என்பது தமிழ் மக்களுடைய நிலைப்பாடு.

உள்ளக நீதிப்பொறிமுறையானது, சிறப்பாகக் கட்டமைக்கப்பட்டுள்ள போதிலும், நீதித்துறையின் அரசியல் ரீதியான போக்கு காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைப்பது என்பது குதிரைக் கொம்பாகவே மாறியிருக்கின்றது.

முன்னதாக மோசமான மனித உரிமை மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டங்களை மீறிய வகையில் போர்க்குற்றச் செயல்களாக அடையாளம் காணப்பட்ட – தெரிவு செய்யப்பட்ட குற்றச் சம்பவங்களுக்கு உடன் நீதி விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று ஐ.நா மனித உரிமைப் பேரவையும் மனித உரிமை ஆணையாளர் அலுவலகமும் சுட்டிக்காட்டியிருந்தன. ஆயினும் அந்தக் குற்றச் செயல்கள் தொடர்பான நீதி விசாரணைகளில் அரசாங்கம் அக்கறை காட்டவில்லை. ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டிருந்த சில சம்பவங்கள் தொடர்பிலான விசாரணைகள் கோத்தாபாய ராஜபக்ச ஜனாதிபதியாக ஆட்சிப் பொறுப்பை ஏற்றதன் பின்னர் கைவிடப்பட்டிருக்கின்றன.

அந்த குற்றச் செயல்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டு குற்றம் சுமத்தப்பட்டிருந்தவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் விலக்கிக் கொள்ளப்பட்டிருக்கின்றன. அவர்கள் அந்த விசாரணைகளில் இருந்து விடுவிக்கப்பட்டிருக்கின்றார்கள். முக்கிய படை அதிகாரிகள் உள்ளிட்ட படையினரும், சில அரசியல்வாதிகளும்கூட இவ்வாறு விடுதலை பெற்றிருக்கின்றார்கள்.

இவர்களுக்கு எதிராக அரசியல் பழிவாங்கலாகவே குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு நீதி விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்ததாக இவர்களுடைய விடுதலைக்கான காரணம் கூறப்பட்டிருக்கின்றது.

கொழும்பில் வைத்துக் கடத்தப்பட்ட 11 மாணவர்கள் தொடர்பிலான வழக்கு, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை வழக்கு என்பன குறிப்பிட்டு கூறத்தக்க வழக்கு விசாரணைகளாகும். அதேவேளை மிருசுவில் பகுதியில் குழந்தை உட்பட பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்ட பாரதூரமான குற்றச் செயலில் முறையான நீதிவிசாரணைகளின் பின்னர் அந்த வழக்கில் சம்பந்தப்பட்ட இராணுவ சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்கவுக்கு 2015 ஆம் ஆண்டு ஜுன் 24 ஆம் திகதி மரண தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது.

இந்த மரண தண்டனைத் தீர்ப்பை எதிர்த்து மேன்முறையீடு செய்யப்பட்டதையடுத்து இடம்பெற்ற நீதிவிசாரணைகளில் அவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் மீள் உறுதி செய்யப்பட்டதுடன் அவருக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையும் 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 25 ஆம் திகதி உறுதிப்படுத்தப்பட்டது.

ஆனால் இந்த மரண தண்டனைக் குற்றவாளிக்கு 2020 ஆம் ஆண்டு மார்ச் 26 ஆம் திகதி ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ச பொதுமன்னிப்பளித்து விடுதலை செய்தார். இராணுவத்தினருக்கு எதிராக அரசியல் பழிவாங்கலாகவே குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டன என்றும், எந்தவோர் இராணுவத்தினரையும் குற்றவாளியாக நீதிமன்றத்தில் நிறுத்த அனுமதிக்கப் போவதில்லை என சூளுரைத்து அதற்கமைவாகவே இந்தப் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டது.

ஏனைய பாரதூரமான சம்பவங்கள் தொடர்பிலான வழக்குகளில்  விசாரணைகளுக்கு முகம் கொடுத்திருந்த படையினரும் ஏனையோரும் ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்சவினால் விடுதலை செய்யப்பட்டிருக்கின்றனர்.

இரண்டு எதிரி நாடுகளுக்கு இடையிலான மிக மோசமானதொரு யுத்தமாகவே, விடுதலைப்புலிகளுக்கும் அரச படைகளுக்கும் இடையிலான முப்பது வருட கால யுத்தம் நடைபெற்றது.

ஆனால் அதனை ஒரு யுத்தமாக ஏற்க மறுத்துள்ள ஆட்சியாளர்கள் – ,குறிப்பாக ராஜபக்சக்கள், பயங்கரவாதத்திற்கும், பயங்கரவாதிகளுக்கும் எதிராக அரசபடைகள் மேற்கொண்டதோர் இராணுவ நடவடிக்கையாகவே கருகின்றார்கள். அந்த கருதுகோளை சர்வதேசமும், ஏனையோரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தி வருகின்றார்கள்.

பயங்கரவாதிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கை ஒரு மனிதாபிமான நடவடிக்கையாகவே மேற்கொள்ளப்பட்டது, அதில் கொல்லப்பட்டவர்கள் அனைவரும் பயங்கரவாதிகளே தவிர, பொதுமக்கள் அல்ல என்பது அரசாங்கத்தின் வரட்டுத்தனமான வாதம்.

பயங்கரவாதிகள் மட்டுமே கொல்லப்பட்ட இராணுவ நடவடிக்கையில் படையினர் மனித உரிமைகளை மீறவில்லை. சர்வதேச மனிதாபிமான சட்டவிதிகளையும் மீறவில்லை. ஆகவே படையினர் எவரையும் கொலைக்குற்றத்திற்காகவோ அல்லது போர்க்குற்றத்திற்காகவே நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கு அனுமதிக்க மாட்டோம் என்று ராஜபக்சக்கள் கூறுகின்றனர்.

அதன் அடிப்படையிலேயே ஐ.நா மனித உரிமைப் பேரவையின் பிரேரணைகளுக்கு முன்னைய அரசு வழங்கியிருந்த இணை அனுசரணையில் இருந்து ஒருதலைப்பட்சமாக ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ச விலகியிருக்கின்றார். உரிமை மீறல்கள் தொடர்பிலோ அல்லது போர்க்குற்றங்கள் தொடர்பிலோ எந்தவிதமான பிரேரணையையும் ஐ.நா மனித உரிமைப் பேரவையில் அரசு ஏற்கமாட்டாது என்று சண்டித்தனம் காட்டப்படுகின்றது.

வரைமுறையில்லாத வகையில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழேயும், பயங்கரவாதத்திற்கு எதிரான இராணுவ போராட்டம் என்ற வகையிலும் செயற்பட்ட இராணுவத்தினர் மீது குற்றம் சுமத்துவது அவர்களின் வீரத்திற்கும் தியாகத்திற்கும் இழுக்கேற்படுத்துவதாகவும் என்பது ராஜபக்சக்களின் விநோதமான நிலைப்பாடு.

இத்தகைய ஒரு நிலைப்பாட்டில், சிறுபான்மை தேசிய இனமாகிய தமிழ் இனத்தை அடக்கி ஒடுக்க வேண்டும். தமிழ் மக்களைப் படிப்படியாக அடையாளம் இழக்கச் செய்ய வேண்டும் என்ற கொடுங்கோன்மைத் தன்மையுடன் ஆட்சி புரிகின்ற அரசின் கீழ் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்த வகையிலும் நீதி கிடைக்காது. அவ்வாறு எதிர்பார்க்கவும் முடியாது. அத்தகைய எதிர்பார்ப்பு முட்டாள்தனமாகவே இருக்கும்.

இத்தகைய நிலைப்பாட்டின் அடிப்படையிலேயே இழைக்கப்பட்ட அநியாயங்களுக்கும் மனிதஉரிமை மீறல்கள், போர்க்குற்றச் செயல்களுக்கும் சர்வதேச நீதி விசாரணை வேண்டும் என்று தமிழ் மக்கள் கோரி வருகின்றார்கள்.

மிதவாதப் போக்கைக் கடைப்பிடித்திருந்த தமிழரசுக் கட்சியும் அதன் தலைமைச் செயல் முனைப்பிலான தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமையும் போர்க்குற்றம் என்ற வார்த்தைப் பிரயோகத்தைத் தவிர்த்து வந்தன. ஆனால் நன்மைகளே நடக்கும் என்று எதிர்பார்த்து இலவு காத்த கிளியின் நிலைமைக்கு தமிழ் மக்களை ஆளாக்கிய நல்லாட்சி அரசு கவிழ்ந்து, ராஜபக்சக்கள் மீண்டும் ஆட்சி பீடம் ஏறியதையடுத்து, இந்தப் போக்கில் மாற்றத்தைக் காண முடிகின்றது.

அதேபோன்று தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நியாயம் கோரியும், நீதி வழக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியும், அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வைக் கொண்டதோர் அரசியல் தீர்வு வேண்டும் என வற்புறுத்தியும் பல்வேறு நிலைகளில் தமிழ் மக்கள் போராடி வருகின்றார்கள்.

இந்த நிலையில் அரசாங்கத்தின் வீம்புக்குக் கத்தியை விழுங்குகின்ற பாணியிலான பிடிவாதப் போக்கு தமிழ் மக்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்ற தவிர்க்க முடியாத தேவையை சர்வதேச நாடுகளுக்கு உணர்த்தி இருக்கின்றது. இதனை மனித உரிமைப் பேரவையின் 46 ஆவது அமர்வில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு எதிரான பிரேரணை கோடிட்டுக் காட்டியிருக்கின்றது.

மனித உரிமைப் பேரவையில் கொண்டு வரப்படுகின்ற பிரேரணைகளில் முதலில் சமர்ப்பிக்கப்படுகின்ற விடயங்களில் மென்மைப் போக்கை வெளிப்படுத்தும் வகையிலான மாற்றங்களே வழமையாகச் செய்யப்படுவதுண்டு. ஆனால் வழமைக்கு மாறாக 2021 ஆம் ஆண்டின் மார்ச் மாத அமர்வில் இலங்கைக்கு எதிரான பிரேரணை மிக மென்மையானதாக முதலில் சமர்ப்பிக்கப்பட்டு பின்னர் படிப்படியாக கடும் நிலைப்பாட்டிலான மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன.

ஆனால் இந்தப் பிரேரணை வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டு நடைமுறைப்படுத்துவதிலேயே அரசாங்கத்தின் வெற்று வீறாப்பு மண் கௌவுவதும், தமிழ் மக்கள் தங்களுக்கான நீதியைப் பெற்றுக்கொள்வதிலும் தங்கியிருக்கின்றது

ஐ.நா மனித உரிiமைப் பேரவையின் இந்தப் பிரேரணை தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்ற விளைவைத் தரவல்லதாக அமைவதற்குத் தமிழ்த்தரப்பின் இராஜதந்திரச் செயற்பாடுகளும் அவசியமாகின்றன. அத்தியாவசியமாகின்றன. சம்பந்தப்பட்ட தரப்பினர் களத்திலும் புலத்திலும் இந்த விளைவை சாத்தியமாக்குவதற்கான முயற்சிகளில் தீர்க்கத்துடன் ஈடுபட வேண்டும்.
செய்வார்களா?

Exit mobile version