Tamil News
Home செய்திகள் தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யும் இலங்கையின் முயற்சிக்கு இந்தியா ஆதரவு வழங்கும்

தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யும் இலங்கையின் முயற்சிக்கு இந்தியா ஆதரவு வழங்கும்

“அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்துக்கு அமைவாகவும், ஐக்கிய இலங்கை என்ற கட்டமைப்புக்குள்ளும் சமத்துவம், நீதி, சமாதானம் மற்றும் கௌரவம் ஆகியவற்றுக்கான தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யும் இலங்கையின் நல்லிணக்கத்துக்கு இந்தியாவின் நிலையான ஆதரவு இருக்கும்.” என இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இன்று இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லேவை சந்தித்து கலந்துரையாடியிருந்தனர்.

கொழும்பிலுள்ள இந்தியத் தூதுவரின் இல்லத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேற்று சந்திப்பு நடத்த இருந்த போதும் குறித்த சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டது.

இந்தநிலையில், கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா, புளொட் தலைவர் த.சித்தார்த்தன், ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் இந்தியத் தூதுவருடனான  சந்திப்பொன்றை நடத்தியுள்ளனர்.

வடக்கு, கிழக்கு அபிவிருத்தி, புதிய அரசமைப்பு, அதிகாரப் பகிர்வு உள்ளிட்ட தமிழ் மக்கள் நலன் சார்ந்த பல்வேறு விடயங்கள் இதன்போது பேசப்பட்டன என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருகின்ற சூழலில் இந்தத் திடீர் சந்திப்பு  முக்கியத்துவம் பெற்றதாக கருதப்படுகின்றது.

Exit mobile version