ஈழத்தமிழ் மக்களின் உயிர்க் கேடயமாக வீரஉணர்வுப் பிழம்பின் ஒரு நேர்த்தியான கட்டமைப்பாக வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட வீரசாகசங்களின் நாயகர்களாக எம்காவல் தெய்வங்களாக நிமிர்ந்து நிற்கும் எம்வீர மறவர்களை மாவீரர்களை நினைவிற்கொள்ளும் காலமிது!
தம்முயிரை ஈந்து, காலங்களிலும் மக்களின் மனங்களிலும் உயிரோடு கலந்துள்ள எம் வீர மறவர்கள் போர் விரும்பிகளல்லர் போர் வெறியர்களுமல்லர். தமிழ் மக்களின் சுதந்திர விடுதலைக்கான நிர்மலமான ஒரு வெளியைக் கட்டமைப்பதற்காகக் கனவுகண்டவர்கள்! அதனால் தான், வீட்டில் வளரும் ஓர் ஆட்டுக்குட்டியைப் போல, நாம் வளர்க்கும் ஒரு செல்வப்பிராணியைப் போல, துப்பாக்கியையும் அணைத்துக்கொண்டவர்கள். காட்டிலும் கடலி லும் புதரிலும் தம் உயிர்மூச்சை எமக்கு வழங்கிச் சாவை அணைத்துக்கொண்டவர்கள்.
ஒப்பாரும் மிக்காருமில்லா எம் தேசியத் தலைவரின் போரியல் ஞானமும், தீர்க்கதரிசன நோக்கும், நீர்க்கலசம் என்னும் போர்ப்படையைச் சிந்தாமல் சிதறாமல் காத்துக்கொண்ட அந்த மேய்ப்பனின் அன்பும் தான், மாபெரும் தியாகங்களை இம்மண்ணில் படைக்கச்செய்தது; உலகப் போரியல் நிபுணர்களைத் திணறடிக்கச் செய்தது; சொந்தமண்ணில் எதிரிகளைப் படைக் கட்டமைப்பு ரீதியாகவும், உளவியல் சார்ந்தும் உருக்குலையச் செய்தது. இந்தியாவிலேயே மொழிவாரி மாநிலமாக ஆறுகோடி தமிழர்கள் இருந்தபோதும், உலகின் கூரையில் தழிழர்களின் இன அடையாளத்தை ஒலிக்கச்செய்தது இந்த மாவீரர்களின் குருதிச் சாட்சியம் தான் என்பது மறுக்கமுடியாத உண்மை!
ஏன் 30 ஆண்டுகாலச் சிங்களத்தின் ஆக்டோ பஸ் கரங்களுக்குள் சிக்குண்டு நாம் நொறுங்குண்ட போதும், இன்றுவரை வடக்கு கிழக்குத் தமிழர் தாயகத்தின் தனித்துவ அடையாளங்களோடு நாம் வாழ்கின்றோமென்றால் அது எம்மாவீரர்களின் தியாகங்களன்றி வேறில்லை. 30 ஆண்டுகாலப் போரில் அழி
வைத்தவிர வேறென்ன கண் டோம்? என்னும் அறியாமைச் சலிப்பை உமிழ் வோருக்கு மேற்சொன்ன கூற்றுகளே பதிலாய் அமைகின்றது. மாவீரர்களும் அவர்களின் உயிர்த்தியாகங்களும் மட்டும் இல்லையெனில், காட்டாற்று வெள்ளமென்னும் சிங்களத்தின் ஆக்கிரமிப்புக்குள் என்றோ தடுப்பரண்களின்றித் தொலைந்து போயிருப்போம். அதைத் தடுக்க, எம்மினத்தின் கேடயங்களாகத் நின்று களமாடி மடிந்தவர்கள் தான் எம் மாவீரர்கள்.
மாவீரர்கள் தோற் றுப்போனவர்களா? வீரத் தின் பாற்பட்டு இவர்களை யாரும் தோற்கடிக்க முடியாது. போர்த்தியாகம் போர்க்கலை சார்ந்து இவர்களை யாரும் வெல்லமுடியாது. யுத்ததர்மம் ஒழுக்கவியல் எல்லைக்குள் நின்று இவர்களை யாரும் புறமுதுகிடச் செய்திருக்க முடியாது. ஆனால் வெல்லப்பட்டவர்கள். இவர்கள் துரோகத்தால் சூழ்ச்சியால் வீழ்த்தப்பட்டவர்கள். காட்டிக்கொடுத்தவர்களால் கரைந்துபோனவர்கள். அற்புதமான ஓர் உலகின் போர்ப்படை! காலம் பரிசளித்த வசீகரத் தலைவன்! அடுப்பங்கரைக்குள் குறுகிப்போயிருந்த பெண்ணின் சக்தியை விலங்குடைக்க மடைமாற்றி வெற்றிகண்ட தலைவனைப் பெறப் பேறுபெற்றோம்.
எம் உயிரோடும் உணர்வோடும் இரண்ட றக் கலந்த எம் மாவீரர் துயிலும் இல்லங்கள், சிங்கள ஏகாதிபத்திய நச்சுப்பற்களால் குதறப் பட்டுத் துார்ந்துபோயின எம்தாயகத்தில்! அவர்களின் கல்லறைகள் நொறுக்கப்பட்டாலும் எம்மூச்சுக்காற்றில் அவை கலந்துள்ளன என்பது உண்மை.
ஆம் தோற்றுப்போனோம்! எமக்கொரு தலைவன் இல்லை. எம்மினத்தின் பாதுகாப்புக் கவசமான ‘அண்ணன்மார்கள்’ இல்லை. அதனால் தான் வருவோன் போவோன் எல்லாம் எம் பிரடியில் தட்டிவிட்டுச் செல்கின்றான். எம் தலைவிதியை யார் யாரோ எல்லாம் மேசை போட்டுத் தீர்மானிக்கின்றனர். “நீங்கள் அனைத்தையும் இழந்துபோயுள்ளீர்கள் எனவே முதலில் ‘சோறுமுக்கியம்” என்று சிலர் புத்திசாலித்தனமாகத் தாம் சிந்திப்பதாக இங்கு கதைக்கின்றனர்! எம்மினத்தின் குரலாக ஒலிக்க அனுப்பப்பட்டவர்களும் ‘பூனையில்லா வீட்டில் எலிக்கொண்டாட்ட மனநிலையில்’ இருக்க, சிலர் ‘முழுச் சந்திரமுகியாகவே’ மாறிப்போயுள்ளனர்.
இந்நிலையில், தேர்தல்கள் வருகின்ற ஒவ்வொரு காலகட்டத்திலும் தமிழர்கள் நாம் இராட்சத சிக்கலுக்கும் – மன நிலைச் சோர்வுகளுக்கும், ஏன் சலிப்பின் விளிம்புகளுக் குமே தள்ளப்படுகின்றோம்! அதாவது யாருக் குப் போடுவது? யாரை அனுப்புவோம்? எம் மினத்துக்கு உண்மையாக யார் இருப்பார்? என்பதே இன்று அந்தக் குழப்பம். ஏனெனில் இதுவரை அனுப்பப்பட்டவர்கள் வெறும் கானல் நீராகவே போயுள்ளனர்! தங்களைத் தாங்களே வளர்த்துக்கொண்டனர்!
அதன்விளைவு? தமிழ் மக்கள், தமிழ்த் தலைமைகளைத் தமிழ்த் தேசியத்தை நிராகரிக்கத் தொடங்கிய அதேவேளை, திடீர் அலைகளால் கவரப்பட்டு, நடப்பு அதிரடி அரசியலால் ஈர்க்கப்பட்டு சிங்களத் தலைமைகளின் தெரிவைநோக்கி வலிந்து நகரும் அகப்புறச் சூழலுக்குத் தம்மைத் தயாரித்துக்கொண்டிருப்பது ஆரோக்கியமற்ற – எம் தாயக மண்ணின் கள யதார்த்தமாகவுள் ளது. இந்நிலையில் தழிழினம் தன் விழிகளை மூடி அகக்கண்களைத் திறந்து, ஆத்மார்த்தமாய் கருத்தியலாய்-தத்துவார்த்தமாய்ச் சிந்திக்க வேண்டிய ஒரு காலம்! இது போரை விடப் பயங் கரமான ஆபத்தான காலம்! பொருளாதாரம் அபிவிருத்தி பூகோளமயமாக்கல் சித்தாந்தம் கட்சிகளின் பிளவுக் குப்பை கூழங்கள் என்னும் ‘மெது நஞ்சு’ (Slow poison) எம் இனவிருட்சத்தின் வேரில் ஏற்றப்பட்டுவிட்டது. சிலகாலத்தில் இது பட்டுப்போய்விடும் ஆபத்துள்ளது.
தமிழ் பேரினவாத அலைச் சுழலுக்குள் சிக்குண்டு இரைச்சல்மிகு வீதியிலிறங்கி, அந்த இரைச்சலாகவே உருமாறவா – எம் அடையாளங்களைத் தொலைத்துக் கரைந்து போகவா, எம் மாவீரர் தம்முயிரை ஈகம் செய்தனர்? பசியுண்டு; வலியுண்டு என்பது உண்மை! அதை அறிவாயுதமாக மாற்றத் தலைவன் இல்லை என்பது தான் இன்றைய பிரச்சினை. தலைவர்கள் இனி வருவார்கள். விலைபோகாத தலைவர்கள். அதுவரை தமிழோடு உணர்வோடு காத்திருப்போம். எம் மாவீரர்களின் கனவு நனவாகும் மட்டும்!