நினைவுகள் சுமந்த இறுதி வணக்கம் ஆசான் மயில்வாகனம் பத்மநாதன்

555 Views

தாயக விடுதலை நோக்கிய பயணத்தில் உடல், உள ஆற்றல் ஆளுமையை தனது மக்களுக்காக தான் பணியாற்றிய கல்வித்தளம் தொடக்கம் தமிழீழ விளையாட்டுத்துறையெனும் பரிணாம வீச்சால்  இளைய தலைமுறையினையும், ஆசிரியத்துவ மாணவர்களையும் உலகப் பரப்புவரை தங்கள் திறனை வெளிப்படுத்த அர்ப்பணிப்புடன் உழைத்த நல்லாசான் பேரன்புக்குரிய மயில்வாகனம் பத்மநாதன் அவர்களின் இழப்புச் (30.11.2020) செய்தியறிந்து ஆழ்ந்த வேதனையுடன் எனது இரங்கல் பகிர்வுடன் இறுதி வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

5ea91600 01b8 487d 84c3 edb4acefc72e நினைவுகள் சுமந்த இறுதி வணக்கம் ஆசான் மயில்வாகனம் பத்மநாதன்

1967 ஆம் ஆண்டு தை மாதம் 26ஆம் திகதி ஆசிரியர் பயிற்சி மாணவனாக கொழும்புத்துறை ஆசிரிய கலாசாலைக்கு தெரிவாகி சமுகமளித்தேன். அன்றிரவு விரிவுரையாளர் மாணவர் அறிமுக நிகழ்வு நடைபெற்றது. அப்போது 30–31 வயது மதிக்கத்தக்க இவர், எழுந்து தனது பெயர், கல்வி, தனது தொழில் தகமை பற்றிக் கூறிய போது சாதாரணமாக கிரகித்தேன். ஆனால் பின்நாளில் இவர் கூறியபடி விரிவுரை மற்றும் செய்முறையில் கண்ட ஆற்றலை கண்டு மிகவும் வியந்தேன். தடகள நிகழ்ச்சிகள் தவிர உதைபந்து, கரப்பந்து, வலைப்பந்து நிகழ்ச்சிகளிலும் தனது தொழில் நுட்ப அறிவால் குறுகிய காலத்தில் விளையாட்டுத்துறையில் எம்மை ஆர்வமுடைய மாணவர்களாக்கினார்.

இவர் வகுப்பறையில் விரிவுரை வழங்குவதிலும் மாலையில் மைதானத்தில் செயன்முறைப் பயிற்சி வழங்குவதிலும் மிகவும் கணடிப்பாக இருப்பார். ஆனால் ஏனைய நேரங்களில் சகோதர பாசத்துடன் நல்ல நண்பனாக பழகும் குணமும் உடையவர். மைதான நிகழ்ச்சிகளில் அக்கறையுடன் ஈடுபடும் ஆசிரிய மாணவர்களுக்கு உற்சாகம் ஊட்டுவதோடு, ஏனைய மாணவர்களையும் அரவணைத்துச் செல்லும் பண்புடைய ஆளுமையான குரு ஆவார்.

pathmanathan 3 760x320 நினைவுகள் சுமந்த இறுதி வணக்கம் ஆசான் மயில்வாகனம் பத்மநாதன்

இவரின் காலத்தில் கொழும்புத்துறை ஆசிரியர் கலாசாலை, நல்லூர் ஆசிரியர் கலாசாலை இரண்டிற்கும் நடைபெறும் வருடாந்த போட்டிகளில் பலவருடங்களாக கொழும்புத்துறையே வெற்றியீட்டி வந்தது. நான் படித்த காலத்தில்(S.S.C வரை) விளையாட்டில் ஈடுபாடு காட்டியதில்லை. மூன்று பிள்ளைகளுக்கு தகப்பனாகிய பின் 26-27 வயதில் விளையாட்டில் ஈடுபாடாய் இருப்பது சிரமமாக இருந்தது. ஆனால் எனக்கு தனது பயிற்சியால் 100மீற்றர், 200மீற்றர், 400மீற்றர் ஓட்டத்திலும் நீளம் பாய்தலிலும் முதன்மை பெற உதவினார். பொதுவாக மன்னார், வவுனியா, முல்லை மாவட்ட மாணவர்கள் கொழும்புத்துறை ஆசிரிய கலாசாலைக்கும். யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்ட மாணவர்கள் நல்லூர் ஆசிரியர் கலாசாலைக்கும் நியமிக்கப்படுவார்கள். வன்னி மாணவர்கள் ஓரளவு தேர்ச்சி உடையவர்களாக இருந்தார்கள். கொழும்புத்துறை ஆசிரியர் கலாசாலை இவரது வழிகாட்டலில் பல வருடங்களாக வெற்றிபெற்று வந்தது.

c8f2a8a1 bc91 40e8 a461 99155846ccb9 நினைவுகள் சுமந்த இறுதி வணக்கம் ஆசான் மயில்வாகனம் பத்மநாதன்

எங்களது ஆசானுக்கு ஆச்சரியமும், அதிர்ச்சியும் ஏற்பட்ட நிகழ்வாக 1967 இல் முதல்  ஐந்து மாதம் கொழும்புத்துறையில் நான் உடற்கல்வியை, கற்பித்தல் திறனால் மைதான நிகழ்ச்சிகளில் கடைபிடிக்க வேண்டிய நுட்பங்களை இவரிடம் ஓரளவு தெரிந்து கொண்டேன். இதன் பின்னர் தனிப்பட்ட காரணங்களுக்காக நான் நல்லூர் ஆசிரியர் கலாசாலைக்கு மாறிச் சென்று விட்டேன். அங்கு போன பின்பும் மாலை நேரங்களில் நல்லூர் கந்தசாமி கோயில் வீதியில் சந்திப்போம். கரப்பந்து நுட்பங்களை அறிய நண்பர் துரைராசாவும் என்னுடன் வந்து இவரிடம் ஆலோசனை பெறுவார்.

1967 இல் இரண்டாம் தவணை இறுதியில் கலாசாலைகளுக்கிடையில் போட்டி நடந்தது. எமது தரப்பில் நானும், துரைராசாவும் திட்டமிட்டு வீரர்களை தயார்படுத்தி இருந்ததால், நான் 100மீற்றர், 200மீற்றர். 400மீற்றர் முதலாம் இடங்கள். நீளம்பாய்தல் மூன்றாம் இடம் யோசப், ஈட்டியெறிதல் முதலாம் இடம் வரதராஜன், தட்டெறிதல் முதலாம் இடம் பொன்சபாபதி (மறைந்த கிளி வலயக் கல்விப் பணிப்பாளர்), நீளம் பாய்தல் முதலாம் இடம் யோசப், ஈட்டியெறிதல் முதலாம் இடம் ஸ்ரனிஸ்லஸ் (பின்நாளில் நீங்கா நினைவுகளின் கடற்புலிகளில் அரசியல் துறைப் பொறுப்பாளர் லெப். கேணல் மறவன் மாஸ்டர்) 800மீற்றர் 1 மைல் முதலாம் இடங்கள். இப்படி எல்லா நிகழ்ச்சிகளிலும் முன்னேறி 1967 நல்லூர் ஆசிரியர் கலாசாலை பல வருடங்களின் பின் வெற்றி பெற்றது. இறுதியில் எங்களது ஆசான் பத்மநாதன் கூறியது இன்றும் ஞாபகமாக உள்ளது. திட்டம் போட்டு வென்று விட்டீர்கள் என உரிமையுடனும், மகிழ்ச்சியுடனும், நட்புடனும் கூறி வாழ்த்தி ஊக்கமளித்தமை மறக்கமுடியாத ஒன்று.

பின்நாட்களில் எனது ஆசிரியத்துவப் பணி, பாடசாலை அதிபர் பணி, தேசவிடுதலைக்கான பணியென அடியெடுத்து வைத்த ஒவ்வொரு நகர்வுகளுக்குள்ளும் இவர் என்னை இளமைக் காலத்தில் ஆளுமைமிக்க ஒருவனாக வளர்த்து விட்ட ஒரு நல்லாசானாக நினைத்துப் பார்க்கிறேன்.

1990 தேசவிடுதலைக்காக எனது பணியை முழுமையாக தொடங்கிய காலத்தை அடுத்து 1991 காலப் பகுதியில் எனது இப்பணியின் நிமித்தம் யாழ்ப்பாணம் சென்ற வேளை யாழ்.பல்கலைக்கழகத்தில் விளையாட்டு-உடற்கல்வி விரிவுரையாளர் பத்மநாதன் அவர்கள் பணியாற்றுகின்றார் என்பதை சக நட்புக்கள் மூலம் அறிந்து, அவரை சந்திக்கும் வாய்ப்பு அவர் பல்கலைக்கழகத்தில் அவர்பணியில் அவர் நின்றவேளை கிடைத்தது. இரண்டாவது ஈழயுத்தம் நடைபெறும் காலம் அரசின் பொருளாதார கல்வி தடைகளைத் தாண்டி முகம்கொடுத்து மக்கள் வாழ்ந்த நிலையில் இவ்வாறு உணர்வுமிக்க விரிவுரையாளர்கள், பொறுப்பு மிக்க துணைவேந்தர் போன்றோர் யாழ். பல்கலைக்கழகத்தை இயங்கு நிலையில் தங்கு தடையின்றி மாணவர்களுக்கு கல்வியை முன்னெடுத்துக் கொண்டிருந்தார்கள்.

அன்றொருநாள் நேரடியாக அவரை பல்கலைக்கழகத்தில் சந்திக்கச் சென்ற வேளை,  அதே அன்போடு மட்டற்ற மகிழ்வோடு வரவேற்று தான் கடந்த காலத்தில் ஆசிரிய கலாசாலையில் தன்னிடம் கற்ற மாணவன் என்பதை  அங்கு துணைவேந்தர் (இன்றைய மாமனிதர்) துரைராஜா மற்றும் பதிவாளர் பரமேஸ்வரன் ஏனைய விரிவுரையாளர்கள் என அவரவர் அலுவலகங்களுக்கும் அழைத்துச்சென்று அறிமுகப்படுத்தி வளாகத்தின் சூழலை குறிப்பிட்ட நேரத்திற்குள் சுற்றிக்காட்டி தற்போதய போர்ச் சூழலில் மாணவர்களுக்கு வழங்கி வருகின்றோம். என மூன்று மணி நேரத்தை எங்களுக்காக ஒதுக்கி தனது அன்பை பகிர்ந்து தேனீர் சாலையில் தேனீர் உபசாரத்துடன் அனுப்பும் போது இந்த பல்கலைக்கழகத்தில் எங்களுக்கு கற்க வாய்ப்பு கிடைக்கா விட்டாலும் இங்கு வந்து இவ்வளவு கல்வியிலாளர்களை சந்திக்க சந்தர்ப்பம் தந்திருக்கிறீங்களே சேர் நகைச்சுவையாக அவரது அன்பையும் அவரிடம் தேங்கியிருந்த விடுதலைப்பற்று உறுதியையும் பகிர்ந்து கொண்டு நானும் உடன் வந்த இனியவனும் விடைபெற்று வெளியேறினோம்.

தொடர்ந்து வந்த யாழ்ப்பாண இடம்பெயர்வின் பின் கிளிநொச்சி அக்கராயன் பிரதேசத்தில்  மக்கள் துன்ப துயரங்களுள் தானும் அதனை தாங்கி குடும்பத்துடன் வாழும் இயல்பு நிலையை தனதாக்கிக் கொண்டதை அவரை சந்திக்கும் போது பகிர்ந்து கொண்டார். இதே வேளை நான் பணிசெய்த தமிழீழ நிர்வாக சேவை பிரிவில் 1994இல் முல்லை மாவட்டத்தில் பொறுப்பாக பணிசெய்த  அதியமான் அறிமுகமாகும் போது தான் பத்மநாதன் அவர்களின் மகன் என தெரியப்படுத்தினார் அப்போது அவரது அப்பா பற்றிய ஆளுமை  எனது ஆசான் என அதியமானுக்கு தெரியப்படுத்திய போது மட்டற்ற மகிழ்வும் என்னை காணும் போதெல்லாம் அப்பாவின் அன்பை என்னிடம் பகிர்ந்து கொள்வார்.

பின் நாட்களில் தாயக விடுதலையின் தமிழீழ அரசுக் கட்டுமானங்கள் துளிர்விட்ட காலம். தன் துறைசார்ந்த பணியை இன்னும் அதிவேகமாக நமது இளம் தலைமுறையினரிடம் இட்டுச்செல்ல வேண்டிய காலத்தின் தேவையை உணர்ந்து தமிழீழ தேசியத் தலைவரது தலைமையினது உணர்வினை புரிந்து கொண்டு தனது பல்கலைக்கழக உடற்கல்வி விரிவுரையாளர் ஓய்வு நிலைக்கு முற்றுப்புள்ளி வைத்து. தமிழீழ விளையாட்டுத்துறையின் இலக்கை நோக்கிய வளர்ச்சிக்கு அத்திவாரமாக செயற்பட்டு கட்டியமைப்பதில் அதிக பங்கை வகித்தவர். தமிழீழப் பரப்புக்குள் அனைத்து மாவட்டங்களின் விளையட்டுத்துறை விரிவாக்கம், தடகளப் போட்டிகள் உட்பட அனைத்து குழு விளையாட்டுக்கள் மாபெரும் விளையாட்டு விழாக்கள் பயிற்சிகள் என கிளிநொச்சி பொது விளையாட்டு மைதானம் இளையோரால் எப்போதும் விழாக்கோலம் பூண்டிருக்கும் பசுமை நினைவுகளுக்குள் இவரது உழைப்பும் உள்ளது.

அத்துடன் உலகப் பரப்பின் ஐரோப்பிய தளத்தில் தமிழீழ அரசின் விளையாட்டுத்துறையின் தமிழீழ பெண்கள் வலைப்பந்தாட்ட அணியை  துலங்க வைத்த தமிழீழ தேசத்தின் மகன் இவரது அர்ப்பணிப்பான பணிக்காக தமிழீழ தேசியத்தலைவர் அழைத்து மதிப்பளித்தமை அவரது பணிக்கான வாழ்நாள் மகுடமாக கருதலாம். சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் தாயக விடுதலைப் பணியின் நிமித்தம் சந்தித்து கிளிநொச்சி மண்ணில் எங்கள் உணர்வுகளை அவ்வப்போது பகிர்ந்து கொள்வோம்.

2009 போரின் நிறைவின் பின்னர் தமிழகத்தில் அவர் தங்கியிருந்த வீட்டிற்கு என்னை அழைத்திருந்தார். அவரது வீட்டில் நானும் ஒருமாதம் தங்கியிருந்தேன். கடந்த கால தேசவிடுதலையின் வீச்சும் தொடர்ந்த இழப்புகளும் அவரது மனதையும் நெருடச் செய்ய, அவரது ஆதங்கமும், ஒருவருக்கொருவர் உள்ளக்கிடக்கைகளை பகிர்ந்து ஆதங்கப்பட்டோம். இருந்த வீட்டில் தனது கைப்பட  சுவையாக உணவு தயாரித்து தந்து மனநிறைவு கண்ட நினைவுகளை மீடடுப் பார்க்கிறேன்.

ஆம்! தேச விடுதலைக்காக தனது உணர்வுடன் ஒன்றுபட்டு இரு மகன்களை  உவந்ததுடன் அவர்களில் ஒருவர் மாவீரர் கப்டன் கெனடி(பாவண்ணன்) போராளி அதியமான் என மாவீரரின் தந்தையென போற்றுதற்குரியவராகவும், தமிழீழ தேசியத்தலைவரதும் தளபதிகள், பொறுப்பாளர்கள், போராளிகள், மக்கள் என அனைவரது மனங்களிலும் நீங்கா இடம் பிடித்து வாழ்ந்த எனது நல்லாசனது  இழப்புச் செய்தியறிந்து நேரடியாக இறுதி வணக்கத்தை  தெரிவிக்க வாய்ப்பு இழந்து, துயரில் உங்கள் உணர்வுக்குள் கட்டுப்பட்டு இறுதி வணக்கத்தை தெரிவித்து, உங்களது இழப்பால் துயருறும்  குடும்பத்திற்கு ஆழ்ந்த ஆறுதல் பகிர்வை தெரிவித்துக் கொள்கிறேன்.

இரா.சிவகுமார்.

Leave a Reply