Home ஆய்வுகள் தமிழர் தொல்குடி வரலாற்றுத் தேடல் – நேற்றும் இன்றும் – தேடல் 13...

தமிழர் தொல்குடி வரலாற்றுத் தேடல் – நேற்றும் இன்றும் – தேடல் 13 – புலவர் நல்லதம்பி சிவநாதன்

343 Views

இலங்கைப் பாராளுமன்ற அரசியலமைப்பில்…

ஈழத்தமிழர்களின் தேச இறையாண்மை,தேசியப் பாதுகாப்பு பற்றிய சிந்தனைகள், எண்ணங்கள் எழுத்தாக்கங்கள் சட்ட வரம்புகட்கும், சனநாயக நியமங்கட்கும் அப்பாற்பட்டவையா?

1970களின் முற்பகுதியின் அரசியல் நிகழ்வுகள் தமிழைப் பற்றியோ,  தமிழர்களைப் பற்றியோ இல்லை. தமிழர் தேசிய வரலாற்று இறைமை பற்றியோ சிந்திப்பதும், சிலாகிப்பதும் அவை குறித்து எழுதுவதும், பேசுவதும் இலங்கையின் அமைதிக்கும், ஒட்டுமொத்த தேச ஒருமைப்பாட்டிற்கும், நாட்டின் அரசியற் கட்டுமானத்திற்கும், ஆட்சிக் கட்டமைப்பிற்கும் அச்சுறுத்தல் விளைவிப்பவை எனும் ஒரு கருத்துருவாக்கம்; சிங்களப் பௌத்த மதபீடங்கள், அரசியல் வட்டாரங்கள், ஆட்சி நிர்வாக அமைப்புகள் நிதி, நீதி, கல்வி,  காவல் துறைசார் நிறுனங்கள், ஊடக இயக்கங்கள் என இவற்றிலெல்லாம் பற்றிப் பரவி வருவதை எம்மால் உணரக்கூடியதாக இருந்தது!

அரசு சார்ந்து இயங்கவும், தமிழ் மக்களுக்கெதிரான அரச திட்டங்களை ஆதரித்து அவற்றோடு இணைந்து செயலாற்றவும் தம்மைத் தயார்ப்படுத்தவல்ல தமிழர்களே எதுவித தடையுமின்றித் தலைதூக்கி நிற்கலாமெனும் ஒரு தார்மீகம் அப்போது தளிர்க்கலாயிற்று!

இந்நிலை ஒருபுறமிருக்க…

‘பொறுத்தது போதும் பொங்கியெழு மனோகரா’ எனும் தாயின் ஆணைப் பிறப்பொலியாகப் புதியதொரு பயணம் இன்னொருபுறம் தமிழர் பூமியிலிருந்து வேர்விடத் தொடங்கியது!

ஆங்காங்கே சிறுசிறு சிங்களப் பௌத்த இனவாதத்திற்கு எதிரான தமிழ் இளைஞர் நடிவடிக்கைகள் இடம்பெறத் தொடங்கி, தமிழர் தேச, தேசியக் கோட்பாடுகள் தமிழீழத் தனிநாட்டுத், தன்னாட்சிக்கானதோர் விடுதலைப் போராட்டமாக விரியவடையலாயிற்று!

அதுவரை நடைமுறையில் இயங்கிய அறமும், நீதியும், தர்மமும் அணுகமுடியாத சிங்களப் பௌத்த மொழிவாத, இனவாத, மதவாத அரசியற் சூழலில் சனநாயகவழிப் பாராளுமன்றப் பிரதிநிதித்துவ  இருக்கைகளை நோக்கிய தேர்தல் வாக்குகளை மையப்படுத்திய தமிழர் அரசியற் செல்நெறியும், சொல் நெறியும்  ஒருபோதும் தமிழர்களுக்கான உரிமைகளை அவர்களுக்கான ஒரு நீதி மயப்படுத்தப்பட்ட தகைமைகளை  இலங்கைத் தீவில் நிலைநாட்ட மாட்டாது என்ற பலத்த பார்வை பலரையும் பற்றிக் கொள்ளலாயிற்று!

பொதுவுடைமைக் கொள்கையிலும், சோசலிசக் கோட்பாடுகளிலும் நாத்திக நதியோட்டங்களிலும், மதமாற்ற மடைகளிலும்  பற்றும், பக்தியும், நம்பிக்கையும் கொண்ட ஒருசிலர் மட்டும் ‘தருவதைத் தாங்கிக் கொள்வோம்! வருவதை வாரிக் கொள்வோம்!’ என்ற மனோபக்குவம் படைத்தவர்களாகப் பாதுகாபிசேகங்கள், பட்டாபிசேகங்கள் நடத்தியவாறு ஆட்சியளர்களுக்கு ஆதரவாகவும், அனுசரணையாகவும் நடந்து வந்தனர்! ஒருசில புத்திசீவிகளும் புரட்சிவாதிகளும், இலக்கிய மேதாவிகளும் கூட இவர்களுள் அடங்கியிருந்தனர் என்பாருண்டு!

நான் சென்றதொடரிற் குறிப்பிட்டாற் போல… இவ்வாறான ஒரு காலகட்டத்திற்றான்…

இலண்டனிலுள்ள எனது அண்ணரிடமிருந்து எனது மேற்படிப்புக்கான அழைப்பு வந்தது! அவ்வழைப்பினூடு எனது தலையெழுத்துச் சற்று மாற்றம் கண்டது! அந்த மாற்றமே எனது முன்னோர்கள் பற்றிய எனது வரலாற்றுத் தேடலை வியாபகப்படுத்தியது என்றால், அது மிகையாகாது! எனது வாழ்வியல் அனுபவம் தாயகத்திலிருந்து ஆரம்பித்து, இலண்டனில் வளர்ச்சி பெற்று, லிபியாவில் அடர்த்தி பெற்று, இலண்டனில் மீண்டும் ஆழக்காற்பட்டு இன்று சற்று முதிர்ச்சி பெற்று நிற்கிறது! நான் பெற்ற கல்வியும், கலையும், தொல்லியல் அறிவும், தொழிலியற் செறிவும், மானிடப் புரிவும் இந்த விதி மாற்றத்தால் நிகழ்ந்த விந்தைகளே!

என் தெய்வத்தாய் ஊட்டிய அறப் பண்புகளும், என்னூர்த் தெரு புகட்டிய திண்ணைப் பள்ளிக்கூட விழுமியங்களும், எனது பூட்டனும், பூட்டியும், பாட்டனும், பாட்டியும் புகுத்திய மரபுகளும் பருக்கிய மாண்புகளும், கலையும், கவிதையும், இலக்கியமும், இதிகாசங்களும் எனது தாய்த்திரு நாடு காட்டிய விடுதலை வேட்கையுமே நான் இலண்டனிற்கு விமானமேறிய போது நான் என்னோடு இதயத்தில் ஏந்திவந்த சொத்துகளாகும்!

ஒருமானிடனின் தன்னடையாள, தேசியஇன வரலாற்றுத் தேடலுக்கும், அவனது சொந்த தனிப்பட்ட வாழ்வுத் தடங்களுக்கும், தவப் பயணத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாகவே நான் நம்புவதால், இவ்விடத்தில் நான் ஒரு பயங்கரமான உண்மையைப் பதிவு செய்தே ஆகவேண்டுமென எண்ணுகின்றேன்!

எனது சிறுவயதிலிருந்தே எனக்குக் கல்விப்படிப்பில் இருந்த நாட்டத்தைவிடக் கலையிலும், கவிதையிலும், பாட்டிலும், கூத்திலும், நாட்டிலும், நடப்பிலும், அரங்கிலும் அவையிலுமே அதிக நாட்டமும் ஈடுபாடும் இருந்திருக்கிறதேயொழிய படிப்பிலும், பட்டத்திலும், தோட்டத்திலும், துரவிலும் ஆர்வமும் பெரிய அக்கறையும் இருந்ததில்லை என்பதே அந்தப் பயங்கர உண்மையாகும்!

‘டாக்டர் ஆகுவது’ ‘எஞ்சினியர் ஆகுவது’ ‘எக்கவுண்டன்ற் ஆகுவது’ ‘சீர்வரிசை வாங்கிச் சிறப்பாக மணமுடித்து ஊர் முழுக்க வாழ்த்த வீதிவலம் வருவது’ இவையெல்லாம் எனது இளமைக் காலத்தில் எனக்குக் கசப்பான  விடயங்களாகவே இருந்திருக்கின்றன! அதேவேளை நான் படிப்பில் மட்டமானவன் என்றும் யாரும் சொன்னதாகவும் இல்லை! அதி கெட்டிக்காரனாக இல்லாத போதும் சுமாராகப் படிப்பது மட்டுமன்றி எனது ஊர்ப்புறத்துக் குட்டிச்சாத்தான்களுக்குப் பாடஞ் சொல்லிக் கொடுக்கும் ஆசானாகவும் வலம் வந்திருக்கிறேன்!

வட்டுக்கோட்டை திருநாவுக்கரசு வித்தியாசாலையிலும் சரி, இந்துக் கல்லூரியிலும் சரி, கந்தரோடை ஸ்கந்தவரோதயாக் கல்லூரியிலும் சரி, இல்லை கொழும்பு பொரளை ‘அக்குவைனாஸ்’ பல்கலைக்கழகக் கல்லூரியிலும் சரி என்னை அறிந்தவர்களாக இருக்கட்டும், என்னோடு கல்வி கற்றவர்களாக இருக்கட்டும் என்னை ஒரு கல்வியாளனாக நினைவில் வைத்திருக்கவே மாட்டார்கள் என்பதை நான் நன்கறிவேன்! ஒரு தமிழ் ‘பாடி’யாக,  ‘கூத்தாடி’யாக, மொழி, கலை, வரலாறு, பண்பாடு ‘கொண்டாடி’யாகவே என்னை அவர்கள் நினைவு கூர்வார்களென்பதில் எனக்கு எதுவித ஐயப்பாடும் இல்லை! எனவே அப்போது எமது தேசத்தையும், அதன் வழி எமது தேசியத்தையும் தொழுது எழுதத் துணிந்தவர்களுள் ஒருவனாகவே நானும் வாழ நினைத்தவன் என்பதை நான் நன்கு உணர்ந்திருந்தேன்!

அக்காலத்தில் ஊடக சுதந்திரத்தையும், எழுத்துப், பேச்சுச் சுதந்திரத்தினையும், அறவழியையும் மானிட விடுதலையையும் நம்பிய ஒருசிலரின் நட்பையும்,  உறவையும் எனது இளமைக்கால முத்தமிழ் கிராமியக் கலை, கவிதை ஆற்றுகைசார் ஆளுமைகள்  எனக்கு ஈட்டித் தந்துள்ளன!

எனது இருபத்தைந்தாவது அகவையில் நான் எனது தாயகம் விட்டுப் பிரிந்து புலம்பெயர் தேசத்திற்குப் பயணித்திருக்காவிடின், நான் எப்படியிருந்திருப்பேன்? எங்குபோய் முடிந்திருப்பேன்? என்ற வினாக்கள் என்னுட் பலதடைவைகள் இன்னும் எழுவதுண்டு!

எனவே 1974இன் இறுதியில் எனது வாழ்வில் ஏற்பட்ட விதி மாற்றத்தை நான் எதுவித மறுப்புமின்றி ஏற்றுக்கொண்டமைக்கு ஓர் ஆழமான உந்துவிசை என்னுள் இயங்கியதை இங்கு பதிவு செய்வது எனது கடனென நம்புகின்றேன்!

எனது ஒன்றரை வயதில் எனது தந்தையாரை இழந்தமை பற்றியும், எனது பத்தொன்பதாவது வயதில் எனது தெய்வத் தாயாரையும் இழந்தது பற்றியும் நான் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளேன் என நினைக்கிறேன்!

அறத்தினையும், அன்பினையும், தமிழையும், தர்மத்தினையும் முற்றுமுழுதாக நம்பித் தன் வாழ்நாளைத் தமிழுக்கே அர்ப்பணித்தவாறு சாதிச் சாக்காட்டிலும், சமூகப் பித்தலாட்டத்திலும் பிணி கொண்டு கிடந்த பொல்லாத சூழலில் ‘பொருள் சேர்க்க மறந்த’  ஒரு புலவனின் இல்லத்தரசியாக வாழ்ந்த என் தாய், எதிர்கொண்ட சவால்களை ஏற்றுக்கொண்ட சோதனைகள் சுமந்த சிலுவைகளை எனது மழலைப் பருவத்திலிருந்தே அவளோடிருந்து பார்த்து வளர்ந்தவன் நான்! வெள்ளைப் புடவையுடன் விம்மியழும், விரக்தியுடன், கண்ணீர் வழியும் விழிகளுடன் என்றும் விலகாத தெய்வ பக்தியுடனேயே அவளை நான் எப்போதும் பார்த்திருக்கிறேன்!

என் தந்தையின் நூல்வழி பெற்ற ஒரு சிறிய வருமானத்தையும், எமது தந்தையின் இழப்பின்போது பெற்ற தாய்க்குத் தலைமகனாகத் தனது பதினாறு வயதிலேயே ‘எண்மரைக்’ கொண்ட ஒரு குடும்பத்தின் தலைமைப் பொறுப்பினை ஏற்றுத் தொழிலாற்றத் துணிந்த எனது பெரியண்ணாவிடமிருந்து பெற்ற சிறிய தொகையையும் ஆதாரமாகக் கொண்டு தன்மானத்தோடும், தைரியத்தோடும், தாராள சிந்தையோடும், தர்மத்தின் துணையோடும் விருந்தோம்பற் பண்போடும் எம்மை வளர்த்தெடுத்தவர் என் தாய்.

தனது வாழ்வின் இறுதி நாளில் என்னைக் கேட்டுக்கொண்ட ஒரேயொரு வேண்டுகோளே  என்னை இலண்டன் புறப்படுவதற்குச் சம்மதிக்க வைத்தது என்பேன்!

‘அண்ணாவுக்கு ஓர் அப்பீல்’ என்ற தலைப்பில் எனது கவிதை சுதந்திரனில் வெளியாகியிருந்த சமயமது!

என்றும் என் பாசத்திற்குரிய  உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன்  ‘பூம்புகாரில் ஓர் நாள்’ பரிசு பெற்ற எனது பேரன்பிற்குரிய கவிஞர் அமரர் நாகராஜன் ஆகியோருடன் நட்புப் பூண்டதும்  அறிஞர் அண்ணா அவர்களின் மறைவினையொட்டி அஞ்சலிக் கூட்டங்களிற் பங்குபற்றிப் பேசி வந்ததும் ஸ்கந்தவரோதயாக் கல்லூரியில் எனது பெருமதிப்பிற்குரிய வித்துவான் ஆறுமுகம் அவர்கள் எழுதிய ‘அன்புத்திருமுடி’ நாடகத்தில் நான் இராமனாக நடித்ததும், கலையரசு சொர்ணலிங்கம் அவர்களின் அன்பினைப் பெற்றதும் ‘வில்லுப்பாட்டு’, ‘கதாப்பிரசங்கம்’, ‘நாடகம்’ எனக் கலைப்பித்தனாகிக் காலங்கழித்ததும் எல்லாமே இக்காலகட்டத்திற்றான் என எண்ணுகின்றேன்!

என்னுடைய அந்த ஆர்ப்பாட்டங்களை நேரிற் கண்டும், பிறர் கூறக் கேட்டும், சுதந்திரனில் வெளியான எனது கவிதையினைத் தானே படித்தும், எனது எதிர்காலம் பற்றி எண்ணத் தலைப்பட்ட என் தாய் சொன்ன வார்த்தைகள் என்னைப் புறப்பொருள் பற்றிப் பூரணமாகப் புரிய வைத்தது! புலமையின் நிலைமை பற்றி எண்ண வைத்தது!

‘எமக்குத் தொழில் கவிதை’ என்று தனக்குள் ஒரு தவத்தீ வளர்த்தவன் மகாகவி பாரதி! அவனை இளவயதிலிருந்தே உளத்தில் வைத்துப் போற்றியவன் நான்!

ஆனால் என் தாயோ புலமையில் வறுமையையும், இளமையில் வறுமையையும் நன்கு அனுபவித்து, அதன்வழி வாழ்வின் ஞானத்தையடைந்தவள்! அப்புலவனோடு வாழ்ந்து, அவனோடு பயணித்து அவனது சொற்ப வருமானத்திலும், நற்பொருள் சேமித்துத் தமது இல்வாழ்க்கைக்கானதோர் ‘பெருமனை’யமைத்த பெருமைக்குரிய பெருமாட்டியவள்!

ஆகையால் அவள் உதிர்த்த அருள் வார்த்தைகள் என்னுள் இலகுவில் இடம்பிடித்துக் கொண்டன!

‘நீ காசிநாதனுடன் பழகுவது சந்தோசம்! (காசி அண்ணாவையே அம்மா இவ்வாறு குறிப்பிட்டார்! காசியண்ணா என்னம்மா உயிருடன் இருக்கும்போதே எமது இல்லத்திற்கு வந்து அம்மாவின் விருந்தினையுண்டவர்)

நீ கவிதை எழுது மகனே! தமிழைப் போற்று! ஆனால்  அதுவே உனது தொழிலாகி விடக் கூடாது! நீ ஓர் ‘எஞ்சினியராக வந்து விட்டுப் பிறகு தமிழுக்குப் பாடுபடு மகனே!’ இத்தொனிபட என் அம்மா அருளுரை வழங்கியது இன்றும் என் செவிகளில் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது!

இன்று வரை நான் என்னையும், எனது தமிழையும் யாருக்கும் விற்றுவிடாமல், என் தமிழ்த் தாகம் வற்றிவிடாமல் நிமிர்வோடு நின்று நிலைத்ததற்கான ஆதார சுருதியே எனது தாய்த் தெய்வத்தின் அந்த வாய்ச் சொற்கள் தந்த வரமே!

தொடரும்….

NO COMMENTS

Leave a Reply

Exit mobile version