Tamil News
Home செய்திகள் தாயகத்தில் பாடசாலைகள் இழுத்து மூடும் அவலநிலை-வீடியோ இணைப்பு

தாயகத்தில் பாடசாலைகள் இழுத்து மூடும் அவலநிலை-வீடியோ இணைப்பு

இழுத்து மூடும் துர்ப்பாக்கிய நிலையில் வவுனியா சின்னத்தம்பனை அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை.

வவுனியா மாவட்டம் வெங்கலச் செட்டிகுளம் பிரதேச செயலகர் பிரிவுக்குற்பட்ட சின்னத்தம்பனை அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை 1957 ஆண்டு மக்களின் முயற்சியில் ஓலைக் கொட்டில்களில் ஆரம்பிக்கப்பட்டது.

1960.10.29 திகதி சின்னத்தம்பனை பாடசாலையை இலங்கை அரசு பொறுப்பேற்று சின்னத்தம்பனை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையாக இயங்கிவந்தது.

1984ஆம் ஆண்டு நாட்டில் இடம் பெற்ற வன்செயல் காரணமாக சின்னத்தம்பனை மக்கள் கிராமத்திலிருந்து இடம் பெயர்ந்தனர் அப்போது பாடசாலை மூடப்பட்டது. பின்னர் 1990 ஆண்டு கிராமத்தில் மக்கள் மீளக்குடியமர்ந்து பாடசாலை சிறப்பாக இயங்கிவந்தது. தோடர்ந்து நாட்டில் இடம் பெற்ற போர் காரணமாக மீண்டும் பாடசாலை மூடப்பட்டு மக்கள் இடம்பெயர்ந்தனர்.
2001ஆம் ஆண்டு சின்னத்தம்பனை கிராம மக்கள் மீண்டும் கிராமத்தில் மீள்குடியேறினர் அதன் பின் 2002.01.04 ஆம் திகதி ஓலைக் கொட்டில்கள் அமைத்து கொட்டில் வகுப்பறையில் சுமார் 40 தொடக்கம் 50 மாணவர்கள் கல்வி கற்று வந்தனர்.

2013.12.15ம் திகதி எஸ். மரியநாயகம் என்பவர் பாடசாலை அதிபராக நியமனம்பெற்று 75 மாணர்களுடன் பாடசாலையில் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் சிறப்பாக நடைபெற்று வந்தது.
இவ்வாறு வரலாற்றுச் சிறப்பு மிக்க சின்னத்தம்பனை பாடசாலையில் இன்று இரண்டு மாணவர்கள் மாத்திரமே கல்வி கற்றுவரும் துர்ப்பாக்கிய நிலையில் பாடசாலை இழுத்து மூடும் அபாய நிலையில் இருப்பதாக கிராம மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இதேவேளை கடந்த காலங்களில் செட்டிகுளம் பெரியபுளியாளங்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையும் 2010 ஆண்டு காண்டைக்குளம் திருநாவுக்கரசு வித்தியாலயமும் மாணவர்கள் வருகை குறைவால் இழுத்து மூடப்பட்ட சம்பவவும் பதிவாகியுள்ளது.

சின்னத்தம்பனை கிராமத்தில் அடிப்படை வசதிகள் எதுவுமே இல்லாத காலத்தில் சிறப்பாக இயங்கி வந்த பாடசாலை தற்போது நிரந்தர வகுப்பறைக்கட்டடங்கள் மலசலகூட வசதி, விளையாட்டு மைதானம், சிறுவர் பூங்கா, என அனைத்து அடிப்படை வசதிகளுடன் கூடியிருந்தும் மாணவர்கள் வருகை மிகையாகக் குறைந்துள்ளமையால் கல்விக்கூடம் மூடப்படும் நிலையில் உள்ளது.
அதிபர் உற்பட மூன்று ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கவேண்டும் என்ற ஆவலுடன் அதிகாலையில் எழுந்து பாடசாலைக்கு வருகைதந்தால் இரண்டு மாணவிகள் மத்திரமே பாடசாலைக்கு வருகின்றனர்.

இந்நிலையில் ஒவ்வொரு நாளும் புதிதாக மாணவர்கள் பாடசாலையில் இணைவார்கள் அவர்களுக்கு சிறந்த கல்வியை வழங்கலாம் என்ற எதிர்பார்ப்புடன் பாடசாலைக்கு வரும் ஆசிரியர்கள் ஒவ்வொரு நாளும் ஏமாற்றத்துடனேயே வீடு திரும்புகின்றனர்.

வகுப்பறையை சுத்தம்செய்தல், பூக்கண்டுகளுக்கு நீர் ஊற்றுதல், முற்றம் கூட்டுதல் உற்பட அனைத்து வேலைகளையும் ஆசிரியர்களும் அதிபரும் இணைந்தே செய்கின்றனர்.

சின்னத்தம்பனை கிராமத்தில் பாடசாலையில் ஏன் பெற்றோர்கள் அக்கறை செலுத்தவில்லை.?
கிராமத்தல் இயங்கும் ஆரம்ப பாடசாலையில் கல்விகற்கும் நிலையில் இருக்கும் சுமார் 40 தொடக்கம் 50 மாணவர்கள் கிராமத்தில் இருக்கும் பாடசாலையில் கல்வி கற்காமல் ஏன் இரண்டு கிலோமீற்றர் தொலைவில் இருக்கும் பாடசாலைக்குச் செல்கின்றார்கள்?

சுpன்னத்தம்பனை பாடசாலை உயிர்ப்புடன் மீள் எழுற்சி பெற்று கிராமத்தின் கல்வி வளர்ச்சிப்பாதையை நோக்கி கொண்டு செல்லவேண்டிய கிராமசேவகர், அபிவிருத்தி உத்தியோகத்தர்;, சமுர்த்தி உத்தியோகத்தர் கிராம அபிவிருத்திச் சங்கத்தினர, மாதர்; அபிவிருத்திச் சங்கத்தினர் ஏன் மௌனமாக இருக்கின்றார்கள்.?

கிராமத்தின் அழியாத கல்விச் சொத்தை கட்டிக்காப்பாற்றவேண்டிய கிராம மக்கள் ஏன் பாடசாலையில் தமது வெறுப்பைக் காட்டுகின்றனர் என பல கேள்விகள் எழுகின்றது.

Exit mobile version