நவாலியின் துயரம் நிறைந்த படுகொலைகள் (பாகம் 1) வல்வை.ந.அனந்தராஜ்

யாழ்.நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலய படுகொலையின் 27 ஆம் ஆண்டு நினைவு நாள்  இன்று! | எரிமலை

யாழ்ப்பாணத்தின் தென்மேற்கே சண்டிலிப் பாய்ப் பிரதேசத்தில் அமைந்துள்ள நவாலிப் பகுதியில் பழைமை வாய்ந்ததும் சிறப்பு வாய்ந்ததுமாக கத்தோலிக்க மக்களின் சென்.பீற்றேஸ் தேவாலயமும், இந்துக்களின் ஸ்ரீகதிர்காம முருகன் ஆலயமும்,சென்ற். போல்ஸ் தேவாலயமும் உள்ளது.

1995ஆம் ஆண்டு ஜூலை மாதம் 9ஆம் திகதியன்று இராணுவத்தினர் “முன்னேறிப் பாய்தல்” என்ற பெயரில் யாழ்.குடா நாட்டின் வலிகாமம் மேற்குப்பகுதியை இலக் காகக்கொண்டு இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டவேளை மக்களைப் பாதுகாப்பாக ஆலயங்களில் இருக்குமாறு அறிவித்தார்கள். அத னைத் தொடர்ந்து, சங்கானை, சண்டிலிப்பாய், மாசியப்பிட்டி, தொட்டிலடி, சீரணிச்சந்தி, சுழிபுரம், சித்தன்கேணி, இளவாலை, பண்டத்தரிப்பு ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பல்லாயிரக் கணக்கான பொதுமக்கள் இடம்பெயர்ந்தனர். இதில் ஒரு பகுதியினரில் ஏறத்தாழ இரண்டாயிரத்து ஐநூறு பொதுமக்கள் நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயத்திலும்,ஸ்ரீகதிர்காம முருகன் ஆலயத்திலும், அருகில் உள்ள சென்ற் பீற்றர்ஸ் மகாவித்தியாலயத்திலும், தேவாலயத்தை அண்டிய பகுதிகளில் உள்ள வீடுகளிலும் தஞ்சமடைந் திருந்தனர்.

1995.07.09ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை மாலை 4:30 மணியளவில் நவாலி சென்ற் பீற்றேர்ஸ் ஆலயத்தினுள்ளும், வீதிகளிலும், நவாலி ஸ்ரீகதிர்காம முருகன் ஆலய வளாகத்திலும் இராணுவ நடவடிக்கைகள் காரணமாக அரசாங் கத்தின் அறிவுறுத்தலுக்கு அமைய  தஞ்சமடைந்த வேளையில் நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயம் மீதும், முருகன் ஆலயத்தின் மீதும், அதன் சுற்றுப் புறத்திலுமாக விமானப் படையினரின் ஆஜன்ரீனா நாட்டுத் தயாரிப்பான “புக்காரா” விமானம் மிகவும் தாழ்வாகப் பறந்து ஒரே நேரத்தில் 13 குண்டுகளை வீசியதில் 165 பேர் சாவடைந்த கோரமான கொடூரமான தாக்குதல் சம்பவம் எல்லோரையும் அதிரப்பண்ணியது.இதில் தேவாலயத்தில் தஞ்சமடைந்திருந்த குழந்தைகள், பெண்கள், சிறார்கள், தாய்மார்கள் உட்படப் பலரதும் உடல்கள் சிதறுண்டு சம்பவ இடத்தில் உயிரி ழந்தனர். சிறிலங்கா வான்படைகளின், இக் கொடூரமான  தாக்குதலின் பொழுது, தேவாலயத் திற்குள்ளேயே  13 குழந்தைகளும் உடல் சிதறிப் பலியானதுடன்,குழந்தைகள் பெண்கள் உடபட இருநூற்றைம்பதிற்கும் மேற்பட்டவர்கள்  படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்களிற் பலர் வைத்தியசாலையில் உயிரிழந்தார்கள். இந்தச் சம்பவத்தில் கையிழந்து காலிழந்து தலையிழந்து வீதியில் சிதறிக் குற்றுயிராகக் கிடந்த அந்தக் கொடுமையான காட்சியை எப்படி மறக்க முடியும்.?

தேவாலயத்தின் சிதைந்த தோற்றம்  தேவாலயத்தைப் பார்த்து திகைத்து நிற்கும் பங்குத்தந்தை விமானப்படையினரின் சரமாரி யான குண்டுவீச்சில் நவாலி சென்ற் பீற்றர்ஸ் தேவாலயமும், சின்னக் கதிர்காமம் ஆலயமும் அருகில் உள்ள 67க்கும் மேற்பட்ட வீடுகளும், அதனைச் சூழந்துள்ள  கட்டடங்களும், அருகாமையில்  இருக்கும் சென்.பீற்றரஸ் மகா வித்தியாலய மும்,குருமனையும்  இடிந்து விழுந்தது. இந்தக் கட்டிட இடிபாடுகளுக்குள் இருந்து மேலும் 65 உருக்குலைந்த சடலங்கள் மீட்டெடுக்கப்பட்டன. அன்று வலிகாமம் முழுவதும் இடம்பெற்ற வான் தாக்குதலினால் அந்தப் பகுதி முழுவதும் அதிர்ந்து கொண்டிருந்தது. லீப் போர்வேட் (Leap Forward) என்ற முன்னேறிப் பாய்தல் எனப்பெயரிட்பபட்ட இராணுவ நடவடிக்கையை வலிகாமம் பகுதியில் தொடங்கிய இராணுவத்தினர் பலாலியில் இருந்தும் அளவெட்டியில் இருந்தும் எறிகணை களை மக்கள் குடியிருப்புக்களைநோக்கி வீசிக் கொண்டிருந்தனர்.

அந்தநேரம் உலங்குவானூர்திகளில் இருந் தும் சகல வீதிகளையும் நோக்கித் எறிகணைத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதில் வீதிகளில் இறந்து கிடந்தவர்களையும்,காயப்பட்டு இரத்தம் சிந்திக் கொண்டிருந்தவர்களையும் மருத்துவ மனைகளுக்குக்கூட எடுத்துச் செல்லமுடியாத அவலநிலையும் காணப்பட்டது.வாகனங்களை இயக்குவதற்கு எரிபொருள்களுமற்ற பொருளா தாரத்தடை  இருந்ததால், வாகன வசதிகளற்ற நிலையும் காணப்பட்டது.அதேவேளை காயமடைந்தவர்களைக் காப்பாற்ற மருந்தகங்களோ, மருத்துவர்களோ சிகிச்சை நிலையங்களோ காணப்படாத நிலையே காணப்பட்டது. அன்றைய தாக்குதல்களின் போது பொது மக்கள் சேவையில் ஆர்வத்துடன் செயல்பட்ட நவாலி மகா வித்தியாலய மாணவத் தலைவன்; சாம்பசிவம் பிரதீஸ்  உணவு, குடிதண்ணி, மற்றும் சேவைகளை வழங்கிக்கொண்டிருந்தபோது தலை சிதறிச்  சாவடைந்தான். அந்தப் பயங்கரமான சூழலிலும் சேவை யாற்றிய வலி தென்மேற்கு சண்டிலிப்பாய் பிரதேச செயலக பிரிவின் ஜே-134, நவாலி வடக்கு கிராம அலுவலர் செல்வி ஹேமலதா செல்வராஜா,சில்லாலை பிரிவு மூத்த கிராம அலுவலர் பிலிப்புப்பிள்ளை கபிரியேல்பிள்ளை ஆகியோரும் அந்தச் சம்பவத்தில் கொல்லப்பட்டனர் அதேபோன்று, இடம் பெயர்ந்த மக்களுக்குத் தொண்டுப்பணியில் ஈடுபட்டு உணவு,குடிநீர் மற்றும் சேவைகளை வழங்கிக் கொண்டிருந்த 48 தொண்டர்களும் விமானக்குண்டு வீச்சில் இரத்தம் சிந்திக் கொண்டிருந்த நிலையில் மருத்துவ உதவிகள் எதுவும் கிடைக்காததால், அந்த இடத்தில் துடிதுடித்து உயிரிழந்தனர்.

தேவாலயத்தினுள் சிதறியுள்ள தமிழர்க ளின் சடலங்கள்    குடும்ப உறவுகளை இழந்து அலறும் தாய்  உயிரிழந்த பொதுமக்களினதும்,தொண்டுப் பணியாளர்களினதும் உடல்களை அப்புறப்படுத்து வதிலும் காயப்பட்டவர்களை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்வதில் ஊர் மக்கள் ஈடுபட்டனர். அன்று இரவு தொடக்கம் மறுநாட் காலை வரை உயிரிழந்தவர்களின் உடல்கள் உழவு இயந்திரங்களிலும், வாகனங்களிலும் ஏற்றி யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டன. மூன்று தினங்கள் கழிந்த நிலையிலும் சடலங்களைத் தேடும்பணி தொடர்ந்தும் மேற்கொள் ளப்பட்டது.11.07.1995 செவ்வாய்க் கிழமை வரை உறவினர்களால் அடையாளம் காணமுடியாது இருந்த இருபத்துநான்கு சட லங்களை யாழ். வைத்தியசாலை நிர்வாகமும் யாழ்.நோயாளர் நலன்புரிச் சங்கமும் இணைந்து சமய முறைப்படி அரியாலை செம்மணி இந்து மயானத்தில் தகனம் செய்தன. இக்காலப் பகுதியில் சிறிலங்கா விமானப் படையினரால் வணக்க தலங்கள் தாக்கப்பட்டு வந்த நிலையில், இத்தாக்குதல்கள் இடம் பெறுவதற்குச் சில நாட்களின் முன்னர் யாழ் மறை மாவட்டப் பேராயர் அதி.வணக்கத்திற்குரிய தோமஸ் சௌந்தரநாயகம் ஆணடகை, ஜனாதி பதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்

காவுக்கு அனுப்பிவைத்த கடிதத்தில், “வணக்க தலங்களின் மீது குண்டுகளை வீசித் தமிழ் மக்களைக் கொல்லுவதை நிறுத்துமாறு கோரியிருந்தபோதும், இக் கோரமான தாக்குதல்கள் இடம் பெற்றமையை சர்வதேச மனிதஉரிமை அமைப்புக்கள் கண்டனம் தெரிவித்திருந்தன. அதேவேளை விடுதலைப் புலிகளின் மோட்டார் தாக்குதல்களினாலே நவாலி சென் பீற்றர்ஸ் தேவாலயம் தாக்கப்பட்டது என சிறிலங்கா இராணுவத்தரப்பு அறிக்கை வெளியிட்டு உண்மையை மறைக்க முயற்சித்த போதும், சர்வதேசத்தின் கண்டனங்கள் சிறிலங்கா அரசாங்கத்தின் மீதே பாய்ந்தன.  இலங்கை விமானப்படை நவாலி சென்ற்.பீற்றர்ஸ் தேவாலயத்திலும்,முருகன் கோயிலின் மீதும் 13 குண்டுகளை வீசியது. இராணுவத்தினரின் அறிவுறுத்தலுக்கு அமைய தேவால யத்தில் தஞ்சம் புகுந்திருந்த 165 க்கும் மேற்பட்ட தமிழர்கள் சம்பவ இடத்திலேயே கொல்லப் பட்டனர். இறந்தவர்களில் குறைந்தது 13 குழந்தைகளும், வயோதிபர்களும் இருந்தனர், மேலும் காயமடைந்தவர்கள் முதலில் உள்ளூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

தொடரும்…