தமிழ்ப்பொது வேட்பாளர் தொடர்பில் வடக்கு கிழக்கு மற்றும் மலையக மக்களுக்கு புலம் பெயர் அமைப்புக்கள் தெளிவு படுத்த வேண்டும்: -பா.அரியநேத்திரன் கோரிக்கை 

இலங்கையில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகள் இணைந்து, தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பு ஒன்றை உருவாக்கி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரனை தமிழ் மக்களுக்கான பொது வேட்பாளராக அறிவித்துள்ளன.

இலங்கையில் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களுக்கான பொது வேட்பாளராக ஒருவர் களமிறக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

இந்த நிலையில், பொது வேட்பாளர் பா.அரியநேத்திரன், ‘இலக்கு’ ஊடகத்திற்கு வழங்கிய  செவ்வி

நாடாளுமன்றத்தில் தமிழ்த் தேசியம் பேசும் கட்சிகள் அரச தலைவர் தேர்தலில் ஏன் சிங்களவர்களை ஆதரிக்கின்றனர்?

வடக்கு கிழக்கை பொறுத்தமட்டில் தமிழ் தேசிய கட்சிகள்  பல இருக்கிறன. கட்சிகளுக்கு அப்பால் இதில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள், ஜனாதிபதியாக வரக்கூடியவர்கள் சில வாக்குறுதிகளை வழங்குகின்றனர், அந்த வாக்குறுதிகள் நிமித்தமாக சில அபிவிருத்திகளை அந்த பிரதேசத்தில் இருக்கக்கூடிய மக்களுக்கு வழங்குகின்றபோது அதற்காக அவர்கள் சில பேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்வதென்பது, அவர்களை தமிழ்த்தேசியத்தில் இருந்து விடுபட்டவர்களாகப்பார்க்க முடியாது.

தமிழ் தேசியம் என வருகின்ற போது அவர்கள் கொள்கையில் உறுதியாக உள்ளனர். ஆனால் சில அபிவிருத்திகளுக்காக அவர்களுடன் இணைந்து செயற்படுகின்றனர்.

அதைப்பார்க்கும் போது  அவர்கள் தமிழ்த்தேசியத்தில் இருந்து விலகுவதாக தெரியும். ஆனால் அது அப்படியல்ல. மேலும் அவர்கள் பொது வேட்பாளர் என்ற கொள்கையையும் அவர்கள் ஆதரிப்பார்கள் என்று நினைக்கின்றேன். ஏனென்றால் இந்த பொதுக்கட்டமைப்புடன் சேர்ந்து பயணித்தவர்கள் தமிழ்த்தேசிய கட்சிகளாக இருக்கின்றவர்களும் இருக்கின்றார்கள். அவ்வாறனவர்கள் அதைவிட்டு விலகிச் செல்கின்ற போது மக்கள் அவர்களை வேறுவிதமாக இனம் காண்பார்கள் என்பதும் அவர்களுக்குத் தெரியும். எனவே தங்கள் பிரதேச மக்களின் அபிவிருத்திகளுக்காக ஜனாதி பதியின் பேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்கின்றனர். அதனால், அவர்கள் சிங்களவர்களை ஆதரிக்கின்றார்கள் என்று எடுத்துக்கொள்ள முடியாது,மேலும் அவர்களின் தமிழ்த்தேசியக்  கொள்கையிலும் மாற்றம் காண முடியாது.

மேலும் இதனை தொடர்ந்து அடுத்து தேர்தல், மாகாண சபையாகவோ அல்லது பாராளுமன்ற தேர்தலாகவோ வரலாம். ஆகவே அந்த தேர்தலிலும் பங்கு பற்ற வேடிய தேவை இருக்கின்ற காரணத்தினால் நிச்சயமாக வடக்கு கிழக்கு மக்களில் இருந்தோ அதன் கொள்கையில் இருந்தோ விலக மாட்டார்கள் என நான் நம்புகின்றேன்.

தமிழ் வேட்பாளரை புறக்கணித்துவிட்டு தமிழ்த் தேசியம் பேசுபவர்களுக்கு என்ன கூற விரும்புகிறீர்கள்?

தமிழ் தேசியம் என்பது கொள்கை ரீதியாக, கடந்த 75 வருட காலமாக தந்தை செல்வாவின்  அகிம்சை ரீதியான போராட்டம் பின்   ஆயுதப் போராட்டம் இடம்பெற்று 2009ம் ஆண்டு   மே18 -உடன் முள்ளிவாய்க்காலில் ஆயுதப்போராட்டம் மெளனிக்கப்பட்டு விட்டது.  அதன் பின் கடந்த 15 வருடங்களைப்பார்க்கின்ற போது, தமிழ்த்தேசிய தலைமைத்துவமும் சிதறி இருக்கின்றது.

முடிவுகள் எடுக்க முடியாத ஒரு நிலைப்பாடு இருக்கின்றது. சர்வதேச ரீதியாக பேச்சுவார்த்தைகளுக்கு செல்கின்றபோது, அங்கு சொல்லப்படுவது என்னவென்றால், ‘நீங்கள் பல கட்சிகளாக இருந்தாலும் இணைந்த வடக்கு கிழக்கு தொடர்பாக ஒரு குரலில் பேச வேண்டும், ஒரு தீர்வைக் கூற வேண்டும்’’ என்றுதான். ஆனால் அவ்வாறு செய்ய முடியாமல் இருக்கின்றது.

ஏனென்றால் அரசியல் கட்சிகளிலே அது குறித்து முடிவெடுக்க முடியாத நிலை  காணப்படுகின்றது, அவ்வாறன நிலையை சர்வதேசமும் தட்டிக்கழிக்கின்ற நிலை இருக்கின்றது. எனவே அவர்களையும் ஒன்று படுத்த வேண்டிய தேவை இருக்கின்றது. இந்த நிலையில் தான் தமிழ்தேசிய பொதுக்கட்டமைப்பை, பொது அமைப்புக்கள், தமிழ் அரசியல் கட்சிகள் இணைந்து உருவாக்கினார்கள். இதில் என்னை ஜனாதிபதி வேட்பாளராக  நியமித்தனர். இதன் மூலம்   ஒரு செய்தியைக் கொடுப்போமாக இருந்தால் எதிர்காலத்தில் சிதறி இருக்கின்ற தமிழ்த்தேசியக் கட்சிகளும் ஒருமித்து பயணிக்கக்கூடிய ஒரு வாய்ப்பு  இந்த தேர்தல் மூலம்  கிடைக்கும் என நம்புகிறோம்.

தமிழர் தேசத்தின் வேட்பாளரான நீங்கள் புலம்பெயர் மக்களுக்கு கூறும் செய்தி என்ன?

புலம்பெயர் தமிழர்களும் பல அமைப்புக்களாக செயற்பட்டு வருகிறார்கள்.  வடக்கு கிழக்கு இணைந்த ஒரு தீர்வு வர வேண்டும். ஒரு சுய நிர்ணய உரிமை கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் செயற் படுகின்றனர்,    அவர்களின் கனவுகளும் கூட ஈழத்தமிழருக்கு ஒரு விடிவு வர வேண்டும், மக்கள் நிம்மதியாக இருக்க வேண்டும் என்பதுதான். அதற்காக அவர்கள் புலம்பெயர் தேசங்களில் பல்வேறுபட்ட வேலைத்திட்டங்களை செய்துகொண்டு இருக் கின்றார்கள்.

ஈழத்தமிழர்களுக்கு பல இன்னல்கள் வரும்போது கூட அவர்கள்தான் பல உதவிகளை செய்துகொண்டு இருக்கின்றனர். ஆனால் அவர்கள் பயணிக்கின்ற பாதைகள் தான் பல்வேறு விதமாகஇருக்கின்றது.

ஆனாலும் அவர்களின் நோக்கம் ஒன்றாகத்தான் இருக் கின்றது. அதோடு புலம்பெயர் தேசங்களில் அவர்கள் முன்னெடுக்கின்ற அரசியல் பணிகளில் ஈழத்தமிழரின் ஒற்றுமையைக் காட்ட வேண்டிய தேவையும் அவர்களுக்கு இருக்கின்றது. ஆகவே நிச்சமாக புலம்பெயர்ந்த மக்கள் என்ன செய்ய வேண்டும் என்றால், பொது வேட்பாளர்  குறித்து எதிர்கால நன்மைகள் தொடர்பாக வடக்கு கிழக்கு மலையக மக்களுக்கு விழிப்புணர்வுகளை ஊட்டி வாக்களிக்க வழி செய்ய வேண்டும். அப்போது தான் சிறுபான்மை மற்றும்  தமிழ் பேசும் மக்களின் எதிர்கால கொள்கை களை வெற்றியடைச் செய்யலாம்.

மேலும் தமிழ்ப்பொது வேட்பாளருக்கு வாக்களிப்பதன் மூலம் தமிழருக்கான ஒரு தீர்வை நோக்கிச் செல்ல முடியும் என்ற செய்தியையும் தெளிவு படுத்த வேண்டும் என்பதுதான் என் வேண்டுகோள்.

மலையக மக்களுக்கு என்ன கூற விரும்புகின்றீர்கள்?

மலையக மக்களைப்பொறுத்தமட்டில், இலங்கை தமிழரசுக்கட்சியை தந்தை செல்வா உருவாக்கியதில் இருந்து தொடர்ச்சியாக மலையக மக்களுக்கு குரல் கொடுத்து வந்திருக்கின்றது.

அதே போல் ஏனைய தமிழ் அரசியல் கட்சிகளும் அவர்கள் இன்னல்களைச்சந்திக்கும் போது தொடர்ச்சியாகக் குரல் கொடுத்து வருகின்றனர். மேலும் தொண்டமான் அவர்களும் தந்தை செல்வாவுடன் இணைந்து பல வேலைத்திட்டங்களைச் செய்தார்.

வடக்கு கிழக்கு மக்களுக்காகவும் துணிந்து குரல் கொடுத்தார். ஆகவே    மலையக மக்களையும் அரவணைத்து செல்ல வேண்டும். அவர்களின் உரிமைகளுக்காகவும் நாம் குரல் கொடுக்க வேண்டும். ஆனால் எங்களுக்கு வாக்களியுங்கள் என்று மலையக மக்களை நாம் கோர முடியாது.

அவர்களுக்கும் தனித்துவம் உள்ளது. தனித்துவமான அரசியல் கட்சிகள் இருக்கின்றன. ஆகவே அந்தக்கட்சிகளைப் புறந்தள்ளிவிட்டு எமக்கு வாகளிக்க வேண்டும் என்று வலியுறுத்த முடியாது.   விரும்பினால், ‘எங்களுக்காக அவர்கள் குரல் கொடுப்பார்கள்’ என்ற நம்பிக்கை இருந்தால், நிச்சயமாக அவர்களும் எமக்கு வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை  எமக்கு இருக்கின்றது.