Tamil News
Home செய்திகள் தீ விபத்துக்குள்ளான கப்பலால் மீன்வளத்துக்கு பாதிப்பு- பேராசிரியர் நவரத்னராஜா

தீ விபத்துக்குள்ளான கப்பலால் மீன்வளத்துக்கு பாதிப்பு- பேராசிரியர் நவரத்னராஜா

கொழும்பு துறைமுகத்திற்கு வட மேற்று பகுதியில் 9.5 கடல் மைல் தொலைவில் நங்கூரமிட்ட எம்.வி எக்ஸ்பிரஸ் பேர்ல் என்ற கப்பலில் ஏற்பட்டுள்ள தீ பரவல் காரணமாக மீன்வளத்துறைக்கு பாதிப்பு ஏற்படுவதற்கு அதிக சாத்தியம் காணப்படுகின்றது.

கப்பலிலிருந்து கடலுக்குள் கலக்கப்பட்டுள்ள பொருட்களினால் ஏற்படும் பாதிப்புக்களை குறுகிய காலத்திற்குள் மதிப்பீடு செய்ய முடியாது. ஆகவே கடலில் மிதந்து வரும் பொருட்களை தொடுவதை பொது மக்கள் முழுமையாக தவிர்த்துக் கொள்ள வேண்டும் என தேசிய நீர்வள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் நவரத்னராஜா குறிப்பிட்டுள்ளார்.

தீவிபத்திற்குள்ளாகியுள்ள குறித்த கப்பல் வெடித்து சிதறும் அபாயத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், சரக்கு கப்பலினால் கடல்வாழ் உயிரினங்களுக்கும், மீன்வளத்துறைக்கும் ஏற்படும் பாதிப்பு குறித்து வினவிய போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கொழும்பு துறைமுகத்தின் வட மேல் திசையில் 9.5 கடற்பரப்பில் தீப்பற்றி எரியும் கப்பலின் கழிவுகள் மற்றும் வெடித்து சிதறிய கொள்கலகள் நீர்க் கொழும்பு கடற்பகுதியில் கரையொதுங்கியுள்ளன.

கப்பலில் இருந்து வெளியேறிய எரிபொருட்கள் கடலில் கலந்துள்ளமையினால்  ஏற்படக்கூடிய அபாயம் மற்றும் கடலுணவுகளை உட்கொள்வதினால் ஏற்படும் பாதிப்பு குறித்து தற்போது வரை கிடைக்கப் பெற்றள்ள சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு பரிசோதனைகளை முன்னெடுத்துள்ளோம்.

கப்பலில் இருந்து வெளியாகியுள்ள பிளாஷ்டிக் உற்பத்தி மூலம் பொருட்கள் பெருமளவில் நீர்கொழும்பு பிரதேசத்தின் கடற்பரப்பில் கரையொதிங்கியுள்ளன. இம் மூலப்  பொருட்களை அடிப்படையாகக் கொண்டு அய்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இந்த பிளாஸ்டிக் மூலம் பொருட்களை மீன்கள் உண்பதால் அவை இறக்க நேரிடும். இக் கடற்பரப்பில் மீன்கள் இறந்து மிதக்கின்றனவா என்பது குறித்து கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

ஆகவே தற்போதைய நிலைமைக்கு அமைய சமுத்திரத்திற்கும், கடற் வாழ் உயிரினங்களுக்கும் ஏற்படும் பாதிப்பு குறித்து மதிப்பீடு செய்ய முடியாது. இருப்பினும் மீன்வளத்துறைக்கு பாதிப்பு ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகளவில் காணப்படுகின்றது.

நன்றி -வீரகேசரி

Exit mobile version