நினைவுத்திற வெளியின் வெறுமையும், கூட்டழிவினதும் அடக்குமுறை எதிர்ப்பினதும் பொதுப்படிம அவசியமும் – எழில்

வடக்கு கிழக்கில் நினைவுத்திற வெளியின் வெறுமையின் தோற்றம், நினைவுச் சின்னங்களைப் பற்றிச்  சிந்திக்கின்ற போது எழுவது நியாயமானது. ஈழத் தமிழ்த் தன்மையை அடையாளப்படுத்திப் பிரதிபலிக்கக் கூடிய வரலாற்றுச் சின்னங்கள் என்று சொல்லக் கூடிய அளவிற்கு தமிழ் மன்னர்களின் சிலைகளைத் தவிர வேறு எதையும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாதுள்ளது. நினைவுத்திற வெளியின் வெறுமைத் தன்மை திட்டமிட்டு தக்க வைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றதை யாரும் அறியாமல் இல்லை. முள்ளிவாய்க்காலில் உள்ள உருவச் சிலையும் ஒரு கூட்டு அழிவின் படிவமாக உள்வாங்கப்படவில்லை. இனப் படுகொலைச் சொல்லாடல் தொடர்பில் பல விவாதங்கள் இன்னும் தொடர்ந்து கொண்டிருந்தாலும், இனப் படுகொலைச் சொல்லாடல் திட்டமிடப்பட்டு தவிர்க்கப்பட்டு, நிராகரிக்கப்பட்டு வந்திருக்கின்றது  பின் முள்ளிவாய்க்கால் வரலாற்றில். இனப் படுகொலை தொடர்பான விவாதமும் மறுப்பும் நிராகரிப்பு நினைவுத்திற வெளியின் வெறுமையை தக்க வைப்பதற்கான உத்தியாக கையாளப்பட்டாலும், ஈழத் தமிழினத்தின் கூட்டழிவில் பொதுப்படிமம் ஒன்றை கட்டமைக்க வேண்டிய தேவை கட்டாயம் எழுந்துள்ளது. அந்த கூட்டுப் படிமத்தினைச் சுற்றிய அணி திரட்டலின் இயங்குதல் அடக்குமுறை எதிர்ப்பிற்கான சக்தியாக மாற்றப்பட வேண்டியதன் அவசியத்தை காலம் உணர்த்திக் கொண்டிருக்கின்றது. பண்பாட்டில் படிமவியல் (iconography) என்பது அவசியமாகின்றது.

2001 மார்கழி 6ஆம் திகதி மரீனா கடற்கரையில் 33 வருடங்களாக இருந்த கண்ணகி சிலை அகற்றப்பட்டது. அதற்கான கண்டனத்தை கலைஞர் கருணாநிதி பின்வருமாறு பதிவு செய்திருந்தார்: ‘கண்ணகி சிலை அகற்றப்பட்டது தமிழின் பெருமைக்கு இழுக்கு அல்லது சவால் விடுவதாகும்’ எனவும் தமிழர்களை, சிலை அகற்றியதற்கு எதிராக ஓரணியில் திரண்டு போராடுமாறும் கோரியிருந்தார். சிலை அகற்றப்பட்ட ‘வெறுமையை’ திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு போராட்டக் களமாக மாற்றியது. போராட்டக் களத்தில் இளம் பெண்கள் கண்ணகிகளாக தங்களை அழகுபடுத்தி போராட்டங்களில் பங்கெடுத்திருந்தார்கள். அதைத் தொடர்ந்து கண்ணகியை மையமாகக் கொண்ட பாரிய எழுச்சி ஊடகங்களில் எழுந்ததை குறிப்பாக கண்ணகியின் படிமங்கள் பன்முறை அணுகுமுறையில் அவதானித்திருக்கலாம். அதனைத் தொடர்ந்து தமிழ் சான்றோர் பேரவை ஐந்து கண்ணகி கோவில்களை திருநெல்வேலி, வாலியூர், தூத்துக்குடி, ஆழ்வார் திருநாகரி, கன்னியாகுமாரி போன்ற இடங்களில் கட்டுவதாக முன்மொழிந்திருந்தது. சிலை அகற்றப்பட்ட வெறுமையை கலைஞர் தமிழ்த்தேசியத்தை வலுவூட்டுவதற்காக பயன்படுத்தினார் (எம்.எஸ்.எஸ். பாண்டியன் 2010). போராட்டத்திற்கு அழைப்பு விடுத்த பின்னர் கலைஞர் குறிப்பிட்டிருந்தார். ‘இப்போராட்டமானது தமிழ்ப் பண்பாட்டை, கௌரவத்தை, மரபை பேணுகின்ற போராட்டமாக இருக்கின்றது’ எனக் குறிப்பிட்டார்.

யூத இனப் படுகொலையின் படிமங்கள் என்கின்ற நூலில் ஒரேன் பாருக் (Oren Baruck Stier – 2015) குறிப்பிடுகின்றார். யூத இனப்படுகொலை தொடர்பில் நான்கு படிமங்களை யூத இனப் படுகொலையின் கூட்டுப் படிமங்களாக முன்வைத்து இரயில் பெட்டி, Arbeit macht frei (தொழில் தான் ஒருவனை விடுதலை செய்யும்), ஆன் பிராங், 60 இலட்சம். இந்த நான்கு படிமங்களையும் அவர் வெறும் குறியீடுகளாக கையாளவில்லை; மாறாக படிமங்களாகக் கையாண்டு ஒரு படிமம், படிமமாக இருப்பதற்கு வரலாற்று உண்மைகளும் சூழமைவும் மிக அவசியமானவையாகும்.

unnamed 1 2 நினைவுத்திற வெளியின் வெறுமையும், கூட்டழிவினதும் அடக்குமுறை எதிர்ப்பினதும் பொதுப்படிம அவசியமும் – எழில்

சிறுவர்களுக்கு எதிரான வன்முறையை, யூத இனப் படுகொலையின் பின்னணியில், இரு கைகளையும் உயர்த்திப் பிடித்தபடி, சரணடையும் சமிக்ஞையுடன் உள்ள ‘வோர்சோ பையனுடைய’ படிமம் ஏறக்குறைய சர்வதேச படிமமாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு ஓவியர்களினால் சிறுவர்களுக்கு எதிரான வன்முறையை பிரதிநிதித்துவப் படுத்துவதற்காக அப்படிமம் பயன்படுத்தப் படுகின்றது. வோர்சோ பையன் தற்போது யூத இனப் படுகொலைப் பிரதிநிதித்துவத்தையும் தாண்டி, உலகில் சிறுவர்க்கெதிரான வன்முறையின் படிம பிரதிநிதித்துவமாகக் கட்டமைத்ததில் ஓவியர்களின் பங்கு மட்டுமல்ல யூத பிரச்சார இயங்கு தளத்தின் ஒட்டுமொத்த கூட்டு முயற்சியே காரணம். வோர்சோ பையனின் படிமம் ஒரு பூகோள பிரதிநிதித்துவ படிமமானாலும், அதன் முதன்மைப் பிரதிபலித்தலும், பிரதிநிதித்துவப்படுத்தலும் யூத இனப்படுகொலையுடன் தொடர்புபட்டது. முதன்மைப் பிரதிநிதித்துவத்திற்கு ஊடாகவே இரண்டாம் பிரதிநிதித்துவப்படுத்தல் (பூகோள பிரதிநிதித்துவப்படுத்தல்) அணுகப்படுகின்றது.

யூத இனப் படுகொலையின் வரலாற்றுப் பின்னணியில் தான், பூகோள பிரச்சினையான சிறுவர்களுக்கு எதிரான வன்முறை பிரதிநிதித்துவப்படுத்தப் படுகின்றது. ஜப்பானிய ஓவியர் செற்சுகோ ஓனோ (Setsuko Ono), வோர்சோ பையனுடைய படிமத்தை ‘எதிர்க்கும் சக்தி’ யாக பிரதிபலித்தார். யூத இனப் படுகொலையின் அவலங்களைத் தாண்டி, அடக்குமுறைக்கு எதிரான படிமமாக அது பிரதிபலித்தது. தற்காலத்திலும் அதனது தொடர்பை, தேவையை சொல்லி நிற்கின்றது. யூத இனப் படுகொலைத் தருணத்தில் வன்முறை இடம்பெற்றது உண்மை. ஆனால் சிறுவர்கள் போராட்டத்திலும், எதிர்க்கும் சக்தியாகவும் இருந்தார்கள் என்பதைப் படிமமாக்குவது ஓனோவினுடைய உள்நோக்கமாக இருந்தது.

2012இல் யூத இனப்படுகொலை மறுப்புத் தீவிரமடைந்தது. யூத இனப்படுகொலை மறுப்புப் பரப்புரையில் பல்வேறு தரப்பட்டவர்கள் இணைந்திருந்தார்கள். படுகொலை மறுப்புப் பரப்புரைகளுக்கு எதிர் வினையாற்றும் நோக்கில் இஸ்ராயேலைச் சேர்ந்த மோஷிக் லின், கேலிச்சித்திர ஓவியர், வோர்சோ பையனை வரைந்திருந்தார். அக்கேலிச்சித்திரம், வோர்சோ பையன் முன் சட்டகத்திற்கு வெளியே கால் பதிப்பதாகவும், அதாவது வாகனத் தொடரணிக்கு வெளியே உள்ளதைப் போன்று, அதன் பின்னணியில் மூன்று நாசி இராணுவப் படைவீரர்கள் உள்ளனர். அவர்களில் இருவர் தங்களுடைய இயந்திரத் துப்பாக்கிகளை பையனை நோக்கி நீட்டுவதாகவும், மூன்றாவது இராணுவ வீரர் பின்னணியில் இருந்து பார்ப்பதைப் போன்றும் வரையப்பட்டுள்ளது.

எபிரேயத்தில் எழுதப்பட்ட வாசகமாக, ‘இதையும் இன்னொரு யூதக் கண்டுபிடிப்பாக யாராவது சொல்லக் கூடும்’  என்று லின் ஓவியத்தின் மூலம் யூத இனப் படுகொலை மறுப்புக்கு எதிரான எதிர்ப்பை வெளிக் காட்டினார். Muriel Mezhnie Helfman என்கின்ற ஓவியர் வோர்சோ பையனுடைய படிமத்தையே யூத இனப் படுகொலைக்கான நீதி கோரிய கோணத்தில் வரைந்திருக்கின்றார். Avner Bar Homa என்கின்ற ஓவியர் விவிலியத்தில் உள்ள ‘தலைமுறை’ என்ற சொல்லுடன், மரணத்திற்கான தூதனுடைய படிமத்துடன் வோர்சோ பையனையும் இணைத்து யூதச் சிறுவர்களின் இனப் படுகொலை ஊடாக தலைவிதியை விபரித்து, அதே நேரம் ஒரு தலைமுறையில் இருந்து அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படும் வண்ணம் ஓவியப்பாணி அமைகின்றது.

அதே நேரம் வேறு சில ஓவியர்கள் யூத இனத்தின் அடையாளத்தை வலுப்படுத்துவதற்காகவும், யூதத் தன்மையின், யூத இனத்தை அடையாள ரீதியில் ஒருங்கிணைப்பதற்காகவும் வோர்சோ பையனை வரைந்திருக்கின்றார்கள். உ-ம் அடையாளத்தை உறுதிப்படுத்த, தொப்பியிலோ அல்லது மேலுடையிலோ வெள்ளி (*) அடையாளத்தையிட்டு, யூத அடையாளத்தை வலுப்படுத்தியுள்ளனர். R.Schloss  க்கும் M.J.Toomy  போன்றவர்களுக்கும் வோர்சோ பையன் யூத இனப்படுகொலையில் தங்கள் கனவுகள் நிறைவேறாது இழந்து போன, சந்தர்ப்பங்கள் மறுக்கப்பட்ட எல்லாச் சிறுவர்களையும் குறித்து நிற்கின்றது. C.Latuff,  Antunes, இவர்கள் இருவரும் வோர்சோ பையனுடைய படிமத்தை தற்போதைய இஸ்ராயேல் – பலஸ்தீன பிரச்சினையின் சூழமைவில் பிரதிபலிக்கும் போது ஒரு அரசியல் செய்தியையும் சொல்ல முயன்றிருக்கின்றார்கள். யூத இனப் படுகொலையை எதிர்கொண்ட இஸ்ராயேல் தேசம் எவ்வாறு இன்னொரு பலஸ்தீன தேசத்தை அடக்கு முறைக்கு உள்ளாக்க முடியும் என்று. யூத இனப் படுகொலையை அனுபவித்த சாட்சிகள் இல்லாமலேயே போய்விட்ட சந்தர்ப்பத்தில் மேற்குறிப்பிட்ட வோர்சோ பையனின் படிமம் கூட்டு நினைவுத் திறத்தையும், கூட்டு அடையாளத்தையும், கூட்டு அடக்குமுறைக்கு எதிரான எதிர்ப்பையும் தலைமுறைக்கும் கடத்திக் கொண்டிருக்கின்றது.

unnamed 2 1 நினைவுத்திற வெளியின் வெறுமையும், கூட்டழிவினதும் அடக்குமுறை எதிர்ப்பினதும் பொதுப்படிம அவசியமும் – எழில்

ஜோன்.டி.அலிசரா (JoAnn D’ Alisera 2002)  தன்னுடைய கட்டுரையில் தாய்நாட்டுக்காக ஏங்குதலின் படிமங்கள் என்ற தலைப்பில் சியரா லியோனின் புலம்பெயர் மக்களுடைய தாய் நாட்டிற்கான ஏக்கத்தையும், நினைவு திறத்தையும் எவ்வாறு ஒரு பருத்தி பஞ்சு மரம் பிரதிபலித்து பிரதிநிதித்துவப்படுத்துவதாக குறிப்பிடுகின்றார். தாய்நாடு கடந்து புலம்பெயர் தேசங்களில் வாழும் தாய்நாட்டுக் கனவு பற்றிய ஏக்கமும், அரசியல் தஞ்ச வாழ்க்கையின் நினைவுத்திறமும், தாய்நாட்டைப் பிரிந்த ஏக்கமும், தாய்நாட்டில் தொடர்புகளைப் பேண வேண்டும் என்ற தாகமும், புலம்பெயர் தேசங்களில் இருந்த தலைமுறையினரின் வேர்களைத் தேடிய பயணமும், தனித்த, கூட்டான அடையாளக் கட்டமைப்பும், குறிப்பாக ‘வீடும்’, ‘இழக்கப்பட்ட வீடும்’ இந்த சொல்லாடல்கள் மேல் கட்டமைக்கப்படும் தனி, கூட்டு அடையாளமும் சியாராலியோன் புலம்பெயர் தேசத்தில் உள்ளவர்களுக்கு மிக முக்கியமானதாக உள்ளதாக ஆய்வாளர் குறிப்பிடுகின்றார்.

நாடு கடந்த நிலையில் அல்லது நாடு கடத்தப்பட்ட நிலையில் தாய்நாட்டிற்குத் திரும்ப வேண்டும் என்ற ஏக்கம், அதன் விளைவாக ஏற்படும் வலி, அவற்றை வெளிப்படுத்துவதற்கு பயன்படுத்தப்படும் சொல்லாடல்களும், அவர்கள் வாழ்ந்த நினைவுகளுடன் சேர்த்து சொல்லாடல்களாக கட்டமைக்கப்பட்டு, அதனை அடிப்படையாகக் கொண்டு புலம்பெயர் தேசங்களில் தங்களுக்கான தனித்துவ அடையாளத்தை உருவாக்குகின்றன. ‘நாங்கள் எப்போதுமே எங்களுடைய நினைவுத் திறனை மீட்டுக் கொள்கின்றோம். தற்போதைய அடையாளத்திற்கு பொருந்துவதாக’ (ஜோன் கிபிஸ் 1994) இதுவே நாங்கள் அடையாளத்தை, எங்களுடைய நினைவுத்திறனுக்கு ஏற்றாற் போல் கட்டமைக்கின்றோம் எனவும் கொள்ளலாம்.

இவ்வாறான தாயகத்திற்கும், புலம்பெயர் தேசங்களில் வாழும் ஈழத் தமிழர்களை ஈழத் தமிழ்த் தன்மையில் ஒருங்கிணைத்து, அணி திரட்டக்கூடிய பொதுப் படிமத்திற்குரிய வெளி வெறுமையாகவே இருக்கின்றது. அவ்வாறான பொது படிமத்திற்கான தேவை, பல்வேறு கோரிக்கைகளில் உ-ம் வோர்சோ பையனைப் போல், ஈழத் தமிழர்களை ஒன்றிணைக்கக் கூடிய அவசியம் தற்போது எழுந்துள்ளது. அவ்வாறான படிமம் ஈழத் தமிழின விடுதலையை மையங் கொண்டதாக, அனைவரையும் உள்வாங்கி தாயகத்திலும், தாயகத்திற்கு வெளியேயும் பல தளங்களில் அணி திரட்டுவதற்குரிய இயங்கு தளத்தை உருவாக்கும் போது தான் அடுத்த கட்டத்திற்கு இன்னொரு அடியை எடுத்து நகரமுடியும்.