திருத்தப்பட்ட பிரேரணை இன்று வெளியாகின்றது – ஆசிய நாடுகளின் ஆதரவில் சிறிலங்கா நம்பிக்கை

723 Views

பிரிட்டன் தலைமையிலான இணைத் தலைமை நாடுகளால் தயாரிக்கப்பட்ட சிறிலங்கா குறித்த திருத்தப்பட்ட பிரேரணை ஐ.நா. மனித உரிமைகள் பேரவை உறுப்பு நாடுகளுக்கு இன்று வெள்ளிக்கிழமை வழங்கப்படும் எனத் தெரிகின்றது.

அனைத்துத் தரப்பினராலும் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பில் முழு அளவிலான விசாரணை நடத்தப்பட்டு பொறுப்க் கூறப்பட வேண்டும் என இதன்மூலம் வலியுறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தப் பிரேரணை இன்று வெளியிடப்படவுள்ள அதேவேளையில், ஆசிய பிராந்திய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு ஆதரவளிக்கும் என தான் நம்புவதாக வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்திருக்கின்றார்.

இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தான் ஆகிய நாடுகள் இவ்விடயத்தில் தமது நிலைப்பாடு என்ன என்பதையிட்டு இது வரையில் வெளிப்படுத்தவில்லை எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். சிறிலங்காவுக்கு எதிரான நிலைப்பாட்டையும் அவை கொண்டிருக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

“பிரேரணையின் இறுதி வடிவம் வெளிவரும் வரையில் நாம் பொறுத்திருக்க வேண்டும். பிரேரணையில் என்ன சொல்லப்பட்டிருக்கின்றது என்பதன் அடிப்படையிலேயே அவற்றின் நிலைப்பாடு இருக்கும்” எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

ஆசிய நாடுகள் பலவற்றின் பிரதிநிதிகளை தான் சந்தித்து இது தொடர்பாகப் பேசியிருப்பதாகவும் தெரிவித்த அமைச்சர் தினேஷ் குணவர்த்தன, அவர்கள் யாருமே தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தவில்லை எனவும் குறிப்பிட்டார்.

Leave a Reply