தமிழ்ப் பொது வேட்பாளர் தெரிவு- சர்வதேசம் புரிந்துகொள்ள வேண்டும்: சி.வி.விக்னேஸ்வரன் கருத்து

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்துவதன் நோக்கம்,வடக்கு, கிழக்கு மக்களின் கருத்தை வெளிப்படுத்துவதும் இலங்கை மத்திய அரசாங்கத்திற்கும் சர்வதேச சமூகத்திற்கும் ஒரு செய்தியை தெரிவிப்பதும் ஆகும் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் ‘தமிழ் மக்களுக்காக ஒரு வேட்பாளரை முன்வைத்து இத்தனை நாட்களாக தமிழ் மக்களுக்கு காணப்படக்கூடிய பிரச்சினைகளை அந்த வேட்பாளர் மூலம் புரிய வைக்க வேண்டிய தேவை இருக்கிறது.

சர்வதேசமும் அவை தொடர்பில் அறிந்துக் கொள்ள வேண்டும். எங்களுக்கான உரிமைகளை நாங்கள் முன்வைக்க தீர்மானித்துள்ளோம்.  இந்த வருட ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளராக பா. அரியநேந்திரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். வடக்குக் கிழக்கின் 07 அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு இடையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னரே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

வெற்றி பெற முடியாவிட்டாலும் தமிழ் மக்களின் பலத்தை காட்ட இது ஒரு சிறந்த சந்தர்ப்பம்’ என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.