தாக்குதலில் பெருமளவான இராணுவத்தினர் பலி – நைகர் நாட்டின் இராணுவத்தளபதி நீக்கம்

இரு பெரும் தாக்குதல்களைத் தொடர்ந்து நைகர் நாட்டின் இரராணுவத் தளபதியை பதவியில் இருந்து நீக்கியுள்ளது அரசு.

தொடர்ச்சியாக இடம்பெற்ற இரு தாக்குதல்களில் 160 இராணுவத்தினர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்தே இராணுவத்தளபதி ஜெனரல் அகமட் மொகமீட் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. இந்த தாக்குதல்களில் பெருமளவானோர் காயமடைந்திருந்தனர். புதிய இராணுவத்தளபதியாக பிரிகேடியர் ஜெனரல் சலிபோ மோடி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் முன்னர் ஜேர்மனியில் உள்ள நையீர் நாட்டின் தூதரகத்தில் படைத்துறை ஆலோசகராக பணியாற்றியவர்.

கடந்த இரண்டு வருடங்களாக இராணுவத்தளபதியாக அகமீட் பதவி வகித்தபோதே தாக்குதல்களிக் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஜ.எஸ்.ஜ.எல் மற்றும் அல்கைடா ஆகிய ஆயுதக்குழுக்களே இந்த தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றன.

கடந்த 9 ஆம் நாள் இடம்பெற்ற தாக்குதலில் 89 இராணுவத்தினரும், 77 ஆயுதக்குழுவினரும் கொல்லப்பட்டுள்ளனர். இந்த தாக்குதல்களில் பிரான்ஸ் மற்றும் அமெரிக்கப் படையினரும் நையீர் நாட்டுப் படையினருடன் இணைந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

கடந்த மாதம் இடம்பெற்ற தாக்குதலிலும் 71 இராணுவத்தினர் கொல்லப்பட்டிருந்தனர். ஆயுதக் குழுவினர் மாலி, பெர்கியா போசோ ஆகிய இடங்களில் இருந்து வந்து தாக்குதல் நடத்துவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த வருடம் இடம்பெற்ற தாக்குதல்களில் 400 பேர் இங்கு கொல்லப்பட்டிருந்தனர். நையீர் நாட்டில் 2014 ஆம் ஆண்டில் இருந்து ஜி-5 எனப்படும் ஐந்து நாடுகளின் படையினர் இணைந்து நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர்.

2012 ஆம் ஆண்டில் இருந்து இடம்பெறும் தாக்குதல்களில் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். பிரான்ஸ் நாடு தனது 4500 படையினரை அங்கு நிறுத்தியுள்ளதுடன், மேலும் 220 படையினரை அங்கு அனுப்பத் திட்டமிட்டுள்ளது.