தமிழ் தேசிய பேரவைக்கும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்குமிடையிலான கூட்டணி இறுதி செய்யப்பட்டு்கடந்த 02/06/2025ம் திகதி இரு தரப்புக்குமிடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளதை அனைவராலும் பாராட்டப்படுகிறது.
உள்ளூராட்சிசபைகளில் ஆட்சியமைப் பதற்கான பேச்சில் இலங்கை தமிழ் அரசு கட்சி எடுத்த புத்திசாதுரியமற்ற நிலைப்பாட்டை தொடர்ந்து, தற்போது தமிழ் தேசிய பேரவை- ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிகளுக்கிடையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
கடந்த 2024ல் பாராளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வடக்கு கிழக்கில் பெற்ற செல்வாக்கின் அடிப்படையில் வடகிழக்கு தமிழ்தேசிய கட்சிகளை விழிப்படைய செய்ததன் நிமிர்த்தம் கடந்த 2025 உள்ளூராட்சி சபை தேர்தலில் சகல தமிழ்தேசிய கட்சிகளும் தேசிய மக்கள் சக்திக்கு எதிராக மேற்கொண்ட பிரசாரத்தால் எதிர்பார்த்த வெற்றி தேசிய மக்கள்சக்திக்கு கிடைக்கவில்லை.
இதற்கு பின்னரான ஒரு மக்களின் அழுத்த மாகவே தமிழ்தேசிய மக்கள் முன்னணியும், தமிழ் தேசிய பேரவையாக செயல்படும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் இணைந்து புரிந்துணர்வு உடன்படிக்கை செய்துள்ளதை பார்க்கலாம்.
ஆனால் இலங்கைத்தமிழ் அரசுக்கட்சி உள்ளூராட்சி சபைகளில் யாழ்பாண மாவட்டத்தில் எந்த ஒரு சபையையும் அறுதிப்பெரும்பான்மை பெறாதநிலையில் ஏற்கனவே ஜனநாய தமிழ்தேசிய கூட்டணியுடன் எந்த ஒரு பதவிகளையும் வழங் காமல் தமக்கு ஆதரவு வழங்குவார்கள் என தப்புக் கணக்கு போட்டனர்.
தமிழரசுக்கட்சி தமக்கு எந்த சபைகளிலும் தவிசாளர், பிரதி தவிசாளர் பதவிகள் வழங்க சம்மதிக்காத நிலையில் தற்போது தமிழ்தேசிய மக்கள் முன்னணியுடன் இணைந்து செயல்பட முன்வந்துள்ளனர்.
இது உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அதி காரத்தை மட்டும் பெறும் ஒரு கூட்டாக இல்லாமல் கொள்கைரீதியாகதொடர்ந்து அரசியல் தீர்வுக்கான வேலைத்திட்டங்களை முன்எடுக்கும் ஒரு கூட்டாக செயல்படுவதாகவே அவர்களுடைய புரிந்துணர்வு உடன்படிக்கை உள்ளது.
தேர்தல் கூட்டுகளுக்கு அப்பால் சகல தமிழ்த்தேசிய கட்சிகளும் கொள்கை அளவில் இணைந்து செயல்படவேண்டும் என்பதே சகல தமிழ் மக்களின் எதிர்ப்பார்ப்பாகும்.தற்போது உடன்பாடு காணப்பட்ட தமிழ்தேசிய கட்சிகளின் கூட்டுக்களை போன்று ஏற்கனவே தமிழீழ விடுதலைப்புலிகளின் காலத்
தில் 2001, அக்டோபர்,20ல் தமிழ்தேசிய கூட்ட மைப்பு எனும் பெயரில் தமிழர் விடுதலை கூட்டணி, அகில இலங்கை தமிழ் காங்கிரஷ், தமிழீழ விடுதலை இயக்கம், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ஆகிய நான்கு கட்சிகளுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் தேர்தல் கூட்டாக மட்டும் ஆரம்பிக்கப்பட்டு 2001, டிசம்பர், 05ல் இடம்பெற்ற பொதுத்தேர்தலில் தமிழர் விடுதலை கூட்டணி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு 15, ஆசனங்களை பெற்றது, அந்த 15, பாராளுமன்ற உறுப்பினர்களில் 14, பேர் விடுதலைப்புலிகளை ஏகபிரதிநிதிகளாக ஏற்றனர். கிளிநொச்சியில் இருந்து தெரிவான ஆனந்தசங்கரி மட்டும் அதனை ஏற்காமல் முரண்டுபிடித்தமையால் ஏற்பட்ட முரண்பாட்டால் 2004, பெப்ரவரியில் அவர் தமிழ்தேசிய கூட்டமைப்பில் இருந்து வெளி யேற்றப்பட்டார். அதனால் அவர் அங்கம் வகித்த தமிழர் விடுதலைக்கூட்டணியையும் நீதிமன்றில் நிறுத்தியதால் அந்த கட்சியும் அவரும் தொடர்ந்து தமிழ்தேசிய கூட்டமைப்பில் செயல்பட வில்லை ஆனந்தசங்கரிதான் தமிழ்தேசிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறிய முதலாவது கட்சியும் நபருமாகும்.
ஆனால் தமிழர் விடுதலை கூட்டணியில் இருந்த சம்பந்தன், மாவை சேனாதிராசா, ஜோசப்
பரராசசிங்கம், ரவிராஜ், போன்ற முக்கிய உறுப் பினர்கள் இலங்கைத்தமிழ் அரசுக்கட்சியின் உறுப்பினர்களாகவும் இருந்தனர் என்ற அடிப் படையில் அவர்கள் தொடர்ந்தும் தமிழ்தேசிய கூட்டமைப்பாக செயல்பட்டனர்.
இதனால் 2004, பொதுத்தேர்தலில் தேர்தல் கட்சியாக இலங்கை தமிழ் அரசுக்கட்சியும், அதன் வீட்டுச்சின்னத்திலும் தேர்தலில் போட்டியிட விடு தலைப்புலிகளின் தலைமை கட்டளை இட்டது.
2004, ஏப்ரல், 08, பொதுத்தேர்தலில் 22, பாராளுமன்ற உறுப்பினர்கள் வடகிழக்கில் தெரி வாகி 2010, வரை எந்த முரண் பாடுகளும் இன்றி தொடர்ந்தன.
2009, மே,18ல் முள்ளிவாய்கால் மௌனத் திற்கு பின்னர் 2010, ஜனவரி,26ல் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் தமிழ்த்தேசிய கூட்ட மைப்பில் இருந்து இரண்டாவதாக பிழவு ஏற் பட்டது.தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் இருந்து அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் பத்மினி சிதம்பரநாதன், செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து பிரிந்து தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியை ஆரம்பித்தனர் அது 2010, ல் இருந்து இன்றுவரையும் அவர்கள் சைக்கிள் சின்னத்தில் தேர்தல் அரசியலை தொடர்கின்றனர்.
2011,யூலை,22ல் வடமாகாண உள்ளூராட்சி சபைகளின் தேர்தலில்தான் தமிழ் மக்கள் விடுதலை கழகம் (புளட்) தர்மலிங்கம் சித்தாத்தன் கட்சியும், மீண்டும் தமிழர் விடுதலை கூட்டணி ஆனந்தசங்கரியும் தமிழ்தேசிய கூட்டமைப்பில் இணைந்தனர். ஆனால் 2013, செப்டம்பர், 21ல் வடமாகாண சபை தேர்தலில் கிளிநொச்சி மாவட்டத்தில் ஆனந்தசங்கரி போட்டியிட்டு தோல்வியடைந்து அதனோடு மீண்டும் தமிழ்தேசிய கூட்டமைப்பில் செயல்படவில்லை.
2011, தொடக்கம் 2020, வரை தமிழ்தேசிய கூட்டமைப்பில் இலங்கை தமிழ் அரசுக்கட்சி, ரெலோ, ஈபிஆர்எல்எவ், புளட் ஆகிய நான்கு கட்சிகளும் சேர்ந்து இயங்கின. 2020, ஆகஷ்ட்,20ல் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் ஈபிஆர்எல்எவ் சுரேஷ் பிரமச்சந்திரன் கட்சி தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் இருந்து விலகியது.
எஞ்சிய தமிழரசுகட்சி, ரெலோ, புளட் 2020, தேர்தலில் போட்டியிட்டு 10, பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவானார்கள். 2023ல் உள்ளூராட்சி சபை தேர்தல் அறி விப்பு வந்தபோது தமிழரசுக்கட்சி மத்தியகுழு தேர்தல் முறையினை காரணம் காட்டி தனித் தனியாக போட்டியிட்டு சபை ஆட்சிகளை சேர்ந்து அமைக்கலாம் என்ற முடிவை எடுத்தபோது அதனை ஏற்காமல் புளட், ரெலோ வெளியேறி ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி என்ற பெயரில் ஈபிஆர்எல்எவ்வும் உள்வாங்கி இயங்குகின்றனர்.
தமிழ்த்தேசிய கட்சிகள் கடந்த காலங்க ளில் இவ்வாறுதான் தேர்தல் காலங்களில் ஒற்று மையின்றி வேற்றுமையாக செயல்பட்டன.இந்த வேற்றுமையின் பிரதிபலிப்பு 2024, பொதுத்தேர்தலிலும், 2025, உள்ளுராட்சி சபை தேர்தல்களிலும் கற்றுத்தந்த பாடங்கள்தான் தற்போதைய கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்தேசியமக்கள்முன்னணி, மற்றும் அவர்களுடன் இணைந்த தமிழ்தேசிய பேரவை என்பன ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணியுடன் இந்த புரிந்துணர்வு உடன்படிக்கை கடந்த 02/06/2024ல் ஏற்படக்காரணமாகியுள்ளது.
இனியும் பிரிவுகள், பிழவுகள் ஏற்படாமல் இலங்கைத்தமிழ் அரசுக்கட்சியும் இவர்களுடன் இணைந்து ஒரு குரலில் தமிழ்த்தேசிய அரசியலை சர்வதேசரீதியாக செயல்பட வேண்டும் என்பதே உலகத்தமிழர்கள், ஈழத்தமிழர்கள் எல்லோரின் எதிர்பார்ப்பு.
ஆனால் சபைகளை கைப்பற்றும் பதவிக்காக தமிழரசுக்கட்சி ஈபிடிபி தலைவர் டக்ளஸ் தேவானந்தாவுடனும் பேசுவது அரசியல் கொள்கையா? ஆட்சிக்கொள்கையா? என்பது சிந்திக்கவேண்டியது, பிள்ளையானைப்போன்ற ஒருவராகவே தமிழ்தேசிய அரசியல் பரப்பில் உள்ளவர் டக்ளஸ் என்பதை மறுதலிக்கமுடியாது.
ஆட்சி அதிகாரங்களுக்காக பழையவைகளை மறக்கும் காலமாக தமிழ்தேசிய அரசியல் உள்ளது. அதில் ஒன்றாக தமிழர் விடுதலை கூட்டணியில் தமிழரசுக்கட்சிக்காறர்கள் எல்லோரும் வாருங்கள் தமது கட்சியை அப்படியே தருகிறோம் என கடந்த வாரம் ஆனந்தசங்கரி கூறியதையும் நோக்க வேண்டும்.