Tamil News
Home செய்திகள் திலீபனை கொச்சைப்படுத்தும் சுமந்திரனின் செயல்; கே.வி.தவராசா கடும் கண்டனம்

திலீபனை கொச்சைப்படுத்தும் சுமந்திரனின் செயல்; கே.வி.தவராசா கடும் கண்டனம்

“தீலிபனின் நினைவேந்தலைப் பொறுத்த வரையிலே தானாகவே நினைவேந்தலை செய்ய வேண்டும் என்ற உணர்வு பொது மக்களிடையே காணப்படவில்லை என திரு.சுமந்திரன் சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் வழங்கிய நேர்காணலில் கூறியிருந்தார். அவரது இந்த கருத்தானது இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரின் முயற்சியையும் அவரது அழைப்பை ஏற்று பங்குபற்றிய அனைத்து 10 தேசிய கட்சித் தலைவர்களினதும் உணர்வு பூர்வமான பங்களிப்பை கொச்சைப்படுத்தியுள்ளதுடன் தமிழ் மக்களின் உணர்வலைகளை தொடர்ந்தும் புண்படுத்தும் செயலாகவே அமைந்துள்ளது” தமிழரசுக் கட்சியின் மத்திய குழு உறுப்பினரும் பிரபல சட்டத்தரணியுமான கே.வி.தவராசா தெரிவித்திருக்கின்றார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவின் வேண்டுகோளை அடுத்து, தமிழ் மக்களுக்கு எதிரான அடக்கு முறைகளை அரசு நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி ஒன்றிணைந்த தமிழ் தேசிய கட்சிகள் ஏற்பாடு செய்த அடையாள உணவு தவிர்ப்பு போராட்டம் கடந்த சனிக்கிழமை சாவகச்சேரி சிவன் ஆலயத்தில் நடைபெற்றது.

தீலிபனின் நினைவேந்தலைப் பொறுத்த வரையிலே தானாகவே நினைவேந்தலை செய்ய வேண்டும் என்ற உணர்வு பொது மக்களிடையே காணப்படவில்லை என திரு.சுமந்திரன் சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் வழங்கிய நேர்காணலில் கூறியிருந்தார்.

அவரது இந்த கருத்தானது இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரின் முயற்சியையும் அவரது அழைப்பை ஏற்று பங்குபற்றிய அனைத்து 10 தேசிய கட்சித் தலைவர்களினதும் உணர்வு பூர்வமான பங்களிப்பை கொச்சைப்படுத்தியுள்ளதுடன் தமிழ் மக்களின் உணர்வலைகளை தொடர்ந்தும் புண்படுத்தும் செயலாகவே அமைந்துள்ளது.

தமிழரசுக் கட்சியில் பொறுப்பு வாய்ந்த பதவியில் இருக்கும் சுமந்திரன், ‘தமிழ் மக்களுக்கு திலீபனின் நினைவேந்தலை செய்யவேண்டும் என்ற உணர்வு பெரிதாக இல்லை” எனக்கூறியமையை நான் வன்மையாக கண்டிக்கின்றேன். தமிழ் மக்களின் மீது கடுமையான அடக்கு முறையை ஏவி கோவில்களில் பூசை செய்வதையே கூட தடுத்துள்ள நிலையிலும் மக்கள் உண்ணாவிரதத்திலும் பூரண ஹர்த்தால் அனுஷ்டிப்பதையும் வெற்றிகரமாக சாதித்துள்ளனர்.

இந்நிலையில் அஹிம்சை வழியில் போராடிய அஹிம்சாவாதியை நினைவு கூர்வது தமிழ் மக்களின் தார்மீக உரிமையும் கடமையும் என்பது தெளிவாக புலப்பட்டுள்ளது.

அது மட்டுமல்லாது தமிழ் தலைவர்கள் ஒன்றிணைவதில் அவதானம் தேவை என அறிக்கை வெளியிட்ட சுமந்திரன் தமிழ் தலைமைகளின் ஒற்றுமையை விரும்புகிறாரா?. இல்லையா? அல்லது தமிழர்கள் பலமடைவது சுமந்திரனின் இருப்பில் ஏதாவது பின்னடைவு ஏற்படும் என கருதுகிறாரா?. சுமந்திரன் யாருடைய நிகழ்ச்சி நிரலின் கீழ் செயல்படுகின்றார்?. சுமந்திரன் வடக்கு மக்களின் பிரதிநிதியா அல்லது தென்னிலங்கை மக்களின் பிரதிநிதியா?

தியாகி திலீபனின் நினைவு நாட்களை உணர்வு பூர்வமாக அனுசரிக்கும் புனித வாரத்தில் அதனைக் கொச்சைப்படுத்தும் வேண்டும் என்ற அடிப்படையிலேயே சுமந்திரன் வெளிப்படுத்தியுள்ள கருத்தானது இந்த காலப் பகுதியில் வெளியிடப்பட்டிருப்பது மிகவும் வேதனைகுரிய விடயம்.

திலீபனின் நினைவு நாட்களில், திலீபன் தொடர்பில் ஆறுதலான வார்த்தைகளை கூறவிட்டாலும் சிங்கள ஆட்சியாளர்களே உச்சரிக்காத வார்த்தையான நினைவேந்தலை செய்ய வேண்டும் என்ற பெரிய உணர்வு மக்களிடையே காணப்படவில்லை என சுமந்திரன் கூறுவதை எவராலும் ஏற்கவோ, நியாயப்படுத்தவோ முடியாது.

அரச அடக்கு முறைக்கு எதிராக தமிழ் மக்களின் உணர்வலைகளை வெளிப்படுத்த முன்வர வேண்டிய கடப்பாடு தமிழரசுக் கட்சியில் பொறுப்பான பதவி வகிக்கும் சுமந்திரனிற்கு இருக்கின்றது. எனினும் மக்களாகவே முன் வந்து தமது ஜனநாயக உரிமையை நிலை நிறுத்திய நடவடிக்கையை கொச்சைப்படுத்தியது என்பது தமிழினத்திற்கு செய்யும் துரோகமாகும்.

தமிழ் தேசியக் கருத்துக்களை உச்சரிக்கும் தகுதி சுமந்திரனுக்கு இல்லை அல்லது அவரது தென்னிலங்கை அரசியல் உறவுகளிற்கு இடைஞ்சலாக இருக்கும் எனக் கருதினால், அவர் தமிழ் தேசிய அரசியலில் இருந்து ஒதுங்கி தென்னிலங்கை அரசியலுடன் ஒன்றிணைந்து செயற்படுவது சாலச் சிறந்தது எனவும் இலங்கை தமிழரசுக் கட்சியின் கொழும்பு கிளைத்தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான கே.வி.தவராசா வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version