நாடாளுமன்றக்குழு தேவையில்லை – அனைத்துலக விசாரணை தேவை – பேராயர் ரஞ்சித்

உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்பு தொடர்பில் நாடாளுமன்றக்குழு அமைக்க தேவையில்லை அனைத்துலக விசாரணைகளே வேண்டும் என கொழும்பு பேராயர் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 43 வெளிநாட்டவர்கள் உட்பட 269 பேர் கொல்லப்பட்டிருந்தனர்.

ஆனால் இந்த குண்டுவெடிப்பை பதவியை கைப்பற்றுவதற்காக இலங்கையின் முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்சாவும், அவரது சகோதரர்களும், இலங்கை புலனாய்வுத்துறை அதிகாரிகளும், இலங்கை அரசுடன் இணைந்து இயங்கிய தமிழ் துணை இராணுவக்குழுக்களும் இணைந்தே மேற்கொண்டதாக பிரித்தானியாவை தளமாகக் கொண்ட சனல் போர் ஊடகம் கடந்த செவ்வாய்கிழமை (5) ஆதாரங்களை வெளியிட்டுள்ளது.

அதனை தொடர்ந்தே ரஞ்சித் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். இந்த தாக்குதலில் பங்குபற்றிய அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும், விசாரணைகள் சுயாதீனமாக அனைத்துலக உதவிகளுடன் மேற்கொள்ளப்பட வேண்டும்.

விசாரணைகளை மேற்கொள்ள நாடாளுமன்ற தெரிவுக்குழுவை அமைப்பது என்பது நேரத்தையும் மக்கள் பணத்தையும் விரையம் செய்யும் பணி. ஆதராங்கள் உள்ளதால் நேரிடையாக விசாரணைக்குழுவை அமைத்து பல ஆணைக்குழுக்கள் சமர்ப்பித்த அறிக்கைகளின் அடிப்படையில் விசாரணைகள் தொடரவேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.