தளரும் மைத்திரியின் பிடி பலமடைகிறாரா ரணில்? – சத்தியன்

“ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் குறித்த விசாரணைகளை முன்னெடுக்கும் பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் செயற்பாடுகளை உடனடியாக நிறுத்தாவிட்டால், அமைச்சரவையைக் கூட்டப் போவதில்லை” என அறிவித்து, அந்த விடயத்தில் உறுதியாக இருந்து கடந்த வாரம் அமைச்சரவையையும் கூட்டாத சனாதிபதி மைத்திரி, இப்போது தன்னுடைய இறுக்கமான நிலைப்பாட்டைத் தளர்த்தியிருக்கின்றார்.

வரும் செவ்வாய்க்கிழமை 18 ஆம் திகதி அமைச்சரவை வழமைபோல கூடும் என அமைச்சர்களுக்கு அறிவிக்கப்பட்டிருக்கின்றது. மைத்திரி இப்படி தடாலடியாக சரணடைந்தமைக்கு என்ன காரணம் என ஆராயப்புகுந்த போது சுவாரசியமான பல தகவல்கள் கிடைத்தன.

அதிரடியாக முடிவுகளை எடுப்பதும், செயற்படுத்துவதும் சனாதிபதி மைத்திரியின் வழமை. அது சாத்தியமா? அரசியலமைப்பில் அதற்கு இடமிருக்கின்றதா? என்பதையிட்டு பின்னர்தான் அவர் பார்க்கின்றார். அல்லது பின்னர் யாராவது எச்சரிக்கும் போது விழித்தெழுந்து தடுமாறுகின்றார்.

கடந்த வாரத்தில் அதிரடியாக இரண்டு செயற்பாடுகளை மைத்திரி மேற்கொண்டார். அதில் முதலாவதுதான் அமைச்சரவையைக் கூட்டாமல் விட்டது. இரண்டாவது, இராஜினாமாச் செய்த முஸ்லிம் அமைச்சர்களின் இடத்துக்கு பிரதமர் ரணிலின் ஆலோசனையோ பரிந்துரையோ இன்றி தம்பாட்டில் பதில் அமைச்சர்களை நியமித்தமை.

பதில் அமைச்சர்களை நியமித்தமை அரசமைப்பை மீறிய தவறான நடவடிக்கை எனச் சுட்டிக்காட்டி சனாதிபதிக்கு ஒரு கடிதம் எழுதினார் ரணில். இந்த விடயத்தை ஒட்டிப் பிரதமர் உயர் நீதிமன்றுக்குப் போகலாம் என்ற பேச்சு எழுந்ததும், பிரதமரைச் சமாளிக்கும் விதத்தில், நிறுத்தப்பட்ட அமைச்சரவையைக் கூட்டுவதாக மைத்திரி அறிவித்திருக்கின்றார். ஆனால், அதற்கு மற்றொரு காரணமும் இருக்கின்றது.

மூன்று முஸ்லிம் அமைச்சர்கள் இராஜினாமாச் செய்தமையை அடுத்து ஏற்பட்ட வெற்றிடங்களுக்கு ராஜித சேனாரத்ன, மலிக் சமரவிக்கிரம, ரஞ்சித் மத்துமபண்டார ஆகியோரின் பெயர்களை ரணில் விக்கிரமசிங்க பரிந்துரைத்திருந்தார். ஆனால் அதை கணக்கில் எடுக்காமல், சம்பந்தப்பட்ட அமைச்சுகளுக்குப் பொறுப்பான பிரதி மற்றும் இராசாங்க அமைச்சர்களை அந்தந்த அமைச்சுகளுக்கான பதில் அமைச்சர்களாக நியமித்திருக்கின்றார் சனாதிபதி.

இந்த நடவடிக்கை அரசமைப்பின் 19 ஆவது திருத்தத்துக்கு முற்றிலும் மாறான செயற்பாடு என்பதைத் தெளிவுபடுத்தி சனாதிபதிக்கு ஒரு கடிதத்தை அனுப்பியிருக்கின்றார் ரணில். அரசமைப்பின் 19 ஆவது திருத்தப்படி பிரதமரின் பரிந்துரையின் பேரில்தான் அமைச்சர்களை சனாதிபதி நியமிக்க முடியும். இது முதலாவது விடயம்.

இதனைவிட மற்றும் ஒரு விடயத்தையும் ரணிலால் சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றது. ஒரு விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சர் இராஜினாமாச் செய்து, அந்த அமைச்சு வெற்றிடமாக இருக்கும் போது, அந்த இடத்துக்கு ஒரு பதில் அமைச்சரை நியமிக்க முடியாது. அமைச்சர் ஒருவர் வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொண்டிருந்தால், அல்லது கடமையைச் செய்ய முடியாமல் இருந்தால் மட்டுமே அவரின் இடத்துக்கு ஒரு பதில் அமைச்சர் நியமிக்கப்படலாம். அதற்கு மாறாக, ஓர் அமைச்சுக்கு அமைச்சரே நியமிக்கப்படாமல் இருக்கும் நிலையில் அந்த இடத்துக்கு ஒரு பதில் அமைச்சர் நியமிக்கப்பட முடியாது.

ஆக, அரசியலமைப்பைத் தொடர்சியாக மீறிவரும் சனாதிபதி, இப்போது பதில் அமைச்சர்களை நியமிப்பதிலும் அரசியலமைப்பின் இரண்டு விடயங்களை மீறியிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்த விடயங்களையும் தமது கடிதத்தில் சுட்டிக்காட்டியிருக்கின்றார் ரணில். சனாதிபதியின் இத்தகைய அரசமைப்பு மீறல் நடவடிக்கைக்கு உயர் நீதிமன்றம் மூலமே நிவாரணம் கோரிப் பெற வேண்டியநிலையில் உள்ளார் ரணில்.  பிரதி செவ்வாய்க்கிழமை தோறும் நடைபெறும் அமைச்சரவைக் கூட்டம் கடந்த வாரம் கூட்டப்படவில்லை. இதற்கு ரணில் உள்ளிட்ட அமைச்சர்கள் பலரும் கடும் கண்டனங்களைத் தெரிவித்திருந்தனர்.

அடுத்த வாரமும் அமைச்சரவை கூட்டப்படாவிட்டால் பாராளுமன்றத்தில் எதிர்வரும் 18ஆம் திகதி விசேட பிரேரணையொன்றை முன்வைத்துவிட்டு தனக்கிருக்கும் அதிகாரங்களுடன் தற்றுணிவாக அமைச்சரவையைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூட்டுவதற்கு நடவடிக்கைகளை எடுக்கத் தயாராகி வருகின்றார் எனத் தகவல்களும் வெளியாகியிருந்தன. இது தொடர்பில் தனக்கு நெருக்கமானவர்களுடன் ரணில் ஆராய்ந்திருந்தார்.

இவ்வாறான ஒரு நிலை ஏற்பட்டால், சனாதிபதியாக இருந்தாலும் மைத்திரி  தனிமைப்படுத்தப்படும் நிலை ஏற்படும். இது குறித்து மைத்திரியின் ஆலோசகர்கள் அவருக்கு அவசர ஆலோசனை வழங்கியிருக்கின்றார்கள். அமைச்சரவையைக் கூட்டாவிட்டால் உங்களுக்குத்தான் ஆபத்து என அவர்கள் கூறியிருக்கின்றார்கள். இதனையடுத்தே அமைச்சரவைக் கூட்டம் 18 ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்குமாறு தனது செயலாளருக்கு உத்தரவிட்டுவிட்டு தஜிகிஸ்தானுக்கு பறந்தார் மைத்திரி.

இந்தப் பின்னணியில்தான் எதிர்வரும் 18 ஆம் திகதி அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது என அமைச்சரவையில் உள்ள சகல அமைச்சர்களுக்கும் சனாதிபதி செயலகத் தரப்பால் வியாழக்கிழமையே அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் சனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் ஏற்பட்ட இரண்டு பிரச்சினைகளில் ஒன்றுக்கு இவ்வாறு தீர்வு காணப்பட்டுவிட்டது.

அமைச்சர்கள் நியமனம் தொடர்பில் என்ன நடைபெறுகின்றது என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். செவ்வாய்கிழமை நடைபெறப்போகும் அடுத்த அமைச்சரவைக் கூட்டத்திலும், பாராளுமன்ற கூட்டத் தொடரிலும் இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தும் என நிச்சயமாக எதிர்பார்க்கலாம்.