தமிழ்த்தேசியம் என்பது ஈழத்தமிழர்களுடைய அரசியலில் பின்னிப்பிணைந்த ஒன்று அப்படி பின்னிப்பிணைவதற்கு அத்திவாரம் இட்டவர் தந்தை செல்வாதான்.
அவரின் சிந்தனையில் உதித்த வெளிப் பாடாகவே 1949, டிசம்பர், 18இல்் உருவாகி கடந்த 2024, டிசம்பர்,18இல் 75,வருட வரலாற்றை கொண்ட தாய்க்கட்சியாக கருதப்படும் இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியாகும்.
தந்தை செல்வா ஆரம்பித்து வளர்த்த இலங்கைத்தமிழ் அரசு கட்சியின் இன்றைய நிலைமையை எண்ணி தமிழினம் அழுவதா, சிரிப் பதா? அந்த கட்சியின் தலைவர், செயலாளர் உள்ளிட்ட பதவி போட்டிகளும் சண்டைகளும் ஏற்படுவதோடு, பதவிக்காக இரு நீதிமன்றங்களை நாடும் நிலைமையும் காணப்படுகிறது. இத்தகைய கட்சியின் ஒற்றுமையின்மையால் கடந்த 2024, ஜனவரி,21இல் கட்சி தலைவர் போட்டியில் தொடங்கிய முரண்பாடு 2024, டிசம்பர், 28இல் கட்சி தலைவர் மாவை சேனாதிராசாவை வெளியேற்றும் நிலையில் அந்த கட்சி நிலைமை சென்றுள்ளது.
பதவிப்போட்டியின் உச்ச நிலை நீதிமன்றத் தில் நான்கு வழக்குகளுடனும், கட்சியில் உள்ள சிரேஷ்ட உறுப்பினர்கள் வெளியேறுவதும், வெளியேற்றப்படுவதும், ஒற்றுமை இன்மையால் சேர்ந்து கொள்கை ரீதியாக ஒருமித்த முடிவை எடுக்கமுடியாத இரண்டு அணிகளாக சிதை வடைந்துள்ளன.
கடந்த 2024இல் இலங்கையில் இரண்டு முக்கிய தேர்தல்கள் இடம்பெற்ற போது தமிழரசுக் கட்சியால் ஒருமித்து ஒருமுடிவுடன் கட்சியில் உள்ள அரசியல்குழுவோ, மத்தியகுழுவோ முடிவு எடுக்க முடியாமல் காலத்தை கடத்தி ஜனாதிபதி தேர்தலில் தமிழ்தேசிய கொள்கையை முன்னிறுத்தி தமிழ் பொதுவேட்பாளராக பா.அரியநேத்திரனை சுயேட்சையாக வேட்பாளராக வேட்பு மனு தாக்கல் செய்த பின்னரே 15, நாட்கள் கடந்து அந்த பொதுவேட்பாளரை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காகவே சஜீத்பிரமதாசாவை ஆதரிப்பதாக 42, மத்தியகுழு உறுப்பினர்களை கொண்ட தமி ழரசுக்கட்சியில் 16, உறுப்பினர்கள் சேர்ந்து முடிவை எடுத்தனர்.
ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் 15.08.2024ல் இடம்பெற்றது. அதில் ஒரு வேட்பாளராக 82, சிவில் அமைப்புகளும், 7, தமிழ்த்தேசிய கட்சிகளும், சகல புலம்பெயர் அமைப்புகளும், யாழ்ப்பாணம் கிழக்கு பல் கலைக்கழக மாணவர் அமைப்பு, முன்னாள் போராளிகள், தமிழ் வர்த்தக சங்கம், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் என சகல தமிழ் அமைப்புகளும் எடுத்த முடிவால் தமிழ் பொது வேட்பாளராக பா.அரியநேத்திரன் சங்கு சின்னத்தில் சுயேட்சையாக வேட்பு மனுவை தாக்கல் செய்திருந்தார்.
தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு 16, உறுப்பினர்கள் சஜீத் பிரமதாசாவை ஆதரிக்கும் தீர்மானம் வவுனியாவில் 01.09.2024இல் எடுக் கப்பட்டது. இந்த கூட்டத்தில் தலைவர் மாவை சேனாதிராசாவோ, புதிய தலைவர் சிறிதரனோ அன்று கலந்து கொள்ளவில்லை.
ஜனாதிபதி தேர்தல் 21.09,2024 ல் இடம் பெற்றது தேர்தல் முடிவில் வடக்கு கிழக்கில் உள்ள எட்டு மாவட்டங்களில் இருந்து 226343, வாக்குகளை பா.அரியநேத்திரன் பெற்று இலங்கையில் 5, வது இடத்தை பெற்றது மட்டுமல்ல வடகிழக்கு தமிழ் மக்கள் இணைந்த வடகிழக்கில் உறுதியாக உள்ளனர் என்பது காட்டபட்டது.
ஜனாதிபதியாக அநுர தெரிவானார்.
ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரை தமிழ் மக்கள் ஆதரித் தமையால் அதனால் மூன்று விடயத்தை இலங்கை அரசுக்கும், சர்வதேசத்துக்கும் தமிழ் பொது வேட்பாளரின் தேர்தல் முடிவு காட்டப்பட்டது.
- 2006இல் இணைந்த வடகிழக்கு மாகாணத்தை ஜே.வி.பி கட்சியால் சட்ட ரீதியாக நீதிமன்றத்தால் பிரிக்கப்பட்டாலும் வடகிழக்கில் உள்ள தமிழ் மக்களின் மனங்களால் அதை பிரிக்க முடியாது என்பது நிருபிக்கப்பட்டது.
- வடக்கு கிழக்கு என்ற பிரதேசவாதம் (மட்டக்
களப்பான், யாழ்ப்பாணத்தான்) என்ற பிரதேசவா தம் முறியடிக்கப்பட்டது, மட்டக்களப்பை சேர்ந்த ஒருவருக்கு வடக்கில் யாழ்ப்பாணம், வன்னி மாவட்டங்களில் மட்டும் 116000, வாக்குகள் கிடைத்து பிரதேசவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
- போர் முடிந்து 15, வருடங்கள் கடந்தாலும் வடகிழக்கு தமிழ்மக்கள் சமஷ்டி அடிப் படையிலான அரசியல் தீர்வில் இன்றும் உறுதி யாக உள்ளனர் என்பது மீண்டும் ஜனநாயக ரீதியாக நிருபிக்கப்பட்டது.
இந்த மூன்று விடயங்களும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் மூலம் அடைந்த வெற்றி கள் என்பதை மறுதலிக்க முடியாது.
ஜனாதிபதி தேர்தலில் இலங்கை தமிழ் அரசுக்கட்சி மத்தியகுழுவில் சிலரால் எடுக்கப் பட்ட தீர்மானத்தின்படி அவர்களால் ஆதரித்த சஜீத் பிரமதாசா தெரிவாகவில்லை. அவர்தான் ஜனாதிபதியாக தெரிவாகுவார் என்றே தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களால் பிரசாரம் செய்யப்பட்டது. அது தவறான கணிப்பீடாகவே தேர்தல் முடிவுகள் அமைந்தது.
ஜனாதிபதி தேர்தல் முடிந்து புதிய ஜனாதி பதியாக தெரிவான தேசிய மக்கள் சக்தி அநுரகுமார திசநாயக்கா பதவி ஏற்று மூன்று தினங்களால் பாராளுமன்றத்தை கலைத்து தேர்தலுக்கான வர்த மானி அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அதனால் பொதுத்தேர்தலில் வேட்பாளர் களை தெரிவு செய்வதற்கான தமிழரசுக்கட்சி மத்தியகுழுவால் 01,10,2024இல் தேர்தல் நியமனக்குழு 11 பேர் தெரிவு செய்யப்பட்டனர்.
- மாவை சேனாதிராஜா, யாழ்ப்பாணம்.
- ப.சத்தியலிங்கம், வவுனியா.
- எம்.ஏ.சுமந்திரன்,யாழ்ப்பாணம்.
- சி.சிறிதரன்,யாழ்ப்பாணம்.
- இரா.சாணக்கியன்,மட்டக்களபு.
- த.கலையரசன்,அம்பாறை.
- ச.குகதாசன்.திருகோணமலை
- சி.வி.கே.சிவஞானம்,யாழ்ப்பாணம்.
- கி.துரைராஜசிங்கம்,மட்டக்களப்பு.
- கி.சேயோன்,மட்டக்களப்பு.
- ரஞ்சினி கனகராசா, மட்டக்களப்பு ஆகியோர்.
இந்த 11, பேரில் 07, பேர் வேட் பாளராக தேர்தலில் போட்டியிட்டனர் (சத்திய லிங்கம்,சுமந்திரன்,சிறி தரன், சாணக்கியன், கலை யரசன், குகதாசன், சேயோன்)
இந்த தேர்தல் நியமனக்குழு கூட்டம். 05,06.10.2024 ஆகிய இரண்டுதினங்கள் வவுனியா விலும், திருகோணமலையிலும் கூடி ஐந்து மாவட்டங்களுக்குமான வேட்பாளர்களை அறிவித் தனர்.
இந்த நியமனக்குழுவால் தெரிவான பல வேட்பாளர்களில் கடந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளரை ஆதரித்தவர்களையும் அதே நியமனக்குழுவே தெரிவு செய்தது அதில் முக்கியமான நால்வர் இப்போது பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டனர்.
1, சிவஞானம் சிறிதரன்- யாழ்ப்பாணம்.
2,ஞானமுத்து ஶ்ரீநேசன்-மட்டக்களப்பு.
3, சதாசிவம் குகதாசன்-திருகோணமலை.
4,கவிந்திரன் கோடீஷ்வரன்-அம்பாறை.
வேட்பு மனுதாக்கல் 04.10,2024 இடம்பெற்றது.வேட்பு மனுவில் கையொப்பம் இட்டவர் பதில் பொதுச்செயலாளராக உள்ள ப. சத்தியலிங்கம். இந்த பொதுத்தேர்தலின்போது தலைவராக இருந்த மாவை சேனாதிராசாவும் நியமனக்குழுவின் தலைவராகவும் இருந்தார். அவரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரை ஆதரித்து கிளிநொச்சி மேடையில் உரையாற்றியதுடன் யாழ்ப்பாணத்திலும் சில கலந்துரையாடல்களை நடத்தினார்.
ஆனால் ஜனாதிபதி தேர்தல் தினத்தில் இரகசிய வாக்கெடுப்பை நடத்திவிட்டு உடனே ஊடகத்தில் மூன்று சின்னங்களுக்கு தாம் புள்ளடி இட்டதாக ஒரு கோமாளிக்கூத்தை அரங்கேற்றி னார்.
பொதுத்தேர்தல் 14.11.2024,ல் இடம்பெற் றது 159, ஆசனங்களுடன் மிகப்பெரிய வெற்றியை தேசிய மக்கள் சக்தி பெற்றது. மிகப்பெரிய தோல்வியை தமிழ்த்தேசிய கட்சிகள் வடக்கில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் சந்தித்தது.
அதற்கான மூல காரணமாக இலங்கை தமிழ் அரசுக்கட்சியில் உள்ள சுமந்திரன் குழு மீது கொண்ட அதிருப்தியும், தமிழ்த்தேசிய கட்சிகள் மீது கொண்ட வெறுப்பும் என்பதே உண்மை என அரசியல் ஆய்வாளர்களுடைய கருத்துக்களில் இருந்து அறியலாம்.
தேர்தல் 14/11/2024இல் முடிந்தபின்னர் ஏறக் குறைய 45,நாட்களுக்கு பின்னர், ஜனாதிபதி தேர்தல் 21/09/2024இல் இடம்பெற்று சரியாக 3, மாதமும்,7 நாட்களும் (97,நாட்கள்) கடந்த நிலையில் தான் இறுதியான 28/12/2024, மத்தியகுழுக்கூட்டத்தில் தலைவர் மாவை சேனாதிராசாவின் தலைவர் பதவியை பறித்து சி.வி.கே.சிவஞானத்துக்கு வழங்கப்பட்டு மாவை சேனாதிராசா அந்த கூட்டத்தில் கலந்து கொள்ளாத நிலையில் அவரை திருப்திப்படுத்துவதற்காக அரசியல் குழு தலை வராக நியமிக்கப்பட்டது.
அதனோடு மத்தியகுழுவில் இருந்து ஜனாதிபதி தேர்தலில் தமிழ்பொது வேட் பாளரை ஆதரித்தவர்களுக்கு எதிராக விளக்கம் கோருவது என்ற தீர்மானமும், பொதுத் தேர்தலில் ஊடக அறிக்கை கட்சிக்கு மாறாக செயல்பட்டார் என்ற காரணத்தையும், அன்றைய மத்தியகுழுக்கூட்டத்தில் ஊடக சந்திப்பை கட்சிக்கு மாறாக தெரிவித்தமையால் முல்லைத் தீவை சேர்ந்த சிவமோகன் என்பவரை கட்சி யில் இருந்து இடை நிறுத்தும் தீர்மானம் மேற் கொள்ளப்படுகிறது.
இதேவேளை தமிழ் பொது வேட்பாளராக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட பா.அரிய நேத்திரனை விலக்கலாம் என தீர்மானம் எடுத்ததாகவும் ஊடகங்களில் செய்திகளை காணமுடிந்தது. இதுவரை பதில் பொதுச்செயலாளர் உத்தியோகபூர்வமாக அவருக்கு எழுத்து மூல மாக கடிதம் அனுப்பவில்லை. அந்த கடிதம் கிடைத்தபின்னரே அடுத்த நிலைப்பாடுகளை அறியலாம்.
இப்போது பலராலும் எழுப்பபடும் கேள்வி பாராளுமன்ற உறுப்பினராக தெரிவான சிறிதரன், ஶ்ரீநேசன், குகதாசன், கோடீஷ்வரன் ஆகியோர் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளரை ஆதரித்தமையால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் என சிலர் சமூக ஊடகங்களில் பதிவிடுகின்றனர்.
அப்படியானால் ஜனாதிபதி தேர்தலில் தமிழ்பொதுவேட்பாளரை ஆதரித்த இவர்களை பொதுதேர்தலில் வேட்பாளாராக நியமித்த நிய மனக்குழுவும், மத்தியகுழுவும் இவர்களை வேட்பாளராக எந்த அடிப்படையில் தெரிவு செய்தனர். அதோடு தேர்தல் நியமனக்குழுவிலும் தமிழ் பொதுவேட்பாளரை ஆதரித்த சிறிதரன், குகதாசன் ஆகிய இருவரையும் ஏன் சேர்த்தனர் கட்சிக்கு முரணானவர்கள் என்று தெரிந்தும் அவர்களை வேட்பாளராக நியமிக்கும்வரை இவர்கள் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரை ஆதரித்த விடயம் தெரியவில்லையா?
அதனோடு பொதுத்தேர்தலுக்கு பின்னர் தேசிய பட்டியல் நியமனத்தை யாருக்கு வழங் கலாம் என ஆராயும் அரசியல் குழுவில் தமிழ் பொதுவேட்பாளரை ஆதரித்த சிறிதரன், குகதாசன் இருவரும் சேர்ந்து அல்லவா பதில் பொதுச் செயலாளர் வவுனியா மாவட்ட தமிழரசு கட்சி தலைவர் 4033, வாக்குகளை மட்டும் பெற்ற சத்தியலிங்கத்துக்கு தேசிய பட்டியல் நியமன பாராளுமன்ற உறுப்பினர்களாக நியமித்துள்ளனர். அப்படி இருக்கும்போது கட்சியின் முடிவை காலம்தாழ்த்தி எடுத்து இப்போது மூன்று மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்த தமிழரசுக்கட்சி உறுப்பினர்கள் மீது ஆனால் அவர்கள் கடந்த பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சிக்கே பகிரங்கமாக ஆதரவு வழங்கினர். தமிழ் பொதுவேட்பாளராக போட்டி யிட்ட பா.அரியநேத்திரனும் வெளிப்படையாக பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சிக்கே பிரசாரம் செய்தார் அதன்வேட்பாளர் ஞா.ஶ்ரீநேசனுக்கு ஆதரவாக செயல்பட்டார். இதுபோன்றே ஜனாதி பதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்த தமிழரசுக்கட்சி உறுப்பினர்கள் வடகிழக்கில் உள்ள நூற்றுக்கணக்கானவர்கள் பொதுத்தேர்தலில் தமிழரசுகட்சி வேட்பாளர் களையே ஆதரித்தனர்.
இதில் உண்மை தன்மை என்ன வெனில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழரசுக்கட்சி வேட்பாளரான ஞா.ஶ்ரீநேசனை ஆதரித்த மட்டக்களப்பு மாவட்ட தமிழரசுக் கட்சி உறுப்பினர் களுக்கு மட்டும் 20, பேருக்கு விளக்கம் கேட்டு பதில் பொதுச்செயலாளர் கடிதங்களை அனுப்பி இருப்பது உண்மையில் தனி நபர்களை திருப்திப் படுத்தும் முடிவாகவே கருதவேண்டி உள்ளது.
ஶ்ரீலங்கா முஷ்லிம் காங்கிரஷ் கட்சிமூலம் கடந்த 2020இல் பாராளுமன்ற உறுப்பினராகிய ஏறாவூர் நஷீர் அகமட் பாராளுமன்றத்தில் கட்சி யின் தீர்மானத்தை மீறி அரசாங்கத்துக்கு ஆதரவு தெரிவித்தமையால் அவர் 2022, ஏப்ரல்,22,ல் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு பின்னர் அவருடைய பாராளுமன்ற பதவியும் பறிபோனது.
அதுபோல் 2022, மே,18இல் நிபந்தனையற்ற ஆதரவை வழங்கத் தயார் எனக்கூறி ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார இருவரும் ஜனாதிபதி ரணிலுடன் இணைந்தனர்.
இவர்களுக்கு எதிராக அந்த கட்சிகள் மேற்கொண்ட தீர்மானம் சட்ட ரீதியானது என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்தத் தீர்ப்பு காரணமாக மூவரும் நாடாளுமன்ற உறுப் புரிமையை இழந்தனர்.
இந்த வெற்றிடங்களுக்கு அந்த கட்சியின் விருப்பு வாக்கு அடிப்படையில் அடுத்த நிலையில் உள்ளவர்களை தேர்தல் ஆணைக்குழு அறிவித்தது.
இந்த சட்டம் தற்போதய தமிழரசுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எக்காரணம் கொண்டும் ஏற்புடையது அல்ல பாராளுமன்ற உறுப்பினராக பதவியில் இருந்து ஒருவர் கட்சிக்கு எதிராக செயல்பட்டால் மட்டுமே இது சாத்தியம், வேட்பாளராக தேர்தலுக்கு முன்னம் கட்சி தீர்மானத்தை மீறிய ஒருவருக்கு கட்சி செயலாளர் வேட்பு மனுவில் போட்டியிட தேர்தல் நியமனக்குழு அனுமதி வழங்கியபின்னர் அவர் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவானால் பாராளுமன்ற உறுப்பினராவதற்கு முன்னம் கட்சி தீர்மானத்துக்கு எதிராக செயல்பட்டவர்களை வேட்பாளராக நியமித்திருக்க கூடாது.
வேட்பாளராக ஏற்று கட்சி செயலாளர் வேட்பு மனுவில் கையொப்பம் இட்ட பின்னர் அதே கட்சி செயலாளர் இவர்களை கட்சியில் இருந்து நீக்க அதிகாரம் இல்லை என்பதே சட்ட ரீதியான உண்மை.
இந்த உண்மைகள் தெரியாமல் சிலர் தமிழரசுக்கட்சியில் இப்போதுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் நீக்கப்படுவார்கள் என பகல் கனவு காண்பது தவறு.