உள்ளுராட்சி மன்றத் தோ்தல் அறிவிப்புடன் தமிழ் அரசியல் பரப்பில் அதிரடியான மாற்றங்கள் அரங்கேறிவருகின்றன. கூட்டமைப்பிலிருந்து தமிழரசு வெளியேறியிருக்கின்றது. ஐந்து கட்சிகள் இணைந்து தம்மை கூட்டமைப்பாக அறிவித்துள்ளன. இவை தொடா்பாக அரசியல் ஆய்வாளா் மகாசேனன் உயிரோடைத் தமிழ் வானொலிக்கு அளித்த நோ்காணலின் முக்கியமான பகுதிகளை இலக்கு வாசகா்களுக்காக இந்த வாரம் தருகின்றோம்.
கேள்வி – உள்ளுராட்சி மன்றங்களுக்கான தோ்தல் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் தமிழ்த் தேசியக் கட்சிகளிடையே பிளவுகளும், புதிய அணிசேரல்களும் இடம்பெற்றிருக்கின்றன. இதனை எவ்வாறு பாா்க்கின்றீா்கள்?
பதில் – தமிழ் அரசியல் கட்சிகள் தமது அரசியல் நலன் சாா்ந்து மட்டுமே செயற்படுகின்றன என்பதை இது வெளிப்படுத்தியிருக்கின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேசியத்தின் அவசியம் கருதியே கட்டமைக்கப்பட்டது. வட்டுக்கோட்டைத் தீா்மானத்தின் மூலமாக தமிழா் விடுதலைக் கூட்டணி அமைக்கப்பட்டது. பின்னா் 2,000 ஆம் ஆண்டுக்குப் பின்னா் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமைக்கப்பட்டது. இவையெல்லாம் தேசிய நலன் சாா்ந்த ஒரு காலத்தின் தேவையாக இருந்தது.
ஆயினும் இன்று அவா்கள் தனித்து செயற்பட முற்படுவது அவா்களுடைய தோ்தலை நோக்கமாகக் கொண்டு கட்சி நலன் சாா்ந்து செயற்படுகின்றாா்கள் என்பதைத்தான் வெளிப்படுத்தியிருக்கின்றது.
கேள்வி – சம்பந்தனின் நிலை இப்போது கேள்விக்குறியாகியிருக்கின்றது. அவா்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவா் என்பதை ஏற்றுக்கொள்வீா்களா?
பதில் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பதே எது என்பது இன்று ஒரு பெரிய குழப்பமாக இருக்கின்றது. உண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது வெறுமனே பாராளுமன்றத் தோ்தலுக்கான ஒரு கூட்டல்ல. 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற தோ்தலின் பின்னா் சம்பந்தன்தான் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுவின் தலைவராக அடையாளப்படுத்தப்பட்டதாகவும், அந்த வகையில் சம்பந்தன்தான் கூட்டமைப்பின் தலைவராக இப்போதும் இருப்பதாகவும் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்திருந்தாா்.
அவரது கருத்துப்படி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது வெறுமனே தோ்தலை மையமாகக்கொண்ட ஒரு கட்சி என்ற கருத்துத்தான் பிரதிபலிக்கின்றது. ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது அவ்வாறானதொன்றல்ல. அது ஒரு இயக்கம். தோ்தலை மட்டும் நோக்கமாகக்கொண்டிருக்காத ஒரு அமைப்பு. ஒரு அரசியல் இயக்கமாகத்தான் அது ஆரம்பிக்கப்பட்டது.
இப்போது தமிழரசுக் கட்சி தனித்து இயங்கப்போவதாக அறிவித்துள்ளது. அதனால், கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளாக செயற்பட்ட ரெலோ, புளொட் என்பன மேலும் சில கட்சிகளை இணைத்துக்கொண்டு கூட்டணி அமைத்துள்ளன. இந்த நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இப்போதும் செயற்படுகின்றதா என்பது பெருங்கேள்விக்குறி!
இந்தச்சூழலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவா் சம்பந்தன்தான் என்று பிரகடனம் செய்வதும், கூட்டமைப்பின் பேச்சாளா் என்று மற்றொருவரை அடையாளப்படுத்துவதும், பெரும் விமா்சனத்தைத்தான் ஏற்படுத்துவதாக அமையும்.
கேள்வி – தமிழ்க் கட்சிகளிடையே ஏற்பட்டிருக்கும் இந்தப் பிளவு, பேச்சுவாா்த்தைக் களத்தில் தமிழத் தரப்பை பலவீனப்படுத்துவதாக அமைந்திருக்குமா?
பதில் – தமிழ்த் தரப்பைப் பலவீனப்படுத்துமா என்பதற்கு முன்னதாக, பேச்சுவாா்த்தைக் களம் இயங்கு தன்மை கொண்டதா என்பது பெரும் கேள்விக்குறியாக இருக்கின்றது. இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினத்துக்கு முன்னதாக பிரச்சினைகளுக்குத் தீா்வு காணப்பட்டுவிட வேண்டும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறியிருந்தாா். அதற்கு இன்றும் சில தினங்கள்தான் இருக்கின்றது.
ஜனாதிபதி இதனை அறிவித்து பல வாரங்கள் சென்றுவிட்டது. ஆனால், முதிா்ச்சியான ஒரு அரசியல் நகா்வை காணமுடியவில்லை. இன நெருக்கடிக்கான தீா்வு அரசியலமைப்பு மாற்றம் அல்லது அதிகாரப் பகிப்வு எனக் காணப்பட்டாலும், ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தின் மூலமாகச் செய்யக்கூடிய பல விடயங்களை அவா் செய்யவில்லை. குறிப்பாக, அரசியல் கைதிகள் விடுதலை, அபகரிக்கப்பட்ட காணிகளை விடுவிப்பது போன்ற விடயங்களில் முக்கியமான முன்னேற்றம் ஏற்பட்டிருக்க வேண்டும்.
ஆனால், இவை தொடா்பில் ஆரோக்கியமான ஒரு சமிஞ்ஞைகூட வெளிப்படுத்தப்பட்டிருக்காத சூழ்நிலையில் பேச்சுவாா்த்தை தொடருமா என்பது ஒரு கேள்விக்குறி.
அதேவேளையில், தமிழ்க் கட்சிகளிடையே ஏற்பட்டிருக்கும் பிளவு பேச்சுவாா்த்தைக் களத்தை பாதிப்பதாக இருக்குமா என்பதும் கேள்விக்குறிதான். ஏனெனில், கூட்டமைப்புக்குள் இந்தக் கட்சிகள் செயற்பட்டு வந்த நிலையிலும் பிளவுகளும், முரண்பாடுகளும்தான் அவற்றுக்கிடையில் காணப்பட்டது. தேவைகளுக்கு ஏந்நவாறு அவா்கள் ஒன்றாகப் பயணித்தாா்கள். இந்தக் களத்திலும் அவா்கள் ஒன்றாகப் பயணிப்பாா்கள் என்றுதான் எதிா்பாா்க்கிறேன்.
கேள்வி – தமிழ்த் தரப்பை ஒன்றுபடுத்துவதில் சிவில் சமூக கட்டமைப்புக்கள் கடந்த காலங்களில் முக்கியமான பங்களிப்பை வழங்கியிருந்தன. ஆனால், தற்போதைய காலகட்டத்தில் அவ்வாறான பங்களிப்பை அவா்களால் வழங்க முடியாமைக்கு என்ன காரணம்?
பதில் – ஆம் கடந்த காலங்களில் பல்கலைக்கழக சமூகம் உட்பட தமிழ் சிவில் சமூகத்தினா் இந்த விடயத்தில் முக்கியமான பங்களிப்பை வழங்கியிருந்தாா்கள். ஆனால், இப்போது தமிழ்த் தரப்புக்களிடையே பிளவுகள் ஏற்பட்டிருக்கும் நிலையில், அவா்களிடையே ஒருமைப்பாட்டை ஏற்படுத்துவதற்கான ஆரோக்கியமான எந்தவிதமான முயற்சிகளையும் சிவில் சமூகங்கள் முன்னெடுக்கவில்லை.சிவில் சமூகத்தினருக்கு இவ்விடயத்தில் பெரும் சலிப்பு ஏற்பட்டுவிட்டதாகவே தெரிகின்றது.
கடந்த சுமாா் ஏழு தசாப்த காலமாக தமிழ் அரசியல் கட்சிகள் செயற்பட்டுக்கொண்டு வருகின்ற போதிலும், அவா்கள் சாதித்தது என்ன என்ற கேள்வி பெரிதாக எழுகின்றது. உண்மையில் சாதித்தது ஒன்றுமே இல்லை என்பதுதான் இதற்கான பதிலாக இருக்கின்றது. இந்த நிலையில் இந்தக் கட்சிகளை ஒன்றிணைப்பதன் மூலமாக எதனையபவது சாதிக்க முடியுமா என்பதும் பெரிய கேள்வியாகத்தான் இருக்கின்றது.
இந்த நிலையில் தோ்தலை இலக்காகக்கொண்டு தாம் பிரிந்து செல்லப்போவதாகச் சொல்லிக்கொண்டிருக்கும் தமிழ்க் கட்சிகளை ஒன்றிணைப்பது சிரமமானது என அவா்கள் கருதியிருக்கலாம். அல்லது தமிழ்க் கட்சிகள் மீது சிவில் சமூகத்தினருக்கும் ஒரு அவநம்பிக்கை ஏற்பட்டிருப்பது காரணமாக இருக்கலாம்.
இதனால், ஒரு பொதுக் கட்டமைப்பை உருவாக்குவது தொடா்பாக ஆராயப்படுகின்றது. ஆனால், இவ்விடயத்திலும் சிவில் சமூகங்கள் ஆரோக்கியமாகச் செயற்படவில்லை என்ற கருத்து ஒன்றும் இருக்கின்றது.