தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரனின் பிரச்சார நடவடிக்கையின் போது பல்வேறு பகுதிகளில் அவருடன் காவல்துறையினர் முரண்பட்டு வருகின்றனர்.
ஜனாதிபதி தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளர் பாக்கியசெல்வம் அரியநேத்திரனுக்கு செவ்வாய்க்கிழமை (10) அம்பாறை மாவட்டத்தில் பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தலில் இம்முறை போட்டியிடும் தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரன் தமிழ் தேசிய பொதுக் கட்டமைப்பு நமக்காக நாம் எனும் தொனிப்பொருளில் தேர்தல் பிரசாரத்தை அம்பாறை மாவட்டத்தில் முன்னெடுத்திருந்தார்.
அவருடன் முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மா. நடராஜா உள்ளிட்டோரும் வருகை தந்திருந்தனர்.
முதலில் அம்பாறை மாவட்ட எல்லையில் உள்ள பெரிய நீலாவணையில் அரியநேத்திரனுக்குப் வரவேற்பளிக்கப்பட்டது.
தாயக செயலணியின் அம்பாறை மாவட்ட இணைப்பாளரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் காரைதீவு பிரதேச தலைவருமான முன்னாள் தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் பொன்னாடை போர்த்தி வரவேற்றார் .
ஏனைய தாயக செயலணி உறுப்பினர்கள் மற்றும் தமிழ்த் தேசியப் பொது கட்டமைப்பு உறுப்பினர்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
அங்கே முருகன் கோயிலில் சிறப்பு பூஜை இடம்பெற்றதுடன் அதனைத் தொடர்ந்து கல்முனை, காரைதீவு, அக்கரைப்பற்று போன்ற பகுதிகளிலும் தமிழ்ப் பொது வேட்பாளருக்குப் பெரு வரவேற்பு அளிக்கப்பட்டது.
இது தவிர தனது பிரச்சாரத்தை முன்னெடுத்த சந்தரப்பத்தில் பல்வேறு பகுதிகளில் காவல்துறையினர் அவருடன் முரண்பட்டதனை அவதானிக்க முடிந்தது.
தனது பிரச்சாரத்தை பெரியநீலாவனை முருகன் கோயில் முன்றலில் இருந்து ஆரம்பித்த வேளை பூஜையில் ஈடுபட்டார்.
பின்னர் மற்றுமொரு பிரச்சார நடவடிக்கைக்காக செல்வதற்கு தயாராகி கொண்டிருக்கும் போது அங்கு வந்த பெரிய நீலாவணை காவல் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் விசேட அதிரடிப்படையினரின் இடையூறினால் முரண்பாடுகள் ஏற்பட்டிருந்தன.
பின்னர் கல்முனை ஆர்.கே.எம் சந்தி கல்முனை தரவை பிள்ளையார் முன்றல் உள்ளிட்ட காரைதீவு கண்ணகி அம்மன் கோயில் பகுதியிலும் தேர்தல் பிரச்சாரத்தின் போதும் இவ்வாறு அழுத்தங்கள் தொடர்ந்ததுடன் பாதுகாப்பு தரப்பினரால் தீவிரமாக கண்காணிப்பிற்கு உள்ளானார்.