தமிழ் மக்களின் ஜனநாயகப் போராட்டங்களை அழிப்பதற்காக உருவாக்கப்படும் ஆயுதக் குழுக்கள் – மட்டூரான்

தமிழர்களின் தாயகமான வடகிழக்கு மாகாணம் என்பது இன்றும் கட்டுக்கோப்புடன் தமது கலை, கலாசாரத்தினைப் பேணி தமது மொழியுரிமைக்கு பங்கம் ஏற்படாத வகையில் செயற்படும் மாகாணங்களாகும்.

கடந்த காலத்தில் இவ்வாறான செயற்பாடுகளில் மேற்கொள்ளப்பட்ட தலையீடுகள் மற்றும் அதன் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்கங்களே இந்த நாட்டில் தமிழரை ஆயுதம் ஏந்தி போராடும் நிலைக்கு கொண்டு சென்றது.

இந்த ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் இராஜதந்திர ரீதியான போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், வடகிழக்கு மாகாணத்தில் தமிழர்கள் மத்தியில் உள்ள அரசியல் ஸ்திரமற்ற நிலைமையினை பயன்படுத்தி தமிழ் மக்கள் மத்தியில் பல்வேறு வகையான செயற்பாடுகள் திட்டமிடப்பட்ட வகையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக வடகிழக்கில் உள்ள தமிழ் இளைஞர்களை குறிவைத்து பல்வேறு சம்பவங்கள் முன்னெடுக்கப்படுவதுடன், அவர்கள் மத்தியில் உணர்வு ரீதியான விடயங்களை இல்லாமல் செய்வதற்கான பல்வேறு நடவடிக்கைகள் பல்வேறு வழிகளில் முன்னெடுக்கப்படுகின்றன.

குறிப்பாக வடக்கில் கடந்த காலத்தில் ஆவாக்குழு உருவாக்கம் தொடக்கம் போதைவஸ்து வியாபாரம் வரையில் பல்வேறு வழிகளில் தமிழ் இளைஞர்கள் பயன்படுத்தப்பட்டு, அவர்கள் மத்தியில் தமிழ் உணர்வும், போராட்ட உணர்வும் சிதறடிக்கச் செய்யும் செயற்பாடுகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுகின்றது.

Batti 1 தமிழ் மக்களின் ஜனநாயகப் போராட்டங்களை அழிப்பதற்காக உருவாக்கப்படும் ஆயுதக் குழுக்கள் - மட்டூரான்இவ்வாறான செயற்பாடுகளின் உச்சக்கட்டமே நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் வடகிழக்கில் தமிழ் தேசிய உணர்வுமிக்க கட்சி வேட்பாளர்கள் பெற்ற வாக்கினை விட தமிழ் தேசியத்திற்கு எதிரானவர்கள் பெற்ற வாக்குகள் அதிகமாக இருந்ததற்கான காரணமாகும்.

இதற்கு காரணம் இளைஞர்கள் ஒரு சாரார் மத்தியில் பணம் தொடர்பிலும் ஏனைய விடயங்கள் தொடர்பிலும் மூளைச் சலவை செய்யப்பட்டு, தமிழ் தேசியம் தொடர்பான சிதைவுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. உறுதியாக தமிழ்தேசியத்தின் பால் பற்று உள்ளவர்கள் போக அன்றாடம் அல்லல்படும் பலர் இன்று அதற்கு அப்பால் சென்றுள்ளதை காண முடிந்தது.

இது ஓருபுறமிருக்க, இன்று தமிழ் இளைஞர்கள் மத்தியில் குழு மோதல்களும், வாள்வெட்டு கலாச்சாரங்களும், போதைப்பொருள் பாவனையும் அதிகரித்து வருகின்றது.

வடக்கில் இந்த நிலை பரவலாக இருந்த அதேநேரம், இன்று இந்த நிலைமை கிழக்கு மாகாணத்திலும் திட்டமிட்ட வகையில் பரப்பப்படும் நிலைமை உருவாகி வருகின்றது. அரச புலனாய்வுத்துறையின் நேரடி கண்காணிப்பின் கீழ் இந்த வாள்வெட்டுக் குழுக்கள் இறக்கப்படுவதான சந்தேகங்கள் இன்று தமிழ் மக்கள் மத்தியில் எழுந்துள்ளன.

கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்திலேயே தமிழர்கள் செறிந்து வாழும் நிலையுள்ளது. இந்த நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மைக்காலமாக வாள்வெட்டுக் குழுக்கள் உருவாக்கப்பட்டு அதன் ஊடாக பல்வேறு சம்பவங்கள் இடம்பெற்று வருவதுடன், இதுவரையில் இருவர் உயிரிழந்த நிலையும் உள்ளது.

bat 5 தமிழ் மக்களின் ஜனநாயகப் போராட்டங்களை அழிப்பதற்காக உருவாக்கப்படும் ஆயுதக் குழுக்கள் - மட்டூரான்குறிப்பாக இந்த வாரம் மட்டக்களப்பு மாவட்டத்தின் நகரினை அண்டிய தமிழர்கள் வாழும் பகுதிகளில் இளைஞர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை அதிகரிப்பும், வாள் வெட்டுக் குழுக்களின்  அட்டகாசங்களும் அதிகரித்த நிலை காணப்படுகின்றது.

பாதுகாப்பு தரப்பினரின் செயற்பாடுகள் அதிகளவில் உள்ள இந்த காலப்பகுதியில் இவ்வாறான வாள்வெட்டுக் குழுக்கள் உருவாக்கம் தொடர்பில் எதுவும் தெரியாத நிலையில் அவர்கள் இல்லை.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் கல்லடிப் பகுதியில் இரண்டு குழுக்களிடையே இடம்பெற்ற மோதலில் இளைஞர் ஒருவர் வாள் வெட்டுக்குள்ளான நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

அன்றைய தினம் கல்லடி, விபுலானந்தா இசை நடனக்கல்லூரி வீதியில் உள்ள சில வீடுகளுக்கு வாள்கள், பொல்லுகளுடன் சென்ற குழுவினரால் குறித்த வீடுகள் மீது தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

இதேபோன்று செங்கலடி, ஐயன்கேணி பகுதியில் பாடசாலை மாணவன் ஒருவர் வாள்வெட்டுக் குழுவினால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இரண்டு மாணவர்களிடையே ஏற்பட்ட முரண்பாட்டின் காரணமாக இந்த கொலை நடைபெற்றுள்ளது.

IMG 20200823 WA0032 தமிழ் மக்களின் ஜனநாயகப் போராட்டங்களை அழிப்பதற்காக உருவாக்கப்படும் ஆயுதக் குழுக்கள் - மட்டூரான்இந்த கொலையை பார்த்தால் ஏதோ தற்செயலாக நடைபெற்றதாக கொள்ள முடியாது. குறித்த பகுதியில் வாள்வெட்டுக் குழுவினர் தொடர்பான அட்டகாசங்கள் குறித்து பல தடவைகள் அப்பகுதி மக்களினால் காவல்துறையினரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டபோதும், அது தொடர்பில் எதுவிதமான நடவடிக்கையும் ஏடுக்கப்படவில்லையென அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

பாதுகாப்பு தரப்பினரும் புலனாய்வுத்துறையினரும் பெருமளவு உலாவும் இப்பகுதியில் வாள்களுடன் தினமும் மோட்டார் சைக்கிளில் வலம் வரும் வாள்வெட்டு குழுவினர் தொடர்பான தகவல்கள் தெரியாமல் இருக்கவா போகின்றது.

மிகவும் திட்டமிடப்பட்ட வகையில் தமிழ் இளைஞர்கள் மத்தியில் இவ்வாறான செயற்பாடுகள் உட்புகுத்தப்படுகின்றன. இப்பகுதியில் மிகவும் வெளிப்படையாகவே இவ்வாறான வாள்வெட்டுக் குழுக்கள் செயற்படுகின்றன. இவர்கள் தென்னிலங்கையில் உள்ள சிலருடனும் தொடர்புகளைப் பேணுவதான தகவல்களையும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இவற்றிற்கெதிராக செங்கலடி பகுதியில் அப்பகுதி மக்களினால் பாரிய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்ட போதிலும், இருவர் கைது செய்யப்பட்டு மக்களின் அந்த போராட்டம் முடிக்கப்பட்டிருந்தும், இந்த வாள்வெட்டுக் குழுக்களை சேர்ந்தவர்கள் இதுவரையில் கைது செய்யப்படவில்லையென அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

எவ்வாறாயினும், மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்கள் மத்தியில் தமிழ் தேசிய உணர்வினையும், போராட்ட சிந்தனையினையும், அரசியல் ரீதியான செயற்பாடுகளையும் மழுங்கடிக்கச் செய்யும் வகையில் கச்சிதமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

எதிர்காலத்தில் இவ்வாறான செயற்பாடுகள் விரிவுபடுத்தப்படும் நிலைமையும் உருவாகலாம். தமிழ் தேசியம் சார்ந்து செயற்படுபவர்கள் இவ்வாறானவர்களினால் கொலை செய்யப்படும் சூழலும் உருவாகலாம். அல்லாது போனால் எதிர்காலத்தில் தமிழர்களின்  தற்போதைய போராட்டத்தினை இல்லாமல் செய்து தமிழர்களின் குரல்வளைகள் நசக்கப்படும் நிலைமையும் உருவாகலாம்.