ஜே.வி.பி.தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் சித்திரை மாதம் திருப்புமுனைகள் நிகழும் காலப்பகுதியாகியுள்ளது. வலுச்சக்தி அமைச்சர் குமார ஜயக்கொடிக்கு எதிராக எதிர்க்கட்சிகளால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை ஏப்ரல் 10ஆம் திகதி பாராளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்ட போதிலும், அடுத்த ஒரு வாரத்திற்குள், அதாவது ஏப்ரல் 17ஆம் திகதி அவர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
நிலக்கரி இறக்குமதியில் நிகழ்ந்த ஊழல், மோசடிகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற் காக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் சுயாதீன மற்றும் பக்கச்சார்பற்ற செயற்பாடுகளை உறுதிப் படுத்துவதற்காகவே பதவியிலிருந்து விலகுவதாக ஜயக் கொடி தனது இராஜினாமாக் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.
விநியோகஸ்தர் பதிவு விபரங்கள்
அதேபோன்று, வலுச்சக்தி அமைச்சின் செயலாள ராக கடமையாற்றிய பேராசிரியர் உதயங்க ஹேமபாலவும் அமைச்சரையொத்த காரணங்களை குறிப்பிட்டு பதவி யிலிருந்து விலகியுள்ளார். மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்தைக் கொண்ட ஒரு அரசாங்கம், தனது அமைச்சரைப் பாதுகாப் பதற்காக பாராளுமன்றத்தில் போராட்டமின்றி வெற்றி பெற்ற பின்னரும், அதே அமைச்சர் பதவி விலக வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது.
இந்த நிலைமையானது, தற்போதைய ஆட்சி யின் நம்பகத்தன்மை குறித்து பாரிய கேள்விகளை எழுப்பியுள்ளது. இது வெறும் தனிநபரின் பதவி விலகல் மட்டுமல்ல, ‘தூய்மையான அரசியல்’ மற்றும் ‘ஊழலற்ற நிர்வாகம்’ ஆகிய வாக்குறுதிகளுடன் ஆட்சிக்கு வந்த அரசாங்கம், நடைமுறை நிர்வாகச் சிக்கல்களில் எவ்வாறு தடுமாறுகிறது என்பதற்கான நேரடிச்சான்றாகும்.
இலங்கையின் தேசிய மின்சாரத் தேவையில் 30சதவீதம் முதல் 40சதவீதம் வரை பூர்த்தி செய்யும் நுரைச்சோலை லக்விஜய அனல் மின் நிலையம், நாட்டின் மின்சாரக் கட்டமைப்பின் முதுகெலும்பாகக் கருதப்படுகிறது.
900 மெகாவாட் கொள்ளளவைக் கொண்ட இந்த மின் நிலையம் சீராக இயங்குவதற்கு ஆண்டுக்கு சுமார் 2.25 மில்லியன் மெற்றிக் தொன் நிலக்கரி அவசியமாகும். இருப்பினும், 2025-2026 கொள்வனவின் போது இடம்பெற்ற பாரிய முறைகேடுகள் மற்றும் தரமற்ற நிலக்கரி இறக்குமதி காரணமாக, இந்த மின்நிலையம் தற்போது தொழில்நுட்ப மற்றும் நிதி ரீதியான முடக்கத்தை எதிர்நோக்கியுள்ளது.
அண்மையில் சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவி னால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட விசேட கணக் காய்வாளர் நாயகத்தின் அறிக்கை, இந்த நிர்வாகச் சீர்கேடுகளைப் புள்ளிவிபரங்களுடன் தோலுரித்துக் காட்டியுள்ளது. கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையின் தரவுகளின்படி, நிலக்கரி விநியோகஸ்தர்களைத் தெரிவு செய்வதற்கான தகுதிகாண் அளவுகோல்கள் (Registration Criteria) திட்டமிட்ட முறையில் தளர்த்தப்பட்டுள்ளன.
குறிப்பாக, ‘ Trident Chemphar’ என்ற நிறுவனம் பல பில்லியன் ரூபா பெறுமதியான நீண்டகால ஒப் பந்தத்தைப் பெற்றுக்கொண்ட போதிலும், அதற்கான பதிவுக்கட்டணத்தில் வெறும் 20 டொலர்களை மாத்திரமே நிலுவையாகச் செலுத்தியிருந்தது.
அதேபோன்று, ‘Taranjot Resources ‘ என்ற நிறுவனத்திற்கு 300,000 மெற்றிக் தொன் நிலக்கரி கொள்வனவுக்கான ஒப் பந்தம் வழங்கப்பட்டது. ஆனால், கடந்த 36 மாதங்களில் அந்த நிறுவனம் விநியோகித்த 1,115,900 மெற்றிக் தொன் நிலக்கரியில் 880,000 மெற்றிக் தொன்களுக்கும் அதிக மானது நிர்ணயிக்கப்பட்ட 5,000 GCV (Gross Calorific Value) தரத்தை விடக் குறைவாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.
இத்தகைய மோசமான பின்னணியைக் கொண்ட நிறு வனங்களுக்கு மீண்டும் ஒப்பந்தங்களை வழங்கியமை, கொள்வனவுச் சபையின் நேர்மையையும், செயற்பாட்டை யும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது.
இந்தத் தரமற்ற நிலக்கரி கொள்வனவினால் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள நேரடி நிதி இழப்பு சுமார் 2,237.7 மில்லியன் ரூபாவென மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த இழப்பானது தரக்குறைவான நிலக்கரியைப் எரிக்கும் போது ஏற்படும் வெப்ப ஆற்றல் வீழ்ச்சியினால் (Thermodynamic Inefficiency) உருவாகிறது.
நுரைச்சோலை மின்நிலையத்தின் தரநிலைப்படி, ஒரு கிலோவாட் மணித்தியால மின்சாரத்தை உற்பத்தி செய்ய 375கிராம் நிலக்கரி தேவைப்படும். ஆனால், தரம் குறைந்த நிலக்கரியைப் பயன்படுத்தும்போது இந்த அளவு அதிகரித்து, நிலக்கரி கையிருப்பு வேகமாகத் முடிந்து விடுகிறது.
இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரி கையிருப்பில் கணிக்கப்பட்ட இழப்புகள்
கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ள தகவல்களின்படி, ஒரு கப்பலுக்கு (Ship No. 456 – Ceylon Breeze) மாத்திரம் தரக்குறைபாடுகளுக்காக 2,079,633 அமெரிக்க டொலர்கள் (சுமார் 644.7 மில்லியன் ரூபா) தண்டப்பணமாகக் கணிக்கப்பட்டுள்ளது. இதுவரி செலுத் தும் மக்களின் பணம் எவ்வாறு நிர்வாகத் தவறுகளால் வீணடிக்கப்படுகிறது என்பதற்குச் சிறந்த உதாரணமாகும்.
நிதியியல் இழப்புகளுக்கு அப்பால், தொழில்நுட்ப ரீதியாக நுரைச்சோலை மின்நிலையம் பாரிய அச்சுறுத்தல்களைச் சந்தித்துள்ளது. நிலக்கரியில் உள்ள அதிகப்படியான ‘பயரைட்’ (Pyrite) தாதுக்கள் காரணமாக, நிலக்கரி அரைக்கும் இயந்திரங்களில் (Mills) உராய்வு ஏற்பட்டு தீ விபத்துக்கள் சம்பவித்துள்ளன.
கடந்த மார்ச் 5ஆம் திகதி மின்நிலையத்தின் 3ஆவது அலகில் ஏற்பட்ட தீ விபத்து இதற்கொரு சான்றாகும். மேலும், தரமற்ற நிலக்கரியினால் மின் உற்பத்தி அலகுகளின் திறன் 300 மெகாவாட் என்ற அளவிலிருந்து 150-170 மெகாவாட் வரை வீழ்ச்சியடைந்தது.
இந்த மின்சாரப் பற்றாக்குறையை ஈடு செய்ய, அரசாங்கம் அதிக விலைகொடுத்து டீசல் மின்சாரத்தைப் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. அரசாங்க பொது முயற்சிகள் பற்றிய குழுவின் (கோப்குழுவின்) விசாரணையில் வெளிவந்த தகவல்களின்படி, இத்தகைய இழப்புகள் மின்சாரக் கட்டணத்தில் சுமார் 2.2சதவீத அதி கரிப்பை ஏற்படுத்துவதற்கு காரணமாகின்றது என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
கப்பல் வருகையில் ஏற்பட்ட தாமதங்கள் (Puttalam Anchorage)
பதவியிலிருந்து இராஜினாமாச் செய்துள்ள அமைச்சர் குமார ஜயக்கொடிக்கு எதிராக முன்வைக்கப்பட்ட மற்றொரு முக்கிய குற்றச்சாட்டு, அவர் 2016ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் உரக் கூட்டுத்தாபனத்தில் பணியாற்றிய போது 88 இலட்சம் ரூபா நிதி இழப்பை ஏற்படுத்தினார் என் பதாகும்.
இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவை யில் உள்ள நிலையில், அவர் அமைச்சரவையில் நீடிப்பது தார்மீக ரீதியாகத் தவறானது என்பதே நம்பிக்கையில்லாப் பிரேரணையின் சாராம்சமாக இருந்தது. இருப்பினும், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ‘நாங்கள் நிலக்கரியைச் சாப்பிட்டுப் பார்த்து வாங்கவில்லை’ எனக் கூறியதன் மூலம், அரசாங்கத்தின் பொறுப்புக்கூறல் கடப்பாட்டையும் அமைச்சரவையின் தலைவர் என்ற வகையில் கூட்டுப் பொறுப்பையும் தட்டிக்கழித்துள்ளார்.
ஒரு கொள்வனவின் போது சர்வதேசத் தரக்கட்டுப்
பாடுகள் (ISO) மற்றும் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வக அறிக்கைக ளைப் (Accreditation) பின்பற்றுவது அரசாங்கத்தின் கடமையாகும். குறிப்பாக, இந்தோனேஷியாவின் ஆய் வகம் ஒன்றின் உரிமம் 2025 டிசம்பர் 31 உடன் இரத்து செய் யப்பட்டிருந்தும், அந்த அறிக்கைகளை இலங்கை நிலக்கரி நிறுவனம் ஏற்றுக் கொண்டமை பாரிய விதி மீறலாகும்.
அமைச்சர் ஜயக்கொடியின் பதவி விலகல் என் பது சட்ட ரீதியான தீர்வு என்பதை விட, அரசியல் ரீதியான ‘தற்காப்பு’ நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது. நம்பிக் கையில்லாப் பிரேரணையைத் தோற்கடித்ததன் மூலம் அரசாங்கம் அமைச்சரைக் காப்பாற்றினாலும், மக்கள் மத்தியில் தனது நற்பெயரைஇழந்துவிட்டது.
குறிப்பாக நம்பிக்கையில்லாப் பிரேரணையை அரசாங்கம் தோற்கடித்து மார்பு தட்டினாலும், மக்கள் மத்தியில் காணப்பட்ட வெகுவான அதிருப்திகள், ஜே.வி.பி தலைமையகத்தின் அழுத்தங்கள் மற்றும் கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையின் நேரடிச் சான்றுகள் காரணமா கவே ஜயக்கொடியின் பதவி விலகல் நிகழ்ந்துள்ளது.
ஆரம்பத்திலேயே அரசாங்கம் அவரைப் பதவியி லிருந்து ஒதுங்கியிருக்கப் பணித்திருந்தால், ஒட்டுமொத்த அரசாங்கமும் ‘ஊழலைப் பாதுகாக்கும் தரப்பு’ என்ற விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்காது. ஆனால் அரசாங்கம் அவ்வாறு செய்திருக்கவில்லை.
மேலும், இந்த நிலக்கரி ஊழல் விவகாரம் இலங்கையின் வலுசக்தி பாதுகாப்பில் உள்ள ஓட்டைகளை வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளது. நுரைச்சோலை மின்நிலை யத்தின் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்த வேண்டுமானால், தகுதியற்ற இடைத்தரகர்களைத் தவிர்த்து, நேரடி மற்றும் வெளிப்படையான கொள்வனவு முறையைப் பின்பற்ற வேண்டும் என்பது தற்போது முக்கிய விடயமாகின்றது.
கணக்காய்வாளர் நாயகம் தனது அறிக்கையில் பரிந்து ரைத்துள்ளவாறு, அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச ஆய் வகங்களின் நேரடி மேற்பார்வை மற்றும் காலநிலைக்கு ஏற்ற கொள்வனவுத் திட்டமிடல் அவசியமாகும். இல்லையேல், இத்தகைய நிர்வாகத் தவறுகளும், அதனால் ஏற்படும் பில்லியன் கணக்கான ரூபா இழப்புகளும் மீண்டும் மீண்டும் நிகழாதிருக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதங்களும் இல்லை.
அமைச்சரின் பதவி விலகல் என்பது தரமற்ற நிலக்கரி கொள்வனவின் தொடக்கமே தவிர, அது முடி வான தீர்வல்ல. முறையான நீதி விசாரணை மற்றும் இழப்பீடுகளை அறவிடுதல் மூலமே அரசாங்கம் இழந்த மக்கள் நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்ப முடியும்.
ஆனால் ஆளும் தரப்பு பதவி விலகிய அமைச்சர் ஜயக்கொடி ஊழல் செய்யவில்லை, மோசடிகளில் ஈடுபட வில்லை என்றே மீண்டும் மீண்டும் வாதிட்டுக் கொண்டிருக் கின்றது. ஆதாரங்களை வெளிப்படுத்துமாறும் சவால் விடுத் துக்கொண்டிருக்கின்றது.
அதுமட்டுமன்றி, 2009 ஆம் ஆண்டு முதல் 2026 மார்ச் வரையான காலப்பகுதியில் நுரைச்சோலை அனல் மின்நிலையத்துக்கு 465 கப்பல்கள் ஊடாக நிலக்கரி இறக்கு மதி செய்யப்பட்டுள்ளன.
அந்த இறக்குமதிகளின் போது பல்வேறுப்பட்ட வழிகளில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக முன்னாள் வலுசக்தி அமைச்சர்களான பவித்ராதேவி வன்னியராச்சி, ரஞ்சித் சியம்பலாபிடிய ஆகியோர் பாராளுமன்றத்தில் உரையாற்றியுள்ளார்கள்.
ஆனால் அந்த முறைகேடுகள் குறித்து எவ்வித நடவடிக்கைகளையும் அந்த அரசாங்கங்கள் மேற்கொள்ளவி ல்லை. ஆகவே உயர் நீதிமன்ற நீதியரசர் கியான் குலத்துங்க தலைமையில் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் ஆதித்திய படவேந்திகே, மேல் நீதிமன்ற நீதியரசர் சஞ்சீவ சோமரத்னா ஆகியோரை உள்ளடக்கிய மூவர் கொண்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அவற்றிலும் கவனம் செலுத்தும் என்றும் கூறிக்கொண்டிருக்கின்றது.
அநுர அரசாங்கத்தின் இவ்விதமான பிரதிபலிப்புக் கள் அனைத்துமே நல்லாட்சிக்கான குணாம்சங்கள் அல்ல. மாறாக அரசியலில் தப்பிப்பிழைப்பதற்கான தற்காலிக காரணங்களே. இக்காரணங்கள் தரமற்ற நிலக்கரி கொள் வனவால் ஏற்பட்ட ஊழல், மோசடி கருமையை ஒருபோதும் போக்கப்போவதில்லை.






