பொலிகண்டி தொடக்கம் பொத்துவில் வரையான தமிழ்ப் பொதுவேட்பாளர் பா.அரியநேத்திரன் பங்கேற்கும் ‘நமக்காக நாம்’ பிரசார பயணம் மன்னார் மாவட்டத்தில் மூன்று நாட்களாக முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் இன்று (04) புதன்கிழமை நிறைவடைந்துள்ளது.
தமிழ்ப் பொதுவேட்பாளரின் ‘சங்கு’ சின்னத்திற்கு ஆதரவு கோரி முன்னெடுக்கப்பட்டு வரும் தேர்தல் பரப்புரை நடவடிக்கைகள் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்ல்லைத்தீவு மாவட்டங்களை தொடர்ந்து மன்னார் மாவட்டத்தில் கடந்த 02 ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்பட்டது.
மன்னார் மாவட்டத்திற்கான பிரசார நடவடிக்கையின் போது செல்லும் இடமெங்கும் மக்கள் சிறப்பான வரவேற்பினை வழங்கியிருந்தனர். மன்னார் மறைவாட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகையை, பா. அரியநேத்திரன் சந்தித்து ஆசிபெற்றிருந்தார்.
தமிழப் பொதுவேட்பாளர் முன்னெடுப்பு காலப்பொருத்தமானது எனவும் தமிழ் மக்கள் எப்போதும் வாக்களிப்பதில் முழுமையான ஆர்வம் காட்டுவதில்லை என்பதனால் மக்களை வாக்களிக்க வைப்பதற்கு உண்டாக நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவது அவசியம் எனவும் இதன்போது ஆண்டகை பொதுவேட்பாளரிடம் தெரிவித்திருந்தார்.
மடுமாதா பங்குதந்தையுடனும் தமிழ் பொது வேட்பாளர் சந்தித்து ஆசிகளை பெற்றுக்கொண்டார். தொடர்ந்து வரலாற்று பிரசித்தி பெற்ற திருக்கேதீச்சரம் ஆலயத்திற்கு சென்று வழிபாட்டினை மேற்கொண்டதுடன் அப்பகுதியில் பொதுமக்களுடனான கலந்துரையாடலும் இடம்பெற்றிருந்தது.
தொடர்ந்து மன்னார் மாவட்டம் – ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்திற்கு சென்று தமிழின விடுதலைக்காக தம்முயிரை ஈகம் செய்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியிருந்தார். நமக்காக நாம் பிரசார பயணத்தின் போது மன்னார் மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு சென்ற பொது வேட்பாளர் பா.அரியநேத்திரனுக்கு மக்கள் சிறப்பான வரவேற்பினை வழங்கியிருந்தன்.
இதன்போது துண்டு பிரசுரங்கள் வழங்கியும், மக்கள் சந்திப்பு, தேர்தல் பரப்புரை கூட்டங்கள் மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகளை சந்தித்து ஆதரவு கோரும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.