Home ஆய்வுகள் தமிழினம் கலங்கி நிற்க, தென்னிலங்கையில் விழா கொண்டாடியதை இன்றும் மறக்க முடியவில்லை – பா.அரியநேத்திரன்

தமிழினம் கலங்கி நிற்க, தென்னிலங்கையில் விழா கொண்டாடியதை இன்றும் மறக்க முடியவில்லை – பா.அரியநேத்திரன்

முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தையொட்டிய எமது சிறப்பிதழில் வெளிவந்த அனுபவப் பகிர்வுக் கட்டுரை

முள்ளிவாய்க்காலில் இலங்கை அரசு மேற்கொண்ட இன அழிப்புப் போரின் இறுதி நாட்களில் தமிழ் மக்களின் பிரதிநிதிகளான தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் மற்றும் தாயகத்திலும் உலகம் எங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களும் நாதியற்று கலங்கி நின்ற போது, தென்னிலங்கையும், அதன் ஆதரவு சக்திகளும் பல பத்தாயிரம் மக்களை படுகொலை செய்து நிறைவுக்கு கொண்டு வந்த போரின் மூலம் ஒரு இனத்தை அடிமைப்படுத்தியதை எவ்வாறு கொண்டாடினார்கள் என்பது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் அவர்கள் ‘இலக்கு’ ஊடகத்திற்கு வழங்கிய கருத்து வருமாறு:

2009ஆம் ஆண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் 22 பேரும் சொந்த மாவட்டங்களான வடக்கு கிழக்கிற்கு செல்ல முடியாமல் கொழும்பில் மாதிவெல பாராளுமன்ற விடுதியில் முடங்கி இருந்த காலம்.

ஆம்! 2009, மே மாதம் 18ஆம் திகதி திங்கட்கிழமை, அன்று பி.ப 1, மணிக்கு வானொலி, தொலைக்காட்சி செய்திகளில் எல்லாம் முள்ளிவாய்கால் போர் மௌனித்ததாகவும், விடுதலைப் புலிகளின் தலைவர் கொல்லப்பட்டதாகவும் இராணுவத் தளபதி சரத் பொன்சேக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார் என்ற செய்தியே அரச, தனியார் ஊடகங்களில் வெளிவந்த வண்ணம் இருந்தன.

Airport 1 தமிழினம் கலங்கி நிற்க, தென்னிலங்கையில் விழா கொண்டாடியதை இன்றும் மறக்க முடியவில்லை - பா.அரியநேத்திரன்

நாங்கள் வெளியில் செல்லாமல் விடுதியில் மௌனமாக இருந்தோம். ஜனாதிபதி மகிந்த ராசபக்ச அவர்கள் மே,18இல் ஜோர்டான் நாட்டில் இருந்து கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வந்திறங்குகிறார். செங்கம்பளம் விரிக்கப்பட்டு, அவருக்கு வரவேற்பு நடைபெறுகிறது. விமானத்தில் இருந்து வந்திறங்கிய ஜனாதிபதி, விமான நிலைய முற்றத்தை முட்டுக்காலில் நின்று தொட்டுக் கும்பிடுகிறார். (வணக்கம் செலுத்துகிறார்) இந்தக் காட்சி நேரடி ஒளிபரப்பாக ரூபவாஹினியில் காட்டப்படுகிறது. அடிமையாக இருந்த ஒருநாடு விடுதலை அடைந்ததாக அந்த காட்சி அமைகிறது. “பயங்கரவாதம் நாட்டை விட்டு முழுமையாக ஒழிக்கப்பட்டு விட்டது” என ஜனாதிபதி கூறினார். பின்னர் ஜனாதிபதி மாளிகையில் முப்படைத் தளபதிகளை அழைத்து மாநாடு நடத்தப்படுகிறது.

ஊர் பக்கம் என்ன நடக்கிறது என்று அறிய தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டபோது, காத்தான்குடி, ஓட்டமாவடி, ஏறாவூர் எல்லாம் முஸ்லிம் இளைஞர்கள் பட்டாசு கொளுத்தி மகிழ்ச்சி ஆரவாரம் செய்வதாகவும், தமிழ்க் கிராமங்கள் எல்லாம் வெறிச்சோடிக் கிடப்பதாகவும் ஊர் செய்திகள் தெரிவித்தன.

மறுநாள் மே, 19, செவ்வாய் கிழமை, பாராளுமன்றத்தில் ஜனாதிபதி விசேட உரையாற்றுவதற்கான விபரங்கள் அடங்கிய கையேடு ஒன்றை சபாநாயகர் சகல பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் வழங்குகின்றார். பாராளுமன்றத்தில் வெற்றி உரையாற்றுவதாக அறிவிக்கப்பட்டது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த 22 பாராளுமன்ற உறுப்பினர்களும் அன்று பாராளுமன்றம் செல்லவில்லை. மாதிவெல விடுதியில் செய்வது அறியாது திகைத்து நின்றோம்,

அன்று 2009,மே.19, காலை 9, மணிக்கு பாராளுமன்றத்தில் சபாநாயகரின் சபாபீட ஆசனத்தில் ஜனாதிபதி அமர்கிறார். ஆளும்கட்சி, எதிர்கட்சி சிங்கள, முஸ்லிம், தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் மகிழ்ச்சி கலந்த புன்முறுவலுடன் பாராளுமன்றில் ஆரவாரம் செய்கின்றனர்.

உடனே அம்பாறை மாவட்ட அக்கரைப்பற்றுத் தொகுதிப் பாராளுமன்ற உறுப்பினரும், அமைச்சருமான அதாவுல்லா தமது கையில் இருந்த பொன்னாடையை எடுத்துக் கொண்டு விரைவாக சென்று சபாநாயகர் ஆசனத்தில் இருந்த ஜனாதிபதி மகிந்த ராசபக்சவுக்கு போர்த்தி கட்டித் தழுவி தமது மகிழ்ச்சியைத் தெரிவிக்கிறார்.

ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் மேசையில் தட்டி தமது ஆதரவை வெளிக் காட்டுகின்றனர். இக்காட்சிகள் தொலைக்காட்சியில் நேரடியாகக் காட்டப்படுகிறது. நாம் தொலைக்காட்சியை பார்த்துக் கொண்டு இருந்தோம்.

ஜனாதிபதி வெற்றி உரையாற்றுகிறார். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இறந்து விட்டதாக உத்தியோகபூர்வமாக அன்று பாராளுமன்ற சபாநாயர் ஆசனத்தில் இருந்து ஜனாதிபதி அறிவித்து விட்டு, இன்று பி.ப. 1, மணிக்கு அவரின் உடலம் நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சியில் காட்டப்படும் எனவும் கூறுகின்றார்.

சரியாக 1.30, மணிக்கு பிரபாகரன் எனக் கூறப்பட்ட சடலம் தொலைக்காட்சியில் காட்டப்பட்டு இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் கமல் குணரெட்ண தலைமையிலான 53ஆவது படைப்பிரிவு பிரபாகரனின் உடலை கண்டெடுத்ததாகவும், தொலைக்காட்சியில் இராணுவப் பேச்சாளர் உதய நாணயக்கார கூறுகிறார்.

அன்று மாலை 4.30, மணியளவில் அப்போது பிரதி அமைச்சராக இருந்த கருணா எனப்படும் வினாயகமூர்த்தி முரளிதரனும், விடுதலைப்புலிகளில் இருந்து இராணுவத்தில் சரணடைந்த தயா மாஸ்டர் என்பவரும் அந்த சடலத்திற்கு அருகே சென்று அடையாளம் காட்டுகின்றனர்.

அந்த இடத்தில் கருணா பேட்டி கொடுக்கிறார் இன்று அதாவது (19/05/2021) காலையில் சிறு பற்றைக்காடு ஒன்றில் பிரபாகரன் மறைந்து இருந்ததாகவும், அப்போது இராணுவத்தினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் அவர் கொல்லப்படதாகவும் கூறினார்.

அன்று இரவு (மே,19) BBC வானொலியில் விடுதலைப் புலிகளின் சர்வதேச பொறுப்பாளர் என தன்னை அறிமுகம் செய்த செல்வராசா பத்மநாதன் எனப்படும் கே.பி என்பவர் அல்லது குமரன் பத்மநாதன் என்பவர் தமது தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாகவும், அவர் சாகவில்லை எனவும் பேட்டி கொடுக்கிறார்.

இதையிட்டு அப்போது தமிழக முதல்வராக இருந்த மு.கருணாநிதியிடம் BBC நிருபர், பிரபாகரன் இறந்து விட்டதாக இலங்கை அரசு கூறுகிறதே உங்கள் கருத்து என்ன? என கேட்கிறார். அதற்கு முதலமைச்சர் மு.கருணாநிதி “பிரபாகரன் மரணம் உறுதிப்படுத்தப்படாமையால், நான் எந்தக் கருத்தையும் கூறமாட்டேன்” என பதில் சொல்கிறார்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, புளொட் தலைவர் சித்தாத்தன் ஆகியோரிடமும் BBC நிருபர் பேட்டி எடுக்கிறார். இருவருமே தமது மகிழ்ச்சிகளை தெரிவித்தனர். தாம் எப்போதோ எதிர்பார்தது இப்போது தான் நடந்துள்ளது எனவும் கூறினர். மே,20 புதன் கிழமை, இரு வாரங்கள் பரவலாக வீதி ஓரங்கள், சந்திகள் போன்ற எல்லா இடங்களிலும் பால்சோறும், சம்பலும் வழங்கப்பட்டு, தென் பகுதிகளில் மிகப்பெரிய மகிழ்ச்சி ஆரவாரங்கள் இடம் பெற்றதையும் தொலைக்காட்சிகளில் காட்டப்பட்டன. வடக்கு கிழக்கிலும் முஸ்லிம் மக்களும் சிங்கள மக்களுடன் இணைந்து தமது மகிழ்ச்சிகளை வெளிக் காட்டத் தவறவில்லை.

2009, மே 21, வியாழன் இந்தியாவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன், மற்றும் வெளியுறவு செயலர் சிவ்சங்கர் மேனன் ஆகிய இருவரும் இலங்கைக்கு வருகை தந்து, ஜனாதிபதி மகிந்த ராசபக்ச வழங்கிய இரவு போசன விருந்துபசாரத்தில் பங்கேற்றனர். அப்போது செய்தியாளர் சந்திப்பும் இடம் பெற்றது. அதில் பிரபாகரன் மரணம் சம்பந்தமான மரணச் சான்றிதழை தாம் கேட்பதற்காக இலங்கைக்கு வந்ததாகவும், அந்த உத்தியோகபூர்வ சான்றிதழ் கிடைத்தால் தாம் இந்தியப் பிரதமராக இருந்து கொலை செய்யப்பட்ட ராஜீவ் காந்தியின் கொலை வழக்கை மூடிவிடலாம் எனவும், பிரபாகரனுடைய மரணத்தில் தமக்கு எந்த சந்தேகமும் இல்லை எனவும் அவர்கள் பேட்டி வழங்கியிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 “2009, மே18, தொடக்கம் மே20, வரை நான் கண்ட விடயங்களை மட்டும், சிலவற்றை பாதுகாப்பு காரணங்களுக்காக தவிர்த்து வழங்கியுள்ளேன். இன்னும் சொல்வதற்கு நிறையவே உண்டு காலம் வரும்போது உண்மைகள் உறங்காது” என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.

Exit mobile version