Tamil News
Home உலகச் செய்திகள் நிவார் புயல்- அனைத்துத் துறைகளும் தயார் நிலையில் -அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

நிவார் புயல்- அனைத்துத் துறைகளும் தயார் நிலையில் -அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

வங்கக்கடலில் உருவாகி உள்ள நிவார் புயலை எதிர்கொள்ள அனைத்துத் துறைகளும் தயார் நிலையில் இருப்பதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

நிவார் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் “இன்று அதிகாலை 2.30 மணியளவில் வங்கக் கடலில் உருவாகியிருக்கும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது” என்று கூறியுள்ளார்.

இந்தக் காற்றழுத்த தாழ்வு மண்டலத்துக்கு `நிவார் புயல்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது எனவும் தற்போது 740 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ள நிவார் வலுப்பெற்று நகர்ந்து வருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மாமல்லபுரம் காரைக்கால் இடையே உள்ள பகுதிகளில் கரையைக் கடக்கும் இந்தப் புயல், கரையைக் கடக்கும்போது 80 முதல் 100 கிமீ வரை காற்று அடிக்கக் கூடும் எனவும் கனமழை (6-12 செமீ) மிக கனமழை (12-20 செமீ) அதீத கனமழை (20 செமீ மேல்) பெய்யக் கூடும் எனவும் எச்சரித்துள்ளார்.

கனமழை, புயல், காற்றை எதிர்கொள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறிய அவர், கடலுக்குள் மீனவர்கள் செல்லக் கூடாது எனவும் ஏற்கனவே சென்றவர்கள் திரும்பவும் மீன்வளத்துறை மூலம் அறிவுரை வழங்கப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார்.

ஏரிகளைக் கண்காணிக்கவும், கால்வாய்கள் அடைப்பில்லை என்பதை உறுதி செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தாழ்வான பகுதி, பாதுகாப்பற்ற பகுதி, பழைய கட்டடங்களில் வசிப்போர் உடனடியாக அரசு முகாம்களுக்கு வரவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இடி, மின்னல் சமயத்தில் வெளியே வர வேண்டாம் என்றும் நீர் நிலைகள், நீர் தேங்கும் இடங்கள், நீர் செல்லும் பாதைகள், கடற்கரைப் பகுதிகளுக்குக் குழந்தைகளை அனுமதிக்கக் கூடாது, பொதுமக்களும் அங்கு செல்லக் கூடாது என அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

மக்கள் அத்தியாவசியப் பொருட்களான வலுவான கயிறு, தீப்பெட்டி, மண்ணெண்ணெய், மெழுகுவத்தி, பேட்டரி டார்ச், உலர் பழ வகைகள், பிரட் போன்றவற்றை தற்போதே வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

கஜா புயல் போன்ற ஒரு தாக்கத்தை இந்தப் புயல் ஏற்படுத்தாது எனத் தகவல் கிடைத்துள்ளதாகக் கூறிய அவர் இந்தப் புயல் கரை கடக்கும் சமயத்தில் 100 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் கூறியதாக தெரிவித்துள்ளார்.

இந்தப் புயலை எதிர்கொள்ள மண்டலக் கண்காணிப்புக் குழுக்கள் தயாராக இருப்பதாகவும், 6 தேசியப் பேரிடர் மீட்புப் படை அரக்கோணத்திலிருந்து கடலூர் மாவட்டத்திற்குச் சென்றுள்ளது எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அரசு இந்தப் புயலை எதிர்கொள்ளத் தயார் நிலையில் இருப்பதாகக் கூறிய இவர் மக்கள் இதனை எதிர்கொள்ளத் தயாராகவும், பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்தப் புயல் 24 மணி நேரத்தில் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் மக்கள் அதிகாரப்பூர்வ தகவலை மட்டுமே நம்ப வேண்டும் என்றும் சமூக வலைத்தளங்களில் பரவும் செய்திகளை நம்பவேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Exit mobile version