Tamil News
Home ஆய்வுகள் தமிழர் தொல்குடி வரலாற்றுத்தேடல்: நேற்றும் இன்றும்- தொடர்ச்சி-தேடல் 10

தமிழர் தொல்குடி வரலாற்றுத்தேடல்: நேற்றும் இன்றும்- தொடர்ச்சி-தேடல் 10

நான்காம் உலகத் தமிழாராய்ச்சி மாநாடு அல்லது தமிழ்த் தேசிய எழுச்சியின் உயிரேடு!

‘சாக்கு’த் திரையினுள்ளிருந்து அச்சத்தில் நடுங்கியவனாக வெளியே வந்த என்முன்னே தமது கரங்களிற் துப்பாக்கியுடன் ‘கலவர எதிர்ப்புப் படையணியின்’ நான்கைந்துபேர் ஆயுதபாணிகளாக நின்றுகொண்டிருந்தனர்!

அந்தக்கணங்களில் நிச்சயமாக யமன் தர்பாரிலே யமனுக்கும் சித்திரகுப்தனுக்கும் எனது ஆயுட்கால முடிவு பற்றிய ஒருவிவாதம் நிகழ்ந்திருக்க வேண்டும்!

காட்சியில் ஒரு திடீர் மாற்றம் நிகழ்ந்தது!

என்ன நடந்ததோ தெரியவில்லை!

எனது விழிகளிற் காணப்பட்ட பீதியோ என் தலையில் எழுதப்பட்ட விதியோ  தெரியவில்லை. என்முன்னே நின்றுகொண்டிருந்த ஒருவனது ஆத்மாவிற்குட் புகுந்துகொண்டு ஒரு கட்டளையைப் பிறப்பித்தது!

அக்கட்டளை தமிழிலா இல்லை சிங்களத்திலா இல்லை ஆங்கிலத்திலா என்று இன்னமும் எனக்குத் தெளிவில்லை!,

‘ஓடடா!’ என்று என்னை அக்குரல் அதட்டியது மட்டும் எனக்கு அந்நிலையிலும் நன்றாகப் புரிந்தது! அக்குரல் எந்த உருவத்திடமிருந்து வந்ததென்பது மட்டும் எனக்கு அந்த விளக்கு வெளிச்சத்தில் நன்கு தெரிந்தது! அவ்வுருவம் துப்பாக்கியால் வேறு  நான் ஓடவேண்டிய திசையை எனக்குத் தன்கையசைவினூடு காட்டியது!

உண்மையில்  ‘ஓடவிட்டுச் சுடுவது’ பற்றி நான் முன்னரே கேள்விப்பட்டிருந்ததன் விளைவாக என்னை இவர்கள் ‘ஓடச் சொல்வது’ ‘என்னைச் சுட்டுவீழ்த்தவே’ எனும் தீர்மானத்தை எனது ஆழ்மனது அந்தக் கணமே எடுத்துக் கொண்டு விட்டது! மரணிக்கும் முதிர்ச்சியும் எனக்குள் உடனே வந்து அமர்ந்து கொண்டது! இறுதி யாத்திரைக்கு நான் தயாராகியிருந்தேன்!

எனினும் எதையும் அனுபவிக்காத இளவயது எப்படியாவது உயிரைக் காப்பாற்றிவிட வேண்டுமென்ற வெறியைத் தூண்டக் கால் தெறிக்க ஓட்டமெடுத்தேன்!

‘உயிரைக் கையிற் பிடித்துக் கொண்டு’ ஓடுவதுபற்றி அதுவரை சிறுகதைகளிற் படித்த எனக்கு  அன்றுதான் அதன் உண்மையான அனுபவம் கிட்டிற்று!

ஓடிய எனக்குள் ஒரு திடீர் யுக்தி தோன்ற, யாழ்ப்பாணத் தபாற் தந்திக் காரியாலய வளாகத்தின் மதிற் சுவரிலேறிக் குதித்து, அடுத்த பக்கத்தில் வீழந்ததும்,  அங்கிருந்து எழுந்து சென்று இளைக்க இளைக்க அங்குள்ள வேறோரு கட்டத்தினுள் நுழைந்ததும், அங்கிருந்த ஒரு மேசையிற் தலையைக் கவிழ்த்துவைத்தபடி அரையுறக்கம் கொண்டதும், விடியற்காலை நேரம்… யாழ்ப்பாணத்தில் வாழ்ந்துகொண்டிருந்த ‘எனது உறவுக்கார’ அக்காவின் மகன் எனக்கு ‘மருமகன்’ முறையான பையன் என்னைத் தேடியவாறு வந்து என்னைக் கண்டுகொண்ட ஆனந்தக்களிப்போடும், பழகிய  பாசத்தோடும்  ’மாமா! மாமா!’ என்றழைத்து என்னைத் தட்டியெழுப்பியதும்.. இன்றுவரையும் என்னால் நம்பமுடியாத காட்சிகளாகவே எனக்குள் நிலைத்து நிற்கின்றன!

யாழ்ப்பாணமே மரணப்பீதியை அணைத்துக் கொண்டிருந்த அந்தக் காலைவேளை எனது மருகனோடு அக்கட்டட வளாகத்தினை விட்டு வெளியேறி, யாழ்ப்பாண ஆஸ்பத்திரிக்கு முன்னால் நடந்துகொண்டிருந்தபோது நான் முதல்நாளிரவு ஏறிக்குதித்த மதிற்சுவரின் உயரத்தைப் பார்த்து அசந்து போய்விட்டேன்! ‘இந்தச் சுவரையா நான் தாண்டிக் குதித்தேன்?’ ஆச்சரியம் தாங்கமுடியவில்லை! உயிரைக் காத்துக்கொள்ள முனைந்து முயலும்போது எமக்குள் எவ்வாறான ஒரு துணிச்சலும், திராணியும், தில்லும், திறனும்  வந்து குடிகொள்கிறதென்பதை என்னால் அன்று ஊகித்து உணரமுடிந்தது!

இத்தனைக்கும்…

நானும், அந்த நான்காம் தமிழாராய்ச்சி மாநாட்டிற் பங்கேற்றவர்களும் அந்த இனிய இரவுப்பொழுதின்போது, தங்கள் தாய்த்திருமொழி, கலை, பண்பாட்டு நிகழ்வுகளைப் பார்க்கவும் கேட்கவும் வந்திருந்தவர்களும், அன்றிரவு நிறைவேற்றப்பட்ட அரச பயங்கரவாத்திற்குப் பலியாகியவர்களும், என்ன குற்றமிழைத்தோமென்ற கேள்வியே என்னை அந்த நாளைத் தொடர்ந்து ஆழமாகப் பதித்த ஆன்ம விசாரணையாகும்!

இலங்கை சுதந்திரமடைந்ததாக நாம் ‘முழு முட்டாள்காளாக’ நம்பத் தொடங்கிய காலத்திலிருந்து இன்றுவரை தெடர்ச்சியாக எத்தனையோ சட்டமீறல்கள், அநீதி இழைப்புகள், அறப்பிறழ்வுகள் எமது மண்ணில் ஈழத்தமிழினத்திற்கு எதிராகச்  சிங்களப் பௌத்த அரச, ஆட்சி, மதபீட, காவற்துறை, இரணுவ, அமைப்புகளாற் பகிரங்கமாக எந்த ஒழிவு மறைவுமின்றியும், ஒளிவு மறைவாகவும்  நிறைவேற்றப்பட்டு அரங்கேற்றப்பட்டு நிகழ்த்தப்பட்டு வருகின்றபோதும், இவற்றைக் கண்டுகொள்வதற்கும், இவற்றைத் தடுப்பதற்கும் ஏன் யாராலும் முடியாதிருக்கின்றது என்ற கோள்வியும் என்னை அன்றிலிருந்து இன்றுவரை ஆழமாகவும் கூர்மையாகவும் தாக்கிவந்ததெனலாம்!

எமக்கு அயல்நாடாகவும், ஒரு பிரந்திய வல்லரசாகவும் இருக்கின்ற இந்தியாவாகட்டும் எமது உடன்பிறவாச் சகோதரங்காளா நாம் உச்சிமோர்ந்து உறவுகொண்டாடிய தமிழகமாக இருக்கட்டும் எமது அரசுகளை அழித்து எமது மண்ணை ஆண்டு பின்னர் எம்மை ஓர் இரண்டாந்தரப் பிரசைகளாக்கிவிட்டு வெளியேறிய பிரித்தானிய அரசாக இருக்கட்டும் எமது இன்னல்களை, இழப்புகளை நாம் தொடர்ச்சியாக எதிர்கொண்டு அனுபவித்து வந்த – வருகின்ற இனப்படுகொலைகளை கற்பழிப்புகளை மாங்கல்ய  பொட்டிழப்புகளை ஏன் கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள் என்பதும் எனக்குள்ளும் என்போன்ற பலருக்குள்ளும் எமது இளமைக்காலங்களில் ஒரு வியப்பும், வேதனையும், விரக்தியும் தருகின்ற எண்ணப்பதிவுகளாகவே இருந்து வந்துள்ளன!

மேலும் மேற்குலகப் பாராளுமன்ற சனநாயகத்தத்துவம் எமது தாயகத்தையும், தமிழ்த்தேசிய இனத்தினையும் பொறுத்தவரையிலும் எதுவிதத்திலும் ஒருநீதிக்கான, அமைதிக்கான, சட்ட வரம்புகள், ஒழுங்கு நடவடிக்கைகளுக்கான வாய்ப்புகளை நல்குமா என்ற கேள்வியும் 1970களிற் பலரது பார்வைகளிற் பரவிக்கிடந்ததை எம்மால் அப்போது உணரமுடிந்தது!,

அதுவும் குறிப்பாக இந்த நானகாவது உலகத்தமிழாராய்ச்சி மாநாட்டு நிகழ்வுகளும் அவற்றைத் தொடர்ந்து அவை சார்ந்து நிகழ்ந்த ஒருசில நிகழ்வுகளும் அவை தமிழ் மக்கள் மீது ஏற்படுத்திய நெகிழ்வுகளும் நெருடல்களும் சனநாயகத்தின் மீதான அவநம்பிக்கைகளையும், தமிழர் தேசம், தேசியம், இறையாண்மை, தன்னாட்சி பற்றிய தேடல்களையும் விதைத்தன என்றால் அது மிகையாகாது!

மாநாட்டின்போது இழைக்கப்பட்ட படுமோசமான அரசபயங்கரவாதத்தினை முன்னின்று நடத்திய யாழ்ப்பாண நகர துணைக் காவற்துறை அதிபரை முதன்மை அதிபராகப் பதவி உயர்த்தி அவர் நடத்திய தமிழர் படுகொலைக்கு சிறிமாவோ அம்மையாரின் அரசு மதிப்பளித்தமை; இலங்கைத்தீவிலே ஒரு சனநாயக அரசியல் அமைப்பின்கீழ் தமிழர்களுக்கு எதுவித பாதுகாப்பும் வழங்கப்படப்போவதில்லை என்ற ஒரு திட்டவட்டமான முடிவினைக் குறிப்பாக எமது இளைய சமுதாயத்திற்கு உணாத்தியதெனக் கூறலாம்!

உயிருக்குப் பயந்த என்போன்றவர்களைக்கூட ‘எவ்வளவு காலம் இப்படியே துப்பாக்கி முனையிற் பயந்து நடுங்கிக்கொண்டு இந்த நாட்டில் வாழ்ப்போகிறோம்?’ என்ற மனப்போராட்டம் ஆட்கொண்ட காலமும் இதுவெனக் கூறமுடியும்!

இலங்கைத் தீவைப் பொறுத்தவரை தமிழினத்தின் வரலாற்றுத் தொன்மையையும் தொடர்ச்சியையும் தன்னாட்சியையும் அவர்தம் தாயக தேச தேசிய இறையாண்மை அடிப்படை மனித உரிமைகள் இன அடையாளப் பாதுகாப்பு ஆகியவற்றையும் பேணக்கூடிய ஒருசனநாயகத் தத்துவம் செயல் முறைப்படுத்தப்படுத்துவதற்கான நடைமுறைக்குச்சாதகமான  சாத்தியக்கூறுகள் ஒருபோதும் ஏற்படப்போவதில்லை என்பதையும் அறவழிப்போராட்டங்களையும் சத்தியவழிப் பயணங்களையும் அவற்றிற்கான அரசியல் மொழிப் பரிமாற்றங்களையும் புரிந்துகொள்ளவோ அவற்றை ஏற்றுக்கொள்வோ கூடிய ஒரு மனோபாவத்திலும் உளவியற் பாங்கிலும் பௌத்த சிங்கள இனவெறியையே முற்றுமுழுதாக நம்பி ஏற்றுக்கொண்ட சிங்கள அரசியல்வாதிகளும் அவைசார்ந்த கல்வி கலை ஊடக உலகமும் சிங்கள்ப் பௌத்த  சமுதாயமும் இல்லை என்ற உண்மையையும் ஈழத்தமிழினம் மௌ;ள மௌ;ள உணரத்தொடங்கிய காலமும் இதுவே!

‘இடித்துரைக்கவல்ல’ எதிர்க்கட்சியற்ற ஒரு பாராளுமன்றத்தில் தமிழர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை அத்துமீறிய அடக்குமுறைகளை உரத்துக் குரல் கொடுத்து வெற்றிபெறமுடியாத ஒரு சனநாக அமைப்பின் கீழ் ஈழத்தமிழினம் நாளுக்குநாள் படிப்படியாகத் தன்னிலை குலைந்து தன்னுரிமைகளைப் பறிகொடுத்து மெலிந்து நலிந்து தனக்கான ஒரு பாதுகாப்பான தேசத்தினை இழந்த கூலிக்கூட்மாக அடிமைப்பிடிக்குள் மூச்சழந்து பேச்சிழந்து அகப்படநேரும் என்ற ஒரு இருண்ட எதிர்காலத்தையும் எமது இளைய சமுதாயம் தன்முன்னே காணத்தொடங்கியது!

‘இரத்தம் சிந்தியாவது எமது இனத்தைக் காப்பேன் என்ற தொனியிலும் ‘இனிக் கடவுள்தான் தமிழினத்தைக் காப்பாற்றவேண்டும்’ என்ற தொனியிலும் ‘எங்கள் தேசத்தந்தை’ செல்வா அவர்கள் உதிர்த்த வார்த்தைகளைத் தொடர்ந்து  தமிழர்களது எதிர்காலத்தைத் தமிழர்களே தீர்மானித்து அதற்கான திட்டங்களை வியூகங்களை வகுத்து தமது அரசியற் பயணத்தைத் தொடர்வதைத் தவிர வேறொரு வழியும் அவர்களுக்கு இனி இருக்கப்போவதில்லை என்ற முடிவினைச்  சிங்களப் பௌத்த இனவெறியையே தமது அரிசியற் பிரச்சாரக் கையேட்டின் மூலக்கல்லாக்கொண்ட இரு பெரும் சிங்களப் பொளத்த இனவாதத் தேசியக் கட்சிகளும் அவற்றின் பிதாமகர்களாக இயங்கிய ‘புத்த மத’ பீடங்களும் அவற்றை எதிர்த்து வெல்லமுடியாத ‘கையாலாகாத’ இடதுசாரியமைப்புகளும் அவர்களின் ஊதுகுழல்களாகவும் அடிவருடிகாளாகவும் இயங்கிய ஊடக.. சமூக அமைப்புகளும் தமிழர்களின் கரங்களிற் திணித்தன என்பதே மிகவும் கசப்பான ஓருண்மையாகும்!

இவ்விடத்தில் ஒரு கருத்தினைத் தெளிவு படுத்த விரும்புகிறேன்!

ஈழத்தமிழினத்தினை ஓர் ‘அரசற்ற தேசம்’ (‘Stateless Nation’) எனப் பலரும் இன்றும் பதிவு செய்தும் குறிப்பிட்டும் வருவது மிகவும் வேதனையைத் தருகின்றது!

உண்மையில் இப்பதம் ஈழத்தமிழர்களுக்கு எதுவிதத்திலும் பொருந்தாத ஒன்று என்பது எனது தாழ்மையான கருத்தாகும்! ஆண்டாண்டுகால வரலாற்றுரீதியாகப் பார்ப்போமானால் ஆட்சியும் அரசும் கொண்டு தொன்மையும் தொடர்ச்சியோடும் இலங்கை்த்தீவில் சிதைத்துவிட்ட ஒரு தேசத்தை   ‘அரசற்ற தேசமென’ அழைப்பது எதுவரை நியாயமானதாகும்?

நாகர் இயக்கர் வரலாற்றுச் சின்னங்களையும் பின்னர் எழுந்து இயங்கிய தமிழர் அரசுகளின் வரலாற்றையும் அவற்றின் பின்னர் தொடர்ந்த இலங்கையின் அரசியற் பரிணாமக் கூர்ப்பனையும்  தளமாக வைத்து வேண்டுமானால்…

‘அரசிழந்த தேசம்’(‘State-lost Nation’)

‘அரசு களவாடப்;பெற்ற தேசம்’ ‘(State robbed Nation)

‘அரசு கவரப்பட்ட தேசம்’ (‘State Deprived Nation’)

‘அரசு சூறையடப்பட்ட தேசம்’ (‘State Depredated Nation’)

‘அரசு சூனியமாக்கப்பட்ட தேசம்’ (‘State Nullified Nation’)

என்ற இன்னேரன்ன பதங்களாலல்லவா எமது தமிழர்தேசத்தை நாம் குறித்துக் கொள்ளவேண்டும்!? பதிவு செய்ய வேண்டும்!

தமிழகத்திலும் கூடக் கதை இதுதானே! ‘திராவிடம்’ எனும் ‘அராவிடம்’ பற்றியும் நாம் அறிவோமல்லவா?

முடிவாக…

நான் எனது சொந்த அனுபவத்தில் நேரிற் கண்ட 1974இல் நிகழ்ந்த நான்காவது தமிழாராய்ச்சி மாநாடும் அதனைத் தொடர்ந்து நிகழ்ந்த அரசியல் பொருளாதார கல்வி தொழில் வாய்ப்புகள்  சார்ந்த சமூக நிகழ்வுகளுமே ஈழத்தமிழர்களுக்கான ஒரு புதிய அரசியல் அணுகுமுறையை அறிமுகப்படுத்தியதென்பது எனது அவதானமாகும்!

புலவர் நல்லதம்பி சிவநாதன்

Exit mobile version