நாங்கள் சூப்பர் ஹீரோக்கள் அல்ல,நாங்கள் புரட்சிகர மருத்துவர்கள்! -சு.சுரபி

294 Views

மேற்குலகின் பொருளாதார தடைகளால் சுமார் 60 ஆண்டுகளாக சொல்லொணாத் துன்பங்களை அனுபவித்துவரும் கியூ பாவளர்ச்சியடைந்த    நாடான இத்தாலிக்கு தனது மருத்துவக் குழுவினரை அனுப்பி வைத்துள்ளது.

1959 இல் அமெரிக்க கைப்பொம்மை கொடுங்கோல் ஆட்சியை பிடல் காஸ்ரோ தலைமையிலான புரட்சி  வீழ்த்தியது.அங்கு சோஷலிச அரசு நிறுவப்பட்டது.அன்றிலிருந்து அமெரிக்காவும் அதன் கூட்டு நாடுகளும் அத்தேசத்தின் மீது பொருண்மிய தடைகளைக் கொண்டுவந்தன.

அமெரிக்கா  ஆட்சிக்கவிழ்ப்பை மேற்கொள்ள வழிகளில் முயற்சித்தபோதும் காஸ்ரோவை படுகொலை செய்ய நூற்றுக்கணக்கான முறை முயன்றபோதும்> அவையனைத்தும் கியூபாவால் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டன.

உணவு,மருந்து உள்ளிட்ட கடுமையான பொருளாதார தடைகளை அந்த நாடு எதிர்நோக்கியபோதும் கல்வியறிவில் நூறு சதவீதத்தை எட்டியது.விவசாயத்தை பெருக்கியது.பற்றாக்குறைகள் நிலவியபோதும் பட்டிணியற்ற ஒரு நிலையை அது பேணியது.

நவீன தொழிநுட்ப சாதனங்களோ ஏனைய துறைசார் வளங்களோ இல்லாத நிலையிலும் தொழிற்றிறன் வாய்ந்த மருத்துவர்களையும் செவிலியர்களை கியூபா உருவாக்கியது.அவர்களின் திறமையையும் அர்பணிப்புகளையும் உலகம் இன்று வியந்து நோக்குகிறது.

கஸ்ரோவோடு புரட்சிக்கு தோளோடு  தோள்நின்ற சேகுவேரா ஒரு மருத்துவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அவரின் ஆலோசனை அல்லது முன்னுதாரணம்  கூட கியூப மருத்துவத்துறை வளச்சியில் தாக்கத்தைச் செலுத்தும் ஒரு காரணியாக அமைந்திருக்கலாம்.நாங்கள் சூப்பர் ஹீரோக்கள் அல்ல,நாங்கள் புரட்சிகர மருத்துவர்கள்! -சு.சுரபி

இத்தாலியில் கிட்டத்தட்ட 98,000 பேர் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.10,000 இற்கு மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இத்தாலியின் கட்டுப்பாட்டை மீறியதாக இந்த பயங்கர நிலைமை தொடர்கிறது.

ஐரோப்பிய ஒன்றியமோ அல்லது அமெரிக்காவோ கூட உதவிக்கு வராத நிலையில், சின்னஞ்சிறிய கரிபியன் நாடான கியூபா தனது தனித்திறமை வாய்ந்த வைத்திய குழுவினரை அங்கு அனுப்பிவைத்துள்ளது. இந்த குழுவினர் இத்தாலியை சென்றடைந்ததும் பெரும் நம்பிக்கையுடன் கூடிய வரவேற்பு வழங்கப்பட்டது.

52 மருத்துவர்கள் மற்றும் செவிலியரை உள்ளடக்கிய இந்த குழு, தமது பணிகளை உடனடியாக ஆரம்பிக்கும் என அறியமுடிகிறது. கியூபா இவ்வாறான மனிதாபிமானப் பணியை மேற்கொள்வதொன்றும் புதிய விடயமல்ல. ஆனால் தொழில்நுட்பத்திலும், பொருளாதாரத்திலும் மேம்பட்டு நிற்கும் ஒரு மேற்குநாட்டுக்கு தனது வைத்திய உதவியை வழங்குவது இதுவே முதல்தடவையாகும்.

உலகில் ஏற்பட்ட பல்வேறு இயற்கை பேரிடர்கள், தொற்று நோய்களின் போது கியூபா மேற்கொண்ட மனிதாபிமான மருத்துவப் பணிகள் போற்றத் தக்கவை. சிலி, நிகரகுவா,ஈரான், ஹெய்டி போன்ற நாடுகளில் நில நடுக்கங்கள் மற்றும் பெரும் புயல்கள்,ஏற்பட்டபோதும் வெனிசூலாவில் பாரிய மண்சரிவு இடம்பெற்ற போதும் கியூபா விரைந்து உதவிக்கரம் நீட்டியது.

2004ல் ஆசியாவில் ஏற்பட்ட சுனாமிப் பேரழிவின் போது இ இந்தோனீசியா வின் பண்டா ஆச்சே, இலங்கை போன்ற நாடுகளில் கியூபா தனது மனிதநேய மருத்துவ பணிகளை மேற்கொண்டது.africa 1 நாங்கள் சூப்பர் ஹீரோக்கள் அல்ல,நாங்கள் புரட்சிகர மருத்துவர்கள்! -சு.சுரபி

கியூபாவைதனிமைப்படுத்தி,கொடுமையான பொருளாதார தடைகளை விதித்து அமெரிக்கா அடாவடித்தனம் செய்துகொண்டிருந்த நிலையிலும்  ‘பகைவனுக்கும் அருள்வாய் ” என்ற வகையில் தனது நல்லெண்ணத்தை வெளிக்காட்டியது கஸ்ரோவின் கியூபா.

அமெரிக்காவில் வீசிய கத்ரீனா புயலைத் தொடர்ந்து ஏற்பட்ட நிலைமைகளில் உதவிவழங்கவென 1500 பேர் கொண்ட மருத்துவ உதவிக்குழுவை தயார் நிலையில் கியூபா வைத்திருந்தது. ஆனால் தனது வறட்டு கௌரவத்தால் அதனை மறுத்தது அமெரிக்கா.

எல்லாவற்றிற்கும் மேலாக 2013 இல் மேற்கு ஆபிரிக்காவில் எபோலா வைரஸ் தொற்று ஏற்பட்டு பல்லாயிரக்கணக்கான மக்கள் பலியாகிய வேளை தனது 460 பேர் கொண்ட மருத்துவக் குழுவை எந்த தயக்கமும் இன்றி அனுப்பிவைத்தது கியூபா தேசம்.

தற்போது ஏற்றப்பட்டுள்ள இந்த உலகளாவிய கொரோனா தொற்று பேரபாயத்தில்  கியூபா வெளிநாடுகளுக்கு அனுப்பும்  ஆறாவது மருத்துவ உதவி நடவடிக்கையே இந்த இத்தாலி நடவடிக்கையாகும்.

இதற்கு முன்னராக  வெனிசுலா மற்றும் நிகரகுவா,ஜமைக்கா, சுரினாம் மற்றும் கிரெனடா ஆகிய நாடுகளுக்கு கொரோனாவுக்கு எதிரான தனது மருத்துவ குழுக்களை கியூபா அனுப்பியுள்ளது.Cuban Medical Worker Haiti நாங்கள் சூப்பர் ஹீரோக்கள் அல்ல,நாங்கள் புரட்சிகர மருத்துவர்கள்! -சு.சுரபி

‘நாங்கள் அனைவரும் பயப்படவே செய்கிறோம் . ஆனால் ,இது நிறைவேற்றவேண்டிய ஒரு புரட்சிகர கடமையாக உள்ளது . எனவே நாங்கள் பயத்தை நீக்கி ஒரு பக்கமாக வைக்கிறோம்’

என குழுவின் தலைவரும் தீவிர சிகிச்சை நிபுணருமான லியோனார்டோ பெர்னாண்டஸ் இத்தாலிக்கு புறப்படுவதற்கு முன்னர் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ‘தான்  பயப்படவில்லை என்று கூறுபவர்  ஒரு சூப்பர்  கீரோவாக இருக்கலாம் . ஆனால் நாங்கள் சூப்பர் ஹீரோக்கள் அல்ல. நாங்கள் புரட்சிகர மருத்துவர்கள்.”

லைபீரியாவில் எபோலாவுக்கு எதிரான நடவடிக்கையிலும் பங்குகொண்ட இவரின் எட்டாவது அனைத்துலக பணி இதுவாகும்.

பல நாடுகளாலும் கரைதட்ட அனுமதி மறுக்கப்பட்ட கொரோனா தொற்றுக்குள்ளான பிரித்தானிய பயணிகள் கப்பலை எந்த தயக்கமும் இன்றி தனது துறைமுகத்தில் கரைதட்ட அனுமதியளித்ததன் மூலம் தனது போற்றத்தக்க மனிததத்துவத்தை மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்தியது அந்த சின்னஞ்சிறிய தேசம்.image 20200319103306032 நாங்கள் சூப்பர் ஹீரோக்கள் அல்ல,நாங்கள் புரட்சிகர மருத்துவர்கள்! -சு.சுரபி

தமது பயணிகள் 600 பேரினது நலனில் கியூபா காட்டிய அக்கறைக்காகவும், வழங்கிய உதவிகளுக்காகவும் பிரித்தானியா கியூபாவுக்கு நன்றி தெரிவித்துள்ளது.

அமெரிக்காவுடன் சேர்ந்து நின்று ஆறு தசாப்தங்களாக கியூபாவை ஒதுக்கி, அதற்கு எதிரான அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்கு துணைபோகும் மேற்குலகம் இனியாகிலும் உண்மைகளை உணர்ந்து ஆபத்தில் கைகொடுப்பவனே உண்மையான நண்பன் என்பதற்கமைய கியூபாவுடன் நல்லுறவை ஏற்படுத்த முன்வரவேண்டும்.

இன்று கியூபா மட்டுமன்றி சீனா,மற்றும் ரசியா போன்ற நாடுகளே இந்த பேரிடரில் மேற்குலக நாடான இத்தாலிக்கு விரைந்து உதவிகளை வழங்குகின்றன. சீனா மருத்துவ உதவிக்குழுக்களையும் மருத்துவ உபகரணங்களையும் ஏற்கனவே அனுப்பிவைத்துள்ளது.

ரசியா தனது எட்டு படைத்துறை நடமாடும் மருத்துவக் குழுக்களை இத்தாலிக்கு அனுப்புகிறது. அத்துடன் கிருமிநீக்கம் செய்யும் வாகனங்கள் மற்றும் மருத்துவ பொருட்களையும் அது அனுப்புகிறது. குறிப்பாக தொற்றுநோயியல் வைத்திய நிபுணர்ககள் 100 பேர் அனுப்பிவைக்கப் படுவதாக அந்த நாடு தெரிவித்துள்ளது.

அமெரிக்காவோ அல்லது இத்தாலியின்  மற்றைய நட்பு நாடுகளோ உடனடியாக ஓடிவரவில்லை. அமெரிக்காவாலும் சில மேற்கு நாடுகளாலும் எதிரியாக காட்டப்பட்ட நாடுகளே இன்று களத்தில்  நிற்கின்றன.

இந்த யதார்த்தத்தை  மேற்குலகம் இந்த சந்தர்ப்பத்திலாவது  உணர்ந்து கொள்ள வேண்டும். தனக்கு வேண்டாதவர்களை எல்லோருக்கும் எதிரியாக காட்டும்,தன்நலன் மட்டுமே சார்ந்து செயற்படும் சக்திகளை புரிந்து கொண்டு உண்மையான நேசசக்திகளுடன் கைகோர்த்து பயணிப்பது உலகுக்கு உகந்ததாகும்.

 

Leave a Reply