உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களில் பிறப்புச்சான்றிதழ் அத்தாட்சிப்படுத்தலுடன் தொடர்புடைய வகையில் நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்கள் தொடர்பில் உயர்நீதிமன்றமும், மேன்முறையீட்டு நீதிமன்றமும் இருவேறு தீர்ப்பினை வழங்கியிருக்கும் நிலையில், இதுகுறித்து உயர்நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்து தீர்வொன்றினைப் பெற்றுத்தருமாறு தேர்தல்கள் ஆணைக்குழு சட்டமா அதிபரிடம் கோரியுள்ளது.
எதிர்வரும் உள்ளூராட்சிமன்றத்தேர்தலில் போட்டியிடுவதற்காகத் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களில், வேட்பாளர்களின் பிறப்புச்சான்றிதழ்கள் பிரதேச செயலகங்கள் ஊடாக அத்தாட்சிப்படுத்தப்படாமையைக் காரணங்காட்டி பல வேட்புமனுக்கள் தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர்களினால் நிராகரிக்கப்பட்டன.
அதுகுறித்து அரசியல் கட்சிகளும் சுயேட்சை குழுக்களும் உயர்நீதிமன்றத்திலும், மேன்முறையீட்டு நீதிமன்றத்திலும் வழக்கு தாக்கல் செய்தன.
அதன்படி வழக்கை விசாரித்த மேன்முறையீட்டு நீதிமன்றம் குறித்த காரணத்துக்காக நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்களை மீண்டும் ஏற்றுக்கொள்ளுமாறு தீர்ப்பளித்திருக்கிறது.
அதேவேளை இதேகாரணத்துக்காக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கின்றன.
இவ்வாறானதொரு பின்னணியில் ஒரு நிலைப்பாட்டை எடுத்து, அதற்கமைய செயற்படுவதற்கே தேர்தல்கள் ஆணைக்குழு விரும்புவதாக சுட்டிக்காட்டியுள்ளது.