‘தமிழ் மக்களை பயங்கரவாதிகளாக சித்திரிக்கும் தொடரை நிறுத்துங்கள்’-வைகோ கோரிக்கை

139 Views

தமிழர்களை பயங்கரவாதிகளாக சித்தரிப்பதாகக் குறிப்பிட்டு, இந்தியாவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் “தி பேமிலி மேன் 2” தொடருக்கு தடைகோரி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மத்திய செய்தி ஒலிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

நடிகை சமந்தா நடிப்பில் இந்தியில் உருவாகி உள்ள ‘தி பேமிலி மேன் 2’ என்ற தொடர் ஜூன் 4 ஆம் திகதி ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இரண்டே நாட்களில் 37 மில்லியனுக்கும் அதிகமான பார்வைக் காட்சிகளைப் பெற்றிருக்கும் ‘தி பேமிலி மேன்-2’ இந்தி தொடரில் தமிழர்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக கண்டனக் குரல்கள் எழுந்து வருகின்றன.

இந்நிலையில், ‘தி பேமிலி மேன் 2’ தொடருக்கு தடைகோரி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மத்திய செய்தி ஒலிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், “தி பேமிலி மேன்-2 என்ற இந்தி தொடர் ஒளிபரப்புவதை நிறுத்தக்கோரி இந்தக் கடிதத்தை எழுதி இருக்கிறேன். இந்தி மொழியில் வெளியாகும் இந்தத் தொடரின் முன்னோட்டக்காட்சிகள் சமூக வலைதளங்களில் உலா வருகின்றன.

தமிழர்களை பயங்கரவாதிகள் ஆகவும், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ ஏஜெண்டுகள் உடன் தொடர்பு கொண்டவர்களாகவும் சித்திரித்து இருக்கின்றார்கள். தமிழீழ விடுதலைப் போரில் தங்கள் இன்னுயிர்களை ஈந்த போராளிகளையும் கொச்சைப்படுத்தி இருக்கின்றனர்.

இராணுவ சீருடை அணிந்த சமந்தா என்ற தமிழ் பெண் பாகிஸ்தானியர்களுடன் தொடர்பு வைத்து இருப்பதாக காட்சிகள் இருக்கின்றன. இத்தகைய காட்சிகளைக் கொண்ட இந்தத் தொடர் தமிழ் பண்பாட்டுக்கு எதிரானது; தமிழர்களின் உணர்வுகளைப் புண்படுத்துகின்றது. எனவே இந்த தொடரை எதிர்த்து தமிழ்நாட்டில் கண்டனக்குரல்கள் எழுந்துள்ளன.

அமேசான் ஓடிடி தளத்தில் இந்தத் தொடரை ஒளிபரப்பினால் தமிழ்நாட்டில் போராட்டங்கள் வெடிக்கும் என்பதைத் தங்கள் கவனத்துக் கொண்டு வருகிறேன். தி பேமிலி மேன்-2 தொடர் ஒளிபரப்பைத் தடை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.

Leave a Reply