தென்னிலங்கை விஞ்ஞாபனங்கள் தமிழா்களுக்கு சொல்லும் செய்தி: அகிலன்

Who Is Reading The Electorate Right? Ranil, The Rajapaksas, Sajith Or  Anura? - Colombo Telegraph

தென்னிலங்கையின் ஜனாதிபதி வேட்பாளா்களின் தோ்தல் விஞ்ஞாபனங்கள் ஒவ்வொன்றாக வெளிவரத் தொடங்கியிருக்கின்றன. தமிழ்ப் பொது வேட்பாளா் ஒருவா் களமிறக்கப்பட்டிருப்பதை நியாயப்படுத்தும் வகையில்தான் இந்த விஞ்ஞாபனங்கள் அமைந்திருக்கின்றன. இந்த விஞ்ஞானங்களுக்காக காத்திருந்த தமிழரசுக் கட்சியின் சுமந்திரன் அணிக்கும் இது நெருக்கடியை கொடுப்பதாகவே இருக்கின்றது.

பிரதானமான ஜனாதிபதி வேட்பாளர்களான ஜனாதிபதி ரணில் விக்#கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தேசிய மக்கள் சக்தித் தலைவர் அநுரகுமார திசாநாயக்க ஆகியோரின் தேர்தல் விஞ்ஞாபனங்கள் இந்த வாரத்தில் வெளிவந்துள்ளன. மற்றொரு ஜனாதிபதி வேட்பாளரான நாமல் ராஜபக்ஷவின் தோ்தல் விஞ்ஞாபனம் அடுத்த வாரம் வெளிவரவுள்ளது.

விஞ்ஞாபனத்தை வெளியிட்ட எந்தவொரு வேட்பாளரும் வடக்கு, கிழக்கு இணைப்பு, சமஷ்டித் தீர்வு, மாகாணங்களுக்கான காணி, பொலிஸ் அதிகாரங்கள் தொடர்பில் எந்த உறுதிமொழியையும் வழங்கவில்லை.  நாமல் ராஜபக்ஷ தாம் அதிகாரப் பகிா்வுக்கும், வடக்கு கிழக்கு இணைப்புக்கும் எதிரானவா் என்பதை ஏற்கனவே உறுதிப்படுத்தியிருக்கின்றாா்.  ஆக, தமிழ் மக்களுடைய அரசியல் அபிலாஷைகளையிட்டு அவா்கள் யாரும் கவலைப்படவில்லை.

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளா் அநுரகுமார திசாநாயக்கவின் “வளமான நாடு  அழகான வாழ்க்கை” என்ற பெயரிலான தேர்தல் விஞ்ஞாபனம் ஸ்ரீ ஜயவர்தனபுர மொனார்க் இம்பிரியல் ஹோட்டலில் திங்கட்கிழமை வெளியிட்டு வைக்கப்பட்டது. அதில் வடக்கு, கிழக்கு தமிழ் மக்களுக்கான தேசிய மக்கள் சக்தியின் உறுதி மொழிகளாக அரசியலமைப்பு மறுசீரமைப்பு பணியை துரிதப்படுத்தி ஒரே நாட்டிற்குள் அனைத்து மக்களும் ஆட்சியில் தொடர்பு கொள்ளக்கூடியவாறு மொழி உரிமை உறுதிப்படுத்தப்படுவது போன்ற விடயங்களே முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளன.

ஒவ்வொரு உள்ளுராட்சி நிறுவனத்திற்கும் மாவட்டத்திற்கும் மற்றும் மாகாணத்திற்கும் அரசியல் மற்றும் நிர்வாக ரீதியில் அதிகார பகிர்வுடனான புதிய அரசியலமைப்பை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும். வடகிழக்கில் கடந்தகாலங்களில் இடம்பெற்ற படுகொலைகள் காணாமல் போகச்செய்தல் ஆட்கடத்தல்கள் குறித்து விசாரணைகளை மேற்கொண்டு நீதியை நிலைநாட்டவும் மற்றும் வடக்கு, கிழக்கு உள்ளிட்ட நாட்டின் சகல பிரதேசங்களிலும்மக்களது சிவில் உரிமைகளை உறுதிப்படுத்தும் வகையிலான சிவில் நிர்வாகத்தினை முறைமைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பவை மட்டுமே உள்ளடக்கப்பட்டிருந்தன.

அநுரகுமாராவின் தேர்தல் விஞ்ஞாபனம் இவ்வாறுதான் வரும் என்பது எதிா்பாா்க்கப்பட்ட ஒன்றுதான். சிங்களக் கடும் போக்காளா்களின் வாக்குகள்தான் அவா்களுக்கு முக்கியமானவை. தமிழா்களுக்கு உறுதிமொழிகளைக் கொடுத்து அதனை இழக்க அவா்கள் தயாரில்லை.

பிரதான இரு வேட்பாளர்களான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோரின் தேர்தல் விஞ்ஞாபனங்களில் தமிழ் மக்களுக்கு காத்திரமான விடயங்கள் உறுதிமொழிகளாக வழங்கப்படுமென எதிர்பார்த்திருந்தார்கள். தமது ஆதரவை எந்த வேட்பாளருக்கு வெளிப்படுத்துவது என்பது தொடர்பில் முடிவெடுக்க தமிழரசுக் கட்சியின் சுமந்திரன் அணியினா் இவ்விருவரின் தேர்தல் விஞ்ஞாபனங்களை எதிர்பார்த்திருந்த நிலையிலேயே இவ்விருவரினாலும் வெளியிடப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனங்களும் அவா்களுக்கு ஏமாற்றத்தையும் விசனத்தையும் ஏற்படுத்தியுள்ளன.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வியாழக்கிழமை கொழும்பு தாஜ்சமுத்திரா ஹோட்டலில் வைத்து வெளியிடப்பட்ட “ரணிலுடன் இலங்கைக்கு வெற்றிகரமான ஐந்து வருடங்கள்” என்ற தேர்தல் விஞ்ஞாபனத்தில் வடக்கு, கிழக்கு இணைப்பு, சமஷ்டித் தீர்வு, மாகாணங்களுக்கான காணி, பொலிஸ் அதிகாரங்கள் தொடர்பில் எந்த உறுதிமொழிகளும் வழங்கப்படவில்லை.

13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை நடைமுறைப்படுத்தல் தொடர்பாக 2024 இல் நாம் முன்வைத்த முன்மொழிவின் பிரகாரம் அரசியலமைப்பின் பிரகாரம் மாகாண சபைகளுக்கு அதிகாரங்கள் வழங்கப்படும், மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதி#காரங்கள் வழங்கப்படுவது தொடர்பான தீர்மானம் எடுக்கும் அதிகாரம் புதிய நாடாளுமன்றத்துக்கு வழங்கப்படும். உண்மையைக் கண்டறிதல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான ஆணைக்குழுச் சட்டம் நடை முறைப்படுத்தப்படும். காணாமற் போனவர்கள் தொடர்பான நவாஸ் ஆணைக் குழுவின் அறிக்கை நடைமுறைப்படுத்தப்படும்.  புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு சுயதொழில் ஆரம்பிப்பதற்கான நிதியுதவி வழங்கப்படும் என்பன போன்ற உறுதி மொழிகளே வழங்கப்பட்டுள்ளன.

அதேபோன்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசாவின் தேர்தல் விஞ்ஞாபனம் வியாழக்கிழமை கண்டியில் மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்க தேரர்களுக்கு கைளிக்கப்பட்ட பின்னர் கண்டி குயின்ஸ் ஹோட்டலில் நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பின் ஊடாக பொது மக்களுக்கு வெளியிட்டு வைக்கப்பட்டது.

“சகலருக்கும் வெற்றி” என்ற வெளியிடப்பட்ட அவரின் தேர்தல் விஞ்ஞாபனத்தில்

தமிழ் மக்களுக்கான வாக்குறுதிகளாக தற்போதைய அரசியல் முறையை ஒரே நாட்டுக்குள் 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் அடிப்படையில் அதிகபட்ச அதிகாரப் பகிர்வுடன் கூடிய நாடாளுமன்ற முறைமைக்கு மாற்றப்படும். புதிய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்படும் வரை, 13ஆவது திருத்தம் உட்பட தற்போதைய அரசியலமைப்பு முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும்.  அரசியலமைப்பு மூலம் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை ஜனாதிபதியினால் ஒருதலைப்பட்சமாக மீண்டும் பொறுப்பெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது என்பவையே வழங்கப்பட்டுள்ளன.

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரான நாம ராஜபக்ச ஏற்கனவே வடக்கு, கிழக்கு ஒருபோதும் இணைக்கப்படாது, காணி, பொலிஸ் அதிகாரங்கள் மாகாண சபைகளுக்கு ஒருபோதும் வழங்கப்படாது என தனது கன்னிப் பிரசார மேடையிலேயே அறிவித்து விட்டதனால், ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச ஆகியோரின் தேர்தல் விஞ்ஞாபனங்கள் தொடர்பில் தமிழ் மக்களும் தமிழ்க்  கட்சிகள் சிலவும் பெரும் எதிர்பார்ப்பை வைத்திருந்த நிலையிலேயே அவர்களும் ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளனர்.

ஜனாதிபதித் தோ்தலில் 39 வேட்பாளா்கள் போட்டியிடும் அதேவேளையில், நான்கு பிரதான வேட்பாளா்களும் களமிறங்கியிருக்கின்றாா்கள். இந்த நிலையில், தமிழ் மக்களுடைய வாக்குகளே தீா்மானிக்கும் சக்தியாக இருக்கும் என்றும் எதிா்பாா்க்கப்படுகின்றது. இந்தப் பின்னணியில்தான் பிரதான ஜனாதிபதி வேட்பாளா்களான ரணில், சஜித், அநுர ஆகியோா் வடக்கு, கிழக்குப் பகுதிகளுக்கு அதிகளவு விஜயங்களை கடந்த சில மாதங்களாக மேற்கொண்டிருந்தாா்கள். பல வாக்குறுதிகளையும் வழங்கியிருந்தாா்கள். தமிழ் மக்களுடைய எதிா்ப்பாா்ப்புக்கள் என்ன என்பதையும் பல்வேறு தரப்பினருடனான சந்திப்புக்களின் மூலமாக அவா்கள் அறிந்திருந்தாா்கள்.

தமிழரசுக் கட்சியின் சுமந்திரன் போன்றவா்கள் பிரதான வேட்பாளா்களின் விஞ்ஞானங்கள் வெளிவந்ததன் பின்னா்தான் தமது கட்சியின் முடிவு அறிவிக்கப்படும் என்று கூறிவந்தாா். ஆனால், தமிழ்ப் பொது வேட்பாளா் என்ற கருத்துக்கு ஆதரவு அதிகரித்து வரும் நிலையில், தமிழரசுக் கட்சியின் மாவட்டக் கிளைகள் ஒவ்வொன்றாக பொது வேட்பாளரை ஆதரிக்க முடிவெடுக்கின்றன. அவ்வாறான ஒரு நிலைப்பாட்டை எடுக்காவிட்டால், அடுத்து வரப்போகும் தோ்தல்களில் தமது நிலை எவ்வாறிருக்கும் என்ற அச்சம் அவா்களுக்கு உருவாகியிருக்கின்றது.  இந்த நிலையில் ரணில், சஜித், அநுர ஆகியோரின் விஞ்ஞானங்கள் தமிழ்ப் பொது வேட்பாளரை களமிறக்க எடுக்கப்பட்ட முடிவு மிகவும் சரியானது என்பதை உறுதப்படுத்தியிருக்கின்றது.