நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசுடன் பேச்சு – தமிழ் அரசியல் கைதிகளின் பெற்றோர் அறிக்கை

184 Views

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை விவகாரம் தொடர்பில் கட்சி, கொள்கை பேதம் கடந்து தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து அரசாங்கத் தரப்புடன் பேசியுள்ளமை எமக்கு ஒரு சிற்றாறுதலைத் தருகின்றது என தமிழ் அரசியல் கைதிகளின் பெற்றோர், உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழ் அரசியல் கைதிகளின் பெற்றோர், உறவினர்கள் வெளியிட்டுள்ள
ஊடக அறிக்கையில்,

“தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழர் முற்போக்கு கூட்டணி ஆகிய கட்சிகளை சேர்ந்த 12 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து அரசாங்கத்தின் அயலுறவுத்துறை அமைச்சரும் சிரேஸ்ட அரசியல் வாதியுமான தினேஸ் குணவர்த்தன அவர்களுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தையினை மேற்கொண்டுள்ளார்கள். இதனை, சிறையில் வாடும் எமது உறவுகளின் விடயத்தில் தமிழ்ப் பிரதிநிதிகள் எடுத்துள்ள ஆரோக்கியமான செயற்பாட்டின் ஆரம்பப் புள்ளியாகவே நாம் காண்கின்றோம்.

 ஆதரவோடு வரவேற்கின்றோம். ஏனெனில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை என்பது ஆளும் அரசாங்கத்தின் அரசியல் விருப்பத்திலேயே தங்கியுள்ளது. விடுதலையை வென்றெடுக்க வேண்டுமாயின் நாம் வேறெங்கும் பேசி பயனில்லை. காரணம், நாட்டின் சட்டம் மற்றும் நீதி எனும் காரணப்பெயருக்குள் கட்டுண்டவர்களாக கைதிகள் காணப்படுகிறார்கள்.

இவ்வாறு |அணிசேர்ந்து மக்கள் பணியாற்றும்| கைங்கரியமானது அரசாங்கத்துக்கும் இதர தரப்புகளுக்கு ஒருமித்த மக்களின் பல பிரயோகத்தையும் அவர்களின் விருப்பத்தையும் புரிய வைப்பதாக அமையலாம். இத்தகைய பொதுமைப்பண்பின் மூலம் உடனடி அவசியப்பிரச்சனைகளுக்கு தீர்வு கிட்டுமானால், எதிர் காலத்தில் தமிழ் மக்களுக்காக நீண்ட கால அரசியல் தீர்வும் இதே போன்று சாத்தியப்படலாம்.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி பல்வேறு தரப்பினரும் குரல் கொடுத்து வருகின்றார்கள் அதனை நாம் வரவேற்கின்றோம். வலுப்படுத்துகின்றோம். மொத்தத்தில் அவை வெகு மக்களின் குரலே அதன் அடிப்படையில் அரசியல் கைதிகள் விடயத்தில் மக்கள் பிரதிநிதிகளின் பங்கு மிகவும் காத்திரமானது.

அவர்கள் மக்கள் ஆணையின் சிறப்புரிமைக்கமைய சிறைச்சாலைகளுக்குச் சென்று கைதிகளை நேரடியாக சந்தித்து ஆற்ற வேண்டிய கருமங்கள் தொடர்பில் அவதானிக்க முடியும். தவிர அரசின் துறை சார்ந்த அதிகாரிகளையும் அமைச்சர்களையும் சந்தித்து கலந்துரையாட முடியும். ஈற்றில் ஜனாதிபதி மற்றும் பிரதமரிடத்தில் கைதிகளின் விடுதலைக்கான பொதுப்பொறிமுறை ஒன்றை முன்வைத்து பேச முடியும்.

இன்று நாடு முழுவதும் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டு எல்லைப்புறங்கள் மிகக்கவனமாக கண்காணிக்கப்பட்டுக்கொண்டு இருக்கிறது. இந் நிலையில் நிபந்தனையுடனான பிணை பொறிமுறையில் சிறை மீளும் கைதிகள் நிபந்தனையை மீறி செயற்படக்கூடிய வாய்ப்புக்கள் மிக குறைவானதே. இன்று அனேகமான தமிழ் கட்சிகளில் பட்டறிவு மிகுந்த பல சிரேஷ்ட சட்டத்தரணிகள் அங்கத்தவர்களாக இருக்கின்றனர்.

இந்நிலையில், அனைவரும் ஒன்றிணைந்து தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் கலந்துரையாடி யுத்த முடிவு, நீண்ட கால சிறைவைப்பு, குடும்பங்களின் நிலைமை மற்றும் தற்போதைய கொவிட் தொற்று போன்ற முதன்மை காரணிகளை அடிப்படையாக கொண்டு நடைமுறைக்குச் சாத்தியமான விடுதலை பொறிமுறையை இனங்கண்டு அதனை அரசாங்கத்திடம் முன்னிலைப்படுத்தி தீர்வினை கோருவதன் ஊடாக விடையத்தை இலகு படுத்த முடியும் என நம்புகிறோம்.

இந்த மனிதாபிமான செயற்கருமத்தினை மேலும் வலுப்படுத்தும் வகையில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்ற மற்றும் ஆதரவளிக்கின்ற தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகள் தமது கூட்டுப்பொறுப்பினை உணர்ந்து செயற்படுவதன் ஊடாக அரசியல் கைதிகளின் விடுதலை வாய்ப்பு விரைவுபடுத்தப்படலாம். நாடும் அரசாங்கமும் ஜெனீவா மனித உரிமை பேரவையில் எதிர் கொண்டுள்ள நெருக்கடிக்கு மத்தியில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை முழுமை பெறுமானால் அது அரசுக்கு சாதகமான பலனையே தரும் என்பதில் சந்தேகம் கொள்ள தேவையில்லை ஆகவே அரசியல் கைதிகளின் விடுதலை விடயத்தில் அரசு அதீத கவனம் செலுத்த வேண்டியது காலத்தின் தேவையாகும்”. என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply