திருகோணமலையில் சோலார் திட்டத்தால் பறி போகும் வயல் நிலங்கள்..! – பா.அரியநேத்திரன்

2025,ஜனவரி,03 திருகோணமலை முத்து நகர் விவசாயக்காணிகளை இந்திய சோலார் திட் டத்திற்கு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருகோணமலை பிரதேச செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த முத்து நகர் கிராமத்தில் பல வருட காலமாக தாம் இரு போக விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் விவசாய காணிகளும் காணப் படுவதாகவும் இருப்பினும் குறித்த காணிகளை துறைமுக அதிகாரசபைக்கு சொந்தமான காணி என வர்த்தமானியின் அடிப்படையில் கையகப்படுத்திய அரச இயந்திரம் தற்போது அதனை இந்தியா சோலார் திட்டத்திற்கு வளங்க திட்ட மிட்டிருப்பதாக அறியக்கிடைத்திருப்பதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

குறித்த காணிகள் விடுவிக்கப்படவேண்டும் அங்கு காணப்படும் குளங்கள் புனரமைத்து தரப்படவேண்டும் எனும் கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான ரோஷன் அக்மீமன மற்றும் சன்முகம் குகதாசன் ஆகியோரி டம்வழங்கிவைக்கப்பட்டும் இருந்தன.

திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகத்துக்குட்பட்ட முத்து நகர் பகுதி யானது பூர்வீகமாக தமிழ் விவசாயிகள் காலம் காலமாக இரண்டுபோக விவசாய செய்கையில் நெற்செய்கையில் ஈடுபடும் வளம்மிக்க வயல் நிலங்களாக உள்ளன.

குறித்த முத்து நகர் பகுதியில் ஐந்து சிறு குளங்களை கொண்ட 1600ஏக்கருக்கும் மேற்பட்ட நிலப்பரப்பில் 1200 விவசாயிகள் விவசாய செய்கையில் ஈடுபட்டு வருகின்றனர் 50ஏக்கருக்கும் மேற்பட்ட மேட்டு நிலப் பயிர்களுக்கும் இதில் மேற்கொள்ளப்பட்டு சுமார் 5000 குடும்பங்கள் பயனடைகின்றனர்.

குறிப்பாக வடகிழக்கில் சிறுபான்மை சமூகங்களின் விவசாய , குடியிருப்பு காணிகள் கபளீகரம் செய்யப்படுகிறது இதனடிப்படையில் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவு, திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலாளர் பிரிவில் நில ஆக்கிரமிப்பு தொடர்வதால் மக்கள் கொந்தளிக்கும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.

தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கள் நாட்டை பொறுப்பேற்றதன் பின்பும் கூட தீர்வு இல்லாமல் காணப்படுகிறது. திரு கோணமலை மாவட்டத்தில் உள்ள திரியாய், முத்து நகர், சம்பூர் உள்ளிட்ட தனியார் விவசாய மற்றும் குடியிருப்பு காணிகளை தொல் பொருள் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக் களம், இலங்கை துறை முக அதிகார சபை  உள்ளிட்ட பல அரச திணைக்களங்கள் பௌத்த பிக்குகள் போன் றோர் அபிவிருத்தி என்ற போர்வையிலும் புனித பூமி என்ற போர்வையிலும் அடாத்தாக நிலங்களை அபகரித்துள்ளனர்.

கடந்த வருடத்தில் (2024) வாரி சௌபாக்கியா திட்டத்தின் கீழ் அரசாங்கம் குளங்களை திருத்த நிதி ஒதுக்கீடு செய்தது தகரவெட்டுவான் குளம் 80 வீதம் திருத்தப்பட்ட நிலையில் இலங்கை துறை முக அதிகார சபையால் நிறுத்தப்பட்டது இதே போல் அம்மன் குளத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதிக்கு திருத்தம் செய்ய அனுமதியை மறுத்து தடுத்து நிறுத்தியதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர் .

சோலார் பவர் திட்டத்தை எமது விவசாய பகுதிக்குள் நடை முறைப்படுத்தினால் குளங்கள் மூடப்படலாம் எப்படி அபிவிருத்தி செய்வது நாட்டுக்கு வருடந்தோரும் பெரும்போகத்தில் 1600 ஏக்கர் X70 புசல் = 112000 நெல்லை உற்பத்தி செய்து தரும் எமது வாழ்வாதார ஜீவனோபாய வயல் நிலங்கள் பறிக்கப்படுமாக இருந்தால் விவசாயிகளான இத் திட்டத்தை எதிர்த்து போராடுவதன் மூலம் நாம் உயிரை விடவும் ஆயத்தமாக உள்ளோம் என்பதே  விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளதால் இந்த சோலர் திட்டம் நிறுத்தப்படவேண்டும் அல்லது அந்த இடத்தை விட்டு வேறு மாற்று இடத்தில் இதனை முன்எடுப்பதே உகந்த நடைமுறையாகும்.

இதுபோன்று 2011, ல் திருகோணமலை, சம்பூர்பகுதியில் அனல் மின் நிலையம் அமைக்க இந்தியா இலங்கை அரசாங்கங்களிடையே 2011 ஆம் ஆண்டில் ஒப்பந்தம் கைச்சாத்தானது.

எனினும், சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் என மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தியதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது வயல் நிலங்களில் சோலார் பொருத்தும் திட்டம் ஒரு பக்கம் உள்ள நிலை யில் அடுத்த ஆக்கிரமிப்பாக குச்சவெளி, வெருகல் பகுதிகளில் எவ்வித அறிவித்தலும் இன்றி இரவோடு இரவாக பெயர்ப்பலகையை காட்சிப் படுத்தி  இந்த காணிகளில் தொல்லியல் சின்னங்கள் எவையும் இல்லாத நிலையில் தொல்லியல் திணைக்களம் இந்த காணிகளை கையகப்படுத்த முயற்சிப்பதாகவும் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

பிரதேச சபைக்குச் சொந்தமான 1985ஆம் ஆண்டுக்கு முன்னர் கடைத்தொகுதிகளுடன் காணப்பட்ட பகுதியும் மற்றுமொரு இடத்தில் நெற் களஞ்சியமாக காணப்பட்ட பழைய கட்டிடங்களுடன் கூடிய பகுதியையும் தொல் லியலுக் குரிய இடமாக கையகப்படுத்த நட வடிக்கை எடுத்து வருவதாகவும் இதனால் தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனவும் இதை அனுமதிக்க முடியாது எனவும் மக்கள் தெரிவிக் கின்றனர்.

குறித்த சட்ட விரோதமான செயற்பாட் டிற்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு குச்சவெளி பிரதேச செயலாளரிடம் மகஜர் கையளிக்கப்பட்டதுடன் மாவட்ட செயலாளர், கிழக்கு மாகாண ஆளுநர் உள்ளிட்ட அரச திணைக் களங்கள் மற்றும் அரசியல்வாதிகளிடமும் இது தொடர்பான மகஜர்களை கையளிக்கவுள்ளதாகவும் மக்கள் தெரிவித்தனர்.

இதையிட்டு கருத்து தெரிவித்த குச்சவெளி பிரதேச செயலாளர் இது தொடர்பாக தொல்லியல் திணைக்கள திருகோணமலை மாவட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடியதாகவும் இது தொல்லியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்தி னுடைய அதிகாரத்திற்கு உட்பட்டது எனவும் அவர்களுடன் கலந்தாலோசித்து தீர்வினை பெற்றுத்தர முயற்சிப்பதாகவும் தெரிவித்தார்.

திரியாய் பகுதியிலும் விவசாய காணிகளை அப்பகுதி விகாராதிபதி ஒருவரான அரிசி மலை பௌத்த பிக்கு அடாவடியாக தனியார் காணி களுக்குள் அத்து மீறி நிலத்தை உழுது நெற் செய்கைக்காக தயார் படுத்தியதனால் மக்கள் போராட்டம் அங்கு எழுந்தது இது தொடர்பில் உரிய தரப்புக்களுக்கு அறிவித்த போதும் எது வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.திருகோணமலை மாவட்டத்தில் தமிழ் பிரதேசங்களை இலக்கு வைத்து தொடர் நில அபகரிப்பால் சிறுபான்மை சமூகங்களை சேர்ந்த தமிழ் முஸ்லீம் மக்களே பாதிக்கப்படுகின்றனர். நெற் செய்கையை வாழ்வாதாரமாக நம்பி வாழும் விவசாயிகள் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டுள் ளனர் .

ஜே ஆர் ஜெயவர்தன தொடக்கம் சந்திரிகா, ரணில், மகிந்த, மைத்திரி, கோட்டா, ரணில், அநுர என எந்த அரசாங்கம் மாறி மாறி ஆட்சியை பொறுப்பேற்றாலும் நில அபகரிப்புக்கள் சொடர்ந்து கொண்டே உள்ளது . நில ஆக்கிரமிப்பை தடுக்க தற்போதைய அரசு புதிய அரசாங்கம் புதியதொரு பொறி முறை களை உருவாக்க வேண்டும் என்பதே மக்களது எதிர்பார்ப்பாகும்.

ஆனால் அநுர ஆட்சி நான்கு மாதங்களை எட்டும் நிலையில் அவர்களால் ஏற்கனவே கூறிய எந்த நல்லெண்ணமும் செய்கையில் காட்டப் படவில்லை. கடந்த ஆண்டு டிசம்பரில் இந்தியாப் பயணமும் இந்த ஆண்டு ஜனவரியில் சீனாப் பயணமும் என புதிய ஜனாதிபதி தமது பயணத் தொடர்புகளை முன்எடுப்பதை மட்டுமே காண முடிகிறது.

ஜனாதிபதி தேர்தலும், பொதுத்தேர்தல் இரண்டிலும் தேசிய மக்கள் சக்தி தேர்தல் விஞ்ஞாபனத்தில் பல விடயங்களை கூறியிருந்தும் எதிர்பார்த்த எதையுமே இதுவரை செய்யவில்லை என்ற  குறை மக்கள் மத்தியில் உள்ளது.மாறாக வடகிழக்கில் தமிழ் நில ஆக்கிரமிப்பு தொடர் வதையே காணலாம்.