Tamil News  
Home செய்திகள் திருகோணமலை: வட்டவன் படுகொலை நினைவேந்தல்

திருகோணமலை: வட்டவன் படுகொலை நினைவேந்தல்

திருகோணமலை மாவட்டத்தின் வெருகல் பிரதேசத்தில் அமைந்துள்ள வட்டவன் படுகொலை நினைவேந்தல் பகுதியில், 1985 ஆம் ஆண்டு இடம்பெற்ற வட்டவன் கூட்டுப் படுகொலையின் 41ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு புதன்கிழமை  (03) பொதுமக்களின் பங்கேற்புடன் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.

1985 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 3ஆம் திகதி, வெருகல் பிரதேசத்திற்குள் நுழைந்த ஆயுதம் தாங்கிய குழுக்கள் மற்றும் பாதுகாப்புப் படையினருடன் தொடர்புடையதாகக் கூறப்படும் தாக்குதல்களின் போது, ஆரிப்பு, பூநகர், பூமரத்தடிச்சேனை, மாவடிச்சேனை, முத்துச்சேனை, வாழைத்தோட்டம் மற்றும் வட்டவன் உள்ளிட்ட பல கிராமங்கள் தாக்குதலுக்கு உள்ளாகி தீக்கிரையாக்கப்பட்டதாக உயிர் பிழைத்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தத் தாக்குதல்களின் காரணமாக அச்சமடைந்த மக்கள் தங்களது வீடுகளை விட்டு காடுகளுக்குள் தஞ்சம் அடைந்தனர். எனினும், வட்டவன் கிராமத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சிலரும் அவர்களது உறவினர்களும் தப்பிச் செல்ல முடியாத சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.

அவர்கள் பாதுகாப்பிற்காக ஒரு வீட்டிற்குள் தஞ்சமடைந்திருந்த நிலையில், அங்கு நுழைந்த தாக்குதல்காரர்களால் வெட்டியும் சுட்டும் கொலை செய்யப்பட்டதுடன் பின்னர் உடல்கள் எரிக்கப்பட்டதாக அப்பகுதி மக்கள் நினைவுகூர்ந்தனர். இச்சம்பவத்தில் ஒரு கர்ப்பிணித் தாய், இரண்டு சிறுவர்கள், மூன்று பெண்கள் மற்றும் நான்கு ஆண்கள் உட்பட மொத்தம் 10 பேர் உயிரிழந்தனர்.

படுகொலையில் உயிரிழந்தவர்களின் பெயர்கள் வருமாறு:

சுபத்திரை

கார்த்திகேசு

கார்த்திகேசு கனகம்மா

ரங்கராசா அமராவதி

ரங்கராசா ராசா

ரங்கராசா சரஸ்வதி

கேதுபாலுப்பிள்ளை

அன்னக்கிளி

சின்னையா கிட்ணப்பிள்ளை

இராசையர் (ஓடாவியார்)

நினைவேந்தல் நிகழ்வில் உயிரிழந்தவர்களுக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன், அவர்களின் நினைவாக மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது. மேலும், போரினால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நீதி மற்றும் உண்மையை நிலைநாட்ட வேண்டியதன் அவசியத்தையும் கலந்துகொண்டவர்கள் வலியுறுத்தினர்.

 

Exit mobile version