தென்னாபிரிக்காவில் தீவிபத்து – 80 இற்கு மேற்பட்டவர்கள் பலி

தென்னாபிரிக்காவின் மத்திய நகரமான ஜொகனஸ்பேர்க் பகுதியில் உள்ள ஐந்து மாடி கட்டிடத்தில் தீ பரவியதால் 80 இற்கு மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதுடன், 45 இற்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த கட்டிட தொகுதியில் பெருமளவான மக்கள் தங்கியிருந்ததால் அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்ற அதேசமயம் மீட்கப்பட்டவர்கள் அருகில் உள்ள வைத்தியசாலைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

கடந்த வியாழக்கிழமை (31) அதிகாலை 1.30 மணியளவில் தமக்கு தகவல் கிடைத்ததாகவும், அதனை தொடர்ந்து தீயணைப்பு படையினரும், மீட்பு குழுவினரும் அங்கு சென்றதாகவும் அவசரகால உதவிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த கட்டிடம் முன்னர் கைவிடப்பட்டிருந்தாலும் பெருமளவான மக்கள் அதில் தங்கியிருந்துள்ளனர். எனவே இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனவும், தீ விபத்துக்கான காரணம் தற்போதுவரை தெரியவில்லை எனவும் மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

மீட்கப்பட்ட சடலங்கள் அடையாளங்காண முடியாது இருப்பதாகவும், அதில் தங்கியிருந்தவர்கள் ஆவணங்கள் எதுவுமின்றி பதிவு செய்யப்படாத குடியேற்றவாசிகள் என்பதாலும் இறந்தவர்களை அடையாளம் காண்பது கடினம் என தென்னாபிரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.