தேசபந்து தென்னகோனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை – சஜித் தரப்பு ஆதரவு

கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை அந்த பதவியிலிருந்து நீக்குவது தொடர்பான விசாரணை குழுவொன்றை நியமிப்பதற்கான யோசனை அடங்கிய ஆளுங்கட்சியின் பிரேரணை இன்று (25) பிற்பகல் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இதில் 115 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளதாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது. பிரதியமைச்சர்களான மஹிந்த ஜயசிங்க, எரங்க குணசேகர, ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களான கௌசல்யா ஆரியரத்ன மற்றும் உபுல் அபேவிக்ரம ஆகியோர் இந்தப் பிரேரணையை சபாநாயகரிடம் கையளித்தனர்.

இதேவேளை, தேசபந்து தென்னகோனுக்கு எதிராக ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களால் கொண்டுவரப்பட்டுள்ள அவநம்பிக்கை பிரேரணைக்கு ஐக்கிய மக்கள் சக்தி தமது ஆதரவை வழங்கும் என அதன் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

‘கடந்த அரசாங்கத்தின்போது ஐக்கிய மக்கள் சக்தி தேசபந்து தென்னகோனுக்கு எதிரான அவநம்பிக்கை பிரேரணையை கொண்டு வந்தது’.’அன்று அரசியலமைப்பு பேரவையில் அவருக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியே வாக்களித்தது’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசியலமைப்பை மீறியே தேசபந்து தென்னகோன் பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டார்.
‘இந்த அரசியலமைப்பை மீறிய நடவடிக்கைக்கு முன்னாள் ஜனாதிபதியைப் போலவே முன்னாள் சபாநாயகரும் பொறுப்புக் கூற வேண்டும்’ என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.எனவே, ‘இந்த அரசாங்கம் இந்த அவநம்பிக்கை பிரேரணையைக் கொண்டு வருவதில் மகிழ்ச்சியடைவதாகவும். இதற்கு ஐக்கிய மக்கள் சக்தி பூரண ஆதரவை வழங்கும்’ என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.