நகரசபையின் முன் ஆயத்த நடவடிக்கையால் சனநெரிசல் கட்டுப்பாட்டிற்குள்

கொரோனோ வைரஸ்தாக்கத்தினை முன்னிட்டு வட மாகாணத்தில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் வடக்கின் சில மாவட்டங்களில் இன்று காலை 6 மணிமுதல் 2 மணிவரை ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டிருந்தது.

அந்தவகையில் வவுனியாவிலும் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட நிலையில் விவசாயிகள் தங்களது உற்பத்தி பொருட்களை தாங்களே எடுத்து வந்து விற்பனை செய்துகொள்ள அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. அதற்காக சில பகுதிகளும் ஒதுக்கப்பட்டிருந்தது.

காமினிமகாவித்தியாலத்திற்கு முன்பாகவும், ஹொறவபொத்தான வீதியில் ரோயல் உணவகத்திற்கு முன்பாகவும், தமிழ்மத்திய மகாவித்தியாலத்திற்கு முன்பான பகுதி மற்றும் புதியபேருந்து நிலையத்திற்கு முன்பான பகுதிகளில் அவற்றை முன்னெடுப்பதற்கு வவுனியா நகரசபையால் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

அத்துடன் நகரில் சில்லறை மரக்கறி விற்பனையில் ஈடுபடும் வியாபாரிகளையும் அந்த பகுதிகளில் வியாபாரத்தினை மேற்கொள்வதற்கு உத்தரவிட்டிருந்ததுடன், மொத்த மரக்கறி விற்பனை சந்தையில் சில்லறை வியாபாரம் மேற்கொள்ளவும் தடைவிதிக்கப்பட்டிருந்தது.

அத்துடன் அதிகமான சனநெரிசலை கட்டுப்படுத்தும் நோக்குடன் சந்தை சுற்றுவட்ட வீதிக்குள் நுளையும் அனைத்துகுறுக்கு வீதிகளும் நகரசபையால் மூடப்பட்டிருந்ததுடன், வாகனங்கள் தரித்துநிற்பதற்கும் இடவசதிகள் ஏற்பட்டிருந்தது. இதனால் அதிகளவான மக்கள் நகர்பகுதி நோக்கி வருகைதந்த நிலையிலும் சனநெரிசல் இல்லாமல் பொருட்கொள்வனவு நடவடிக்கைகள் இடம்பெற்றிருந்தது.

இதேவேளை வவுனியாநகரசபை ஊழியர்களால் நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாக பொதுமக்களிற்கான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருவதுடன்,
அண்ணளவாக 330 பொலிஸ் உத்தியோகத்தர்கள் நகரில் பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து
வருகின்றனர்.