தேசிய மக்கள் சக்தி தொழிலாளர்களுக்கு தோள் கொடுக்குமா? -துரைசாமி நடராஜா

இலங்கையில் பெருந்தோட்ட தேயிலைத் தொழிற்றுறை மற்றும் அங்கு தொழில் புரியும் தொழிலாளர்களின் பிரச்சினைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. எனினும் இது தொடர்பில் உரிய நடவடிக்கைகள் முன்
னெடுக்கப்படாது மௌனம் காக்கும் நிலை மைகளே தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் தற்போது ஆட்சிபீடமேறியுள்ள தேசிய மக்கள் சக்தி தொழிற்றுறை மற்றும் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் காத்திரமான பங்களிப்பை நல்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கி காணப்படுகின்றது. இதனிடையே இலங்கையில் பெருந்தோட்ட கைத்தொழில் துறையுடன் இணைந்த சமூகங்களை மேம்படுத்தும் அதே வேளை அதனை அபிவிருத்தி செய்வதற்கு உதவும் கூட்டு முயற்சிகளுக்கு முழு ஒத்து ழைப்பையும் வழங்கவுள்ளதாக இலங்கை பெருந்தோட்டத்துறையின் முதலாளிமார் சம் மேளனம் தெரிவித்துள்ளது.
பெருந்தோட்டத் தொழிற்றுறை நாட்டின் முதுகெலும்பாக ஒரு காலத்தில் வர் ணிக்கப்பட்டது. இலங்கையின் அந்நிய செலாவணி வருமானத்தில் தேயிலை கணிசமான வகிபாகத்தைக் கொண்டிருந்தது. இதனடிப் படையில் 1959 ம் ஆண்டு இலங்கை அந்நியச் செலாவணி உழைப்பில் தேயிலையின் வகிபாகம் 59.6 வீதமாகக் காணப்பட்டது. இது 1969 இல் 57.8,1976 இல் 43.6, 1980 இல் 35.1, 1985 இல் 33.1, 1988 இல் 26.2, 1989 இல் 24.3,1990 இல் 24.9 என்ற வகிபாகத்தினைக் கொண்டிருந்தது. இலங்கை பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகம்கொடுத்த 2022 ம் ஆண்டில் கூட 1.3 பில்லியன் டொலர்கள் தேயிலை உற்பத்தி ஊடாக இலங்கைக்கு கிடைத்தமை குறிப்பிடத்தக்கதொரு விடயமாகும். இலங்கை யின் ஏற்றுமதி வருமானம் வருடந்தோறும் சுமார் 10 பில்லியன் தொடக்கம் 12 பில்லியன் டொலர்களாக பதிவாகின்றன. அதில் சுமார் 12 வீத பங்களிப்பு தேயிலை  ஏற்றுமதியின் மூலமாகவே கிடைக்கின்றது. இதனை மேலும் உயர்த்த வேண்டும் என்பதும் எதிர்பார்ப்பாகவுள்ளது. இலங்கையின் ‘சிலோன் தேயிலை’ என்பது உலக வர்த்தகத்தில் மிகவும் பிரசித்திபெற்ற ஒரு அடையாளமாக காணப்படுகின்றது என்பதனை தகவல்கள் வலியுறுத்துகின்றன.
தேயிலை மீதான நாட்டம் குறைவுஇலங்கையில் 1985 இல் 231,650 ஹெக்டேயர் பரப்பளவில் தேயிலை பயிரிடப்பட்ட‌து. இதேவேளை தேயிலை உற்பத்தியைப் பொறுத்த வரையில் 1945 இல் 125.6 மில்லியன் கிலோ கிராம் தேயிலை உற்பத்தி செய்யப்பட்டது. இது 1965 இல் 228.6, 1976 இல் 196.6, 1982 இல் 187.8, 1988 இல் 227.2, 1990 இல் 233.0 மில்லியன் கிலோ கிராமாக அமைந்திருந்தது. எனினும் படிப்படியாக தேயிலையின் செல்வாக்கு வலுவிழந்து செல்லும் ஒரு போக்கினையே பின்வரும் காலங்களில் அவதானிக்கக் கூடிய தாக இருந்தது. ஆடைத் தொழிற்றுறை, சுற்றுலா பயணிகளின் மூலமாக கிடைக்கும் வருமானம், மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்று வீட்டுப் பணிப் பெண்கள் உழைத்தும் பணம் என்பவற்றின் ஆதிக்கம் நாட்டின் வருவாயில் குறிப்பிடத்தக்க வகிபாகத்தினைக் கொண்டு விளங்குகின்றமையும் தெரிந்ததேயாகும். இதேவேளை தேயிலைத் தொழிற்றுறை சமகாலத் தில் பல்வேறு சவால்களுக்கும் முகம் கொடுக்க வேண்டிய அபாயகரமான சூழ்நிலையும் மேலெழுந்து காணப்படுகின்றது. காலநிலை மாற்றம், உரங்களின் விலை அதிகரிப்பு, உலக சந்தையில் தேயிலை மீதான நாட்டம் குறைவடைந்து செல்கின்றமை, மாற்றுப் பானங்களின் மேலோங்குகை, தேயிலைத் தொழிற்றுறையில் காணப்படும் அசமந்தப் போக்குகள், தொழிற்றுறை நவீனமயப்படுத் தப்படாமை  எனப்பலவும் இத்தொழிற்றுறையின் வீழ்ச்சிக்கு அடித்தளமாக அமைந்துள்ளன.
இந்நிலையில் சமகாலத்தில் சிறு தோட்ட தேயிலை உற்பத்தியாளர்களின் ஆதிக்கம் மெச்சத்தக்கதாக உள்ள நிலையில் பெருந்தோட்டங்கள் சீந்துவாரின்றிக் கிடக்கின்றன. பெருந்தோட்டத் துறையில் புரட்சிகரமான மாற்றங்களை ஏற்படுத்தப்.  போவதாக கூறிய வர்கள் இப்போது வாயடைத்துப் போயுள்ளனர். பெருந்தோட்ட பயிர்ச்செய்கையில் புதிய முறைமையொன்று அறிமுகப்படுத்தப்படும். அதன்படி அங்கு வாழும் மக்கள் காணிகளை வாங்கி, அதில் தேயிலையைப் பயிரிட்டு அவற்றை தொழிற்சாலைகளுக்கு விநியோகிக் கக்கூடிய வகையில் மாற்றம் ஏற்படுத்தப்படும் என்ற வாக்குறுதிகள் இப்போது கனவாகி இருக்கின்றன.
இந்நிலையில் இலங்கையில் 2050 ம் ஆண்டளவில் பெருந்தோட்டத்துறையை இல்லாமலாக்குவதற்கு தேசிய கொள்கை வகுக்கப் பட்டுள்ளதாகவும்,2050 காலப்பகுதியில் 100 சதவீதம் சிறுதோட்ட உரிமையாளர்களிடம் ஒப் படைக்கப்பட்டு பெருந்தோட்டத்துறையை இல்லாமலாக்குவதற்கான காய்நகர்த்தல்கள் இடம் பெற்று வருவதாகவும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜா ஏற்கனவே குற்றஞ்சாட்டி இருந்தார்.
பீட்டர் புரூவரின் கருத்து   இதேவேளை தேயிலை தொழிற்றுறையில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கும் முகம் கொடுத்து வருவதும் நீங்கள் அறிந்ததேயாகும். இலங்கையில் அடிமைத்தனத்தின் சமகால வடிவங்கள் பல்பரி மாணமுடையவையாகக் காணப்படுகின்றன. குறிப்பாக பிரித்தானிய காலனித்துவ ஆட்சியின் கீழ் பெருந்தோட்டங்களில் பணிபுரிவதற்காக இந்தியாவிலிருந்து அழைத்து வரப்பட்ட மலையகத் தமிழர்கள் நாளாந்தம் பல்வேறு வடிவங்களிலான ஒடுக்கு முறைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர் என்ற ஐக்கிய நாடுகள் சபையின் குற்றச்சாட்டு ஆழமாக சிந்திக்க வேண்டிய ஒன்றாகவுள்ளது. தொழில் ரீதியான உரிமை மீறல்கள் உள்ளிட்ட மேலும் பல உரிமை மீறல்களுக்கும் சொந்தக்காரர்களாக பெருந்தோட்ட மக்கள் இருந்து வருவது வேதனைக்குரிய ஒரு விடயமாகும்.
வருமான ரீதியாக தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் சவால்களும் அதிகமுள்ள நிலையில் இவற்றுக்கான தீர்வுகள் இன்னும் உரியவாறு எட்டப்படவில்லை. நாணய நிதிய மீளாய்வின்போது தான் ஒரு முறை இலங்கையில் நுவரெலியாவுக்கு சென்றிருந்த சந்தர்ப்பத்தில் அங்கு தோட்டத் தொழிலாளர்களை சந்தித் ததாகவும், அப்போது அவர்கள் தங்கள் வருமா னம் மற்றும் செலவு விபரங்களை காட்டிய போது தான் அதிர்ச்சியடைந்து விட்டதாகவும் சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான செயற்றிட்டத்தின் தலைவர் பீட்டர் புரூவர் அண்மையில் தெரிவித்திருந்தமையும் இங்கு நோக்கத்தக்கதாகும். நாட்டின் சகல துறைசார் ஊழியர்களினதும் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அவர்களது சம்பள விடயத்தில் ஆலோசனைகள் மற்றும் சிபாரிசுகளை வழங்குவதற்கு சம்பள ஆணைக்குழுக்கள் அரசாங் கத்தினால் நியமிக்கப்பட்டுள்ளன. அதேவேளை பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பாக எந்தவொரு ஆணைக்குழுவையும் நியமிக்க அரசாங்கம் பின்வாங்கி வருவதாக வும் கடந்த காலத்தில் விமர்சனங்கள் முன்வைக் கப்பட்டிருந்தன.
பெருந்தோட்டங்களில் நிலவும் வேலை நாள் குறைவு, அதிகரித்த நெருக்கீடுகள், ஊதி
யப்  பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தொழிற்றுறையில் ஈடுபடும் தொழிலாளர் களின் எண்ணிக்கை வேகமாக குறைவடைந்து வருகின்றது. 1980 இல் பெருந்தோட்டங்களில் பதிவு செய்யப்பட்ட தொழிலாளர்களின் எண்ணிக்கை 541,971 ஆகவிருந்தது. எனினும் இவ்வெண்ணிக்கை சடுதியாக வீழ்ச்சியடைந்த நிலையில் 2015 இல் பதிவு செய்யப்பட்ட தொழிலாளர்களின் எண்ணிக்கை 158,322 ஆகவிருந்தது. சமகாலத்தில் இவ்வெண்ணிக்கை மேலும் வீழ்ச்சியடைந்து காணப்படுவதும் குறிப் பிடத்தக்கதாகும்.
பங்கீட்டு முறை பெருந்தோட்டத் தொழிற்றுறையின் அபிவிருத்தியில் கம்பனிகள் காத்திரமான பங்க ளிப்பை வழங்கவில்லை என்றதொரு குற்றச் சாட்டு நீண்ட காலமாகவே இருந்து வருகின்றது.  இக்குற்றச்சாட்டுக்கு முதலாளிமார் சம்மேளனம் மறுப்பு தெரிவித்திருந்தது. பெருந்தோட்டக் கம்பனிகளின் கீழ் உள்ள தோட்டங்களில் சுமார் ஒரு இலட்சத்து ஆயிரம் பதிவு செய்யப் பட்ட தொழிலாளர்களே பணியாற்றி வந்த போதும் இத்தொழிலோடு மறைமுகமாக இணைந்திருப் பவர்களின் எண்ணிக்கை சுமார் 20 இலட்சமாகும். இத்தனை பேரின் வாழ்வாதாரம் தங்கியிருக்கும் இத்துறையை மிகவும் நெருக்கடிகளுக்கு மத்தி
யிலேயே தாம் கொண்டு நடாத்துவதாக முதலாளி மார் சம்மேளனம் தெரிவித்திருந்தது.
மேலும் 150 வருட வேதன முறையை மாற்றியமைக்க வேண்டும் எனவும் வருமானப் பங்கீட்டு முறையை கொண்டு வருமாறும் தொழிற்சங்கங்களிடம் நாம் கோரினோம். ஆனால் அவர்கள் அது குறித்து அக்கறை செலுத்தவில்லை. தொழிலாளர்களை அதே நிலையில் வைத்திருக்கவே தொழிற்சங்கங்கள் ஆசைப்படுகின்றன. 2020 ம் ஆண்டு 300 மில்லியன் கிலோ கிராம் தேயிலையை உற் பத்தி செய்த கம்பனிகள், 2022 இல் 251 கிலோ கிராம் தேயிலையையே உற்பத்தி செய்தன.  இவ்வாறு உற்பத்தி வீழ்ச்சி கண்டபோதும் தொழிலாளர்களுக்கான நலன்களை பெற்றுக் கொடுப்பதில் தாம் பின்நிற்கவில்லை என்றும் முதலாளிமார் சம்மேளனம் மேலும் தெரிவித் திருந்தது.
இதேவேளை தேசிய மக்கள் சக்தி அரசாங் கம் தற்போது ஆட்சிபீடமேறியுள்ள நிலையில் இலங்கையில் பெருந்தோட்டக் கைத்தொழில் துறையுடன் இணைந்த சமூகங்களை மேம் படுத்தும் அதேவேளை அதனை அபிவிருத்தி செய்வதற்கு உதவும் கூட்டு முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பையும் வழங்கவுள்ளதாக இலங்கை பெருந்தோட்டத்துறையின் முதலாளிமார் சம்மேளனம் தெரிவித்துள்ளது. பிராந்திய பெருந்தோட்ட நிறுவனங்கள் உள்ளிட்ட பெருந் தோட்டத் துறையானது பல தசாப்தங் களாக இலங்கையின் பொருளாதாரத் தில் முக்கிய பங்கை கொண்டுள்ளது. புதிய அரசாங்கம் பெருந்தோட்டக் கைத்தொழிலின் நிலையான அபிவிருத்திக்கு முன்னெடுக்கும் அனைத்து திட்டங்களுக்கும் முழுமையான ஒத்துழைப்பை நல்குவதோடு அதற்குரிய பொருத்தமான சூழ லையும் ஏற்படுத்திக் கொடுப்போம்.
நீண்டகால உற்பத்தித்திறன் பெருந்தோட்டத் துறையை பொறுத்தவரையில் ஆளணி, உற்பத்தித்திறன் மற்றும் நவீன மயமாக்கல் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க சவால்கள் இன்னும் தொடர்ந்த வண்ணமாகவே காணப்படுகின்றன. இந்நிலையில் இத்துறை யின் நீண்டகால உற்பத்தித்திறன் மற்றும் நிலைத்த தன்மையை உறுதி செய்வதற்காக, பயிர் பல்வகைப்படுத்தல், நிலையான வேளாண்மை கொள்கைகளுடன், புத்தாக்கம், இயந்திர மயமாக்ககல் மற்றும் தன்னியக்கமயமாக்கல் ஆகியவற்றை ஊக்குவிப்பது உள்ளிட்ட கூட்டாக இந்த சவால்களை எதிர்கொள்வதன் முக்கியத்துவத்தையும் முதலாளிமார் சம்மேள னம் வலியுறுத்தி இருந்தது. இதேவேளை நவீன தொழில்நுட்பங்களைப் பின்பற்றுதல், உட்கட்டமைப்பை மேம்படுத்துதல் மற்றும் தேயிலை, இறப்பர் போன்ற முக்கிய ஏற்றுமதிகளுக்கான உலகளாவிய போட்டித்தன் மையை அதிகரிப்பதில் அரசாங்கத்தின் ஆதர வையும் முதலாளிமார் சம்மேளனம் எதிர்பார்த் திருந்தமையும் நோக்கத்தக்கதாகும்.
இந்நிலையில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பாரபட்சமற்ற ரீதியில் மலையக மக்களின் பிரச்சினைகளை அடிமட்டத்தில் இருந்து தீர்த்து வைக்கப்போவதாக உறுதியளித்திருக்கின்றது. மலையகத்தை பிரதிபலித்து இதுவரை தேசிய அரசியலில் ஈடுபட்டவர்கள் மலையகத்தின் முன்னேற்றத்துக்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டபோதிலும் சில மாறுபட்ட அரசி யல் கலாசாரத்தால் அம்முயற்சிகளை வெற்றி கொள்ள முடியாமல் போனதாகவும், எனினும் இந்த அரசியல் கலாசாரம் தமது ஆட்சிக் காலத்தில் நிச்சயம் மாற்றியமைக்கப்பட்டு மலையக அபிவிருத்திக்கு வலுசேர்க்கப்படும் என்றும் தேசிய மக்கள் சக்தி குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில் தோட்டத் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் முக்கிய சவால்களை நிவர்த்தி செய்வதற்கும், தோட்டத் தொழிற்றுறையின் மீள்தன்மை மற்றும் வளர்ச்சியை ஊக்குவிக்கும் கொள்கைகளை உருவாக்குவதற்கும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முன்நின்று செயற்பட வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அரசாங்கத்தின் இச்செயற்பாடானது பெருந் தோட்டங்களும், தொழிலாளர்களும் ஒரு புதிய பாதையில் காலடி எடுத்து வைப்பதற்கு உந்து சக்தியாக அமையும் என்பதை மறுப்பதற்கில்லை.