தயாராகியுள்ள தேர்தல் களம் தமிழ் மக்களின் தீர்ப்பு என்ன? -அகிலன்

PHOTO 2024 09 18 17 16 56 e1726722308176 தயாராகியுள்ள தேர்தல் களம் தமிழ் மக்களின் தீர்ப்பு என்ன? -அகிலன்

ஜனாதிபதி தேர்தலுக்கான பரப்புரைகள் – பேரணிகள் புதன்கிழமை நள்ளிரவுடன் முடிவுக்கு வந்துள்ளன. சனிக்கிழமை புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் நடைபெற இருக்கின்றது. 38 வேட்பாளர்கள் களத்தில் இருந்தாலும், போட்டி மூன்று பேருக்கு இடையில் தான். தமிழ் பொது வேட்பாளர் ஒருவ ரும் களமிறக்கப்பட்டு இருப்பதால் தமிழ் வாக்குகளில் எத்தனை வீதம் தமக்கு கிடைக்கும் என்பது பிரதான வேட்பாளர் கள் மூவரினதும் பிரச்சினை.

தமிழ் வாக்குகள் தமக்கு இல்லையென்றால், தமது வெற்றியை உறுதிப் படுத்த முடியாது என்பதும் அவா்களுக்குத் தெரியும்.  சஜித் பிரேமதாசாவுக்கு தமது ஆதரவை வழங்குவது என்று தமிழரசு கட்சி இறுதி நேரத்தில் முடிவெடுத்திருக்கிறது. ஆனால், இந்த முடிவு தமிழ் வாக்குகளை எந்தளவுக்கு சஜித்துக்குப் பெற்றுக்கொடுக்கும் என்பது முக்கியமான கேள்வி. சுமந்திரன் சொன்னதற்காக தமிழா்கள் சஜித்துக்கு வாக்களிப்பாா்கள் என்று யாரும் நம்பவில்லை.

சுமந்திரனின் அதிரடியான முடிவு தமிழர சுக் கட்சிக்குள் பாரிய பிளவுகளை ஏற்படுத்தி இருக்கின்றது. அதேவேளை இந்த தீர்மானத்தை எடுப்பதில் பிரதான பங்கை வகித்திருந்த சுமந்திரன் கூட சஜித்தின் வெற்றியில் எந்த அளவுக்கு நம்பிக்கை வைத்திருப்பார் என்பதும் கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது.

ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், தமிழ் மக்களின் அதிக அளவு ஆதரவு ரணில் விக்கிரமசிங்காவுக்குத் தான் இருக்கின்றது என்று சுமந்திரன் தெரிவித்திருக்கின்றார். அதே வேளையில் அநுர குமார திசநாயக்க வெற்றி பெறுவதுதான் தன்னுடைய விருப்பம் என்றும் சுமந்திரன் கூறியிருக்கின்றாா்.

ஆனால், இந்த இரண்டு பேரையும் தவிர மற்றொருவருக்கு ஆதரவளிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை தமிழரசு கட்சி எடுப்பதில் முனைப்பாக இருந்து செயற்பட்டவரும் இதே சுமந்திரன் தான். அந்த வகையில் சுமந்திரன் இந்த முடிவை எடுப்பதற்கு காரணமாக என்ன இருந்துள்ளது என்ற கேள்வி பலமாக எழுப்பப் படுகின்றது.

தமிழரசு கட்சிக்குள் இருந்து கூட. இந்த முடிவு தொடர்பில் கேள்விகள் எழுப்பப்பட்டது. அதற்கான பதிலை சொல்லக்கூடிய நிலைமையில் சுமந்திரனோ தமிழரசு கட்சியோ இல்லை என்பது தான் உண்மை. தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா கூட, சஜித்தை ஆதரிப்பது என்ற கட்சியின் முடிவை ஊடகவியலாளா்களுக்கு அறிவித்துவிட்டு, சில மணி நேரத்திலேயே  தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரனுக்கு தான் தன்னுடைய ஆதரவு என்றும் கூறியிருக்கின்றார். அரியநேத்திரனுக்கு ஆதரவான கூட்டத்திலும் பங்கேற்று உரையாற்றி இருக்கின்றார்.

தமிழரசுக் கட்சியின் தெரிவு செய்யப்பட்ட தலைவர் சிவஞானம் சிறிதரன் அந்த முடிவை ஏற்கனவே பகிரங்கமாக அறிவித்துவிட்டார்.  அவரும் பொது வேட்பாளருக்கு ஆதரவாக மேடை ஏறியுள்ளாா். மட்டக்களப்பிலும் தமிழரசுக் கட்சியின் முன்னாள் எம்.பி.க்கள் பலா் பொது வேட்பாளருக்காக களமிறங்கியுள்ளாா்கள்.  ஆக, தமிழரசுக் கட்சியின் சுமந்திரன் தவிர கணிசமான ஒரு பிரிவினா் பொது வேட்பாளா் ஆதரவு என்ற நிலைப்பாட்டில்தான் இருக்கின்றாா்கள்.

இம்முறை தோ்தலில் பிரதானமான வேட் பாளராக கருதப்படும் மூவருமே ஏற்கனவே அரசியல் அமைப்பில் இருக்கின்ற 13 வது திருத்தத்துக்கு அப்பால் செல்வதற்கு தயாராக இல்லை. பதின்மூன்றாவது திருத்தம் என்பது மாகாணங்களுக்கு வரையறுக்கப்பட்ட சில அதிகாரங்களை வழங்குவதற்கான ஒரு நிர்வாக ஏற்பாடு மட்டுமே. இனநெருக்கடிக்கான அரசி யல் தீர்வை வழங்கக்கூடிய ஒரு முறையாக அது இல்லை. தமிழ் தரப்புகள் 13 என்பதை நிராகரிப் பதற்கு அதுதான் காரணம்.

தற்போதைய நிலைமையில் சஜித் பிரேம தாச கூட 13 என்பதை தான் தீர்வாக தன்னுடைய தேர்தல் விஞ்ஞாபனத்தில் வைத்திருக்கின்றார். சமஷ்டி அல்லது அதற்கு நிகரான தீர்வு ஒன்றை தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் முன்வைப் பவர்களுக்குத்தான் தமிழரசு கட்சியின் ஆதரவு கிடைக்கும் என்று சொல்லிக்கொண்டிருந்த சுமந்திரன், எதற்காக அவசரமாகச் சென்று சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு என்ற நிலைப்பாட்டை எடுத்தார் என்பது இன்னும் மர்மமாகவே இருக்கிறது.

ரணில் விக்கிரமசிங்க, ‘அரகலய’ போராட் டத்தை தொடர்ந்து ஜனாதிபதியாக பதவியேற்ற போது, நாடாளுமன்றத்தில் ஏனைய கட்சிகளை பார்த்து, “13 ஐ வழங்க  நான் தயார்! அதனை ஏற்க நீங்கள் தயாரா?” என்று ஒரு கேள்வியை எழுப்பி யிருந்தார். அனைத்து தரப்பினருமே அதனை ஏற்றுக் கொள்வதற்கு தாங்கள் தயாராக இருப்பதாக கூறியிருந்தார்கள்.

ஆனால் கடந்த இரண்டரை வருட காலத்தில் அவா் செயல் படுத்தவில்லை. ஜனாதிபதி என்ற முறையில் அவருக்கு இருக்க கூடிய நிறைவேற்று அதிகாரங்களைப் பயன்படு த்தி மிகவும் இலகுவான முறையில் அதனை அவர் நடைமுறைப்படுத்தியிருக்க முடியும்.  அதனை அவர் செய்ய வில்லை. மட்டக்களப்பு மாவட்டத்தில் பொருளாதாரத்துக்கு முதுகெலும்பாக இருக்கின்ற பண்ணையாளர்களின் மேய்ச்சல் தரவைப் பிரச்சனைக்கு கூட அவரால் ஒரு தீர்வு வழங்க முடியவில்லை. ஜனாதிபதி என்ற முறையில் அவரது உத்தரவு மட்டுமின்றி, நீதிமன்றத்தின் தீர்ப்பு கூட உதாசீனம் செய்யப்பட்டது. ஜனாதிபதி உறுதியாக இருந்திருந்தால் அதனைச் செய்திருக்கலாம். நாட்டின் அனைத்துப் பிரச்சினைகளிலும் கவனத் தைச் செலுத்தும் சஜித், அநுர கூட அதில் அக்கறை காட்டவில்லை. மேய்ச்சல் தரைப் பிரச்சினையால் பாதிக்கப்படுபவர்கள் தமிழர்கள் என்பதாலா?

இந்த நிலையில் அதிகாரங்கள் எதுவும் இல்லாத ஒரு மாகாண சபை அமைத்து அதன் மூலமாக தமிழ் மக்களுடைய பிரச்சினைக்கு தீர்வை காண முடியும் என்பது சாத்தியமானதா? ஜேவிபி என்ற அமைப்புதான் இப் போது தேசிய மக்கள் சக்தி என்ற பெயரில் ஒரு புதிய வேடத்துடன் மக்களின் முன்பாக தோன்றியிருக்கின்றது. அநுர குமார திசாநாயக்க அதன் சார்பாக போட்டியிடுகின்றார். தென் பகுதியில் உருவாக்கிய கிளர்ச்சியை தொடர்ந்து அந்த அமைப்பு மக்கள் மத்தியில் பெருமளவு செல்வாக்கை பெற்றிருக்கின்றது என்பது உண் மைதான்.  குறிப்பாக சிங்கள இளைஞர்கள் மத்தியில் அவர்களுக்கான ஆதரவு பலமாக இருப்பதாக மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. ஆனால், ஜனாதி பதியாக வருவதற்கு தேவையான 50% வாக்குகளை அவர்களால் பெற்றுக் கொள்ள முடியுமா என்பது முக்கியமான கேள்வி!

இனநெருக்கடிக்கும் அவர்களிடம் தீர்வு இல்லை. புதிய அரசியலமைப்பை உருவாக்குவோம். அதுவரையில் 13 ஐ நடைமுறைப்பத்தலாம் என்பதுதான் அவர்களது நிலைப்பாடு! அவ்வாறு புதிதாக உருவாக்கப்படும் அரசியல மைப்பில் இப்போது இருக்கக்கூடிய மாகாண சபை கூட காணாமல் போகக்கூடிய ஆபத்து இருக்கின்றது. ஏனெனில் அடிப்படையில் ஜே.வி.பி. மாகாண சபை முறைக்கு எதிரான கட்சி!

வடக்கு கிழக்கு மாகாணங்களில் இணைப்பை சட்ட ரீதியாக பிரிப்பதில் ஜேவிபி தான் முன்னின்றார்கள். அதனைவிட, சுனாமிக்கு பின்னர் உருவாக்கப்பட்ட சுனாமி கட்டமைப்பை தகர்ப்பதில் கூட அவர் தான் செயல்பட்டார்கள். நீதிமன்றத்தின் மூலமாக ஒரு வழக்கை தொடர்ந்து அதன் மூலமாக அந்த கட்டமைப்பு இல்லாதொழித்தார்கள். அரசியல் ரீதியாக மட்டுமின்றி மனிதாபிமான ரீதியாகவும் தமிழ் மக்களுக்கு எதுவும் கிடைத்துவிடக்கூடாது என்பதில் அவர்கள் முனைப்பாக இருந்து செயல்பட்டார்கள் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணம் இந்த பின்னணியில் இந்த பிரதான வேட் பாளர்களில் ஒருவரை தான் தமிழ் மக்கள் ஆதரிக்க வேண்டும் என்று சிலர் கூறுகின்றார்கள். இந்த மூன்று பேருமே இன நெருக்கடியில் அக்கறை காட்டுபவர்களோ அல்லது அதற்கான நியாயமான தீர்வு ஒன்றை வழங்க கூடியவர்களாகவோ இல்லை என்பது வெளிப்படை!

இந்த நிலைமையில் தான் தமிழ் பொது வேட்பாளர் என்ற கருத்து பலம் பெற்றிருக்கின்றது. கடந்த காலத்தில் பெற்றுக்கொண்ட அனுபவம் மட்டுமின்றி, குறிப்பிட்ட மூன்று வேட்பாளர்களுடைய செயற்பாடுகள் கூட, அவர்கள் பிரச்சனைக்கு ஒரு தீர்வை முன்வைக்கமாட்டார்கள் என்பதை உறுதிப்படுத்துவ

தாக இருக்கின்றது. இந்த நிலமையில் தமிழ் மக்களுக்கு இருக்கக்கூடிய மாற்றுத் தெரிவாக பொது வேட்பாளா் என்பதை விட வேறு என்னவாக இருக்கலாம்.