தென்சீனக் கடல் விவகாரத்தில் முனைப்புக் காட்டும் உலக நாடுகள்

445 Views

அமெரிக்காவிற்கும் சீனாவிற்குமிடையே அண்மைக் காலமாக கருத்து மோதல்கள் அதிகரித்த வண்ணமே உள்ளன. தென் சீனக் கடலில் அமெரிக்கா தொடர்ந்து அத்துமீறி வருவதாக சீனா ஏற்கனவே குற்றம் சாட்டியிருந்தது.

இந்த விடயம் தொடர்பாக அமெரிக்க மாநிலச் செயலாளர் மைக் பொம்பியோ பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அந்தப் பேட்டியில் சீனாவின் குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் பொய் எனத் தெரிவித்துள்ளார். தென்சீனக் கடலில் சர்வதேச ஒப்பந்தத்தை மீறி சீன இராணுவம் பயிற்சி மேற்கொண்டு வருவதாக அமெரிக்கா முன்னர் குற்றம் சாட்டியிருந்தது.

இதேவேளை னெ்கொரியாவுடன் இணைந்து அமெரிக்கப் படைகள் தென்சீனக் கடலில் டாங்கர்கள், போர்க் கப்பல்களை நிறுத்தி பயிற்சி எடுத்து வருவதாக சீனா குற்றம் சாட்டியது. இவ்வாறாக பல ஆண்டுகளாகவே தென்சீனக் கடலில் பதற்றம் மிக்க பகுதியாகவே இருந்து வருகின்றது. உலகை அச்சுறுத்தும் கொரோனாவினால் இந்த விடயம் சற்று ஓய்ந்திருந்தாலும், தற்போது இது மீண்டும் தொடங்கியுள்ளது.

சீனா சர்வதேச ஒப்பந்தத்தை மீறி தனது இராணுவப் பயிற்சிக்காக தென் சீனக் கடலை பயன்படுத்தி வருவதை உலக நாடுகள் ஏற்றுக் கொண்டுள்ளன. அமெரிக்கா எப்போதுமே சர்வதேச கடல் ஒப்பந்தத்தை பின்பற்றி நடந்து கொள்ளும் தேசம். சீனா தனது அத்துமீறலின் விளைவை எதிர்கொள்ள வேண்டி வரும் என்று மைக் பொம்பியோ தெரிவித்துள்ளார்.

13 இலட்சம் சதுர கிலோமீற்றர் பரப்பளவைக் கொண்ட பிரமாண்டமான தென் சீனக் கடற்பரப்பு காலா காலமாக இராணுவ மற்றும் கடற்படைப் பயிற்சிப் பகுதியாக விளங்குகிறது.

தென் சீனக் கடலைச் சுற்றி பிலிப்பைன்ஸ், வியட்நாம், மலேசியா, இந்தோனேசியா, தாய்வான் ஆகிய நாடுகள் சூழ்ந்துள்ளன. இந்த நாடுகளுக்கும் தென்சீனக் கடலில் பங்கு உண்டு. இருந்தாலும் 100 ஆண்டுகளுக்கு எங்களுக்குத் தான் சொந்தம் என சீனா மட்டும் அந்தக் கடற்பரப்பை சொந்தம் கொண்டாடி வருகின்றது. அங்கு சீனா கனிம ஆராய்ச்சி, மீன்பிடி ஆகியவற்றை நடத்தி வருகின்றது.

தென்சீனக் கடலில் இருந்து நெடுந் தூரத்திலிருக்கும் அமெரிக்கா சம்பந்தமே இல்லாமல் அங்கு பிரச்சினை செய்து வருகின்றது என சீனா குற்றம் சாட்டியுள்ளது.

Leave a Reply