Home ஆய்வுகள் தலைவர் பிரபாகரனுடன்… கொளத்தூர் மணி

தலைவர் பிரபாகரனுடன்… கொளத்தூர் மணி

எந்த ஒரு மனிதராக இருந்தாலும், அவரை முதலில் சந்திக்கின்ற போது  ஏற்படுகின்ற  மதிப்பு, காலப்போக்கில் அவரின் குறைகளைக்   கண்ட பின்   குறைந்து கொண்டே வரும்.

ஆனால் தலைவர்  பிரபாகரன் மிகவும் மாறுபட்டவர், தலைவர்  ஆகட்டும், தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் ஆகட்டும் நாம் சந்திக்கின்ற ஒவ்வொரு சந்திப்பிலும் அவர்கள் மீதான மதிப்புக் கூடிக்கொண்டே போனது. எந்த நேரத்திலும் ஏற்கனவே இருந்த மதிப்பு ஒரு அங்குலம் அளவும் குறையவில்லை என்பது முதல் சிறப்பாகும்.

தலைவர் பிரபாகரன் தன்னுடைய இயக்கப் போராளிகள் மீது  கொண்டிருந்த அளவு கடந்த பாசம் குறித்து நான் நேரடியாக கண்டுகொண்ட சிலவற்றை   உங்களுடனும் பகிர்ந்து கொள்கிறேன்.

சிறப்புத் தளபதி லெப். கேணல் விக்ரர் அவர்களின் 32 ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று! | எரிமலை

  • லெப். கேணல் விக்டர், தாயகத்தில் நடந்த ஒரு தாக்குதல் சம்பவத்தில் வீரமரணம் அடைந்து விடுகின்றார். அவருடைய இறுதி நிழ்வு தொடர்பான ஒரு காணொளி தலைவருக்கு அனுப்பப்பட்டிருந்த போது, நான் தலைவரைச் சந்திக்கச் சென்றிருந்தேன். அப்போது விக்டரின் இறுதி நிகழ்வுக் காணொளி வந்திருப்பதைக் கூறி “பார்க்கலாமா” என்று என்னிடம் கேட்டார். நானும் பார்க்கலாம் என்று கூறியதும்.  அதற்கான ஒழுங்கு செய்யப்பட்டது. நாம் இருவரும் ஒரு இரும்புக் கட்டிலில் அமர்ந்திருந்தோம். அந்த மாவீரரின் இறுதி நிகழ்வுக் காணொளி பார்வைக்கு தயாரானது.

எப்பொழுதும் தலைவருடன் பாதுகாப்புக்காக போராளிகள் இருப்பர். வீட்டினுள் இருக்கும் போது வாயிலிலோ, அல்லது சாளரத்தின் அருகிலோ அவர்கள் நின்றிருப்பர். அன்றும் இரு போராளிகள்   சாளரத்தின் அருகில் நின்றிருந்தனர்.

விக்டரின் நினைவுகளைத் தாங்கிய காணொலி நகர்ந்து கொண்டிருந்தது. சோகத்தின் உச்சத்தில் இருந்தது தலைவரின் முகம். திடீரென சாளரத்தின் அருகே பாதுகாப்புக்கு  நின்றிருந்த போராளிகளைப் பார்த்து “நான் துப்பாக்கிக் குண்டு பட்டு செத்தாலும் பரவாயில்ல, காத்தில்லாம சாகக் கூடாது. காத்தைத் தடுக்காம உள்ள வந்து முன்னுக்கு இருங்கோ” என்றார். அந்தக் காணொளி, விக்டரின் இறுதி ஊர்வலத்தையும், பழைய நினைவுகளையும், காட்சிகளையும் விபரித்துக் கொண்டிருந்தது.  தலைவரின் கண்களை  நீர்  மூடி நின்றது. என்னால் அதை நன்றாகவே  உணர முடிந்தது. ஏனெனில், நான் அவருக்கு மிக அருகில் அமர்ந்திருந்தேன். ஆனால் தன்னுடைய இவ்வாறான உணர்வுளைப் போராளிகள் பார்த்துவிடக் கூடாது என்பதற்காக அவர்களை நகைச்சுவையாக அழைத்து தனக்கு முன்னால் அமர வைத்துக் கொண்டார்.

அந்த காணொளி நிறைவுபெறும் வரையில் அவர் மிகுந்த வேதனையில் தோய்ந்துபோய் இருந்ததை என்னால் இன்றளவிலும் மறக்க முடியவில்லை.

  • அதேபோல் மற்றொரு சம்பவமாக போராளி லிங்கனை நினைவுகூர முடியும், அவர் தலைவர் பிரபாகரனின் மெய்க் காவலராக இருந்தவர். பின்னர் அவர் சென்னையில் இருந்து தாயகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

அவர் தாயகம் செல்லுகின்ற போது அவருக்கு விருந்து ஒன்று கொடுத்து  அனுப்பி வைக்க முடிவு செய்திருந்தார் தலைவர்.  அன்றும் நான் தலைவருடன் இருந்தேன். தலைவருக்கு மிகவும் விருப்பமான ஒரு உணவு விடுதிக்கு அனைவரும் சென்றோம். அங்கு உணவருந்திய பின்பு, லிங்கன் தாயகத்திற்கு புறப்பட்டுச் சென்றார்.

அப்போது தாயகத்தில் ரெலோ இயக்கத்தின் தலைவர் சிறீ சபாரத்தினம் குழுவினர், புலிகள் இயக்கத்தின் கிழக்கு மாகாண தலைவராக இருந்த அருணா, கடலில் ஒரு தாக்குதலில் இறந்து விட்டார் என்ற செய்தியை கூறி, சபாரத்தினத்தின் சொந்த ஊரான கல்வியங்காட்டில், நினைவுத் தட்டிகளும் முழு அடைப்பும் நடத்தியிருந்தனர். ஒரு விதத்தில் அருணா, சபாரத்தினத்திற்கு தம்பி உறவானவர் தான்.

இந்த சூழலில் முன்னதாக மரணம் அடைந்த ரெலோ அமைப்பு தோழர்களின் தட்டிகளுக்கு உரிய மரியாதையை மக்கள் செலுத்தவில்லை. முழு அடைப்பு நடத்தவில்லை.  ஆனால் விடுதலைப் புலிகள் அமைப்புக்கு அவ்வளவு மரியாதையை மக்கள் கொடுக்கின்றனர் என்று சினம் கொண்ட சபாரத்தினத்தின் உறுப்பினர்கள், அருணாவுக்காக வைக்கப்பட்டிருந்த தட்டிகளை அடித்து உடைத்தனர். இதையடுத்து மீண்டும் நினைவுத் தட்டிகள் அமைத்து அதற்குப் பாதுகாப்பாக போராளிகளை நியமிக்கின்றனர். ஆனால் அந்த   புலி உறுப்பினர்கள் அழைத்துச் செல்லப்பட்டு  தாக்கப்படுகின்றனர். இது குறித்து தெரிந்து கொள்ள சென்ற மூத்த போராளி பசீர் காக்கா அவமானப்படுத்தப்பட்டு  அங்கிருந்து வெளியேற்றப்படுகின்றார்.

இந்தச் சம்பவத்தின் தொடர்ச்சியாக லிங்கம் சம்பவ இடத்திற்கு சென்ற போது, அவருடைய கண்ணிலே துப்பாக்கியை வைத்து  சபாரத்தினத்தின் உறுப்பினர்கள் சுட்டுக்கொல்கின்றனர்.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து சபாரத்தினத்தின் மீதான சினம் புலிகளுக்கு வலுக்கின்றது. ரெலோ இயக்கம் தடைசெய்யப்படுவதாக அறிவிக்கப்படுகின்றது. தப்பிச்சென்ற சபாரத்தினம் துரத்தி செல்லப்பட்டு சுட்டுக் கொல்லப்படுகின்றார்.

லிங்கம் நிகழ்வுக்குச் சில மாதங்களுக்குப் பின்னர், மற்றொரு போராளியை தாயகத்திற்கு அனுப்பி வைக்கும் நிகழ்வில் நானும் இருக்கிறேன். அதே உணவகம். விருந்து நடக்கின்றது. “இங்கிருந்து தான் லிங்கம் புறப்பட்டுப் போனான் அண்ண” என தலைவர்  கனத்த நெஞ்சுடன் கூறுகிறார். அந்தச் சம்பவம் பல நாட்களுக்கு முன் நடந்திருந்தாலும், அந்த உணவு விடுதிக்கு வந்தவுடனே அவருக்கு அந்தப் போராளியின் நினைவு வந்து அவரை எந்த அளவுக்கு வாட்டியது என்பதை அருகில் இருந்து உணர்ந்தவன் நான்.

இது சிறு சம்பவங்கள் தான். தலைவர் பிரபாகரன் ஒவ்வொரு போராளிகள் மீதும் தனிப்பட்ட அக்கறை, அன்பு உள்ளவர் என்பது அவருடன் இருந்தவர்களுக்கு நன்றாகத் தெரியும்.

முன்னாள் தமிழக முதல்வர் எம்.ஜி. ராமச்சந்திரனுக்கும் விடுதலைப்புலிகளுக்குமான உறவு.

தொடக்கத்தில் ஈழத்தில் உருவான எல்லா இயக்கங்களுக்கும் ஆதரவு தெரிவித்து வந்த எம்.ஜி.ஆர், பின் விடுதலைப்புலிகளை மட்டும் ஆதரிக்கத் தொடங்குகிறார். எம்.ஜி.ஆருக்கும் தலைவருக்குமான  நட்புப் பற்றி நான் இங்கு கட்டாயம் குறிப்பிட வேண்டும்.  1984ஆம் ஆண்டு இறுதிப் பகுதியில் மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடு சென்று 1985ஆம் ஆண்டு நடுப்பகுதியில் மீண்டும் தமிழகம் வந்திருந்தார் எம்.ஜி.ஆர். அப்போதெல்லாம் எம்.ஜி.ஆருக்கு மூளை குழம்பி விட்டது என்று பலரும் பேச ஆரம்பித்து விட்டார்கள். நான் அதை தலைவரிடம் சொல்லி எம்.ஜி.ஆர் மருத்துவத்துக்குப் பின்னால் எப்படியிருக்கிறார், அவர் மனநிலை எவ்வாறு உள்ளதென்று கேட்டேன்.   அதற்கு அவர்,   அவர் நல்ல தெளிவாக இருக்கிறார் என்று கூறி, ஒரு சம்பவத்தைச் சொன்னார்.

வெளிநாட்டில் இருந்து ஆயுதம் கொண்டு வருவதற்கான உதவியை எம்.ஜி.ஆரிடம் தான்  தலைவர் கேட்டிருக்கிறார். அதன்படி அந்த ஆயுதங்களை பாதுகாப்பாக புலிகள் கையில் கிடைப்பதற்கான ஏற்பாட்டை எம்.ஜி.ஆர் செய்திருக்கிறார். ஆனால் திடீரென உடல்நிலை மீண்டும் மோசம் அடைய, அவர் வெளிநாடு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது. பின் சிகிச்சை முடிந்து திரும்பி வந்த பின்னால், தலைவர் சென்று அவரைச் சந்திக்கின்றார்.

அந்தச் சந்திப்புப் பற்றி தலைவர் கூறும் போது, தலைவரை யாரும் படங்கூட எடுக்கவில்லையாம். உடனே தன்னுடைய உதவியாளரை அழைத்து அவரை யார் என்று சொல் என்றாராம், அந்நேரம் அவரால் சுத்தமாகப் பேச முடியாத நிலையில் இருந்திருக்கின்றார்  எம்.ஜி.ஆர்.

இதையடுத்து உதவியாளர் தலைவரைக் காட்டி இவர்தான் தலைவர் பிரபாகரன் என்று சொன்னதும், நிறைய பேர் படங்களை  எடுத்துள்ளனர். அந்த படங்கள்தான்   இந்தியா டுடே (India Today ) மூலம் முதன் முதலாக வெளியுலகுக்கு தலைவரின் படங்கள் வந்தது. அதற்கு முன்னால் வந்தது எல்லாம் நம்முடைய நாட்காட்டியில் வெளியிடப்பட்டவை.

அந்தவ் சந்திப்பின்போது, தன்னுடைய உதவியாளரையும் வெளியில் அனுப்பிவிட்டு அந்த அறையின் கதவை தானே தாழ்பாள் போட்டுவிட்டு, துப்பாக்கிகள் எல்லாம் வந்துவிட்டதா?  என்று சைகையின் வழியாக கேட்டிருக்கிறார் எம்.ஜி.ஆர். தலைவரும் வந்து விட்டது என கூறியிருக்கிறார்.

நான் மருத்துவமனையில் படுத்திருந்த போது, எனது மூளைக்குள் அதுதான் சுழன்று கொண்டிருந்தது என்று கூறியதோடு, பாதுகாப்பாக உங்களிடம் ஆயுதங்கள் வந்து சேர்ந்தது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும்,   எம்.ஜி.ஆர்.தெரிவித்திருக்கிறார்.

இந்த செய்தியை  நினைவு படுத்தி எம்.ஜி.ஆர் இப்போதும் மிகத் தெளிவாக இருக்கிறார் என்றார் தலைவர்.

  • 1987ஆம் ஆண்டு தலைவர் தாயகம் சென்று விட்டார். அப்போது ராஜீவ் காந்தியிடம் புலிகள் அமைப்புக்கு ஆயுதம் வழங்குமாறு எம்.ஜி.ஆர் கேட்கிறார். ஆனால் பிரபாகரனை இங்கு அழைத்து வாருங்கள், நான் பேசிவிட்டு ஆயுதம் தருகின்றேன் என்கிறார் ராஜீவ். இல்லை நீங்கள் ஆயுதத்தைக் கொடுங்கள் நான் பிரபாகரனை அழைத்து வருகிறேன் என எம்.ஜி.ஆர் மீண்டும் கூறுகிறார். இவ்வாறு இருவரும் திரும்பத் திரும்ப ஒரே நிலையில் நிற்கின்றனர்.

உடனே அங்கிருந்து  மன வருத்தத்தோடு எழுந்து வந்துவிடுகிறார் எம்.ஜி.ஆர். அப்போது பிரதமரை சந்திப்பதற்காக நாள் கேட்டு அன்டன் பாலசிங்கம்  வந்து தங்கியிருக்கிறார். அவரையும் தனி விமானத்தில் அழைத்துக் கெண்டு சென்னைக்கு வந்து விடுகின்றார் எம்.ஜி.ஆர்.

அன்றைய நாள் சட்ட மன்றத்திற்குச் சென்று  நாலரைக் கோடி ரூபாய், ஈழத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் புனர்வாழ்வுக்காக விடுதலைப்புலிகளுக்கும், ஈரோஸ் அமைப்புக்கும் வழங்கப்படும் என்றும் புலிகளுக்கு மூன்றரைக் கோடியும், ஈரோஸ் அமைப்புக்கு ஒரு கோடியும் என்று   அறிவிக்கின்றார் எம்.ஜி.ஆர்.

ஆனால் அது வெளிவுறவுக் கொள்கையில் சிக்கலை ஏற்படுத்தும் என்று கருதிய இந்திய அரசு அதிகாரிகள், உடனடியாக வந்து எம்.ஜி.ஆரை  சந்திக்கின்றனர்.

அப்பொழுது புலிகளுக்கும் ஈரோசுக்கும் காசோலை வழங்கப்பட்டு விட்டது என்று சொல்கிறார் எம்.ஜி.ஆர். ஆனால் காசோலை மீளப்பெறப்படுகின்றது. இருந்தும் அதே பணத்தொகையை புலிகளுக்கு கொடுத்தனுப்புகின்றார் எம்.ஜி.ஆர். அந்தளவுக்கு புலிகள் மீதும் தலைவர் பிரபாகரன் மீதும் அதிக மதிப்பும் அன்பும் கொண்டவராக இருந்தார்.

1987ஆம் ஆண்டு  இந்திய – இலங்கை ஒப்பந்தம் செய்யப்படுகின்றது. அந்த ஒப்பந்தம் புலிகளும் விரும்பாத ஒன்று, புலிகள் விரும்பாததால் எம்.ஜி. ஆரும் ஏற்காத ஒன்று.

இந்த ஒப்பந்தத்தை ஆதரிக்கின்ற வகையில், கடற்கரையில் ராஜீவ் காந்தியும் கலந்து கொள்கின்ற ஒரு கூட்டம் நடத்த ஒழுங்கு செய்யப்படுகின்றது. ஆனால் இந்தக் கூட்டத்தில் கலந்துவிடக் கூடாது என்ற நோக்கோடு மருத்துவ சிகிச்சைக்காக முன்னதாகவே எம்.ஜி.ஆர்  அமெரிக்கா செல்லத் தயாராகின்றார். இருந்தும் அவரை அமெரிக்கா செல்லவிடாது தடுகின்றனர். இருந்து அந்த கூட்டத்தில் கலந்து கொண்டுவிட்டு பின் சிகிச்சைக்கு செல்லுமாறு வற்புறுத்தப்படுகின்றார். அவரும் வேறு வழியில்லாமல் அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்கின்றார்.

அந்தக் கூட்டம் முடிந்து அடுத்த நாள்,  அரசியலில் அவருக்கு எதிர் நிலையில் இருந்த திராவிடக் கழகத்தின் தலைவர் ஐயா வீரமணி அவர்களை  ஒரு உளவுத் துறை கண்காணிப்பாளரை அனுப்பி  உடனடியாக சந்திக்க வேண்டும் என சொல்லி அழைத்து வாருங்கள் என அனுப்புகிறார் எம்.ஜி.ஆர்.

ஆனால் திரு வீரமணி அவர்களோ, தயக்கம் காட்டுகிறார். நான் ஏன் எம்.ஜி.ஆர் அவர்களை சந்திக்க வேண்டும். அவரைச் சந்திக்க வேண்டுமென்றால், மணிக்கணக்கில் காத்துக் கொண்டிருக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். ஒரு வேளை  நம்மை அழைத்து அவமதித்து விடுவாரோ என்று அவருக்கு ஒரு தயக்கம் இருந்தது.

ஏற்கனவே   மணியம்மையார் அவர்கள் ஒரு நிகழ்ச்சிக்கு அரசால்  அழைக்கப்பட்டு, அந்நிகழ்வில் அவர் மனம் நோகும்படியான ஒரு செயல் நடந்திருந்தது.

இருந்தாலும் கூறுகின்றார், நான் வந்தால் ஒரு 5 நிமிடம்தான் இருப்பேன். சந்திக்க முடியவில்லை என்றால் திரும்பி வந்துவிடுவேன். நான் மட்டும் தனியாக வரமாட்டேன் இன்னொருவரை அழைத்துக்கொண்டுதான் வருவேன் என்று ஐயா பழநெடுமாறனையும் அழைத்துக் கொண்டு செல்கின்றார்.

அவர் எண்ணியது போலவே முதலமைச்சர் அறைக்கு முன்னால் சில அமைச்சர்கள் காத்துக்கொண்டு இருக்கின்றனர். அப்போது, உங்களை அடுத்த அறையில் அமருமாறு முதலமைச்சர் கூறினார். அவர் இப்போ வந்துவிடுவார்  என்று கூறிய காவல்துறையைச் சேர்ந்த ஒருவர், அந்த அறைக்கு அவர்களை அழைத்துச் செல்கிறார் .

அந்த அறைக்குள் நுழையும் போது, ஏற்கனவே அந்த அறையில் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் அவர்களுக்காக காத்துக்கொண்டு இருப்பதை அப்பொழுதுதான் இவர்கள் இருவரும் காண்கின்றனர்.

இவர்களைக் கண்ட எம்.ஜி.ஆர் உடனே எழுந்து வந்து கட்டித்தழுவி,  நீங்கள் வந்ததில் மகிழ்ச்சி, அதுவும் நான் உங்களை மட்டும் எதிர்பார்த்தேன். ஆனாலும் திரு நெடுமாறன் வந்ததும் மகிழ்ச்சி என்று வரவேற்று அமர வைத்துப் பேச ஆரம்பிக்கின்றார்.

அப்போது ஒரு செய்தி அவர்களோடு பகிர்ந்து கொள்கிறார். நான் நேற்று மத்திய அரசினுடைய நிர்ப்பந்தத்தின் காரணமாகத்தான் இந்திய – இலங்கை ஒப்பந்த ஆதரவு பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டேன். எனக்கு இதில் விருப்பமில்லை. ஆனாலும் கலந்து கொள்ள வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டதனால் கலந்து கொள்ள நேரிட்டது.

நான் இப்போது சிகிச்சைக்காக அமெரிக்கா போகிறேன். உயிரோடு திரும்பி வருவேனோ இல்லையோ தெரியாது. நான் எதுவோ இந்த ஒப்பந்த்துக்கு ஆதரவு கொடுத்த மாதிரி தம்பி (அப்போது தலைவர் பிரபாகரன் அவர்களை, அவரது நட்பில் இருந்த அனைவரும் தம்பி என்றே குறிப்பிடுவது வழக்கம்) நினைத்து விடக்கூடாது. தம்பியிடம் சொல்லுங்கள், நான் ஒப்பந்தத்துக்கு எதிரானவன் என்று கூறுங்கள் என கூறுகின்றார்.

ஒரு முதலமைச்சர் ஒரு மக்கள் கூட்டத்தின் பெரும் தலைவராக இருந்தவர், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால், தலைவர் பிரபாகரன் உள்ளத்தில் தம் மீதான ஒரு தவறான கருத்து உருவாகிவிடுமோ என்ற அச்சத்தின் காரணமாக, தான் உயிரோடு வருவேனோ இல்லையோ, நான் இறந்து விட்டாலும் கூட தலைவர் பிரபாகரன் மனதில் ஒரு அவப்பெயரோடு இறந்துவிடக் கூடாது என்ற எண்ணத்தோடு திரு வீரமணி அவர்களை அழைத்துச் சொல்லத்தக்க அளவில், எம்.ஜி.ஆர் அவர்களுக்கு தலைவர் பிரபாகரன் மீது அளவுகடந்த மரியாதையும், அன்பும் இருந்தது என்பது இன்று என் நினைவில் நிலைத்து நிற்கின்றது.

Exit mobile version