நம்ப வைத்து ஏமாற்றியது கூட்டமைப்பு –வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்கள் ஒன்றியம்

வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபையின் தவிசாளர் பதவியை ஒரு வருடத்திற்கு தமது அமைப்பிற்கு தருவதாக தெரிவித்து தமிழ் தேசிய கூட்டமைப்பு ஏமாற்றியுள்ளதாக வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்கள் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இன்று வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ் ஒன்றியத்தின் நிர்வாக செயலாளர் சி. ஜனார்த்தனன் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

2018ம் ஆண்டு இடம்பெற்ற பிரதேசசபை தேர்தலில் வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபைக்கு மாத்திரம் மலையக மக்கள் சார்பாக வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்களின் ஒன்றியத்தின் சார்பில் தனித்து சுயேட்சையாக நாங்கள் போட்டியிட்டிருந்தோம். இதன் மூலம் எமது மக்கள் இரண்டு பிரதிநிதிகளை வழங்கியிருந்தனர். அவ்வாசனங்களின் ஆதரவின் மூலமே தமிழ் தேசிய கூட்டமைப்பு வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபையில் ஆட்சி அமைப்பதற்கு ஊன்றுகோலாக இருந்தது. இது தொடர்பில் நாம் கூட்டமைப்புடன் ஒப்பந்தத்தினையும் மேற்கொண்டிருந்தோம்.

ஏனெனில் நாங்களும் தமிழ் இனம் தமிழ் தேசியம் என்ற ரீதியில் எமது இளைஞர்களும் தேசியத்திற்காக போராடியிருக்கிறார்கள், பல போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளார்கள். அந்த வகையிலே தமிழ் தெற்கு பிரதேசசபையினை பேரினவாத கட்சிகள் ஆட்சி அமைக்க கூடாது என்ற நோக்கிலே நாங்கள் இந்த ஆதரவினை தமிழ் தேசிய கூட்டமைக்கு ஒப்பந்த அடிப்படையில் வழங்கியிருந்தேம்.

இந்த ஒப்பந்தமானது தமிழ் தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவகட்சிகளான தமிழரசுகட்சி, தமிழ் ஈழ விடுதலை இயக்கம், தமிழ் ஈழ மக்கள் விடுதலைக்கழகம் ஆகியவற்றின் சார்பிலே இவ் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

மேற்படி பிரதேசசபையின் தவிசாளர் பதவியானது, முதல் மூன்று வருடமும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் இறுதி ஒரு வருடம் வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்கள் ஒன்றியத்திற்கு வழங்கப்பட வேண்டும் என்று இவ் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை ரெலோ சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், புளொட் அமைப்பின் சார்பாக சந்திரகுலசிங்கம், தமிழரசுகட்சி சார்பாக வைத்தியகலநிதி ப.சத்தியலிங்கமும் மற்றும் எமது அமைப்பு சார்பாக அமைப்பின் தலைவர் எம்.பி.நடராஜாவும் கையொப்பமிட்டுள்ளர்.

ஆனால் தற்பொழுது மூன்று வருடம் முடிவடைந்த பின்பும் இவ் ஒப்பந்தத்தை மீறி நான்காவது வருடமும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தங்களுக்குள்ளாகவே தவிசாளரை நியமித்துள்ளனர். இதன் மூலமாக இவர்கள் எங்களை ஏமாற்றியுள்ளனர். இவ்வாறு ஒரு பிரதேசசபை தவிசாளர் பதவி ஒன்றிற்காகவே இவ்வாறு ஏமாற்று வேலையை செய்யும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தேசியத்திற்காக இவர்கள் எவ்வாறு அனைவரையும் ஒன்றிணைத்து செயற்படுத்த போகிறார்கள்.

அனைத்து சமூகங்களையும் ஒன்றிணைத்து செயற்பட வேண்டிய பொறுப்பு தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் உள்ளது.

இன்று வடக்கு கிழக்கு பகுதிகளில் சிங்கள குடியேற்றம் தமிழர் காணி அபகரிப்பு, நிரந்தரமாக்கப்பட்ட இராணுவ சோதனை சாவடிகள் என்பன பேரினவாத சக்திகளால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. ஆகவே அனைத்து சமூகங்களையும் ஒன்றிணைத்து செயற்படாமல் சிதறிக்காணப்படுவதனால் தான் மாற்று இனத்தவர்கள் இங்கு கால் ஊன்றுகின்றனர். எனவே இனிவரும் காலங்களிலாவது தமிழ் தேசிய கூட்டமைப்பு அனைத்து தமிழ் சமூகங்களையும் ஒன்றிணைத்து செயற்படுவதற்கு முயற்சிக்க வேண்டும்” என்றார்.