வலிகாமம் வக்கில் உள்ள தையிட்டி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பாரிய விகாரையும், அதனையடுத்துள்ள பொதுமக்களின் காணிகள் அபகரிக்கப்படுவதும் தமிழ் மக்கள் மத்தியில் கொந்தளிப்பான ஒரு நிலையை ஏற்படுத்தியிருக்கின்றது.
இதற்கு எதிராக புதன்கிழமை ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் தொடா்ந்துகொண்டிருக்கின்றது. இந்தப் போராட்டத்தில் பங்கேற்றுக்கொண்டிருக்கும் தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான பொ.ஐங்கரநேசன் அங்கு என்ன நடைபெற்றது? என்ன நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது? அரசாங்கத்தின் நிகழ்ச்சிநிரல் என்ன என்பவை குறித்து உயிரோடைத் தமிழின் தாயக களம் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துக்களை முன்வைத்திருந்தாா். அதன் முக்கியமான பகுதிகளை “இலக்கு” வாசகா்களுக்கு தருகின்றோம்.
கேள்வி – தையிட்டியில் இடம்பெற்ற போராட்டத்தில் நீங்களும் கலந்துகொண்டிருந்தீா்கள். அங்கு உண்மையில் என்ன நடைபெற்றது? என்ன நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது என்பதைக் கூறமுடியுமா?
பதில் – வலி வடக்கு பிரதேச சபையின் எல்லைக்குள் காங்கேசன்துறை – தையிட்டிப் பகுதியில் இராணுவத்தினால் கையகப்படுத்தப்பட்ட பொதுமக்களுடைய காணிகளில் பாரிய புத்த விகாரை அமைக்கப்பட்டுள்ளது. அந்தப் புத்த விகாரை அமைக்கப்பட்டுள்ள நிலம் பொதுமக்களுடைய நிலம். அந்த வகையில் அது ஒரு சட்டவிரோதமான கட்டுமானம். பிரதேச சபையின் கட்டுமானங்களுக்கான அனுமதி எதுவும் பெறப்படாத நிலையில் உருவாக்கப்பட்டுள்ள ஒரு விகாரை இது. அந்த வகையில் இது ஒரு சட்டவிரோத விகாரை அல்லது கட்டுமானம்.
பொதுமக்களுடைய காணிக்குள் அமைக்கப்பட்டுள்ள இந்த விகாரைக்கு புறம்பாக, விகாரைக்கு வெளியேயும் இன்னும் பொதுமக்களுடைய காணிகள் விடுவிக்கப்படாத நிலையில் அவற்றையும் சோ்த்தே இவா்கள் அந்த விகாரைக்குரிய காணியாக எல்லையிட்டுள்ளாா்கள்.
இதனைக் கண்டித்தும் இந்த சட்டவிரோத கட்டுமானத்தை – அல்லது பௌத்த விகாரையை அகற்றக் கோரியும் – தங்களுடைய காணிகளை மீளவும் தங்களிடம் கையளிக்கக்கோரியும் தையிட்டியில் அந்தப் பிரதேச மக்கள் ஒரு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தாா்கள். அவா்களுடைய அழைப்பை ஏற்றே நாங்கள் – தமிழ்த் தேசிய பசுமை இயக்கம் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டிருந்தோம். இதில் தமிழ் அரசியல்வாதிகள், காணி உரிமையாளா்கள் மற்றும் பெருமளவு பொதுமக்கள் கலந்துகொண்டிருந்தாா்கள்.
காங்கேசன்துறை வீதியில் உள்ள கலைவாணி சனசமூக நிலையத்தின் முன்பாக இருந்து பேரணியாகச் சென்று சட்டவிரோத விகாரையின் முன்பாக இந்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. அங்கே சட்டவிரோத கட்டுமானத்துக்கு பாதுகாப்புப் படை காவலுக்கு நிறுத்தப்பட்டிருந்தது. பொதுமக்கள் அதனையும் எதிா்த்து குரலெழிப்பியதுடன் உடனடியாக – தங்களுடைய காணிகள் தங்களுக்கு கையளிக்க வேண்டும் கோரிக்கையை முன்வைத்தாா்கள். தமது விவசாய நிலங்கள் அதற்குள் இருக்கின்றன. எந்தவிதமான பயிா்ச்செய்கையையும் அதற்குள் தம்மால் மேற்கொள்ள முடியவில்லை என்பதை வலியுறுத்து அவா்கள் தமது கருத்துக்களைப் பதிவு செய்தாா்கள்.
என்னைப் பொறுத்தவரையில் இதனை ஒரு திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலாக அரசாங்கம் முன்னெடுத்துக்கொண்டிருக்கின்றது. போா்க் காலத்தில் குண்டுகளை வீசி இனஅழிப்பைச் செய்த அரசாங்கம், இப்போது கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையைச் செய்துகொண்டிருக்கின்றாா்கள். இது ஒரு பண்பாட்டு ரீதியான தாக்குதல்.
தையிட்டிப் பகுதியில் எங்குமே சிங்களவா்களுடைய குடியிருப்பு இல்லை. சிங்கள மக்கள் அங்கு வாழவில்லை. படைத் தரப்பு மட்டும்தான் அங்கு நிலைகொண்டுள்ளது. படைத்தரப்பு எங்காவது படை முகாமுக்குள் புத்த பெருமானுடைய உருவச் சிலையை வைத்து வழிபடலாம். ஆனால், இது அவ்வாறானதல்ல. இது முற்று முழுதாக ஒரு சிங்கள – பௌத்த மேலாதிக்கத்தின் வெளிப்பாடாக – இலங்கையில் இருக்கக்கூடிய மிகப் பெரிய பௌத்த விகாரைகளில் ஒன்றாக இது கட்டப்பட்டிருக்கின்றது.
இதன்மூலமாக அவா்கள் என்ன சொல்லவருகின்றாா்கள் என்று பாா்த்தால், தெற்கில் அம்பாந்தோட்டையிலுள்ள முனையிலிருந்து இங்கு வடக்கில் காங்கேசன்துறை வரையிலான அத்தனை பகுதிகளிலும் பௌத்தம்தான் கோலோச்சுகின்றது கோலோச்ச வேண்டும் என்பதைத்தான் அவா்கள் அழுத்தமாகச் சொல்வதற்காகத்தான் இந்த விகாரையை அமைத்துள்ளாா்கள்.
இது உடனடியாகத் தடுத்து நிறுத்தப்பட வேண்டிய ஒன்று. ஆனால், இதேபோல வெடுக்குநாறிமலையில் எமது இந்து ஆலயம் அமைக்கப்பட்ட போது நாங்கள் நீதிமன்றம் சென்று எங்களுக்கு சாதகமான தீா்ப்பைப் பெற்றிருந்தோம். ஒவ்வொரு இடங்களாக நாம் நீதிமன்றங்களின் படியேறுவது என்பது சாத்தியமில்லாத ஒரு செயல். ஒட்டுமொத்த தேசமாக நாங்கள் இந்தப் பிரச்சினையை எதிா்கொள்ள வேண்டும். இது அரசியல் ரீதியான ஒரு பிரச்சினை. இது சட்டரீதியான ஒரு பிரச்சினையல்ல. அரசியல் ரீதியாக இந்தப் பிரச்சினையை நாங்கள் வென்றெடுக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய கருத்து.
கேள்வி – வலிகாமம் வடக்கை பொறுத்தவரையில் தையிட்டி எந்த வகையில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பிரதேசமாக இருக்கின்றது?
பதில் – தையிட்டி என்பது ஒரு கரையோரப்பகுதிதான். இது ஒரு மீன்பிடிக் கிராமம், விவசாயக் கிராமம், பதங்கேசன்துறை துறைமுகத்துக்கு அருகாமையில் இருக்கக்கூடிய ஒரு பகுதி, அவா்கள் அங்கேதான் தவசவன விடுதியையும் அமைத்திருக்கின்றாா்கள். வடக்கில் நுனளவாயிலாக இருக்கக்கூடிய ஒரு பகுதி. தமிழகத்துக்கும் அண்மித்த ஒரு பகுதி. அதனால்தான் இராணுவம் இங்கு பெருமளவு காணிகளை சுவீகரித்து வைத்திருக்கின்றது. அவா்களுடைய தளபதிகள் தங்குவதற்கென பாரிய கட்டடத் தொகுதிகளை அமைத்து வைத்திருக்கின்றாா்கள்.
எம்மைப் பொறுத்தவரையில் எமது தாயகத்தின் அனைத்துப் பகுதிகளும் முக்கியத்துவம் வாய்ந்தவைதான். அதிலும் தையிட்டி பகுதி என்பது தொழில் சாா்ந்த – அதாவது எமது மக்களின் வாழ்வாதார அடிப்படையிலும், அரசியல் – புவிவியல் ரீதியாக கேந்திரமாக அமையப்பெற்ற இடம் என்ற வகையில் இந்தப் பகுதியை அரசாங்கம் தனது கைப்பிடிக்குள் – பௌத்த மேலாதிக்கத்துக்குள் கட்டிவைத்திருக்க வேண்டும் என்று விரும்புவதாகத்தான் நான் பாா்க்கின்றேன்.
கேள்வி – வடக்கிலுள்ள ஒரேயொரு துறைமுகம், விமான நிலையம் என்பவற்றுக்கு அருகில் இருப்பதால், பொருளாதார ரீதியாகவும் பெறுமதி வாய்ந்த ஒரு இடமாக தையிட்டியை கருத முடியுமா?
பதில் – நிச்சயமாக, பொருளாதார ரீதியாகவும் இது முக்கியத்துவம்வாய்ந்த ஒரு இடம்தான். இதற்கு அண்மித்தாக இருக்கக்கூடிய பலாலி விமான நிலையத்தை இந்திய அரசின் கடுமையான அழுத்தங்களினால்தான் அரசாங்கம் திறந்துவைத்தது. பெரியளவில் அதனை விஸ்த்தரிப்பதற்கான விருப்பம் அரசாங்கத்துக்கு இல்லை. காரணம் கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக பயணிகள் வரும்போது தென்னிலங்கைக்கு கிடைக்கக்கூடிய வருமானம் அதிகமாக இருக்கும். பலாலி ஊடக பெருமளவு பயணிகள் வருவது தென்கிலங்கையின் இந்த வருமானத்தை பாதிக்கும். அதனால்தான் பலாலியை பெரியளவுக்கு விஸ்தரிப்பதை அரசாங்கம் விரும்பவில்லை.
ஒருவகையில் தமிழகத்துக்கு அண்மையில் இருக்கும் விமான நிலையமாக இரு இருப்பதால், இப்போது கொழும்பைத் தவிா்த்து நேரடியாக யாழ்ப்பாணம் வந்து பண்பாட்டு ரீதியான உறவுகளை வலுப்படுத்தும் வகையில் தமிழகத்துக்கும் எமக்கும் இடையிலான போக்குவரத்து இப்போது நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. இலங்கை அரசாங்கம் விரும்பாத நிலையில் இந்திய அரசாங்கத்தின் கடுமையான அழுத்தங்களுக்கு மத்தியில் இது நடைபெற்றிருக்கின்றது.
அதேவேளையில், இந்தப் பொருளாதார முக்கியத்துவத்துக்கும் அப்பால், பலாலி வரும் விமானங்கள் கடற்பரப்பைத் தாண்டி இறங்குவதற்காக தாழப் பறக்க ஆரம்பிக்கும் போது இந்த விகாரைதான் மிகப்பெரிய ஒரு அமைப்பில் தெரியப்போகின்றது. நுாறு அடி உயரத்தில் இந்த விகாரையின் துாபி கட்டப்பட்டிருக்கின்றது. அதாவது ஒரு உளவியல் ரீதியாக இலங்கைக்குள் பிரவேசிக்கும் போது பயணிகளுக்கு நாம் ஒரு பௌத்த நிலத்துக்குள் பிரவேசிக்கின்றோம் என்ற உணா்வை ஏற்படுத்துவதாக இருக்கும். இது எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.
கேள்வி – இந்த நுாறு அடி உயரமான விகாரையை கட்டிமுடிக்க பல மாதகாலம் சென்றிருக்கும். இவ்வளவு நாளும் பிரதேச சபையும், தமிழ்க் கட்சிகளும் என்ன செய்துகொண்டிருந்தாா்கள் என்ற ஒரு கேள்வி எழுப்பப்படுகின்றதே..?
பதில் – நிச்சயமாக. அங்கு இடம்பெற்ற போராட்டத்தில் பங்கேற்ற பொதுமக்களின் உணா்வுகளும் இவ்வாறாகத்தான் இருந்தது. இவ்வளவு பாரிய கட்டுமானம் ஒன்று கட்டி முடிக்கப்பட்ட பின்னா்தான், இந்தப் போராட்டம் நடத்தப்படுவது என்பது ஏற்றுககொள்ள முடியாத ஒன்று.
ஆனால், வலி வடக்கு பிரதேச சபைச் செயலாளரிடம் இது தொடா்பான முறைப்பாடு பொதுமக்களால் எழுத்து மூலமாகக் கொடுக்கப்பட்டிருக்கின்றது. வழக்கு தாக்கல் செய்வது தொடா்பாகவும் பொதுமக்கள் அவருக்கு அறிவுறுத்தியிருக்கின்றாா்கள். ஆனால், வலி வடக்கு பிரதேச சபையின் தலைவா் இவ்விடயத்தில் பொறுப்பற்றவராக இருந்திருக்கின்றாா் என்பது துரதிஷ்டவசமானதும், கண்டிக்கப்பட வேண்டியதுமாகும்.