தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு சுயாதீனமாக செயற்படுகிறதா? – அகிலன்

ஜனாதிபதித் தோ்தலுக்கான தினம் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில்,   அதிகாரத்தைப் பயன்படுத்திச் செய்யப்படும் முறைகேடுகள் குறித்த முறைப்பாடுகள் அதிகரித்துவருகின்றன. குறிப்பாக வேட்பாளா்களில் ஒருவராக ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி என்ற முறையில் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி தோ்தல் சட்டத்தை மீறி செயற்படுவதாக எதிா்க்கட்சிகளும், தோ்தல் கண்காணிப்பு அமைப்புக்களும் தோ்தல் ஆணைக் குழுவுக்கு பல முறைப்பாடுகளைச் செய்துள்ளன.

இவைதொடா்பில் தோ்தல் ஆணைக்குழு மௌனமாக இருப்பதற்கு காரணம் என்ன? சுயாதீன தோ்தல் ஆணைக்குழு என்று சொன்னாலும் அது உண்மையில் சுயாதீனமாக இயங்குகின்றதா?  இந் தக் கேள்விதான் அனைவரிடமும் எழுகின்றது.

தோ்தல் ஆணைக்குழு சுயாதீனமாக செயற் படுகின்றதா என்ற கேள்வியுடன், அதற்கு போதிய அதிகாரங்கள் இருக்கின்றதா என்ற கேள்வியும் மேலதிகமாக எழுகின்றது.

தோ்தல் ஒன்று அறிவிக்கப்பட்டால் தோ்தல் நடைமுறைகள் பல உள்ளன. குறிப்பாக, தோ்தல் அறிவிக்கப்பட்ட பின்னா் வாக்களிப்பு நடைபெறும் தினம் வரையில் “காபந்து அரசாங்கம்” என்ற நடைமுறைதான் பெரும்பாலான நாடுகளிலும் பின்பற்றப்படும். இந்தக் காலத்தில் தோ்தல் ஆணைக்குழுதான் அதிகாரம் மிக்கதாக இருக்கும்.

புதிய நியமனங்கள், தோ்தல் செயற்பாடு களுக்காக அரசாங்கத்தின் வளங்களைப் பயன்படுத்துவது என்பன முற்றாகத் தடை செய்யப் பட்டிருக்கும். இது போன்ற விடயங்களில் தலையிடக்கூடிய அதிகாரம் மிக்கதாக தோ்தல் ஆணைக்குழு இருக்கும். இந்தியாவில் இது போன்ற நடைமுறைகள் கடுமையாகப் பின்பற்றப் படுகின்றன.

இலங்கையைப் பொறுத்தவரையில் அந்த நிலை இல்லை. கடந்த காலங்களில் ஒரு சில சந்தா்ப்பங்களில் தோ்தல் ஆணைக்குழு உறுதியான சில நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது. ஆனால், இப்போது தோ்தல் ஆணைக்குழு பலவீனமாக இருக்கின்றதா என்ற கேள்வி எழுகின்றது.

உள்ளுராட்சி மன்றங்களுக்கான தோ்தல் கள் ஒத்திவைக்கப்பட்டமை தொடா்பாக உயா் நீதிமன்றம் கடந்த வியாழக்கிழமை வழங்கி யுள்ள தீா்ப்புகூட, தோ்தல் ஆணைக்குழு சுயாதீனமாக இயங்கவில்லை என்பதைத்தான் உறுதிப் படுத்தி யிருக்கின்றது.

கடந்த வருடம் மாா்ச் மாதத்தில் உள் ளுராட்சி மன்றங்களுக்கான தோ்தல்கள் நடை பெற்றிருக்க வேண்டும். அதற்கான நியமனப் பத்திரங்களும் கோரப்பட்டு கட்டுப்பணமும் செலுத்தப்பட்டிருந்தது. ஆனால், தோ்தலை நடத்துவதற்குத் தேவையான நிதி திறைசேரியால் வழங்கப்படவில்லை. நிதி அமைச்சராகவும் இருந்த ரணில் விக்கிரமசிங்க அதனைத் தடுத்தார்.

தோ்தல் ஆணைக்குழு அப்போது அவரது செயற்பாட்டுக்குத் துணை போனது. பொருளாதார நிலையைக் காரணம் காட்டி மக்களின் ஜனநாயக உரிமை மறுக்கப்பட்டது.  இந்த சம்பவத்தின் பின்னணியில் இருந்த அரசியல் என்ன என்பது வாசகா்களுக்குத் தெரியும்.

தோ்தல் ஆணைக்குழு முற்று முழுதாக சுயா தீனமானதாகவும் பலமானதாகவும் இருந்திருந்தால் அந்த நிலை ஏற்பட்டிருக்காது. அரசியல் ரீதியான ஒரு காரணத்துக்காக பொருளாதார நெருக்கடி சாட்டாகக் கூறப்பட்டமைக்கு நிதி அமைச்சராகவும் இருக்கும் ஜனாதிபதியும் தோ்தல்  ஆணைக்குழுவும்தான் பொறுப்பு என்று உயா் நீதி மன்றம் வழங்கிய தீா்ப்பில் தெளிவாகக் கூறப் பட்டிருக்கின்றது.

உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்தாமல் முடக்கியதன் மூலம் நிதி அமைச்சர் என்ற முறை யில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களால் வாக்காளர்களின் அடிப்படை உரிமைகள் மீறப் பட்டுள்ளன என்று உயர்நீதிமன்றத்தின் இந்தத் தீா்ப்பில் கூறப்பட்டுள்ளது.  பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, நீதியரசர்கள் விஜித் மலலகொட, முர்து பெர்னாண்டோ, காமினி அமரசேகர, யஸந்த கோத்தாகொட ஆகிய ஐவர் அடங்கிய ஆயம் இந்தத் தீர்ப்பை ஏகமனதாக வழங்கியது.

தோ்தலை முடக்குவதற்கு ஜனாதிபதி மேற்கொண்ட உபாயங்களை முறியடிப்பதற்கான வல்லமை தோ்தல் ஆணைக்குழுவுக்கு இருக்க வில்லை என்பதையும் அந்தச் சம்பவம் தெளி வாகக்காட்டுகின்றது.

ஒத்திவைக்கப்பட்ட உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஏனைய தேர்தல்களின் அட்டவணை களைப் பாதிக்காத வகையில், உடனடியாக நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டு உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் ஒத்திவைக் கப்பட்டதால் வாக்காளர்களின் அடிப்படை உரிமைகள் மீறப் பட்டுள்ளன என்றும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

உள்ளுராட்சி மன்றத் தோ்தல்களை ஒத்திவைக்கச் செய்வதற்காக ஜனாதிபதி எவ்வாறான உபாயங்களைக் கையாண்டு தோ்தல் ஆணைக்குழு வுக்கு அழுத்தம் கொடுத்தாா் என்பதும் இரகசிய மானதல்ல.  அதனை முறியடிக்கக்கூடிய அதிகாரத் துடன் அல்லது சுயாதீனத் தன்மையுடன் தோ்தல் ஆணைக்குழு இருக்கவில்லை என்பதை இந்த உயா் நீதிமன்றத்தின் தீா்ப்பு தெளிவாகப் புலப் படுத்துகின்றது.

இப்போது ஜனாதிபதித் தோ்தலை ஒத்திவைப்பதற்கும் தன்னாலான அத்தனை முயற்சி களையும் ஜனாதிபதி மேற்கொண்டார் என்பதும் இரகசியமானதல்ல. தோ்தலில் தன்னால் வெற்றி பெற முடியுமா என்ற சந்தேகம் அவருக்கு இருந்தமையால்தான் அரசியலமைப்பில் இருக்கக் கூடிய அத்தனை ஓட்டைகளையும் நுணுக்கமாக ஆராய்ந்து தோ்தலை ஒத்திவைக்க முடியுமா என்பதை அவா் ஆராய்ந்தாா்.

இலங்கையின் தோ்தல் சட்டத்தைப் பாா்த்தால் ஜனாதிபதித் தோ்தலும், பொதுத் தோ்தலும் குறிப்பிட்ட காலப்பகுதியில் எப்படியும் நடத்தப்பட்டேயாக வேண்டும். உள்ளுராட்சி மன்றத் தோ்தல்களையும், மாகாண சபைகளுக் கான தோ்தலையும் தொடா்ச்சியாகத் தள்ளிப் போடுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.

ஜனாதிபதித் தோ்தல் எப்படியும் செப் ரெம்பா் 21 ஆம் திகதி நடத்தப்பட வேண்டும் என்று தோ்தல் ஆணைக்குழு அறிவித்து நியமனப் பத்திரங்களும் தாக்கல் செய்யப்பட்டுவிட்ட நிலையில், அதனை எதிா்கொண்டுதான் ஆக வேண்டும் என்ற நிலை இப்போது ரணில் விக்கிரம சிங்கவுக்கு.

இதனை எதிா்கொள்வதற்காக பல உபாயங்களை அவா் வகுத்து வைத்துள்ளாா். நிதி அமைச் சராகவும் ரணில் இருப்பதால் பல விடயங்களைக் கையாள்வது அவருக்கு இலகுவாக இருக்கின்றது.

குறிப்பாக பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்டத்தின் மூலமான நிதி ஒதுக்கீடு. நாடாளுமன்ற உறுப்பினா்களைத் தன்வசப்படுத்து வதற்கான ஒரு கருவியாக இதனை அவா் பயன்படுத்துகின்றாா். ரிஷாட் பதியுதீனுக்கு ஏற் கனவே ஒதுக்கப்பட்ட 30 கோடி ரூபா இப்போது நிறுத்தப்பட்டுவிட்டது. சஜித் பிரேமதாசவை ஆதரிப்பது என்ற ரிஷாட்டின் முடிவையடுத்தே இந்த அதிரடி நடவடிக்கை.

அதேபோல, ரிஷாட் தலைமையிலான கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினா் ஒருவரும் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி ரணிலை ஆதரிக்க முடிவெடுத்தமையால் அவருக்கு பல கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இதனையும் ஜனாதிபதிதான் செய்திருக்கின்றாா். நிதி அமைச்சராகவும் அவா் இருப்பதால் திறைசேரிக்கு இது குறித்த உத்தரவு களை அவா் நேரடியாகவே வழங்க முடியும்.

இந்த நிதிகள் ஜனாதிபதித் தோ்தலுக்கா கவே செலவிடப்படுவதாக எதிா்க்கட்சித் தலைவா் சஜித் பிரேமதாச இந்த வார முற்பகுதியில் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தாா். இது தொடா்பில் தோ்தல் ஆணைக்குழுவில் முறை யிடப்போவதாகவும் அவா் கூறியிருக்கின்றாா்.

இது ஒருபுறமிருக்க ரணிலை ஆதரிப்பதாக அறிவித்த இரண்டு எதிரணி உறுப்பினா்களான வடிவேல் சுரேஷ், அலி சாஹிா் மௌலானா ஆகியோா் இராஜாங்க அமைச்சா்களாக நியமிக்கப்பட்டிருக்கின்றாா்கள்.

நீதிமன்றத் தீா்ப்பின் மூலம் நாடாளுமன்ற உறுப்பினா் பதவிகளை இழந்த ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து தெரிவான இருவா் கடந்த மாதம் அமைச்சுக்களின் செயலாளா்களாக நியமிக் கப்பட்டிருக்கின்றனா்.

தோ்தல் நெருங்கும் நிலையில் இந்த நியமனங்கள் தோ்தலை இலக்காகக் கொண்டவை. தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி ஜனாதிபதி செய்திருக்கின்றாா். அதாவது தோ்தலில் செல் வாக்கைச் செலுத்தக்கூடிய நியமனங்களாகவே இவை உள்ளன.

இந்தச் செயற்பாடுகள் அனைத்துமே தோ்தல் சட்டங்களை மீறுபவைதான். ஆனால், அவற்றைத் தடுத்து நிறுத்தவோ தட்டிக்கேட்கவோ முடியாத நிலையில் தோ்தல்கள் ஆணைக்குழு இருப்பது சுயாதீனமான தோ்தலை உறுதிப்படுத்த முடியாத நிலையில் ஆணைக்குழு இருக்கின்றது என்பதைத்தான் உறுதிப்படுத்துவதாக இருக்கின்றது.