2009ஆம் ஆண்டில் தமிழீழ விடுதலைப் புலிகளின் போர் ஆற்றலை முறியடிக்கும் வகையில் இந்தியா உட்பட பத்திற்கும் மேற்பட்ட நாடுகளின் இராணுவத்தினரின் உதவியுடன் 145,000 தமிழ் மக்களைக் கொன்று பல ஆயிரக்கணக்கான தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் போராளிகளை அழித்து விடுதலைப் போராட்டத்தை மௌனிக்கச் செய்து, பால்சோறு வழங்கி வெற்றிவிழாக் கொண்டாடிக்கழித்து, தமிழ் மக்களையும்,புலம் பெயர்ந்த தமிழ் உறவுகளையும் வெறுப்படையச் செய்த மகிந்த ராஜபக்ச ஆட்சியில் தொடர்ந்தும் தமிழ் மக்களுக்கெதிரான வன்முறைகளைக் கட்ட விழத்துவிட்ட பாதையிலேயே கோட்டபாயாவின் அரசாங்கமும் பயணித்தது.
இவர்களின் ஆட்சி முறையின்கீழ் தமிழ் மக்கள் தமக்கு என்ன நிகழப்போகின்றது என்பதை எதிர்பார்த்தே வாழ்ந்து வந்தார்கள். அவர்களைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்த ரனில் விக்கிரமசிங்கா மிகவும் தந்திரமானமுறையில் தனது ஆட்சிக் காலத்தை நகர்த்திவந்த நிலையிலும் தமிழ்மக்கள் இவரது ஆட்சிக் காலத்திலும் ஆபத்தின் விளிம்பிலேயே தமக்கு என்ன நடக்குமோ என்ற அச்சத்திலேயே வாழ்ந்து வந்தார்கள்.
போர் மௌனிக்கப்பட்டதும் ஐக்கிய நாடுகள் சபையும்,உலக நாடுகளும் ஈழத் தமிழ் மக்களுக்கு நிரந்தரமான அரசியல் தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும் என்றும் வாக்குறுதி அளித்து பதினைந்து வருடங்கள் முடிவடைந்த நிலையிலும் எந்தத் தீர்வுமின்றியே ஏமாற்றப்பட்டு வந்தனர். இந்த நிலையிலும் கூட ஐக்கிய நாடுகள் சபையும் மௌனம் காத்து வந்தமையால் மகிந்த ராஜபக்சா, கோட்டபாய ராஜபக்சா, மற்றும் அவர்களைத் தொடர்ந்து, ~இராணி மாலை போட்டதால் ராஜாவாக~ திடீரென ஆட்சிக்கு வந்த ரனில் விக்கரமசிங்காவுக்கும் ஐக்கிய நாடுகள் சபையினதும் மௌனமும்,இந்திய அரசாங் கத்தினால் தமிழ் மக்களுக்கு எதிராக எடுத்துவரும் நடவடிக்கைகளும் வாய்ப்பாகப் போய்விட்டதால் ரனில் விக்கிரமசிங்காவும் தமிழ் மக்களை ஏமாற்றியே எந்த விதமான அரசியல் தீர்வுகளையும் முன்னெடுக்காமலேயே தனது காலத்தைக் கடத்தி வந்தார்.
இந்த நிலையில் அநுரா திசநாயக்காவின் பின்புலத்தில் இடம்பெற்ற காலிமுகத் திடல் அரகலயப் போராட்டத்தின்மூலம், ராஜபக்சாக்க ளின் குடும்ப ஆட்சி கவிழ்க்கப்பட்டதால் தேசிய மக்கள் சக்தி என்ற பெயரில் இயங்கிவரும் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) என்றுமே எதிர்பார்க்கமுடியாத அளவுக்கு சிங்கள மக்கள் மத்தியில் எழுச்சிபெறத் தொடங்கியது.இதனால் இலங்கையில் ஆட்சிமாற்றம் ஏற்படவேண்டும் என்ற உணர்வு தென்னிலங்கையின் சிங்கள மக்கள் மத்தியில் பூதாகரமாக எழுச்சிபெற்றது. இந்த நிலையில் பத்தாவது ஜனாதிபதி தேர்தலில் 50 வீதத்திற்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்று ஜனாதிபதித் தேர்தலில் அமோக வெற்றிபெற்று அநுரகுமார திசநாயக்கா ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டு சிங்களதேசத்தில் மகாராஜாவாக வர்ணிக்கப்பட்டார்.அந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களின் ஆதரவு மிகக் குறைவாகவே ஜே.வி.பிக்குக் கிடைத்தது.
அதேவேளை ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்மக்களின் அரசியல் தீர்வு தொடர்பாக எந்தவிதமான வாக்குறுதியும், சஜித் பிரேமதாசா வினால் வழஙங்கப்படாத நிலையிலும், ஐக்கிய மக்கள் சக்தியை ஆதரிக்கவேண்டும் என்ற நிலைப்பாட்டை சுமந்திரனின் ஆலோசனையின் பேரில் இலங்கைத் தமிழரசுக் கட்சி தமிழ் மக்களின் முடிவுக்கு எதிராக எடுத்தது,சஜித் பிரேமதாசாவுக்காக வடக்குக் கிழக்கில் பிரசாரம் செய்துவந்தபோதும் சஜித் தோல்வியைத் தழுவி னார்.அதேவேளை தமிழ்மக்களின் ஒன்றுபட்ட எழுச்சியைக் காட்டும் வகையில் சிவில் சமுக அமைப்புக்களினால் முன்வைக்கப்பட்ட தமிழ் பொதுக்கூட்டமைப்பின் சார்பில் தமிழ் பொது வேட்பாளராக பா.அரியநேந்திரன் சங்கு சின்னத் தில் போட்டியிட்டபோதும் வடக்குக் கிழக்குத் தமிழ் மக்களின் ஒற்றுமையின்மை மற்றும் அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் அரசியல் கட்சிகளிடையே உள்ள பிளவுகள் காரணமாக பொதுக் கூட்டமைப்பு வேட்பாளர் எதிர்பார்த்த வாக்குகளைப் பெறமுடியாது போன தும் ஏமாற்றத்தைத் தந்தது.
இடதுசாரிக் கொள்கையைகொண்ட அனுரகுமார திசநாயக்கா ஜனாதிபதியாகப் பொறுப் பேற்றதும் நாட்டுமக்களைக் கவரும் வகையில் சில அதிரடியான செய்திகளை அறிவித்தார்.அவற்றுள்,கடந்த இரண்டு ஆண்டுகளில் அரசியல் ஆதாயத்தை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்பட்ட மதுபான சாலைகளின் அனுமதிப் பத்திரங்கள் ரத்துச் செய்யப்படும். ஆனால் இதுவரை எந்த ஒரு மதுபான சாலைகளினதும் அனுமதிப்பத்திரங்கள் ரத்துச் செய்யப்படவில்லை.
சட்டவிரோதமான முறையில் மதுபான அனுமதியைப் பெற்றுப் பல இலட்சக்கணக்கான ரூபாய்களை இலாபமாகப்பெற்ற தமிழ் அரசியல்வாதிகள் உட்பட அனைத்து அரசியல் வாதிகளின் பெயர்களும் நாட்டுமக்களுக்குப் பகிரங்கப்படுத்தப்படும். இதுவரை எந்த ஒரு அரசியல்வாதியினதும் பெயர்கள் பகிரங்கப் படத்தப்படவில்லை.. இதில் முன்னாள் முதல மைச்சரும், தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேவரனின் பெயர்தான் பந்தாடப்பட்டது.
முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் அமைச்சர்களினதும் மோசடிகள், ஊழல்கள் அம்பலப் படுத்தப்படுவதுடன் அவர்களால் கடந்த காலங்களில் களவாடப்பட்ட சொத்துக்கள் மற்றும் வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்ட பணம் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டு அரசுடைமையாக்கப்படும்.
அமைச்சர்கள் பயன்படுத்திவந்த நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் மற்றும் சொகுசு வாகனங்களை மீளப்பெற்றுக்கொள்ள நடவடிக்கைகள் எடுத்தல். இதில் பரபரப்பாக இருப்பதற்காக பல அமைச்சர்களிடம் இருந்த அதி சொகுசு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அவை காலி முகத்திடலில் பிரச்சாரம் செய்யும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டன.
பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்துச் செய்தல். இதுவரை அது தொடர்பான எந்த நடவடிக்கையும் முன்னெடுக் கப்படவில்லை.இது மட்டமல்லாது ஏற்கனவே இருந்த பாராளுமன்ற உறுப்பினர்களினதும் ஓய்வூ தியங்களும் இரத்துச் செய்யப்படவேண்டும்.
படித்துப் பட்டம் பெற்று 26 வருடங்களுக்கும் மேலாக அரசபணியாற்றிய அரசாங்க ஊழியர்களுக்கு வழங்கப்படுவது போல் கல்வித் தகைமைகளைக் கொண்டிருக்கவேண்டும் என்ற நிபந்தனையைக் கொண்டிருக்காது வெறும் ஐந்து வருடங்கள் பாராளுமன்றத்தில் இருந்துவிட்டு வந்தால் அவர்களுக்கும் ஓய்வூதியம் வழங்கும் முறை இந்த நாட்டில் இருக்குமாயின் வாழ் நாள் பூராக ஓடாக உழைத்து நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் ஆணிவேராக விளங்கும் அனைத்துத் தொழிலாளர்களும் அவர்கள் உழைத்துக் களைத்தபின் அவர்களின் வாழ்வுக்காக அரசாங் கம் ஓய்வூதியத்தை அறிமுகப்படுத்தவும் வேண்டுமல்லவா…?
அமைச்சர்களுக்காகச் செலவிடப்பட்டு வரும் பல மில்லியன் ரூபா செலவினங்களைக் கட்டுப்படுத்துதல் பாராளுமன்ற உறுப்பினர்க ளுக்கு வழங்கப்பட்டு வந்த வீடுகள் இல்லாமல் செய்வதுடன் தூரத்தில் இருந்து வருபவர்களுக்கே வீடுகள் வழங்குதல்.
தமிழ் அரசியல் கைதிகள் அனைவரும் விடுவிக்கப்படுவர். தமிழ் மக்களின் ஆக்கிரமிக் கப்பட்ட குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்களை விடுவித்து உரியவர்களிடம் கையளித்தல்.
இவைபோன்ற மேலும் பல பரபரப்பான செய்திகளை அதிரடியாக அறிவித்த அனுர திசநாயக்கா குமாரதுங்காவின் இந்த முன் மொழிவுகளில் எவை நடைமுறைப் படத்தப் பட்டுள்ளன..? இவற்றுள் ஒரு சிலவற்றைத் தவிர ஏனைய பரபரப்பான தகவல்கள் அனுர அரசினால் நடைமுறைப்படத்தப்படமுடியாது. இவ்வாறான ஒரு நிலையில் அனுரா மீது நம்பிக்கை வைத்த சிங்கள மக்கள் மட்டுமல்லாது தமிழ் மக்களும் பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்து பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டுக்கும் மேற்பட்ட ஆசனங்களைப் பெறும் வகையில் வாக்குகளை அளித்து தனிப்பெரும் கட்சியாக ஆட்சிபீடம் ஏற்றினர்.
குறிப்பாக வடமாகாணத்தில் அதிகளவு ஆசனங்களைப் பெற்றுக் கொள்ளும் வகையில் தமிழர்களின் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் தேசிய மக்கள் சக்திக்கு கிடைத்ததால், வடமாகாணத்தில் என்றுமில்லாத அளவுக்கு அதிகளவு ஆசனங்களை ஜேவிபி பெற்றுக் கொண்டமையானது, உலகத் தமிழர்களிடையே மட்டுமல்லாது தமிழர்களுக்குச் சார்பான நாடுகளிடையேயும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தாலும், இந்தத் தேர்தல் முடிவுகள் முக்கியமான சில மாற்றங்களை ஏற்படுத்தியது.
வடக்குக் கிழக்கு மாகாணத் தமிழ் மக்கள் பொதுத் தேர்தலில் எடுத்த முடிவின் காரணமாக இதுவரை அரசாங்கத்துடன் இணைந்து அமைச்சர்களாக இருந்து தமிழ் மக்களின் அபிலாசைகளுக்கும்,சுபீட்சமான வாழ்வுக்கும், நிரந்தரத் மீர்வுக்கும் எதிராகச் செயற்பட்ட அரசியல்வாதிகளும், துணை இராணுவக் குழுக் களும் தமிழ் மக்களால் அரசியல் அரங்கில் இருந்து முற்றாகவே தூக்கி எறியப்பட்டமை தமிழ் மக்களிடையே ஏற்பட்ட ஆரோக்கியமான மாற்றமாகவே பார்க்கப்படுகின்றது.
இந்த நிலையில் தமிழ்,சிங்கள,முஸ்லிம் மக்களைக் கவரும் வகையில் சில அதிரடி யான முடிவுகளை அறிவித்த நிலையில் தமிழர் களிடையே அனுரா அலை வீசுகின்ற ஒரு அபாயகரமான நிலையை நோக்கியதாகத் தமிழ் தேசியமும், உண்மையான தமிழ் தேசிய வாதிகளும் தள்ளப்பட்டிருக்கின்றனர். பொதுத் தேர்தலில் வடமாகாணத்தில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்று ஐந்து ஆசனங்களைப் பறெ;ற வெற்றியின் காரணமாக தமிழ் மக்களிடையே மிகப்பெரும் செலவாக்கைப் பெற்றுவிட்ட ஜே.வி.பி. படிப்படியாக தமிழ் மக்களிடையே கிராமம் கிராமமாக ஊடுருவி அவர்கள் மத்தியில் ஆசை வார்த்தைகளை விதைத்து தமிழ்தேசியத்தின் பால்கொண்டுள்ள உணர்வுகளை மழுங்கடிக்கும் வகையில் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றது.
இதுவரை காலமும் யாழ் மாவட்ட அமைப்பாளராக இருந்து தற்பொழுது அமைச்சராக இருக்கும் இராமலிங்கம் சந்திரசேகரம் மூலம் மிகவும் இரகசியமான முறையில் காய் நகர்த்தல்களை அனுரா அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது.அதற்கமைய வடமாகாணசபையின் நிர்வாகத்தைக் கைப்பற்றுதல் மற்றும் உள்ளுராட்சி மன்றங்களின் சபைகளைக் கைப்பற்றுதல் போன்ற தந்திரோபாயமான நடவடிக்கைகளில் ஜே.வி.பி தீவிரமாக ஈடுபட்டுவருகின்றது.அனுரா அரசினால் முன்வைக்கப் பட்ட நிறைவேற்றமுடியாத முன்மொழிவுகளை நம்பி ஏமாந்து போகும் தமிழினம், இதுவரை காலமும் தமிழ் மக்களால் நிர்வகிக்கப்பட்டுவந்த உள்ளுராட்சி மன்றங்களையும், வடக்குக் கிழக்கு மாகாண சபைகளையும் பறிகொடுத்துவிட்டு தமிழர்களுக்காகப் போராடக்கூடிய சக்திகளையும் இழந்து நிர்க்கதியாக்கப்பட்ட நிலையில் ஈழத்தமிழர்கள் தள்ளப்பட்டுள்ளனர். இந்த நிலை ஏற்பட்டால் தமிழ் தேசியமும் சிதைக்கப்பட்டு தமிழர்களின் உரிமைக் குரல்களும் நசுக்கப்பட்டுவிடலாம் என்ற அச்சம் தமிழ் தேசிய உணர்வாரளர்களிடையே ஏற்பட்டுள்ளது.இதனால் இலங்கையில் தமிழ் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்,அவர்கள் பாரபட்சமாக நடத்தப்படுகின்றனர், தமிழர்கள் காணாமல் ஆக்கப்படுகின்றனர், அவர்களில் பலர் படுகொலைகள் செய்யப்படுகின்றனர் என்ற தமிழ் மக்களின் கோரிக்கைகள் மழுங்கடிக்கப்பட்டு ஐக்கிய நாடுகள் சபையிலும் தமிழர்களின் நியாயாமான கோரிக்கைகள் வலுவிழந்துவிடும்.
அதன்பின்னர் சிங்களத் தலைவர்களுடன்,சுமந்திரன் போன்ற தமிழ் அரசியல்வாதிகளும் சேர்ந்து கூறிவரும் ~ஏக்கிய இராட்சியம்~ என்ற ஒற்றையாட்சி அமைப்புக்குள்ளேயே தமிழர்கள் அடிமைகளாக வாழவேண்டி ஏற்படலாம் என்பதைச் சிந்தித்து தமிழ்மக்கள் சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுத்து விவேகத்துடன் செயற்பட முன்வரவேண்டும்.
ஆனால் எவ்வாறுதான் தமிழ் தேசியத்தைச் சிதறடிக்கும் வகையில் ஜே.வி.பி. அரசாங்கம் முயற்சிகள் எடுத்துவந்தாலும் சிங்கள தேசத்திற்கு அதிர்ச்சி ஏற்படுத்தும் வகையில் நவம்பர் 27ஆம் திகதி வடக்குக் கிழக்கு எங்கும் இடம்பெற்ற மாவீரர் நாளில் பெருந்திரளான மக்கள் கொட்டும் மழையிலும் உணர்வு பூர்வமாகக் கலந்து கொண்ட அந்த நிகழ்வானது தமிழ் தேசிய உணர்வை எவராலும் அழிக்கமுடியாது என்ற அந்தச் செய்தியை சர்வதேசத்திற்கு எடுத்துக் காட்டியுள்ளது.